September

September

“இணையவழியில் கற்பிக்கும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் கற்பிக்காத ஆசிரியர்கள்..” – விசாரணைகள் ஆரம்பம் !

நடுநிலையான தீர்வொன்றினை வழங்கி ஆசிரியர்கள் முன்னெடுக்கும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் போராட்டத்தை நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (22.09.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது மேலும் பேசிய அவர் ,

எவ்வாறிருப்பினும், தற்போது இணையவழி கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை, இணையவழிக் கற்பித்தலைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள் அச்சுறுத்துவதாகவும், இணையவழிக் கற்பித்தலைப் புறக்கணிக்கும் ஆசிரியர்களை சில தரப்பினர் அச்சுறுத்துவதாகவும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றுக்கொன்று குற்றம்சாட்டிக் கொள்கின்றன.

இணையவழி மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகக் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பான முறைப்பாடு குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

“ஐ.நாவில் வெற்றுப்பேச்சு பேசிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய.” – கஜேந்திரகுமார் விசனம் !

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளைத் தடை செய்துவிட்டு, தற்போது உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஐ.நாவில் வைத்து  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுப்பது வெற்றுப் பேச்சே.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்)சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசுகையில்,

கடந்த 19 ஆம் திகதி நியூயோர்க் நகரில், ஐ.நா. பொதுச்செயலாளரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சந்தித்தபோது, உள்ளகப் பொறிமுறையில் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக கலந்துரையாட வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த அரசு ஆட்சிக்கு வந்த சிறிதுகாலத்தில், பல எண்ணிக்கையிலான புலம்பெயர் அமைப்புகளை தடை செய்தது. இவ்வாறாக தடை  செய்துவிட்டு ஐ.நா.வுக்கு செல்லும்போது இவ்வாறு கூறுகின்றனர். இது முழுமையான வெற்றுப் பேச்சே.

இதேவேளை, காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழை  வழங்குவதற்காக நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி  கூறுகின்றார். அப்படியானால்  அவர்களுக்கு என்ன நடந்தது என்ற பதிலை ஜனாதிபதி வழங்க வேண்டும்.

அதேபோன்று ஆட்சிக்கு வந்த பின்னர் பல தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ததாக ஜனாதிபதி கூறியுள்ளார். தண்டனைக் காலம் முடிவடையவுள்ளவர்களே அவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவ்வாறான அறிவித்தல்கள் சர்வதேசத்துக்கு ஜனாதிபதி வழங்கும் வெற்றுப் பேச்சுகளாகவே இருக்கும் – என்றார்.

“ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.” – ஐ.நா பேரவையில் ஜனாதிபதி கோட்டாபய !

“ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கொரோனா தொற்றுப் பரவலின் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களைப் பறிமாறிக்கொள்ளவும் சிறந்த முறையில் நாடுகளை மீளக் கட்டியெழுப்பவும், பிராந்திய தகவல் மையமொன்றை அமைப்பதற்கான ஒத்துழைப்பு, உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு வழங்க, இலங்கை எதிர்பார்க்கின்றது.

வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் மற்றும் சிகிச்சை முறைமைகளை அறிமுகப்படுத்துவதில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேகமானதும் ஆக்கபூர்வமானதுமான செயற்பாடுகளை, நான் மிகவும் பாராட்டுகிறேன்.

அதேவேளை, ஆபத்துமிக்க புதிய வைரஸ் திரிபுகள் பரவலடைவதைத் தடுப்பதற்கான தடுப்பூசி உற்பத்தி, விநியோகம் மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில் காணப்படும் சவால்களை உடன் வெற்றிகொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் அடையாளம் காணப்படல் வேண்டும். அனைத்து இடங்களிலுமுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது, தொற்றுப் பரவலில் இருந்து மீள்வதற்கான மிகச் சிறந்த வழிமுறையாகும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருப்பினும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தில், இலங்கை வெற்றி கண்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். ஒக்டோபர் மாத இறுதிக்குள், 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், முழுமையானளவில் தடுப்பூசி ஏற்றப்படும். மிக விரைவில், 15 வயதுக்கு மேற்படி சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

சுகாதாரச் சேவை ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸார், அரச ஊழியர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பே, இந்தத் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்துக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.

