October

October

வைரலான “மெனிக்கே மகே ஹித்தே” பாடலின் பின்னணியில் இந்தியாவின் “றோ” – பேராசிரியர் நளின் டி சில்வா

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இளம் சிங்கள பாடகி யோஹானி டி சில்வாவின் “மெனிக்கே மகே ஹித்தே” என்ற பாடல் உலகம் முழுவதும் பிரபலமானதற்கு இந்தியாவின் “றோ” உளவுப் பிரிவின் சூழ்ச்சியான வேலையாக இருக்கலாம் எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்குள் இந்தியா மீதுள்ள அதிருப்தியை போக்குவதற்காக இந்தியா, யோஹானி டி சில்வாவை தெரிவு செய்துள்ளது.
இலங்கையில் இதுவரை பிரபலமாகாத அந்த பாடலுக்குத் திட்டமிட்ட அடிப்படையில் பிரச்சாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளனர், அமி தாப்பச்சன் மாத்திரமல்ல, சல்மான்கான் போன்றோரும் இதற்கு உதவி வருகின்றனர்.

இந்தியத் திரை கலைஞர்கள் தன்னிச்சையாக உதவவில்லை. சிலர் அவர்களை வழிநடத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா என்பது இலங்கையை விட மிகவும் திட்டமிட்டு வேலை செய்யக் கூடிய நாடு. அந்நாட்டின் நிர்வாக அதிகாரிகள், உளவுப் பிரிவுகள் என்பன வேலை செய்கின்றன எனவும் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த அதிருப்தியைப் போக்க இந்தியா இலங்கை பாடகியைத் தெரிவு செய்துள்ளது. அந்த பாடகி, முக்கிய பிரமுகர் ஒருவரின் மகள் என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.

இலங்கையில் கூட பிரபலமாக இல்லாத பாடலுக்கு இந்தியாவில் குறித்த பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளம்பரப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரும்பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் !

கரும்பூஞ்சை நோயினால் ஏற்பட்ட முதலாவது மரணம் நாட்டில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த நபர், எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பின்னரான விளைவுகளால் கரும்பூஞ்சை நோய் உண்டாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

“நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.” – லக்ஸ்மன் கிரியெல்ல

“நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் தற்போது விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல வலியுறுத்தினார்

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாட்டில் அப்பாவிகள் பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதேவேளை, குற்றவாளிகள் சகலரும் விடுதலையாகிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஆபத்தான நிலையைத் தடுக்க வேண்டும்.

நாட்டில் நீதிப்பொறிமுறை, நியாயப்பாடுகள் நாளுக்கு நாள் அழிக்கப்படுகின்றன என்ற கருத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் உருவாகியுள்ளது.

நாட்டில் அவசர அவசரமாக சட்டம் இயற்றப்படுகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் தனிப்பட்ட சட்டத்தரணிகளைக் கொண்டு இந்த அரசமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இப்போது புதிய அரசமைப்பைக் கொண்டு வருகின்றனர். ஆனால், அதனை நாம் பார்க்கவே இல்லை. நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இதனைக் கொண்டுவந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை – கருத்துக்களைப் பெற்றுக்கொண்டு சர்வதேசம் இலங்கையை அங்கீகரிக்கும் விதமாக சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுப்பது அவசியம்” – என்றார்.

“தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்.”- சம்பிக்க ரணவக்க காட்டம் !

இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா..?  என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த சம்பிக்க ரணவக்க, மேலும் கூறுகையில்,

“செப்டெம்பர் 21 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் என்னை விசாரணையொன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி நான் அங்கு சென்றேன். என்னிடம் விசாரணையின் போது, அதிகாரியொருவர் எனது தொலைபேசி உரையாடல் குறித்தும் கூறினார். அதாவது 2018, 2019 இல் எனது தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்தது. அவ்வாறு தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்பதற்கு நீதவானின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதா? எனக் கேட்டேன். ஆனால், அவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை.

இதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் எனது தனிமைப்பட்ட உரிமை மற்றும் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளனர். இதில் கருத்துச் சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. இதனால் அந்த அதிகாரிகளை நாடாளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்கின்றோம்.

இதேவேளை, வட்ஸ்அப் மூலமான உரையாடல்களே இவ்வாறு ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளன. ஆனால், வட்ஸ்அப் செயலியில் அவ்வாறு ஒட்டுக் கேட்பதற்கான அம்சங்கள் கிடையாது. அப்படியென்றால் ஏதேனும் விசேட தொழில்நுட்பம் ஊடாக மட்டுமே அதனைச் செய்ய முடியும்.

கடந்த காலங்களில் உலகில் பிரான்ஸ் ஜனாதிபதி, இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பிரபலங்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. பெகாசஸ் என்ற பெயரில் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட அந்தத் தொழில்நுட்ப உபகரணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் இருக்கின்றதா? அவ்வாறு இல்லாவிட்டால் சாதாரண வட்ஸ்அப் தொடர்பாடல்கள் தொடர்பான தகவல்களை எப்படி பெற்றார்கள் என்று விசாரணை நடத்த வேண்டும்” – என்றார்.

பாகம் 12: சிறைக்குள் நடந்த படுகொலைகளும் சிறைக்கு வெளியே நடந்த படுகொலைகளும் – படுகொலை அரசியலை தேர்ந்தெடுத்த இன்றைய மார்க்ஸியர்கள்!

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 12 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 07.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 12

தேசம்: 83 ஜூலைக் கலவரம். இது இலங்கையில் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதி. விடுதலை அமைப்புகள் சாதாரண தாக்குதல்களை ஒரு ராணுவத்தையும் போலீசையும் அடித்து துவக்கு பறித்த நிலைமை போய், மிகத் திட்டமிட்ட ஒரு தாக்குதல் 83 ஜூலை 23 இரவு நடக்குது. அந்தத் தாக்குதலில் தான் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய உடல் மறுநாள் மாலை கொழும்புக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத்தொடர்ந்து கலவரம் ஆரம்பிக்குது. அந்த காலகட்டத்தில் இந்த விடயங்களை நீங்கள் எப்படி அறிகிறீர்கள்? என்ன மாதிரி அந்த காலகட்டத்தில் உங்கள் உணர்வுகள் இருந்தது? எப்படி நீங்கள் அதை உள்வாங்கிக் கொண்டீர்கள்? எங்கே இருந்தீர்கள் நீங்க எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது?

அசோக்: ஜூலை இனக்கலவரம் ,படுகொலைகள் நடக்கும்போது எனது கிராமமான களுதாவளையில்தான் நான் இருந்தேன். அது ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான கவலையான மனநிலையை எங்களுக்கு தந்தது. சிங்கள அரசு மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு பிலிப்பைன்ஸில் இருந்து வந்த வெரித்தாஸ் வானொலியில் தான் இந்த செய்திகளை அதிகமாகக் கேட்கக்கூடிய தரக்கூடியதாக இருந்தது. வேற வானொலிகளும் இல்ல. ஊடகங்களும் பெருசா இல்லைதானே கிழக்கு மாகாணத்தில். ஒன்றேயொன்று வெரித்தாஸ் வானொலி தான்.

