15

15

இலங்கை பிரீமியர் லீக் வீரர்கள் தெரிவு தொடர்பில் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி !

எல்.பி.எல் இற்கு வீரர்கள் தெரிவு செய்யப்பட்ட முறை குறித்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குசல் ஜனித் பெரேரா, சந்திமல், மத்தியுஸ், தனஞ்சய டிசில்வா போன்ற வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே மஹேல தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்

எல்.பி.எல் 2021 இற்கு மிகவும் சுவாரசியமான தெரிவுகளும் தெரிவின்மைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு அடி முன்னோக்கி சென்ற பின்னர் ஐந்து அடி பின்னோக்கி சென்றால் நாடு முன்னேற்றம் காணமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையான திறமையை வளர்த்தெடுப்பதற்கான ஒரு களம் என்பதை இலங்கை கிரிக்கெட் சபை மறக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் மூன்று சிங்கள கிராமங்களை இணைக்க திட்டம்.” – சிவசக்தி ஆனந்தன்

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் பிரதேச செயலகத்துடன் அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு அரசாங்க அதிபர் முன்மொழிவை ஒன்றினை எல்லை நிர்ணயக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை . முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்கள குடியேற்றங்களிற்கெதிராக வவுனியா வடக்கில் இன்று (15) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கம் இந்த மாவட்டத்தின் எல்லையின் ஒரு இஞ்சியைக் கூட்டுவதாக இருந்தாலும் சரி, குறைப்பதாக இருந்தாலும் சரி இந்த மாவட்டத்திலுள்ள மக்களின் கருத்துக்கள் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எதையும் அறியாமல் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுராதபுரத்திலுள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு அரசாங்க அதிபரினால் எல்லை நிர்ணயக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

ஆகவே இந்த திட்டமிடப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும்படி இந்தப்பிரதேசத்தில் இருக்ககூடிய அரசியல் கட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் வீட்டின் மீது பெற்றோல்குண்டு வீசி வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – வழமை போல விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அறிவிப்பு !

யாழ்ப்பாணம், அரசடி மற்றும் பழம் வீதியில் சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 25இற்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் அரசடி வீதி பகுதியில் இரண்டு வீடுகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்ததுடன், வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் கதவுகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

அதே கும்பல், பழம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து தூக்கத்தில் இருந்த பெண்களை அச்சுறுத்தி அடாவடி ஈடுபட்டதுடன், கதிரைகள் மேசைகள் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பழம் வீதியில் உதயசூரியன் சுதர்சன் என்ற இளைஞன் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் நல்லூர் அரசடி நான்காம் ஒழுங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் நாளுக்கு நாள் வன்முறைக்கும்பல் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் கைது என அறிவிக்கப்படுவதும் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதும் வழமையாகிவிட்டது. வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா வாள்வெட்டுக்குழுக்களை அடக்குவது   தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவதாக அறிவித்திருந்ததன் பின்னர் பல வாள்வெட்டுச்சம்பவங்கள் அரங்கேறிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் முன்னிலையில் 4000 சிங்கள குடியேற்றங்களுக்கு அனுமதி – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் குற்றச்சாட்டு !

கதிர்காமர், ஒரு அமைச்சராக, தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை சட்டவிரோதமாக்க உலகம் முழுவதும் பயணம் செய்தார். இப்போது கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராக சுமந்திரன், கதிர்காமர் போல உலகம் முழுவதும் சுற்றி வருகிறார் என வவுனியாவில் கடந்த 1731 நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். ஊடக சந்திப்பில் பேசிய அவர்கள்,

இன்று தமிழர்களுக்கு ஆபத்தான நாள். ஏனென்றால் சுமந்திரன் அமெரிக்காவில் இருக்கிறார்.
அமெரிக்காவிலிருந்து திரு.சுமந்திரன், தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தை நிறுத்த முடிந்தால் , 95% க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களால் கூட்டத்தை நடத்துவதற்கான உரிமைக்கு போராட முடியாதெனின், தமிழர்களின் உரிமைக்காக இந்தக் கட்சி எவ்வாறு போராட முடியும் என்பதை இது எடுத்து
காட்டுகிறது.