தொற்றுப் பரவல் முகாமைத்துவத்துக்காக, இரு தரப்பு மற்றும் பல தரப்பு நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற நிதி மற்றும் பொருள் உதவிகளால், இலங்கை பெரிதும் நன்மையடைந்தது. அந்த நன்கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, இவ்விடத்தில் நான் நன்றிகூறக் கடமைபட்டிருக்கிறேன். தற்போது நிலவும் சிக்கலான காலப்பகுதியில், உலகளவில் காணப்படும் பெரும் ஒத்துழைப்பு மிகவும் ஊக்கமளிக்கிறது. எவ்வாறாயினும், செய்யவேண்டிய மேலும் பல விடயங்கள் இருக்கின்றன.

தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையானது, விசேடமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, மேலும் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது, 2030இல் அடைய எதிர்பார்த்திருக்கும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதற்குப் பாதகமாக அமைந்திருக்கின்றது.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், இவ்வாறான நிலையற்ற தன்மையிலிருந்து மீள்வதற்காக, சர்வதேசப் பொறிமுறையொன்றின் ஊடாக அபிவிருத்திக்கான நிதி மற்றும் கடன் சலுகை உள்ளிட்ட மேலும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது அத்தியாவசியமாகியுள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக, இலங்கை கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. சோகமயமான உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக, எங்களுடைய பொருளாதாரத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நாட்டைப் பூட்டுவது மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதித்தல், சர்வதேச உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் மிதமான உலக வளர்ச்சி என்பன, எமது பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

இலங்கையானது, அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிமுறையாகக் காணப்படுவதும் நாட்டின் சனத்தொகையில் 14 சதவீதமானோர் தங்கியிருக்கும் தொழிற்றுறையுமான சுற்றுலாத்துறை, பெரிதளவில் சரிவடைந்துள்ளது. சுற்றுலாத் தொழிற்றுறை மற்றும் ஏனைய பல துறைகளில் சிறிய மற்றும் நடுத்தர அளவில் ஈடுபட்டிருக்கும் வர்த்தகங்களுக்கு, வட்டி நிவாரணம் மற்றும் நிதி பெற்றுக்கொடுத்தல் போன்று, அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் மூலம் சலுகைகள் வழங்கப்பட்டன.

நாளாந்தம் வருமானம் பெருவோர் மற்றும் குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு, நிதி உதவிகளும் உலருணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. நாடு மூடப்பட்ட காலப்பகுதிகளில் இவ்வாறான உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால், அரச செலவானது அதிகரித்தது. தொற்றுப் பரவலால் ஏற்பட்ட நேரடிப் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக ஏற்பட்ட இந்தப் பொருளாதாரப் பிரச்சினைகளானவை, எங்களுடைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக இருந்த நிதியின் இருப்பைச் சீர்க்குழைய வைத்தன.

தொற்றுப்பரவலின் விளைவுகள், மனித குலத்துக்கு மிகவும் அழிவுகரமானவையாக அமைந்தன. இவற்றை விட மிக மோசமான விளைவுகளை, காலநிலைப் பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடும். அதனால், எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இந்த உலகம், பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். இந்தப் பூமியின் ஆரோக்கியத்துக்கு, முன்னர் இல்லாதளவில் மேற்கொள்ளப்படும் மனிதச் செயற்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்று, காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்லுயிர்ப் பரம்பல் இல்லாமல் போவதால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, தீர்க்கமானதும் உடனடியானதுமான பலதரப்பு நடவடிக்கையொன்றின் தேவை அவசியமாகியுள்ளது. காலநிலை மாற்றங்களுக்கு இலக்காகும் ஒரு நாடாக, அதில் உள்ள அபாயங்கள் குறித்து இலங்கை நன்கு அறிந்திருக்கிறது. இலங்கையின் தத்துவப் பாரம்பரியம் ஆழமாக வேரூன்றியுள்ள என்றும் சுற்றுச்சூழல் மதிப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், கௌதம புத்தர் வலியுறுத்தியிருக்கிறார்.