தேசம்: அந்த நேரம் முக்கியமாக இருந்தது வெரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்திகள்…

அசோக்: அன்றைக்கு இனக்கலவரம் பற்றிய ஒரளவு உண்மையான செய்திகளை கேட்கிறதென்றால் வெரித்தாஸ் வானொலியில் தான் கேட்க வேண்டும். அடுத்தது டாக்டர் ராஜசுந்தரம் படுகொலை என்பது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் காந்தியத்தில் இருந்தவர்கள். அவரோடு பழகியவர்கள். அந்த வெலிக்கடை படுகொலை என்பது உணர்வுபூர்வமான கவலையை அளித்தது. எங்களுக்கு மனக் கொந்தளிப்பை கொடுத்தது. 53 பேர் கொல்லப்பட்டு, பெயர்களெல்லாம் அறிவித்தார்கள். வெரித்தாஸ் வானொலியில் அதை விவரமாக சொன்னார்கள். ஒரு ஊடகத்தால் எத்தகைய தாக்கத்தை கொடுக்கமுடியும் என்பதை அக்காலங்களில உணர்ந்து கொள்ளமுடிந்தது. உண்மையிலேயே அந்த இரவுதான், நிறைய பேரை இயக்கங்களுக்கு போக வேண்டும் என்ற உணர்வை கொடுத்ததும், சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக போராட வேண்டும் சிந்தனையை கொடுத்ததும் அதுதான். இந்த படுகொலைகள் எங்க கிராமத்தில் இளைஞர்கள் மக்கள் மத்தியில் பெரிய சோகத்தை கோபத்தை, கொடுத்தது. மற்றக் கிராமங்களைப் பற்றி தெரியல. எங்க கிராமத்தில் அரசியல், இலக்கியம், சமூக அக்கறை கொண்ட குருப் ஒன்று இருந்தது ஆரம்பத்திலிருந்து. அவங்களுக்கு இயக்கங்களுக்கு போவதற்கான தூண்டுதலாக இது இருந்தது. பிறகு எங்கட கிராமத்தில் இருந்து நிறைய தோழர்கள் புளொட்க்கு வந்தார்கள்.

தேசம்: அந்த சம்பவத்துக்குப் பிறகு..

அசோக்: எங்கட கிராமத்து பையன்கள் இனவாத தாக்கத்தையோ, இனவாத ஓடுக்குமுறைகளையோ நேரடியாக அனுபவிக்காதவர்கள். கருத்தியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகள் பற்றி அறிந்திருந்தார்களேயொழிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படாத ஆட்கள். அவர்களை சிந்திக்க வைத்தது இப்படியான சம்பவங்கள் தான்.

தேசம்: தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் நீங்கள் முக்கியமான உறுப்பினராக இருக்கிறீர்கள். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பாரிய தாக்குதல்கள் எதையும் பெரிய அளவில் செய்யவில்லை. நான் நினைக்கிறேன் விமானப்படை தாக்குதல் ஒன்றுதான் தமிழிழ மக்கள் விடுதலைக் கழகம் செய்தது. அதுவும் திட்டமிடப்படாத தாக்குதல் என்று நினைக்கிறேன்.

அசோக்: யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையம், குறிகட்டுவான் கடல்படையினர் மீதான தாக்குதல் ஆரம்பத்தில் நடந்தது. இந்த தாக்குதல்கள் விமர்சனங்களுக்கு உரியவை.

தேசம்: அப்படியான சூழலில விடுதலைப் புலிகள் இப்படி ஒரு பாரிய தாக்குதலை செய்தது சம்பந்தமா கழகத்தில் எப்படி உணரப்பட்டது. கழகமும் இப்படியான தாக்குதல்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடுகள் முன்தள்ளப்பட்டதா?

அசோக்: தனிநபர் பயங்கரவாதம், தனிநபர் நடவடிக்கைகள், ராணுவத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக தெளிவான பார்வை, சுத்த ராணுவக்கண்ணோட்டத்திக்கு எதிரான கருத்தியல் சார்ந்த அரசியல் பார்வை எங்கள் பலரிடம் இருந்தது. இந்தத் தாக்குதல் வெறுமனே அரசாங்கத்தை பலமடையச் செய்யும் என்பதும், எங்களின் போராட்டத்தை பலவீனமடையச் செய்யும் என்பதும், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு பயன்படுத் தப்படும் என்பதும் தெரியும். எங்கட போராட்டம் மக்களை அனுசரிப்பதனூடாக, அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் போராட்டத்துக்கூடாகத்தான் கொண்டு வரவேண்டுமென்று நாங்க விரும்பினம். எங்களுக்கு சீனா, வியட்நாம், கியூபா போராட்டங்களும் படிப்பினைகளும் முன்மாதிரியாக இருந்தது தானே.

தேசம்: அந்த நேரம் இவைகள் பற்றி எல்லாம் நீங்கள் வாசித்திருக்கிறீர்களா…

அசோக்: ஓம். அனேகமாக கழகத்தில் நிறைய தோழர்களிடம் அரசியல் வாசிப்பு இருந்தது. மக்கள் இராணுவம், முண்ணனிப்படை பற்றியெல்லாம் அரசியல் அறிவு ஒரளவு கொண்டவர்களாக நாங்க இருந்தோம். எங்களுக்கு தெரியும் இப்படியான தாக்குதல்கள் அரசாங்கத்தை பலமடைய வைக்கும். எங்களை பலவீனமடைய வைக்கும் என்று. அதுல தெளிவா இருந்தனாங்கள். புலிகள் செய்றதால நாங்களும் செய்ய வேண்டும் என்ற அபிப்ராயம் எங்களிடம் இல்லை. ஆனா புளொட்டில் பல தோழர்களிடம் புலிகளைப்போல் தாக்குதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அடுத்தது மக்கள் போராட்டம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தனாங்கள். காந்தியமும் அதுதானே. மக்கள் மயப்படுத்தல்… காந்தியத்தை புளொட் பயன்படுத்தியதற்கான காரணமும் அதுதானே. காந்தியத்துக்கூடாக துரிதமாக மக்களை அரசியல் மயப்படுத்தலாம், அதை அடிப்படையாக பயன்படுத்தலாம் என்ற போக்குத்தான் எங்களிடம் இருந்தது. இது தவறான போக்கு என்பது வேறு.

