24

24

“தமிழர்களின் சமாதானமான வாழ்க்கைக்காக அமெரிக்கா பயணிக்கும்” – வெளியாகியுள்ள அமெரிக்காவின் அறிவிப்பு !

இலங்கையில் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையில் மனித உரிமைகள் முக்கியமானவை என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, வலியுறுத்தினார். அத்தோடு, நிரந்தர சமாதானத்திற்காக இலங்கை தமிழர்களுடன் அமெரிக்கா இணைகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மற்றும் உலகத் தமிழர் பேரவை  ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ட்விட்டர் பதிவில்,

இலங்கைத் தமிழ் மக்களுடன் நிரந்தர சமாதானத்தையும், அவர்களின் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முழுக் குரலையும் தேடுவதில் தானும் இணைந்து கொள்வதாக லூ கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும் அவர்கள் வெள்ளை மாளிகை உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுவிஸில் இருந்து பணம் பெற்று யாழில் பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது !

அயல்வீட்டில் வசிப்பவருடன் இருந்த முரண்பாடு காரணமாக சுவிஸ் நாட்டில் இருப்பவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவரை யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அண்மையாகக் காணப்பட்ட சிசிரிவி காட்சிகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்தனர். அதனடிப்படையில் மானிப்பாய் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர்.

அவர் சம்பவத்தின் போது பயன்படுத்திய வெகோ மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர். காணிப் பிரச்சினை ஒன்றில் அயல் வீட்டுகாரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

மானிப்பாயை சேர்ந்த ஒருவருக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அயல் வீட்டிற்கு பெற்றோல் குண்டு அடித்து வீட்டையும் அடித்துச் சேதப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்குமாறு கேட்டுள்ளார்.

அதன் காரணமாக மானிப்பாயை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பணம் வந்து அவர் தன்னுடன் உள்ள இளைஞர்களை கூட்டி சென்று சம்பவத்தை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் உள்ளனர். அவர்களையும் கைது செய்ய யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி – முடிவுக்கு வந்த அரசின் 07 மாத நாடகம் !

இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்  வெளியாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் இரசாயன உர நடனம் இன்றுடன் முடிந்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இரசாயன உரத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் இறக்குமதி செய்ய மாட்டோம் என்றும் இதனைச் செய்ய முடியாதவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் கூறினர்.

வாயால் வற்றாலை  நடுவது போல்தான் இருந்தது அவர்களின் கருத்து. தற்போது நாங்கள் உதவித் தொகை வழங்கப்போவதில்லை. இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் இரசாயன உரம், களை கொல்லி மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என்றும் ஆளும் தரப்பினர் கூறினர்.

நாட்டில் கடந்த 7 மாத காலமாக நடித்த நாடகம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நடித்த நாடகமும் தட்டிய தாலமும் இன்று இல்லை. அரசாங்கம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நடனம் ஆடியது என்றும் தோ்தலின்போது “அரசாங்கம் பாம்பு நடனம் ஆடியது”,” கொரோனா பாணி நடனம் ஆடியது”, ”இப்போது காபனிக் நடனம் ஆடுகிறது” என்றும் காபனிக் நடனம் இன்றுடன் முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசியத்தலைவர் என குறிப்பிடதால் குழம்பியடித்த சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், குறிப்பிட்டதை அடுத்து  நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை மறுக்கும் வகையில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ”தேசிய தலைவர்” என்ற பதத்தை பயன்படுத்தினார்.