இலங்கையானது, பொதுநலவாய அமைப்பின் நீல சாசனத்தின் பலமிக்க நாடாக விளங்குவதோடு, இதன் அடிப்படையிலேயே, சதுப்புநிலக் கலாசாரம் தொடர்பான செயற்பாட்டுக் குழுவுக்குத் தலைமைத்துவத்தையும் வழங்கி வருகின்றது.

2030ஆம் ஆண்டுக்குள், நைட்ரஜன் கழிவுகளின் அளவை அரைவாசியாகக் குறைக்க எதிர்பார்த்திருப்பதோடு, ‘நிலையான நைட்ரஜன் முகாமைத்துவம் பற்றிய கொழும்பு சாசனத்தை நிறைவேற்றிக் கொண்டதன் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவைக் கட்டுப்படுத்தி, உலகளாவிய முயற்சிகளுக்கு, இலங்கையும் பங்களிப்பு நல்கியுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற முன்கூட்டிய மாநாட்டில், ஒன்லைன் ஊடாகக் கலந்துகொண்டதன் மூலம், இந்த மாதத்தின் பிற்பகுதியில் இடம்பெறும் ஐ.நா உணவு மாநாடானது, உலகளவில் ஆரோக்கியமானதும் நிலையான மற்றும் சமமான உணவு முறைகளை ஊக்குவித்தல் தொடர்பில் செயற்பாட்டு ரீதியிலான பிரதிபலன்களைப் பெற்றுத்தரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

அவ்வாறான பிரதிபலன்கள், மனிதச் சுகாதாரத்தைப் போன்றே, இந்தப் பூமியின் சுகாதாரத்துக்கும் மிக முக்கியமாக அமையும். நிலைத்தன்மை என்பது, இலங்கையின் தேசிய கொள்கைக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். மண் வளம், பல்லுயிர், நீர்வழிகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, என்னுடைய தலைமையிலான அரசாங்கம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இரசாயனப் பசளை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாட்டுக்குத் தடை விதித்தது.

சேதனப் பசளை உற்பத்தி மற்றும் அதனைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கான முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இலங்கைக்குள் நிலையான விவசாயத்தை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்காக, உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்கள் பலவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஊக்கமளிப்புகளுக்கு, இவ்விடத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது நமது தேசிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். அடுத்த சில தசாப்தங்களில், வனப்பகுதியை கணிசமானளவில் அதிகரிப்பதே எங்கள் குறிக்கோளாக இருக்கின்றது. நாடு முழுவதிலும் காணப்படும் 100 ஆறுகளுக்கும் மேலானவற்றைச் சுத்தம் செய்து மீட்கவும் ஆறுகள் மற்றும் சமுத்திர மாசுபடுத்தலுக்கு எதிராக நிற்கவும், நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவாக, ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கும் தடை விதித்துள்ளோம். படிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து கார்பனேற்றத்தை ஆதரிப்பதற்கான அவசரத் தேவையை இலங்கை அடையாளம் கண்டுள்ளது.

எம்முடைய மின்சக்தி கொள்கையின் ஊடாக, 2030ஆம் ஆண்டுக்குள், எமது தேசிய மின்சாரத் தேவையின் 70 சதவீதத்தை, சூரியசக்தி, காற்றாலை மற்றும் நீர் போன்ற புதுப்பிக்கத்தக்க சக்தி வலுக்களினூடாகப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

தலைவர் அவர்களே, எமது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதல் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தும் போதும், சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை இலங்கை அன்புடன் வரவேற்கிறது.முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கும், எமது நாட்டின் அமைவிடம் மற்றும் எங்களுடைய வலுவான நிறுவனங்கள், வலுவான சமூக உட்கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளர்களை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்த்திருக்கிறோம்.