இதுபற்றி முன்னமே கதைத்திருக்கிறம். யாழ்ப்பாணம் தாண்டிய ஏனைய பிரதேசங்களில் அரசியல் பாசறைகள் நிறைய நடத்தியிருக்கிறோம். அரசியல் வாசிப்புகள் நிறைய இருந்தது. அப்போ ஓரளவு எங்களுக்கு தெரிந்தது இவ்வாறான தாக்குதல்கள் எந்தவிதமான விடுதலையையும் பெற்றுத் தராது என்று. இயக்கங்கள் எல்லாத்தையும் வென்று தரும் என்ற எண்ணப்பாட்டை மக்களிடம் உருவாக்கி, மக்களை வெறும், பார்வையாளர்ளாகவும் ஆக்கிவிடும் என்று நினைத்தோம். மக்கள் மயப்படுத்தப்பட்ட முழுமையான போராட்டம் அவசியம் என்பதில் மிகக் கவனம் இருந்தது.

அடுத்தது விடுதலைப்புலிகள் தொடர்பான விமர்சனப் பார்வை எங்களிடம் இருந்தது. இவ்வாறான தாக்குதல்களைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று. அவர்களிடம் மக்களை அரசியல் மயப்படுத்துவது என்ற சிந்தனை இருக்கவில்லை தானே. அவங்கள் சுத்த இராணுவாதம் கொண்ட ஒரு மரபு ரீதியான ராணுவமாகத்தான் வளர்ந்து வந்தார்கள்.

தேசம்: அதை நீங்கள் அந்தக் காலகட்டத்தில் உணர்ந்திருந்தீர்களா?

அசோக்: அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் தெளிவாக உணர்ந்து இருந்தம். புலிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. புலிகளோடு இருந்த ஆட்கள் தானே, புளொட்டுக்குள்ள இங்கே வந்தவர்கள். அவர்கள் புலிகள் பற்றிய பல விமர்சனங்ளை சம்பவங்களை சொல்வாங்க.

தேசம்: புலிகளுக்கு உள்ளேயே நடந்த கொலைகள் தொடர்பாய் அது சம்பந்தமாக என்ன அறிந்திருந்தீர்கள்?

அசோக்: கூடுதலாக புலிகளுக்குள் இருந்து வந்தவர்களுடைய அபிப்பிராயம்… அங்க நடந்த தனிநபர் படுகொலைகள் தொடர்பாக கடும் விமர்சனம் இருந்தது. கணேசய்யர், நாகராஜ் வாத்தி, உமாமகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம், கண்ணன் நிறைய பேரிட்ட கொலைகள் தொடர்பாக மிக அதிருப்தி இருந்தது. புலிகளுடைய தனிப்பட்ட தாக்குதல்கள், தனிநபர் பயங்கரவாதம். பிரபாகரனின் தன்னிச்சையான போக்குகள்… கொலை செய்யப்பட்ட முறைகள்…

தேசம்: சில கொலைகளை சொல்லுங்கள்

அசோக்: பற்குணம், மட்டக்களப்பு மைல்கல், கண்ணாடி பத்மநாதன்… அது ஒரு நீண்ட கொலை பட்டியல். எல்லாம் சந்தேகத்தின் அடிப்படையிலும், இந்த தனிநபர் தாக்குதலுக்கு ஊடாக, படு கொலைகளுக்கு ஊடாக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற ஒரு நம்பிக்கையும் தான். அது கடைசி வரைக்கும் நீடிக்குது.

தேசம்: இந்தக் கொலைச் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கேக்கையும் நீங்கள் முதலில் குறிப்பிட்ட மாதிரி ராகவன், நித்தியானந்தன், நிர்மலா எல்லாரும் அப்பவும் விடுதலைப் புலிகளோடு தான் இருக்கினமா?

அசோக்: நித்தியானந்தன், நிர்மலா அந்தக் காலகட்டத்தில் இல்லை. அதுல ராகவன் மாத்திரம்தான் ஆரம்பகால உறுப்பினராக மிக நெருக்கமாக பிரபாகரனோடு இருந்து வாரார். இவர்கள் பிற்காலத்தில்தான். நான் நினைக்கிறேன், 80க்கு பிற்பாடுதான் நிர்மலா, நித்தியானந்தன் எல்லாம் அவர்களுடைய ஆதரவாளர்களாக மாறியிருப்பார்கள் என. இவர்களும் ஒரு முழுநேர ஊழியர்கள் இல்லை தானே. ஆதரவு தளத்தை வழங்கியவர்கள். பிறகு புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைக்குள்ளே போனார்களேயொழிய, முழு நேர உறுப்பினர்களாக இருக்கவில்லை. கருத்தியல் சார்ந்து அறிக்கைகள் எழுதுவதற்கு, கருத்தியல் சார்ந்து விளக்கம் கொடுக்கிறதுக்கு, நியாயப்படுத்துவதற்கு, ஒரு கிரவுட் தேவைதானே. அதற்கு இவங்க தேவைப்பட்டாங்க. அந்த நேரத்தில உணர்வுகள் என்ற ஒரு பத்திரிகையும் யாழ்ப்பாணத்தில புலிகள் வெளியிட்டவர்கள். அப்ப அதற்கு கட்டுரை எழுதுவதற்கான தேவையும் இருந்திருக்கும். ஆனா இவர்கள் சிறையில் இருந்து தப்பி இந்தியா சென்ற பின் எல்ரீரீஈயில் முழு நேரமாக வேலை செய்கிறாங்க.

ஒரு சந்தேகம் என்னிடம் உண்டு. அந்த நேரத்தில ஈபிஆர்எல்எப், ஈரோஸ், புளொட் என மார்ச்சியம் பேசிய இயக்கங்கள் இருக்கும் போது, வலதுசாரித்தனமும், தனிநபர் பயங்கரவாதத்தையும், படுகொலைகளையும் தங்கள் அரசியலாக் கொண்ட புலிகளுக்கு இவங்க எப்படி ஆதரவளிச்சாங்க என்று. ராகவனை விட்டுத்தள்ளுங்கள். அவர் அன்று தொடக்கம் இன்று வரை அதிகார நலன்களோடு, அந்த நபர்களோடு கூட்டுச்சேரும் ஒரு அடிமை மனநிலை கொண்டவர். அப்பவும் சரி இப்பவும் சரி நேர்மையற்ற மனிதர் அவர். நான் அவரை அறிந்த வரை சுயமான அரசியல் தேர்வு அவரிடம் இருந்ததில்லை. இதைப்பற்றி முன்னமே கதைத்திருக்கிறன். ஆனா நித்தியானந்தன் சேர் , நிர்மலா அப்படியானவர்கள் அல்ல. அரசியல் கருத்தியல் சார்ந்து சிந்திக்கக் கூடியவர்கள். அவர்கள் புலிசார்பு நிலையை எடுத்ததிற்கான காரணங்கள் இருக்கக்கூடும். இவர்கள் எல்லோருடனும் உரையாடல் செய்ய வேண்டும். புலிகள் படுகொலைகளையும், அராஜ கங்களையும் செய்த காலங்களில் இவங்க புலிகளோடு இருந்திருக்காங்க.

தேசம்: 83 ஜூலை படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களில் யாரை யாரையெல்லாம் அறிந்து வைத்திருந்தீர்கள்?