ஜி.எல்.பீரிஸ் மற்றும் ராஜபக்சக்களைச் சந்தித்த பின்னர், சுமந்திரன் மூலம் இலங்கையின் செய்தியை வெளிப்படுத்தவே இந்த அமெரிக்கச் சந்திப்பு என்பதை தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். சுமந்திரனை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் அரசு கட்சியை வலியுறுத்துகிறோம். இன்று நல்ல நேரம். அவரை நீக்கினாலும் சட்டப்படி கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கதிர்காமர், ஒரு அமைச்சராக, தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை சட்டவிரோதமாக்க உலகம் முழுவதும் பயணம் செய்தார். இப்போது கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளராக சுமந்திரன், கதிர்காமர் போல உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

கதிர்காமர் உயிருடன் இருந்திருந்தால் சுமந்திரன் என்ன செய்கிறாரோ அதையே அவர் செய்வார், அதாவது ஐசிசி வழக்கின் பொறியை அழிப்பார். தந்தை செல்வாவின் கட்சியில் இருந்து சுமந்திரனை நீக்க இன்று நல்ல நாள். அப்படிச் செய்தால் தந்தை செல்வா சொர்க்கத்திலிருந்து உங்களைப் பார்த்து சிரிப்பார் என்று உறுதியளிக்கிறோம்.

தயவு செய்து சம்பந்தன் சொல்வதைக் கேட்காதீர்கள், சிறிதரனின் கூற்றுப்படி, சம்பந்தனுக்கு லேசானது முதல் மிதமான டிமென்ஷியா உள்ளது, அவருக்கு கொழும்பு அரசாங்க கார் மற்றும் பங்களா தேவை. சம்பந்தனை ஓய்வு பெறச் சொல்லவும் இன்று நல்ல நாள். அவரது தலைமை தமிழர்களுக்கு தேவையில்லை. அப்படி செய்யாவிட்டால் தந்தை செல்வாவுக்கு உங்கள் மேல் கோபம் வரும். சுமந்திரன் தனது கொள்கையை தந்தை செல்வாவுக்கு எதிராகவே அனைத்தையும் செய்தார்.

சுமந்திரன் சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிக்கிறார். சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம் முன்னிலையில் நெடுங்கேணியில் 4000 சிங்களவர்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டமைக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. பௌத்தத்திற்கு முதன்மையான மதம் கொடுத்தார். வடகிழக்கு இணைப்புக்கு சதி செய்துள்ளார். ஏக்கிய ராஜ்ஜியவுக்கு சரி என்கிறார். இது ஒற்றையாட்சி, தமிழர்களின் சமஷ்டி எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது, அது எங்குள்ளது என்பது அவருக்கும் தெரியாது. அரியநேந்திரன், நேற்று சுமந்திரன் மீது குற்றம் சாட்டுகிறார். முஸ்லிம்களை ஆட்சி செய்ய அனுமதித்ததன் மூலம் தமிழர்கள் மட்டக்களப்பில் ஓரிரு எம்பி ஆசனங்களை இழந்தனர்.

பல லண்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் தங்கள் கொடூரமான கதையை ஐசிசியின் வழக்கறிஞருக்கு அனுப்பி பல ஆபத்துக்களை எடுத்தனர். இப்போது சுமந்திரன் இம் முயற்சியை அழிக்க நினைக்கிறார். சுமந்திரனின் சதி என்னவென்றால் ஐசிசியின் வழக்குரைஞர்களுக்கு அதிகாரம் இல்லை என்பது அவரது வாதம். ஐசிசி வழக்கை எடுத்தால் கொழும்பில் சிங்களவர்கள் மத்தியில் வாழும் சுமந்திரன் போன்றோருக்கு பாதுகாப்பு கிடைக்காது. கொழும்பில் உள்ள சிங்களக் கும்பலால் அச்சுறுத்தப்படுவார்கள். ஆம், அது அவரின் நியாயமான கருத்து . எனவே தமிழ் அரசியலை விட்டு வெளியேறி கொழும்பில் தங்குவது அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

சிங்களவர்கள் விரும்பாத எந்தவொரு அரசியல் தீர்வும் சிங்களவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என்று அவர் எப்போதும் வாதிடுகிறார். சுமந்திரனை தமிழ் அரசு கட்சி நீக்க வேண்டும் என்பதே சரியானது . அவர் தமிழ் அரசு கட்சியை விட்டு வெளியேறியவுடன் கொழும்பில் பாதுகாப்பாக இருப்பார் என்றனர்

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை !

யாழ்ப்பாண மாவட்டத்தில்  நீரிழிவு தொற்றுக்குள்ளாகுவோரின்  எண்ணிக்கை அதிகரித்து வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையம் பொறுப்பு வைத்திய அதிகாரி ம அரவிந்தன் தெரிவித்தார் .

இன்று  (திங்கட்கிழமை) தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்நீரிழிவு சிகிச்சை முகாதினை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்  மாவட்டத்தைப் பொருத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது குறிப்பாக இளவயதினர் சேர்ந்தவர்களுக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது.