இதற்கான வசதிகளை வழங்குவதோடு, எமது மக்கள் அனைவரையும் வளப்படுத்துவதற்கான நீதி, ஒழுங்கு, நிர்வாகம் மற்றும் கல்வி போன்ற துறைகளையும் விரிவுபடுத்தி, விரிவான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள, எனது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இருந்தே, இலங்கையானது சர்வஜன வாக்குரிமையைப் பெற்றிருந்தது. ஜனநாயகக் கலாசாரம் என்பது, எமது வாழ்வியலில் மிக முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது. வளமானதும் நிலையானதுமான நாடொன்று உருவாக்கப்படுவதற்காகவும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், 2019ஆம் ஆண்டில் என்னை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கவும்  2020இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவும், மாபெரும் மக்கள் ஆணையை இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர்.

2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. அதற்கு முன்னர், அதாவது 2009ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது.

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது.

கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்களுக்காக, நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் உண்மையாக இருக்க வேண்டும். இனப் பாகுபாடு,  மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே, என்னுடைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து, சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார். எவ்வாறெனினும், மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெறமுடியுமென்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது. இலங்கையின் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன சட்டரீதியான அமைப்புகள், தங்கள் செயற்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வரம்பற்ற இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

இன்று நமது பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப எங்கள் நம்பிக்கையின் மூலம் உண்மையான நெகிழ்ச்சியை உருவாக்க வேண்டுமாயின், நாங்கள் அனைவரும், பொது நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினது அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாமல், நியாயமான முறையில் கருதி, அவர்களின் வழிமுறைகள் மற்றும் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதையுடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாக இருக்கின்றது.

ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்று,  இந்த மாபெரும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஐ.நாவில் ஜனாதிபதி கூறிய விடயங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

தலிபான்களால் இடைநிறுத்தப்பட்ட சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் !

சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

2020 ஆண்டுக்கான சார்க்  நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கமைய, ள சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், குறித்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தி தலிபான்கள் கலந்துகொள்ள வேண்டுமென பாகிஸ்தான் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த கோரிக்கையினை பெரும்பாலான உறுப்பு நாடுகள் ஏற்று கொள்ள மறுத்தமை காரணமாக சார்க் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தலிபான்கள் பங்கேற்பதற்கு உறுப்பு நாடுகளின் அனுமதி இல்லாமை காரணமாக கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நேபாள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாள வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“காணாமலாக்கப்பட்டவர்களுடைய பெற்றோரின் கண்ணீரை தினமும் பார்க்கிறோம். ஆனால் எங்களிடம் பதில் இல்லை.” – அரசாங்கம் அறிவிப்பு !

“தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாக பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொரு வருடமும் நாம் காண்கின்றோம். ஆனால் எங்களிடம் எந்த பதிலும் இல்லை.” என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது ஒரு ஊடகவியலாளர் “மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களுக்கு விரைவாக மரணச்சான்றிதல் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் காணாமல் போனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். உண்மையிலேயே இவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்?

இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை என்னால் திட்டவட்டமாக கூறமுடியாது.  இதனைக் கண்டறிவதற்காக இலங்கையில் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் டயஸ்போராக்களுக்கு – நாட்டை நேசிப்பவர்களுக்கு பகீரங்க அழைப்பொன்றை விடுத்தார். அதாவது நாம் ஒன்றிணைந்து இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்துவோம். தீர்மானங்களை மேற்கொள்வோம் இவர்கள் எமது நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொலை நோக்குடனான சாதகமான நிலைப்பாடாகும். நேற்றும் பாராளுமன்றத்தில் இது குறித்து பேசப்பட்டது. வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் எமது சகோதர உறுப்பினர்கள் இதுகுறித்து சாதகமாக கருத்து தெரிவித்தனர். திட்டவட்டமாக உதாரணத்திற்கு X என்ற நபர் காணாமற்போனார் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு பதிலளிக்கக்கூடிய அளவுக்கு எமக்கு தெளிவில்லை.

