September

September

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு !

மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

தென்னிந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேற்று சந்தித்தாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழ்நாட்டிற்கும், மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் சட்டபேரவையில் அறிவித்திருந்தமைக்கு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் மூலம் பல்வேறு அபிவிருத்திகள், மலையக மக்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை பிறந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சந்திக்க மறுத்த கொழும்பு பேராயர் !

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உடனான சந்திப்பை புறக்கணிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சந்திப்பொன்றிற்கு கோரிக்கை விடுத்து வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடிதமொன்றை அவருக்கு அனுப்பியிருந்ததாக அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சந்திப்பிற்கு தயாராக இருப்பதாகவும் நிபந்தனைகள் நிறைவேறும் வரை அமைச்சரை சந்திக்க மாட்டோம் என்றும் கர்தினால் பதிலளித்துள்ளதாக அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ கூறினார்.

இந்நிலையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடத்தப்பட வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜி.எல்.பீரிஸிற்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு கத்தோலிக்க சமூகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் ஊடகங்களில் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தாக்குதல்கள் மீதான விசாரணையில் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசிலிருந்து விலகுகிறதா..? ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி – மைத்திரிபால சிறிசேனவின் முடிவு என்ன ?

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்தவொரு தீர்மானத்தினையும் மேற்கொள்ளவில்லை என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கட்சியின் 70 ஆம் ஆண்டு நிறைவிற்காக பொலனறுவையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதன்போது,  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் இதுவரையில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானதாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைமையிலான புதிய கூட்டணியொன்றினை உருவாக்குவதற்கு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட உப தலைவர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எந்த தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாத புதிய கொவிட் – அதிர்ச்சியில் உலக சுகாதார அமைப்பு !

எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாத கொவிட் திரிபொன்று உலகளாவிய ரீதியில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

‘மூ’ “மியு (MU) B.1.621”  என அழைக்கப்படும் இந்த கொவிட் திரிபு, கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொவிட் திரிபை இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எந்தவொரு தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும், இது மிக விரைவில் பரவக் கூடியது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

முறையாக சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இந்த தொற்று பரவுவதை தடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடரும் ஊரடங்கு – அதிகரிக்கும் வீட்டுவன்முறையால் பலர் வைத்தியசாலையில் அனுமதி !

“தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீட்டு வன்முறை சம்பவங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது ,

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீட்டு வன்முறை சம்பவங்கள்  அதிகரித்த நிலையில் கடந்த 10 நாட்களில் (ஓகஸ்ட் 21 முதல் ஓகஸ்ட் 31 வரை) கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் 150 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 30 மனைவிகள் தங்கள் கணவர்களால் தாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் – அக்கம் பக்கத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆண்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், கடந்த 10 நாட்களில் வீட்டில் விழுந்து தீக்காயம் அடைந்ததால் சுமார் 100 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் 23 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.

“வடக்கு – கிழக்கு மக்களின் பொறுப்பற்ற தன்மையாலேயே தொற்றாளர்களின் சாவு அதிகரித்துள்ளது.” – காவற்துறை ஊடகப் பேச்சாளர் காட்டம் !

“வடக்கு – கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், சாவு எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே. எனவே, பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் நடமாடாது இருந்தால் மட்டுமே இந்தத் தொற்றுப் பரவல் முடிவுக்கு வரும்.” என காவற்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பொதுமக்களே ஏதேனும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டும் வீடுகளிலிருந்து வெளியேறுங்கள். இதன்போது வீதிச்சோதனைகளில் ஈடுபட்டுள்ள காவற்துறையினருக்கு நீங்கள் பயணிப்பதற்கான காரணத்தைக் கூற வேண்டியது அவசியம்.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி பயணிப்பவர்களும் உள்ளனர். எனவே, இவ்வாறானவர்களை இனங்காண்பதற்காகப் காவற்துறையினர் பல கேள்விகளைக் கேட்பர்.

எனவே, அற்கான ஒத்துழைப்பைப் காவற்துறையினருக்கு வழங்கிச் செயற்படுமாறு வடக்கு – கிழக்கு மக்களைக் கோருகின்றேன் – என்றார்

“ஆப்கானிஸ்தான் மக்களிடம் மென்மையாக இருங்கள்.” – தலிபான் செய்தித் தொடர்பாளர்

“ஆப்கானிஸ்தான் மக்கள் அன்புடனும் அனுதாபத்துடனும் நடத்தப்பட வேண்டும். எனவே, அவர்களிடம் மென்மையாக இருங்கள்.” என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாஹித் ஒரு போராளிகள் குழுவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களுடைய முயற்சிகளுக்கு அவர் நன்றி தெரிவித்ததோடு ‘சுதந்திரம் பெற்றமைக்காக’ அவர்களை வாழ்த்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

‘ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக காபூலிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், உண்மையான இஸ்லாமிய அமைப்பை உருவாக்க விரும்புகின்றோம்.

உங்கள் தியாகங்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். இதற்கு காரணம் நீங்களும் எங்கள் தலைவர்களும் அனுபவித்த கஷ்டங்கள் தான். இன்று (எங்கள் தலைவர்களின்) நேர்மை மற்றும் பொறுமை காரணமாகவே நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்.

எனவே நான் உங்களையும் ஆப்கானிஸ்தான் நாட்டையும் வாழ்த்துகிறேன். எங்கள் நாடு மீண்டும் ஒருபோதும் படையெடுக்கப்படக்கூடாது என்பதே எங்கள் விருப்பம். நாங்கள் அமைதி, செழிப்பு மற்றும் உண்மையான இஸ்லாமிய அமைப்பை விரும்புகிறோம்’

உங்கள் மக்களுடன் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கும்படி நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இந்த தேசம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள் அன்புடனும் அனுதாபத்துடனும் நடத்தப்பட வேண்டும். எனவே, அவர்களிடம் மென்மையாக இருங்கள். நாங்கள் அவர்களின் ஊழியர்கள். நாங்கள் அவர்கள் மீது நம்மை திணிக்கவில்லை’ என கூறினார்.

மேலும், தலிபான் போராளிகளை ஆப்கான் மக்களிடம் மென்மையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“நான்காயிரம் தொற்றாளர்களை உயிரிழப்பு எதுவுமின்றி மீட்ட சுதேசவைத்தியம்.” – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுர்வேத சிகிச்சைகளில் ஒருவர் உயிரிழக்கவில்லை.” என  சுதேச வைத்திய ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மேலும் நான்காயிரத்திற்கும் அதிகமான மேற்பட்டவர்கள் ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

சுமார் ஐயாயிரத்து 858 கொரோனா நோயாளிகள் 13 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர், அவர்களில் நான்காயிரத்து 720 பேர் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளனர்.

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 299 கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே மேற்கத்திய வைத்தியசாலைகளில் சிகிச்சை தேவைப்பட்டது. ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய வைத்திய நடைமுறைகள் இரண்டின் கலவையாக மேற்கொள்ளப்பட்டது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அரசின் மேற்கத்திய வைத்தியசாலைகளுடன் இணைந்து செயற்படுகின்றது.

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே ஏற்படும் சிக்கல்கள் மிகக் குறைவு, இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த வாரம் கொரோனா சிகிச்சைக்காக மேலும் ஐந்து ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்படும் என்றார்.