இதன்போது பெண் ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல எழுந்து, பயங்கரவாத தலைவர் ஒருவரை இலங்கையின் நாடாளுமன்றத்தில் தேசிய தலைவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து செல்வராஜா கஜேந்திரனின் கருத்துக்களை நீக்குமாறும் சீத அரம்பேபொல கோரிக்கை விடுத்தார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கருத்துரைத்த போது,

அது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் உரிமை என்று குறிப்பிட்டார். எனினும் கஜேந்திரனின் கருத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்குவது தொடர்பில் தாம் சபாநாயகருக்கு தெரியப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்களும் தேசிய தலைவர் என்ற பதத்தை நாடாளுமன்ற குறிப்பேட்டில் இருந்து நீக்கவேண்டும் என்று சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும் அதனை சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரான வேலுக்குமார்  ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், தமக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவிக்க மாத்திரமே முடியும் என்று குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் உரையாற்றிய, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கமுடியும். எனினும் அந்த கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களால் பலவந்தமாக மௌனிக்கச் செய்யமுடியாது என்று குறிப்பிட்டார்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி !

2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடைநிறுத்தியுள்ளது.

எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவருமே இவ்வாறு கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வரவு -செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக, அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் திரை மறைவில் வெளிச்சத்துக்கு வராத பல விடயங்கள் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்  என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடகத்தில் நடிக்கும் நடிகர்களைப் போன்று கிரீடத்தை அணிந்து கொண்டு செயற்படாது மக்களின் துயரங்களுக்காகக் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அதனைச் செய்ய முடியாவிட்டால் அதனைக் கழற்றிவிட்டு வெளியேற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தத் தாக்குதலின் வெளிப்புற தோற்றத்தில் காண்பதை விட அதன் உட்புற தோற்றத்தில் அதிக வேலைப்பாடு இருப்பதாக நாங்கள் தற்போது உணர்ந்து வருகிறோம்.

நாம் யாரையும் பழிவாங்க விரும்பவில்லை. ஆனால் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தாக்குதலை அறிந்த உயர் பதவியில் இருப்போர் மற்றும் வாக் குறுதிகளை வழங்கியோர் இப்போது எதுவும் தெரியாதது போல் இருக்கிறார்கள்.  அதுதான் எம்மால் தாங்க முடியாத விடயம் என்றும் இதற்கு அவர்களின் பங்கு இருக்குமோ..? என்ற சந்தேகம்  எழுந்துள்ளது.

எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை அனைத்து கத்தோலிக்கர்களும் ஒன்றிணைந்து நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் பொலிஸாரினால் தவறாக வழிநடத்தப்படும் நீதிமன்றங்கள்.” – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக அவை செயற்படுகின்றன என அவர் குற்றம் சுமத்தினார்.

பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் தவறாக நீதிமன்றங்களை வழிநடத்துகிறார்கள் எனத் தெரிந்தும் அரசாங்கத்தின் இறுக்கம் காரணமாக நீதிமன்றங்கள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.அதற்கமைவாகவே, மாவீரர்கள் தின நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிண்ணியா படகு விபத்து – அதிகாரத்திலுள்ள குற்றவாளிகளை விட்டுவிட்டு படகு இயக்கியவர்களை கைது செய்துள்ள பொலிஸார்!

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை இயக்கிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸாரினால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரினால் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளளனர்.

குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறித்த பகுதியில் பாலம் கட்டப்படாமையே இதற்கு காரணம் என குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீட்டை உடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

………………………………………………

உண்மையிலேயே குறித்த பாலம் கட்டப்பட்டிருக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய அனர்த்தம் நடந்திருக்காது. இந்த உயிரிழப்புக்களுடன் மிக நெருங்கிய தொடர்புடைய ’குற்றவாளி இதற்கு பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆவார். இது தொடர்பில் உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க தவறிய இவரே இந்த உயிரிழப்புக்களுக்கு பதில் சொல்ல வேண்டியவரும் இவர் தான். கைது செய்யப்பட வேண்டிய இவரை விட்டுவிட்டு நாட்கூலிகளை கைது செய்து அதிகாரிகள் வழமை போல அதிகாரத்துக்கு சாமரம் வீசியுள்ளனர். இது தொடர்பில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படுதலே இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யக்கூடிய இறுதியான வேண்டுதலாக இருக்கும்.