இதனை எந்தவகையிலும் மறைக்கக்கூடிய விடயமல்ல.எந்த சந்தர்ப்பத்திலாவது சரியான தகவல் வெளிப்படலாம். நாம் அதனை அறிந்துகொள்ள முடியும். சில சந்தர்ப்பத்தில் காணாமற்போனவர்கள் சிலர் வெளிநாடுகளில் அரசியல் புகழிடம்பெற்று வாழ்கின்றனர். இது அனைத்து சந்தர்ப்பங்களிலும் அல்ல.

தமது பிள்ளைகள் காணமற்போயிருப்பதாக பெற்றோர் கண்ணீர் விடும் காட்சியை ஒவ்வொரு வருடமும் நாம் காண்கின்றோம். இவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகள். அதனால், நாம் இதுதொடர்பில் பொறுப்புடன் செயற்படவேண்டியுள்ளது. அதனால் அதில் எதனையும் மறைப்பதற்கில்லை. இதுதொடர்பில் ஒன்றிணைந்த செயற்பாடுகளே அவசியம். இலங்கையர் என்ற ரீதியில் இவ்வாறான துர்பாக்கிய சம்பவம் மீண்டும் ஏற்படாத வகையில் செயற்படுவதே இறுதியான பதிலாகும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

“ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா?” – சாணக்கியன் கேள்வி !

“நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா?”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியு்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு முக்கி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.

கடந்த காலங்களில் இவ்வாறு கோஷங்களை எழுப்பியவர்கள் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களாகவே காணப்பட்டனர். இன்று நாங்கள் பார்த்தால் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களே இவ்வாறு கோஷங்களை எழுப்புகின்றனர்.

இவ்வாறு கோஷங்களை எழுப்புவதற்கான பிரதான காரணங்களாக நாட்டில் பால்மாவிற்கு தட்டுப்பாடு, நாட்டில் எரிவாயு இல்லை. அதேபோன்று நாட்டில் உரம் இல்லை. சீனி கொள்வனவில் மோசடி, பி.சி.ஆர் செய்வதில் மோசடி. இவற்றிற்கு எல்லாம் ஜனாதிபதி, பிரதமர் மாத்திரம் காரணம் இல்லை. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுமே காரணம்.

நாங்கள் இன்று வனஜீவராசிகள் அமைச்சு குறித்து பேசிக்கொண்டிருக்கின்றோம். வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர்தான் காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனால் அவர் அம்பாறையில் காடுகளை அழித்து மரமுந்திரிகை செய்கின்றார். தகுதி இல்லாதவர்களுக்கு ஆசனங்களை வழங்கி அவர்களுக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்கினால் இந்த நிலைதான் ஏற்படும்.

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் சொல்கிறார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன். இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்கள் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் நடப்பதே வேறு விதமாக காணப்படுகின்றது.

ரிசாட், அஷாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” – ஐக்கிய மக்கள் சக்தி

“ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த வைரஸால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச உறவினர்களால் வந்த வைரஸால் மக்கள் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

ராஜபக்ச அரச தரப்பினர் நாட்டின் பெரும் பகுதியைச் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். சங்ரிலா ஹோட்டல் பகுதி, துறைமுக நகர பெரும் பகுதி ஆகியவற்றை சீனாவுக்கு வழங்கியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள். நாட்டின் சொத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றனர்.

