“வடக்கு- கிழக்கு மக்களின் மீது அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை. ஆகையினால்தான் இதுவரை அவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (29.05.2021) வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க தவறிவிட்டது. அதாவது அரசாங்கத்தின் முறையான திட்டமின்மை காரணமாகவே நாடு மோசமான நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு இலவசமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவு செய்கிறது. அதனைத்தான் வாங்கப்போகின்றோம் என்றும் கூறுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு, நாட்டு மக்களை பாதுக்காக்குமா..? என்பது கேள்விக்குறியே ஆகும். அத்துடன் இதுவரையும் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை.
இதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது.
மேலும் வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள் ஆனாலும் அவை போதுமானதாக இருக்காது. இந்த அரசாங்கத்துக்கு ஒட்டுமொத்த மக்களின் மீது அக்கறை கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
…………………………………………………………………………………………………………………………
ஆரம்பகாலங்களில் கொரோனா தடுப்பு நிலையங்கள் வடக்கில் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். தமிழர்களை இலக்கு வைத்து தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர் தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஆனால் தொற்றாளர்களுடைய தொகை வடக்கில் அதிகரித்ததை தொடர்ந்து தமிழர்களை கவனிக்காது விட்டுவிட்டனர் என்றனர் அதே தலைமைகள்.
இந்த தடுப்பூசி தொடர்பான கதைகளும் அவ்வாறானதே. சன அடர்த்தியான, தேவையுள்ள பகுதிகளுக்கு வழங்கப்பட்ட பின்பே ஏனைய பகுதிகள் பற்றி சுகாதாரத்துறை அமைச்சு சிந்திப்பதாக தெரிவித்திருந்தது. இரத்தினபுரிக்கு அடுத்து யாழில் தொற்றாளர்கள் அதிகரிப்பதால் யாழில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க வடக்கில் முதல் டோஸை பெற்றுக்கொண்ட 500பேருக்கு அதிகமானோர் இரண்டாவது டோஸை பெறாது அதனை தவிர்த்து வருகின்றனர் என வடமாகாண சுகாதார அமைச்சு கருத்து வெளியிட்டிருந்தனர். இங்கு சில விடயங்களை நல்ல கண்ணோட்டத்துடன் சிந்திக்க நம்மவர்கள் முன்வரவேண்டும். சில வார்த்தைப்பிரயோகங்கள் அரசியல் இலாபமீட்ட தேவையானவையே தவிர நடைமுறைக்கு சாத்தியமற்றவை.
இந்நிலையில் , யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போது “யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.