அசோக்: டாக்டர் ராஜசுந்தரம் அவருடன் மாத்திரம் நெருக்கம் இருந்தது.

தேசம்: காந்தியத்துடன் இருந்தபடியால்…

அசோக்: ஆனால் நிறைய பேரை கேள்விப்பட்டிருக்கிறோம். நடேசானந்தன், குட்டிமணி, ஜெகன், கிருஷ்ணகுமார் என்று பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பாக நேரடி உறவு இல்லையே ஒழிய, அவங்களுக்கும் எங்களுக்கும் உணர்வுபூர்வமான நெருக்கம் இருந்தது. எங்கட தோழர்கள், போராளிகள், எங்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் என்ற உணர்வு ஒன்று இருந்தது. மற்றது படுகொலை செய்யப்பட்ட முறைகளும் வெளிவர வெளிவர பெரிய தாக்கம் வந்தது. குட்டிமணி மீது நடத்தப்பட்ட அந்த கொடுரமான படுகொலை, அது ஒரு இனவாதத்தின் உச்சகட்டமாக தான் நாங்க பார்த்தோம். இனவாத அரசின், ஒரு அதிகார வர்க்கத்தின் துணையோடு நடந்த திட்டமிட்ட படுகொலைகள். பேரினவாத அதிகாரவர்க்கத்தின் இனவாத படுகொலையாக தான் பார்த்தோம்.

தேசம்: இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து எவ்வாறான அரசியல் நடவடிக்கைகளை இயக்கங்கள் கையில் எடுத்தது?

அசோக்: எல்லா மட்டங்களிலும் இலங்கை அரசு மீது இருந்த கோபம், கொந்தளிப்பு இயக்கங்களுக்கு சாதகமாக அமைந்ததுவிட்டது. இளைஞர்கள் மத்தியில், இயக்கங்களின் அரசியல் அற்ற வெறும் உணர்ச்சியூட்டல் நடந்தது. இது இயக்கங்கள் வீங்குவதற்கும், போராளிகளின் எண்ணிக்கை கூட்டுவதற்கும் சாதகமாக போய்விட்டது. அரசியல் சார்ந்து நடக்கவில்லை. வெறும் சிங்கள மக்களுக்கு எதிரான பிரச்சாரமாக, ஒரு மனநிலையை கட்டமைக்கிற மாதிரி சில இயக்கங்கள் செய்யத் தொடங்கிற்று. அது இன்னொரு இனவாதம்தானே. இளைஞர்கள் வர வர பின்தளத்திற்கு அனுப்பபட்டடார்களே தவிர தேர்வுகள், பரிசீலனைகள் எதும் இருக்கல்ல. பிறகு இந்தியாவும் டிரெய்னிங் கொடுக்க தொடங்கிவிட்டது.

தேசம்: வெலிக்கடை சிறைச்சாலை தொடர்ந்து கொழும்பில் கலவரம் வெடிக்குது. கொழும்பிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வடக்கு-கிழக்குக்கு வாரார்கள். அவர்களுடைய பராமரிப்பு அந்த விடயங்களில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது இயக்கங்கள் அவர்களை பராமரிக்கிறதில் புனர்வாழ்வளித்து ஈடுபட்டிருக்கின்றனவா?

அசோக்: ஓம். வவுனியா முல்லைத் தீவுக்கு வந்த நிறையபேருக்கு நாங்கள் பொறுப்பெடுத்து செய்தம்.

தேசம்: எவ்வாறான வேலைத்திட்டங்கள்? நீங்கள் அல்லது அந்த இயக்கங்கள் காந்தியம் ஈடுபட்டு இருக்குதா?

அசோக்: அதுல பிரச்சனை என்னவென்று கேட்டால், வவுனியா முல்லைத்தீவில் காந்தியம் தடை செய்யப்பட்டு விட்டது. வவுனியாவில் நடந்த பிரச்சனைக்கு பிறகு டேவிட் ஐயா ஆட்கள் கைது செய்யப்பட்டவுடன் காந்தியம் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு எல்லாத்திலயும் தடைசெய்யப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கினது.

அங்க எந்த தடையும் இல்லை. அதற்கு என்ன காரணமோ தெரியல. சிலவேளை, வேறு பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததோ தெரியல. அங்க இயங்கியது. மட்டக்களப்பில் சகல வேலைத் திட்டங்களும் நடந்தது. குடியேற்றங்கள், சத்துணவு திட்டம், காந்தியத்தின் சகல வேலைத் திட்டங்களும் கிழக்கு மாகாணத்தில் நடந்தது. குறிப்பாக மட்டக்களப்பில்.

தேசம்: கிட்டத்தட்ட மட்டக்களப்பில் நடந்த காந்தியத்தின் செயற்பாடு என்பது, புளொட்டின் செயற்பாடு தான்…

அசோக்: ரெண்டும் இணைந்த செயற்பாடு தான். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மட்டக்களப்பு காந்திய செயற்பாடுகளுக்கு நாங்கள் போகவில்லை. நாங்கள் தேடப்படுற ஆட்கள் தானே. நான் தேடப்படுறேன், ஈஸ்வரன் தேடப்படுது. வாசுதேவா மாத்திரம்தான் பிணையில் வரக்கூடியதாக இருந்தது.

தேசம்: வெலிகடை சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் தவிர வேற யார் யார் சிறையில் இருந்தவை…

அசோக் : நிறையப் பேர் இருந்தவங்க . எல்லா இயக்கங்களையும் சேர்ந்த போராளிகள், இயக்க ஆதரவாளர்கள், பொதுமக்கள் என கைதுசெய்யப்பட்ட பலரும் இருந்தனர். உயிர் தப்பிய அவங்களைத்தான் மட்டக்களப்பு சிறைக்கு மாத்திராங்க.

தேசம் : அதற்குப் பிறகும் கைதுகள் நடந்தனவா?

அசோக்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நிறைய நடந்தது. வெலிக்கடை படுகொலைகளுக்கு பின்னான காலங்களில்தான் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

தேசம்: அதுல முக்கியமான ஆட்கள் யார் யார் கைது செய்யப்படுகினம்?

புளொட்டின் தோழர்கள் சலீம், சத்தியமுர்த்தி, ஜெயகாந்தன், ரமணன், மீரான் மாஸ்டர், லவன், மாறன், சிவா, கல்லாறு சதீஸ், சண் தவராஜா, வைத்தியலிங்கம், சக்தி வடிவேல், மாணிக்கம்பிள்ளை, துரைசிங்கம் இப்படி நிறைய தோழர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எங்கள் கிராமத்தில் புளொட் தோழர்கள் நிறையப் பேர் கைது செய்யப்ப டாங்க. நல்லீஸ், கராட்டி அரசன், வன்னியசிங்கம், பேரின்பம், சிவஞானம், பூபாலசிங்கம், தில்லையம்பலம் செல்லக்கிளி, கனகசூரியம் இப்படி நிறையத் தோழர்கள். ஆனா இவர்கள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்படவில்லை. பூசா இராணுவ சிறை முகாம்மில்தான் அடைக்கப்பட்டாங்க… தோழர் கராட்டி அரசன் கராட்டியில் பிளாக் வெலிட் எடுத்தவர். திறமையான தோழர். இவரை பூசா சிறையில் வைத்து இராணுவம் அடித்துக் கொன்றது.