இதன் உச்சமாக கடந்த வாரத்தில் இந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களினதும் உரிமத்தை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்துவிட்டனர். கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் திறைசேரிக்குச் சொந்தமானவை. 23.9 சதவீத பங்குகள் ஊழியர் சேமநல நிதியத்துக்குச் சொந்தமானவை.

இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசைப் போன்று பொய் கூறும் ஓர் அரசைப் பார்த்ததில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகின்றார். ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை .” என்றார்.

“தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.” – மனோ கணேசன்

“ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேர்தல் முறைமை சீர்திருத்த தெரிவுக்குழு நாடாளுமன்ற வளாகத்தில் தவிசாளர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடியபோது, த.மு.கூ. தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வி. இராதாகிருஷ்ணன்,  நாடாளுமன்ற .உறுப்பினர்களான வேலு குமார், உதயகுமார் ஆகியோர் அடங்கிய கூட்டணி தூதுக்குழுவினர் சமூகமளித்தனர்.

அதன்போது கூட்டணியின் நிலைப்பாடுகளை எடுத்துக்கூறிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது:-

நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த தேர்தல் முறை மாற்றம் எமது ஆட்சிகாலத்தில் கலப்பு முறைக்கு பரீட்சார்த்தமாக மாற்றப்பட்டது. ஆனால், அந்த மாற்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நிலையான ஆட்சிக்கு வழி காட்டவில்லை. அத்துடன் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நாடெங்கும் ஏறக்குறைய அறுபது முதல் எழுபது விகிதம் அதிகரித்தது. ஆனாலும், குழப்ப நிலைமையே ஏற்பட்டது.

இந்நிலையில், இதே விதமான குழப்ப நிலைமையை  மாகாண சபை, நாடாளுமன்றங்களிலும் ஏற்படுத்தி இந்நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க வேண்டாம். எமக்கு முன் சாட்சியம் அளித்த ஒரு இன்னொரு கட்சியின் பிரதிநிதி, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைத்தால், அவர்கள் கடந்த காலங்களை போல் வேறு வழி இல்லாமல், ஆயுதம் தூக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் .

அது உண்மை. ஆனால், அந்த நிலைமை வடக்கில் மட்டுமல்ல. தெற்கிலும் ஏற்பட்டது என்பதை நான் இந்த குழுவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவங்களை பெற முடியாத நிலையில், தென்னிலங்கையிலும் சிங்கள இளையோர் இப்படி ஆயுதம் தூக்கினார்கள். இன்று விகிதாசார முறையின் கீழ்தான் இந்நிலைமை மாறியது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனதான், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றங்களுக்கு விகிதாசார தேர்தல் முறைமையையும் கொண்டு வந்து அறிமுகம் செய்தார்.   ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் சில பிழையான செய்கைகளுக்கு மத்தியில் அவரது தீர்க்கதரிசனமிக்க சரியான செய்கை இதுவாகும்.

இன்று நீங்கள் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இன்னமும் பலமிக்கதாக 20ம் திருத்தத்தின் மூலம் மாற்றியுள்ளீர்கள். இது உண்மை. எனவே ஒரு சிலரின் தேவைகளுக்காக, விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றி நாட்டை சர்வதிகார படுகுழியில் தள்ள வேண்டாம்.

இலங்கையின் அனைத்து இன மற்றும் சமூக குழுவினர்களும் பிரதிநிதித்துவம் செய்ய இடந்தரும் வண்ணமும், பெரிய, சிறிய கட்சிகள் தாம் பெறுகின்ற வாக்கு தொகைகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவங்கள் பெரும் வண்ணமும், உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின்படியே நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலைப்படுத்தும் நிறுவனங்களாக ஜனநாயகத்தின் பேரில் நாடாளுமன்றமும், மாகாண சபைகளும் செயற்பட முடியும். இதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்றார்.