இந்த நோய்த் தாக்கத்திற்குள்ளாகும் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சான்றுகள் உள்ளன குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அல்லது ந தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும் அல்லது நோய் தொற்று காணப்பட்டால் அதனை முறையாக பின்பற்றி குணப்படுத்த முடியும் எனவே யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என அவர தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம்  யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு  சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும்  நீரிழிவு சிகிச்சை முகாமினை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்ததோடு யாழ் நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டுள்ளமை”குறிப்பிடத்தக்கது

அரச பேருந்து சாரதியின் அவசரத்தால் உயர்தரத்துக்காக முதல்நாள் பாடசாலை சென்ற விறகுவெட்டியின் மகளுக்கு நேர்ந்த துயரம் !

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு  வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ9 வீதியின் மேற்கு பகுதியிலிருந்து பாடசாலை பக்கம் மஞ்சல் கடவையில் வீதியை கடந்த போது ஏற்பட்ட விபத்தில்  மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, மற்றுமொரு மாணவி  காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று( திங்கட்கிழமை) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில்  க.பொ.த சாதாரண தரம் கல்வி  கற்ற மாணவிகள் மூவர் உயர்தரம் கல்விக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்த போது இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக  பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.

இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது பின்னால் வந்த இலங்கை போக்கு வரத்து சபையின் பேரூந்து ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதி்ல் ஹன்ரர் வாகனம் பட்டாவுடன் மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகளுடன் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது சம்பவஇடத்திலயே திருவாசகம் மதுசாளினி வயது 17 என்ற மாணவி  உயிரிழ்ந்துள்ளதுடன் மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை துவிச்சக்கர வண்டியில் நாளாந்தம் ஊற்றுப்புலத்திலிருந்து கிளிநொச்சி விறகு  வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்திற்கு
கற்பித்து அனுப்பிய நிலையில் முதல் நாளே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பேருந்தின் தறிகெட்ட ஓட்டத்தால் பறிபோன மாணவியின் உயிர் - ஜே.வி.பி நியூஸ்

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்

குறித்த போராட்டத்தில் வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வு இன்றி வாகனங்களைச் செலுத்துதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் சட்ட விரோதமாக ஏற்படுத்தப்படும் குடியேற்றங்கள் – ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜர் !

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கு எதிராக நெடுங்கேணி பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்படியாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதவது,

வவுனியா மாவட்டத்தில் மூவின மக்களும் வரலாற்று ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம் . யுத்தத்திற்கு முன்னரான காலத்திலும் யுத்தகாலத்திலும் எமக்கிடையிலான வாழ்வியலில் அதற்குப் பின்னரும் பாரிய மாற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை . மேற்சொன்ன காலப்பகுதியில் ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்த போதிலும் நாம் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்துள்ளோம்.

கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் வடக்கு மாகாணத்தை பூர்வீகமாக கொண்டிராத வேறு மாகாணத்தை பூர்வீகமாகவும் கொண்ட பலர் திட்டமிட்டு குடியமர்த்தப்பட்டார்கள் . குறிப்பாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிலும் இக்குடியேற்றச் செயற்பாடுகள் மிகவும் இரகசியமான மாவட்ட நிர்வாகிகளுடனோ மக்கள் கலந்துரையாடப்படாமல் நடைபெற்றது.

இவ் இரகசியமான குடியேற்றச் செயலானது எமது மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பாரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது . பாரிய எண்ணிக்கையில் வேறு மாகாணங்களில் இருந்து கொண்டு வந்து குடியேற்றப்படும் சிங்கள மக்களால் தமது பூர்வீகத்திற்கும் தமது வாழ்வியல் முறைகளுக்கும் தனித்துவத்திற்கும் இடையூறு ஏற்பட்டு தாம் இரண்டாந்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சம் எமது மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல காலம் அகதிகளாக வாழ்ந்த எமது மாவட்ட மக்கள் மீண்டும் இன்றுவரை சொந்தக்காணிகளில் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை . இடம்பெயர்ந்த மக்கள் தமது காணிகளில் மீளக்குடியேற பல்வேறு அரச திணைக்களங்களால் தடை ஏற்ப்படுதப்படுகின்றது.குறிப்பாக வனவளத்திணைக்களம் மக்களுடைய காணிகளை எல்லைக் கல்லிட்டு மீள்குடியேற்றத்தை தடுத்துவருகிறது.