இவரின்ர தம்பி அவரை நாங்க செல்லக்கிளி என்றுதான் கூப்பிடுவோம். அவரும் பூசா சிறையில் இருந்தவர். வெளியில் வந்தவுடன் புலிகள் படுகொலை செய்தாங்க.

வன்னியசிங்கமும் பூசா சிறையிலிருந்து வெளிவந்த பின் அவரையும் புலிகள் சுட்டுக் கொன்றாங்க. அவரின் தலையை வெட்டி எடுத்து, அவரின் உடலை தெருத் தெருவாக டிரக்டரில் கட்டி இழுத்தாங்க. செல்வரெத்தினம் என்றொரு தோழர் கைது செய்யப்பட்டு பொலிசாரல் சுட்டுக் கொல்லப்பட்டார். பல தோழர்கள் பயங்கரமான சித்திரவதைகளை அனுபவிச்சாங்க. ரவிராஜ் என்ற தோழர் இன்றைக்கும் இந்த சித்திரவதைகளினால பாதிக்கட்ட நிலையிலதான் வாழ்கிறார்.

யோசித்துப் பாருங்க. எவ்வளவு கொடூரம். இதையெல்லாம் நினைத்தால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும். இந்த தோழர்களையெல்லாம் எங்கேயாவது பதிவு செய்யணும் என எண்ணி இருந்தன். இந்த போராட்டத்தில தங்கட வாழ்கையை இழந்தவங்க இவங்க. இவங்களெல்லாம் தோழர்கள் மாத்திரம் இல்ல, என்னுடைய இளமைக்கால நண்பர்கள் இவங்க.

தேசம்: ஏற்கனவே வெலிக்கடைச் சிறையில் இருந்தவர்களை மாத்திரம்தான் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்களா?

அசோக்: ஓம். மட்டக்களப்புக்கு கொண்டு வரப்படும் போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வெலிக்கடை படுகொலையில் உயிர் தப்பியவர்களைத்தான், பழைய ஆட்களைத்தான் கொண்டு வாறாங்க. வெலிக்கடை சிறையில் படுகொலை நடந்தவுடன், அவங்களுக்கு பாதுகாப்பின்மை இருக்குது. தற்காலிகமாக அவங்களை மட்டக்களப்பு சிறையில் வைத்துக் கொண்டு, இன்னுமொரு சிறைக்கு மாற்றுவதற்கு, அவகாசத்துக்காக மட்டக்களப்பு சிறைக்கு கொண்டு வரார்கள். இங்க குறிப்பிட்ட காலம் தான் வைத்திருக்க முடிவு செய்திருந்தார்கள். அதற்குப்பின் வேறு சிறைக்கு மாத்துவது அவர்களின்ர திட்டம். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் ட புதிய போராளிகளை, நிறைய தமிழ் மக்களை பூசா சிறையில் தான் அடைத்தார்கள். எங்கட கிராமத்திலேயே நிறைய பேரை கைது செய்திருக்கிறார்கள். பூஸாவில் எங்கட நிறைய தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: இந்த விடுதலைப் போராட்டத்தில் முக்கியமாக கருதப்பட்ட கனபேர் அந்த காலகட்டத்தில் மட்டக்களப்பு சிறையில் இருந்திருக்கிறார்கள். நிர்மலா… நித்தியானந்தன்…

அசோக்: டேவிட் ஐயா, ராஜன், டக்ளஸ் தேவானந்தா, சுகுதோழர், வரதராஜபெருமாள், நித்தியானந்தன், பாதர் ஜெயகுலராஜா, தங்க மகேந்திரன்.

தேசம்: வேற யார் யார்…

அசோக்: பனாக்கொடை மகேஸ்வரன், ஈரோஸ் அந்தோனிப்பிள்ளை, புளொட்டில் மாணிக்கதாசன், அற்புதம், வாமதேவன், சுபாஸ், மகேந்திரன் மாமா இவங்களெல்லாம் சிறைக்குள்ள இருந்தவங்க.

தேசம்: இவர்களெல்லாம் வெலிக்கடை சிறையில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்படுகிறார்கள்…

அசோக்: ஓம்…

தேசம்: இவர்கள் இந்த வெலிகடை படுகொலையில் இருந்து தப்பிய ஆட்கள்…

அசோக்: படுகொலையில் இருந்து தப்பி ஆட்கள் அவ்வளவு பேரும் தான், மட்டக்களப்பு சிறை உடைப்புக்குள்ளால வெளியில வாறார்கள்.

வெலிக்கடை சிறையிலிருந்து மட்டக்களப்பு சிறைக்கு மாற்றும் போது எல்லா இயக்கங்களை சேர்ந்தவங்களும் அதில் இருக்காங்க. அதுல ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், ஈரோஸ் தோழர்கள் இருந்திருக்கிறார்கள், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆட்கள் இருந்திருக்கிறார்கள், புலிகளின் ஆட்கள் இருந்திருக்கிறார்கள்.

தேசம்: மட்டக்களப்பு சிறையை உடைக்க வேண்டும் என்ற அந்த எண்ணக்கரு எப்படி உருவாகுது?

அசோக்: நான் சொன்னேன் தானே தற்காலிகமாகத்தான் இங்க வைத்திருக்கிறார்கள் என்று.

தேசம்: இதுல முக்கியம் என்னென்றால், வெலிக்கடை சிறையில் இருந்த ஆட்கள் எல்லாரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவங்க. எஞ்சியவர்களும் மிக முக்கியமான ஆட்கள் தான்.

அசோக்: அவர்களும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டிருந்தால், போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் இல்லாமல் போயிருக்கும். ஏதோ ஒரு வகையில் மிக முக்கியமான ஆட்கள் இவங்க… காலப்போக்கில் பிற்காலத்தில் அவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இருந்தாலும் கூட, அன்றைய காலகட்டத்தில் சிறைக்குள் இருந்த அவ்வளவு பேரும் மிக மிக முக்கியமான ஆட்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகள். அவர்கள் இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டு இன்னொரு படுகொலை நடந்திருந்தால் ஈழப் போராட்டத்தின் வரலாறு அன்றைக்கு அழிந்து போயிருக்கும். அப்போ இன்னொரு சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் இவங்களை வெளியில் எடுக்க வேண்டிய தேவை எல்லா இயக்கங்களுக்கும் இருந்தது. புளொட்டுக்கும் அந்த ஐடியா இருந்தது. ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் அந்த ஐடியா இருந்தது. புளொட் குறிப்பிட்ட காலத்துக்குள்ள அதை செய்யவேண்டும் என்று சொல்லி அதற்கான வேலைகளை தொடங்கினது. அதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லாமல் போய்விட்டது.