“தமிழ் அரசியல்கைதி இளைஞர்களின் ஆண்குறி மற்றும் மலவாசல் என்பன மிகவும் கேவலமான முறையில் சோதிக்கப்பட்டு பாலியல்சித்திரவதை.” – கஜேந்திரன்

“ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, அவருடைய இராணுவத்தில் சரணடைந்த பல்லாயிரக்கணக்காணவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் சபையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03 ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஓரிடத்திற்கு வருமாறு அழைத்து, அவருக்கு முன்பாக  முழந்தாளில் இருக்குமாறு கட்டளையிட்டு, அச்சுறுத்தி அவர்களின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளார். அதன்போது அவர், ஜனாதிபதி எனக்கொரு அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதன்படி விரும்பினால் உங்களை விடுதலை செய்யலாம். அல்லது சுட்டுக்கொல்லலாம் என்று கூறியுள்ளார். அவ்வாறு   துப்பாக்கி வைத்து வெறியாட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.

அந்தக் கைதிகள் சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களே ஆகும். 2009 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள் எவ்வித குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட வில்லை.அவர்களுக்குரிய வழக்குகளும் முறையாக நடத்தப்படுவதில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தினர் முறையாக ஆஜராகியிருந்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.

வேண்டுமென்றே இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று இவர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழர் என்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட நடவடிக்கையாகும்.

லொஹான் ரத்வத்தவின் தவறுக்கு அவரின் மற்றைய இராஜாங்க அமைச்சு  நீக்கப்படவில்லை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அவரின் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டு, அவரின் எம்.பி பதவியும் நீக்கப்பட வேண்டும். அத்துடன் அவரை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம். 12 ஆம் திகதி சம்பவம் நடைபெற்ற நிலையில் 18 ஆம் திகதியே சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன். அந்த 6 நாட்களும் விசாரணைகளை தடுத்தவர்கள் யார் என்ற கேள்விகள் எழுகின்றன .

இதேவேளை கடந்த 26 ஆம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 12 தமிழ் இளைஞர்கள் கொழும்பு மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் 29 ஆம் திகதி இவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 541 நாட்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரணையின் கீழ் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களிடம் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் ஊடாக வாக்குமூலம் பெற வேண்டும் என்ற போதும் அவ்வாறு இன்றியே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

அவ்வாறு இருந்து 540 நாட்களின் பின்னர் மறியல் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டவர்கள் மூன்று நாட்களின் பின்னர் மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் போது நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ஆண்குறி மற்றும் மலவாசல் என்பன மிகவும் கேவலமான முறையில் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவொரு பாலியல் சித்திரவதையே.

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், மறியல் சிறைச்சாலைக்கு மாற்றப்படும் போது போதைப் பொருள் இருக்கின்றது என்று சோதனை நடத்தப்படுகின்றது என்றால் எப்படி அவர்களால் அதனை கொண்டு சென்றிருக்க முடியும். அப்படியென்றால் அதிகாரிகள்தான் அதனை கொடுத்திருக்க வேண்டும்.

அதன்படி தினமும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களை வீதியில் வைத்து நிர்வாணமாக்கி சோதனையிட வேண்டும். அவ்வாறு செய்யாது கைதிகளை இப்படி நடத்துவது இது பாலியல் சித்திரவதை நடவடிக்கை என்று கூறுவதுடன், இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ஐ.நா.பொதுச் செயலாளரை சந்தித்தபோது, காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழை வழங்குவதாக கூறியுள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய போது, அவருடைய இராணுவத்தில் சரணடைந்த பல்லாயிரக் கணக்காணவர்களுக்கு என்ன நடந்தது என்று உறவினர்கள் தேடிக் கொண்டிருக்கும் போது ஜனாதிபதி இவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேபோன்று இந்த அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவோம் என்று ஜெனிவாவில்   வாக்குறுதியளித்திருந்தது. ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கபப்படவில்லை. அதனை நீக்க வேண்டும் என்று ஐ.நா. கூறியுள்ளது. இன்னும் அந்த சட்டத்தில் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றார்.