21

21

யாழில் மீட்கப்பட்ட புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு  !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் தெரிவித்துள்ளது.

ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உள்பட்ட வேலணை அம்பிகா நகர் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் இந்தக் கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு  மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

“தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும்.” – யாழில் ஞானசாரதேரர் !

“கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.” என  ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் நேற்று வவுனியா மாவட்டத்தில்  ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இந்த பணி இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஆகவே ஒரே நாடு ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை. போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப்பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாரில்லை. தமிழர்களது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள். கடந்த 19ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்விலே பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம்.

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக கேள்வியெழுப்பிய பொழுது, இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை. பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம். பல்வேறு சட்டங்கள் இருப்பதால் அதனை ஒரு சட்டமாக்க விரும்புகிறோம்.

தேசவழமைச் சட்டத்தில் உள்ள நல்லதையும் பெறவேண்டும். கண்டியச் சட்டம் முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார். இதன்போது ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல படைத்துள்ள புதிய சாதனை !

ஐசிசியின் போட்டி நடுவரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றுகின்றார்.

ஐசிசியின் போட்டி நடுவர்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய முதல் நபர் இவராவர்.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் போட்டியில் நடுவராக கடமைாற்றிதை தொடர்ந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

“விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பது முழு உலகக்கும் தெரியும்.” – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், போரில் உயிரிழந்த பயங்கரவாதிகளை நினைவேந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும்.” என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நவம்பர் 27ஆம் திகதி பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரிந்த விடயம். இந்தநிலையில் அவர்களை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்தின் பிரகாரம் காவற்துறையினர் செயற்படுகின்றனர். அதற்கமைய பயங்கரவாதிகளை நினைவேந்துவதை தடை செய்வதற்காக காவற்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளனர். இது எவரையும் பழிவாங்கும் நோக்கமல்ல. காவற்துறையினர் தமது கடமைகளை உரியவாறு செய்கின்றனர். எனவே, எந்தச் சந்தர்பத்திலும் பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளை நினைவுகூர எமது அரசு அனுமதி வழங்காது.

நல்லாட்சி அரசு பயங்கரவாதிகளை நினைவேந்த அனுமதி வழங்கிய காரணத்துக்காக எமது அரசு நாட்டின் சட்டத்தை மீறி செயற்படாது. நல்லாட்சி அரசின் ஏற்றுக்கொள்ள முடியாத சில செயல்களால்தான் நாடு இன்று மோசமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் எமது அரசு ஈடுபட்டு வருகின்றது.

நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படவேண்டும் எனில் பயங்கரவாதிகளை நினைவுகூருவது முறையற்ற செயலாகும். இது இனங்களுக்கு இடையே பகைமையையே ஏற்படுத்தும்” – என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் புலிகள் அமைப்புடனான பேச்சுக்கு அரச குழுவுக்கு தலைமை தாங்கியவர் ஜி.எல்.பீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் முக்கிய புள்ளி நான் என கூறித்திரிந்த அருண் சித்தார்த்தன் கைது !

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அருண் சித்தார்த்தன் நீதிமன்ற பிடியாணை மூலம் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று  (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

“இராணுவத்தன் முக்கிய புள்ளி” என தன்னை அழைத்துவரும், சர்ச்சைக்குரிய அருண் சித்தார்த்தன், ஊடகவியலாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று இவரைக் கைது செய்யச் சென்ற போது, யாழ்ப்பாணம் பொலிஸாருடனும் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயன்றதாகவும், “இராணுவத்தின் முக்கிய புள்ளி” தான் என மிரட்டியதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  “நல்லூர் கோவிலை இடித்து ஆலய சூழலில் பொது மல சல கூடம் அமைப்பேன்” என இந்து மதத்தை இழிவு படுத்தும் வகையில் முன்பு ஒரு தடவை, கருத்துக்களை இவர் முன்வைத்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

சுமந்திரன் வருகையை எதிர்த்து கனடாவில் போராட்டம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டனப் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1686எல்லெஸ்மியர் சாலை ஜே.சி எஸ் விருந்து மண்டபம் இக்கு முன்பாக இக்கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்களான கனடியத் தமிழர் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

இனப்படுகொலை செய்யப்பட்ட எம் மக்களை நெஞ்சிலே நிறுத்தி அனைத்து கனடியத் தமிழர்களும் மற்றும் அமைப்புக்கள், ஊர்ச் சங்கங்கள், பொது நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இக்கண்டன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு அழைப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்