தேசம்: மட்டக்களப்பு சிறை உடைப்பு எப்ப நடக்குது…

அசோக்: 83 செப்டம்பர். எங்களிட்ட ஆயுதங்கள் இல்லை. குறிப்பிட்ட சில ஆயுதங்கள் தான் இருந்தது. ரகுமான் ஜான் தோழர் ஆயுதங்கள் எடுத்து வருவதற்கு இந்தியாவுக்கு போறார். போயிட்டு, அவர் வெறும் கையோடுதான் வாறார். வந்து சொல்லுறார் அங்க ஆயுதங்கள் இல்லை என்று. ரகுமான்ஜான் தோழர் மன்னாரில் வந்திறங்கிய போது கடற்படையின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பி, நேரடியா எங்கட வீட்ட தான் வாறார் களுதாவளைக்கு. அன்றிரவு எங்கட வீடு பொலிசால் ரவுண்டப் பண்ணுப்படுது. அன்று இரவு நானும் ரகுமான்ஜானும் வீட்டில் தங்கியிருந்தா நாங்களும் மாட்டுப்பட்டு இருப்போம்.

தேசம்: ஏற்கனவே நீங்கள் தேடப்படுற ஒரு ஆளாக இருந்தபடியால்…

அசோக்: எப்படியோ பொலிசிக்கு தெரிந்து விட்டது. அன்றைக்கு வேறு ஒரு வீட்டில இருந்தபடியால் தப்பி விட்டோம். பின் தளத்திலிருந்து ஆயுதங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த எங்களுக்கு தோழர் ரகுமான் ஜான் ஆயுதங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னது ஏமாற்றமாக இருந்தது. குறிப்பிட்ட காலத்தினுள் சிறை உடைப்பு செய்ய வேண்டும். காலம் போனால், வேறு சிறைக்கு மாற்றி விடுவார்கள். பிறகு ஒன்றும் செய்ய இயலாது. பிறகு ஈபிஆர்எல்எஃப் தோழர்களுக்கும் இது சம்பந்தமாக ஆர்வம் இருக்கின்றபடியால் அவங்களோட தொடர்பு கொள்கிறோம். குறிப்பாக யோகராஜ் என்று எங்களுக்கு நெருங்கிய தோழராக இருந்தவர். அவரோடதான் முதலில் தொடர்பு கொள்ளுகிறேன். அவர் சொல்கிறார் எங்களிட்ட ஆயுதம் இருக்கு சேர்ந்து செய்யலாம் என்று.

அடுத்தது சிவலிங்கம் என்று ஒரு தோழர். அருமையான தோழர். தோழர் பாலா, தோழர் கணேஸ் இவர்கள் எல்லாம் ஈபிஆர்எல்எஃப் தோழர்கள். அதில் குன்சி தான் முக்கியமானவர். குன்சியோடு வாசுதேவா தொடர்பு கொள்கிறார். குன்சிக்கும் வாசுதேவாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது சேர்ந்து செய்யலாம் என்று சொல்லி.

தேசம்: புளொட்டில் மட்டக்களப்பு சிறை உடைப்பை மேற்கொள்வதில் யார் முன்னுக்கு நின்று செயற்பட்ட ஆட்கள்…

அசோக்: முக்கியமாக தோழர் வாசுதேவாதான். மற்றது தோழர் பார்த்தன். சிறையிலிருந்து வந்தவங்களை பாதுகாத்து, இந்தியாவுக்கு கொண்டு சென்றதில் தோழர் பார்த்தனின் பங்களிப்பு முக்கியமானது.

வாசுதேவா மட்டக்களப்பில் சிங்கள வாடி என்ற இடத்தை சேர்ந்தவர். அங்க இருக்கிற பல பேர் மட்டக்களப்பு சிறையில் ஜெயிலராக இருக்கிறார்கள். இயல்பாகவே வாசுதேவுக்கும் இந்த ஜெயிலர்களுக்கும் இடையில் உறவு ஒன்று இருந்தது. சிறையில் நடக்குற எல்லாம் இந்த தமிழ் ஜெயிலர்களுக்கூடாக தெரியவரும். அதில முக்கியமானவர் கிருஷ்ணமூர்த்தி என்றவர். அவர்
வாசுதேவாவின் நல்ல ஃப்ரெண்ட். சிறை உடைப்புக்கு பிற்பாடு இவரும் புளொட்டிக்கு வந்து, பி எல் ஒ ட்ரெயினிங் எடுத்தவர். தோழர் பிரசாத் என்று சொல்றது. புலிகள் தான் அவரை பிறகு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொன்றார்கள். மிகத் திறமையான தோழர். உண்மையிலேயே அந்த ஜெயில் உடைப்புக்கு பெரும் உதவியாக இருந்தவர் இவர்தான்.#

இவருக்கூடாகத்தான் உள்ளே இருந்தவர்கள் தப்புவதற்கான தற்காப்பு ஆயுதங்கள், இரண்டு ரிவோல்வர்கள், வடிமைக்கப்பட்ட மெசின் கன், சாவிகள் கொடுக்கப்பட்டன.

தேசம்: கிட்டத்தட்ட ஜெயில் உடைப்பு என்பது திறந்துவிடப்பட்டது மாதிரித்தான்…

அசோக்: ஆனால், அதற்கான தயாரிப்புகள் நிறையச் செய்யப்ப ட்டது. எங்களிடம் ஆ யுதங்கள் இல்லை. ரிவோல்வர்கள் இருந்தன. இவற்றை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதாக சொன்னாங்க. பிறகுதான் தெரியும் அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்று. ஆயுதம் இல்லாதபடியால், குறைந்தபட்சம் ஆயுதம் தேடவேண்டும் என்று சொல்லி கிராமங்களிலிருந்து சோட் கண்களை எடுத்தோம். அதுல வரதன், வைத்திலிங்கம், விஜி, ஜீவா அகஸ்டின், நிறைய தோழர்கள் ஈடுபட்டார்கள்.

தேசம்: அதுல ஈஸ்வரனும்…

அசோக்: ஈஸ்வரன், கராட்டி அரசன், நான் சில இடங்களில் ஆயுதங்களை சேகரித்தோம். அதற்குப் பிறகு அரசாங்கம் மிகக் கடுமையாக சொல்லிவிட்டது விவசாயிகள் இருக்கிற ஆயுதங்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று.

தேசம்: நீங்கள் விவசாயிகளிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயற்சித்தீர்கள்.

அசோக்: அது ஒரு பிழையான காரியம்தான். அன்றைய நேரத்தில் அதைப்பற்றி யோசிக்கவில்லை. சிறையிலிருப்பவர்களை எடுக்க வேண்டும் என்ற நோக்கம்தான் முக்கியமாகபட்டது.