அக்காணிகளில் உள்ள நீண்டகால பயிர்களும் பழமரங்களும் சிதைந்த கட்டடங்களும் அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான சான்றுகளாகும் . காணியற்றவர்களாக காணிகளில் எமது மாவட்ட மக்களின் வழித்தோன்றல்கள் பலர் புதிய குடும்பங்களாக இன்றும் தமது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து தமது மீளக்குடியமர முடியாமலும் திருமணம் செய்து புதிய குடும்பங்களாக காணிகள் அற்ற நிலையிலும் உள்ள பலர் எமது மாவட்டத்தில் பெருவாரியாக உள்ள நிலையில் எமது மாகாணத்திற்கு வெளியே இருந்து மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான திட்டமிட்ட குறிப்பிட்ட ஓரின மக்களை மட்டும் முன்னிலைப்படுத்தி செய்யப்படுகின்ற குடியேற்றமானது எமது மாவட்டத்தின் இன விகிதாசாரத்தை மாற்றுகின்ற உள்நோக்கோடு செய்யப்படும் செயலாகவே நாம் கருதுகிறோம் . அத்துடன் 2014 ம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச செயலாளர் பிரிவின் ( வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவு ) நிர்வாகத்தினுள் இருந்த 5 கிராம அலுவலர் பிரிவுகள் ( 4 உள்ளூராட்சி மன்ற வட்டாரங்கள் ) கஜபாபுர . அத்தாவெட்டுனுவெவ , நிக்கவெவ , மொனராவெவ , கல்யாணபுரவின் ஒரு பகுதி ஆகியன வவுனியா வடக்கு பிரதேசசபையுடன் இணைக்கப்பட்டன.

இருந்தபோதிலும் இன்றுவரை இப்பகுதிகள் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தினாலேயே நிர்வகிக்கப்படுகிறது . இன்று எமது பாரம்பரிய பிரதேசத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான வேலைத்திட்டமானது மேற்கொள்ளப்படுகிறது .

அனுராதபுர மாவட்ட நிர்வாகத்தில் உள்ள கெப்பிற்றிக்கொலாவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கனகாவெவ ( 600 குடும்பங்கள் ) மற்றும் பதவியா பிரதேச செயலாளர் பிரிவின் வெரகதென்ன , கம்பிலிவெவ ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளை ( 600 குடும்பங்கள் ) அத்துடன் கொரவப்பொத்தான பிரதேசசெயலாளர் பிரிவில் உள்ள போகஸ்வெவ 02 இல் உள்ள 07 ம் வீதியிலிருந்து 22 வது வீதி வரையிலான பிரதேசம் ஆகியன வவுனியா வடக்கு பிரிவில் உள்வாங்குதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிகிறோம்.

இச்செயற்பாடானது மேலும் இன விகிதாசாரத்தில் பாரிய மாற்றத்தை மிக துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகவே நோக்கவேண்டியுள்ளது . எண்ணிக்கையில் தவறான கொள்கைகளினாலும் பௌத்த சிங்கள பேரினவாதத்தாலும் இந்த நாடு ஆழப்படும் வரை இந்த நாட்டிற்கு விமோசனமே இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

இலங்கையில் வாழுகின்ற எண்ணிக்கையில் சிறுபான்மையினரை ஒடுக்கி பெரும்பான்மையானவர்கள் நிம்மதியாக வாழ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருந்தும் குறுகிய மனப்பான்மையுடன் செயற்படுவது வேதனையளிக்கிறது . எனவே ஒன்றுபட்ட நாட்டிற்குள் அனைவரும் சமனானவர்கள் என்ற கோட்பாட்டோடு எதேச்சாதிகார சிந்தனையில் இருந்து வெளிவந்து எமது மாவட்டத்திலும் மாகாணத்திலும் வாழுகின்ற காணியற்றவர்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் காணிகளை பகிர்ந்து குடியமர்த்துவதுடன் இந்நாடு பல்லின பல கலாசார பல சமயங்களை சார்ந்த மக்கள் வாழுகின்ற நாடாக ஒற்றுமயுடன் நாம் அனைவரும் இலங்கையர்களாக எடுக்க நடவடிக்கை வேண்டும் என வாழ தாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என்று குறித்த அறிக்கையில் உள்ளது

பிரதேச செயலரின் அலுவலக அறையை முற்றுகையிட்டு கடமைகளை குழப்பிய சுமனரத்னதேரர் – பின்னணி என்ன..?

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு அம்பிட்டிய சுமனரத்ன  தேரர் போராட்டம் (PHOTOS) - தமிழ்வின்

இதன்காரணமாக இன்று (திங்கட்கிழமை) பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளதை காணமுடிகின்றது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வனஇலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்க அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த  மத குரு முன்னெடுத்துவருகின்றார்.

பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.