மட்டக்களப்பு ஜெயில் உடைப்பில் நான், ஈஸ்வரன் நேரடியாக பங்கு கொள்ளவில்லை… அப்போது நாங்கள் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்தோம்… முழுக்க முழுக்க ஈடுபட்டது வாசுதேவாதான். இந் நேரத்தில் தோழர் மாசிலாமணியின் பங்களிப்பை நினைவு கூறுவது மிக அவசியம். அவர்தான் சிறைச்சாலை கதவு திறப்புக்களை செய்து உதவியவர். அவரின் இந்த உதவியின்றி சிறைச்சாலை கதவுகளை திறந்திருக்க முடியாது.

அவர் லேத் மெசின் கராஜ் வைத்திருந்தார். அவர் கடைசியாக புளொட்டில வந்துட்டார். இப்ப கனடாவில இருக்கிறார் என்று நினைக்கிறேன். தப்பிச் செல்வதற்கு காந்திய வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இது பின்னர் பொலிசிக்கு தெரியவந்து மட்டக்களப்பு காந்தியத்தை தடைசெய்துவிட்டாங்க. பொறுப்பாக இருந்த சின்னத்துரை மாஸ்ரரும், துரைசிங்கமும் கைது செய்யப்பட்டாங்க.

இந்த சிறை உடைப்பில், தோழர்கள் சக்தி வடிவேல், சங்கர், வரதன், வைத்திலிங்கம் கணன், கராட்டி அரசன், விஜீ போன்றோர் முக்கியமானவங்க. ஈபிஆர்எல்எப் தோழர்களும் மிகமுக்கியமானவங்க. குறிப்பாக தோழர் குன்சி. இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடுதான் மட்டக்களப்பு சிறையுடைப்பு நடைபெற்றது. பிறகு தோழர்கள் சக்தி வடிவேல், வைத்தியலிங்கம், மாணிக்கம்பிள்ளை போன்றவங்ககளும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டாங்க…

தேசம்: அந்த நேரத்தில் புளொட் தாம் செய்ததாக உரிமை கோரி அறிக்கை விட்டதென நினைக்கிறேன்.

அசோக்: புளொட் முழுக்க உரிமை கோர இயலாது. அது உண்மையிலேயே புளொட்டும், ஈபிஆர்எல்எஃப் பும், சேர்ந்து செய்த சிறை உடைப்பு தான். யாழ்ப்பாணத்தில் புளொட் அறிக்கை விட்டு, பின்பு ஈபிஆர்எல்எஃப் ஒரு அறிக்கை விட, முரண்பாடு வந்து அறிக்கைப் போராகவே மாறிவிட்டது. இரு அமைப்புக்களும் புரிந்துணர்வு அடிப்படையில் தோழமையோடு இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்க முடியும்.

புளொட் தலைமையினால் அது முடியாமல் போயிற்று. இந்த அறிக்கைப் போர் தோழமையோடு இருந்த ஈபிஆர்எல்எப் தோழர்களுக்கும் எங்களுக்குமிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, பரஸ்பரம் நம்பிக்கையின்மையையும் உருவாக்கி விட்டது.

தேசம்: இவ்வாறான பல முரண்பாடுகள் உரிமை கோரல்கள் பல எழுந்திருக்கு…

அசோக்: அது எனக்கு ஒரு பெரிய மனவருத்தம். இப்படியான சம்பவங்களை வடிவா பேசித் தீர்த்துக்கலாம். ஈபிஆர்எல்எஃப் தோழர்கள் உரையாடலுக்கு தகுதியற்ற ஆட்கள் இல்லை தானே. எங்களைவிட அவங்களிட்ட ஜனநாயகப் பண்பு இருந்திருக்கு. அவங்களோட உரையாடல் செய்து இருக்கலாம். இது புளொட்டில் நடந்த பெரிய தவறு.

உதாரணமாக மட்டக்களப்புகச்சேரி துப்பாக்கி பறிமுதல் சம்பவம். அது எனக்குத் தெரிந்த நண்பர்களால் செய்யப்பட்டது. அதற்கு நான் தனிப்பட்ட வகையில் ஒத்துழைப்பு கொடுத்தனேயொழிய, அதற்கும் புளொட்டிக்கும் தொடர்பு இல்லை. பிறகு அவங்க எல்.ரீ. ரீ . ரீக்கு போயிட்டார்கள். மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு பிறகு, இதை நாங்கள் செய்யத்தான் இருந்தோம். செய்யுறதுக்கு அதற்கான ஆட்பலம் இல்லாமல் போய்விட்டது. நானும் ஈஸ்வரனும் தான் மட்டக்களப்பில் இருந்தோம். மிச்ச எல்லோரும் சிறை உடைப்போட அப்படியே இந்தியாவுக்கு போயிட்டார்கள். அதால செய்ய முடியாமல் போயிற்று. கச்சேரி துப்பாக்கி பறிமுதல் நடந்தது பற்றி பின் தளத்தில் கேள்விப்பட்ட புளொட் தலைமை இதனைச் செய்தது புளொட் என அறிக்கைவிட்டது. இது தவறான புரிதலின் அடிப்படையில் நடந்தது. புளொட் செய்வது பற்றிய திட்டமிருந்ததினால் புளொட்தான் செய்திருக்கும் என்ற அனுமானத்தில் இவ் அறிக்கை வெளியிட்டதாக பின்னர் சொல்லப்ட்டது.

சிலின்டர் சீமெந்துடன் அமர்வுக்குச் சென்ற சபை உறுப்பினர் – விலைவாசியை எதிர்த்து விசித்திர போராட்டம் !

இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. முக்கியமாக பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து என பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையானது பலருடைய அதிருப்திக்கும் காரணமாகியுள்ளது.  இது தொடர்பில் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் தம்முடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் விநோத போராட்டத்தை நடத்தியுள்ளார்.

PHOTOS: நாட்டில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பை விநோதமாக வெளிப்படுத்திய  அரசியம் பிரமுகர்!

கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.  இதன்போது சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல் எரிவாயு சிலிண்டர்களை உடலில் சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றை அணிந்தும் உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்துகொண்டிருந்தார். விலை அதிகரிப்பானது மக்களைப் பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளது என்று அரசாங்கத்தை கடுமையாக அவர் விமர்சித்தார். இதன் போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபை தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இறுதி யுத்தத்தில் குடும்பங்களோடு சரணடைந்தவர்கள் எங்கே ..? – நாடாளுமன்றில் விபரங்களுடன் கேள்வியெழுப்பிய சிறீதரன் !

இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,

2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,

3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,

4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,

5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,

6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,

7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,

8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,

9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,

10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,

11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,

12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,

13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,

14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சரணடைந்ததற்கான சாட்சிகள் இருக்கிறது .குழந்தைகள் சிறுவர்களுக்கான புதிய சட்டங்கள் சீர்திருத்தங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கிற மேலே குறிப்பிட்ட சிறார்களுக்கு என்ன நடந்தது இவர்களில் பெரும்பாலானோர் எனது மாணவர்கள் ஆவர். சிறைச்சாலைகளில் எத்தனையோ பெண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குழந்தைகளோடு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
பயங்கர வாத தடைச்சட்டத்தின் மூலம் தற்போதும் தமிழர்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 39 பேர் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைக்கப்படும் கரைச்சி பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோரும் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர்.
எமக்கு நினைவேந்தல் செய்கிற உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது எமது பிள்ளைகளை நினைவுகூர முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்றார்.

“தமிழ் மக்கள் வாழக்கூடாது என கேவலம் கெட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படுகிறார்கள்.” – இரா. துரைரெட்ணம் குற்றச்சாட்டு !

“மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும்.” என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

”வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி கிழக்கு பகுதியின் மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் 200 சிங்கள குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 ஏக்கர் வீதம் சிங்கள மக்களுக்கு வழங்கி திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கின்றது.

இந்த சிங்கள குடியேற்றத்தை செய்வதற்காக இலங்கையின் பௌத்த ஆலோசனைக்குழுவின் நடவடிக்கையின் பயனாக ஜனாதிபதியின் துணையுடன் கொழும்பு காணி ஆணையாளரது வழிகாட்டலின் பெயரில் இன்று இந்த பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடாத்துவதற்காக பௌத்த தலைமையிலான குழுவினருடன் பார்வையிட்டது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதை மத்திய அரசின் செயற்பாடு முன்நிறுத்துகின்றது.

இது தொடர்பாக அந்தபகுதியில் மக்கள் பிரதிநிதிகளும் அந்தபகுதிமக்களும் ஒரு வெகுஜன ரீதியான எதிர்ப்பு போராட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்த இன்றைய தினத்தில் இந்த காணிகளை பாக்கச் சென்றவர்களுக்கு இதில் எதிர்ப்பு இருக்கின்றது என தெரியப்படுத்தியுள்ளது. 1983 ம் ஆண்டு 1985 ம் ஆண்டு கலவரங்களின் ஊடாக அந்த பகுதியில் குறிப்பிட்ட சில 4 அல்லது 5 சிங்கள குடும்பங்களும் தமிழ் குடும்பங்களும் முஸ்லீம் குடும்பங்களும் இடம்பெயர்ந்தது என்பது வரலாறு இதற்கு 1982 ம் ஆண்டு வருடாந்த அனுமதிப்பத்திரம் இந்த பகுதியில் ஒரு குடும்பத்துக்கு 6 ஏக்கர் வீதம் 198 குடும்பங்களுக்கு இருந்ததாக பொய்யான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை தயாரித்து சம்மந்தப்பட்டோருக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

இந்த வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கையொழுத்து வைத்த உத்தியோகத்தவர் என்பவர் எங்கள் அறிவுக்கு எட்டியவரை அப்படி ஒரு உத்தியோகத்தர் வேலை செய்யவில்லை. ஆகவே காணி ஆணையாளா இந்த வருடாந்த அனுமதிப்பத்திரம் பொய்யா உண்மையா என இந்த விடயத்தை முதலில் விசாரணை செய்யவேண்டும். வருடாந்த அனுமதிப்பத்திரம் அந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அது இரத்து செய்யப்படும். ஆகவே ஒரு பொய்யான ஆவணத்தை தயாரித்ததாக ஒரு குற்றச்சாட்டடை நான் முன்வைக்கின்றேன் அது மட்டுமல்ல கடந்த பதினைந்து இருவது வருடமாக கிழக்கு மாகாண சபையில் இந்த விடையத்தை 4 வது தடவையாக நான் இங்கு இன்று பேசுகின்றேன்.

இந்த குடியேற்றம் தொடர்பாக கடந்த வருடம் அதற்கு முந்தியவருடம் பல முயற்சிகள் செய்யப்பட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கிழக்குமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பல ஆட்சேபனையை தெரிவித்து வந்தோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் மத்திய அரசாங்கமும் பௌத்த ஆலோசனைக் குழு சிங்கள மக்களை நாங்கள் குடியேற்றி ஆகவேண்டும் என இன்று இதனை கையில் எடுத்திருக்கின்றது என்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு கேவலம் கெட்ட ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின் தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை வன்மையாக கண்டித்து இன்று இந்த நிலைமையில் அந்த இடத்திற்கு சென்று மக்கள் பிரதிநிதிகள் ஆர்பாட்டம் நடாத்துவது என்பது வரவேற்கதக்க விடையம் இதை உணர்ந்து மத்திய அரசு இதனை நிறுத்துவதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

லொகான் ரத்வத்தைக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு !

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விரும்பும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளதோடு லொகான் ரத்வத்தைக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருத்தி வைத்து தலையில் கைத் துப்பாக்கி வைத்து அச்சுறுத்தியமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதையின் கீழ் வழக்கை தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் உயர் நீதிமன்றில் நீதியரசர்கள் மூவரின் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அமைச்சர் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர்களிற்கு எதிராக சித்திரவதைக் குற்றச் சாட்டு முன் வைக்கப்படுவதனால் இவர்கள் சார்பில் தாம் ஆயராகவில்லை என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது குறித்த வழக்கை ஆராய்ந்த நீதியரசர்கள் சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஆராய்ந்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தடுப்புக் காவல் கைதிகளை அவர்கள் விரும்பினால் விருப்பம் கோரும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் அல்லது அநுராதபுரத்தில் இருக்க சம்மதம் தெரிவித்தால் அங்கே இருக்க முடியும் எனவும் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்தைக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் சட்டமா அதிபரின் ஆலோசணையுடன் குற்றவியலின் கீழ் அறிக்கை பெற்று மன்றிற்கு சமர்ப்பிக்குமாறும் நீதியரசர்களான காமினி அமரசேகரஇ யசந்த கோதாகொட ஜனக் டீசில்வா ஆகியோர் இடைக்கால கட்டளையிட்டு வழக்கை சித்திரவதை மற்றும் சட்டத்தின் கீழ் சமனாக பாதுகாத்தல் இனமொழி பாகுபாடு ஆகிய மூன்று விடயங்களின் அடிப்படையில் 11 12-112-2 ஆகிய சரத்தின் கீழ் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர்.
குறித்த வழக்கில் வழக்காளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கேசவன் சயந்தன் த.ஜெயசிங்கம் ஆகியோர் ஆஜராகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை 98% வெற்றி.” – ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கை 98% வெற்றி பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்காமல் பாடசாலைகளை மீண்டும் திறக்க பல மாகாண அதிகாரிகள் மற்றும் பொலிஸார் முயற்சித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சரான சரத் வீரசேகர, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை அச்சுறுத்தும் நோக்கம் தொடர்பில் அவர் கேள்வி எழுப்பியதுடன், அவர் கல்வியமைச்சர் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

இதே நேரம் அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளதாக கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.