“தமிழ் தேசியம் பேசுவதை நீங்கள் பேசிக் கொண்டே தான் இருக்கின்றீர்கள். இந்த அறுபது வருடகாலமாக அதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சபையில் நான் இல்லாவிட்டாலும் கூட எங்களைப்பற்றி புலிகள் என்றும் சிங்கங்கள் என்றும் பறவைகள் என்றும் கூறக் கூடிய பல உறுப்பினர்களை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் சபையில் அமர்ந்திருக்கவில்லை இருந்தாலும் குறிப்பாக தம்பி சாணக்கியன் அவரை குறை சொல்லவில்லை என்னுடைய அரசியல் பொது வாழ்க்கையும் அவருடைய வயதும் ஒன்று.
இது எல்லோரும் சிந்திக்க மறந்த விடயம் தான், நாங்கள் வன்முறை புலிகளாக இருக்கவில்லை வன்முறையை கைவிட்டு புலிகளில் இருந்து பிரிந்து வந்ததென்று இந்த உலகம் அறிந்தது. இந்த நாடாளுமன்றம் வரைக்கும் தெரியும். இருந்தாலும் நான் பயப்பட வேண்டிய தேவை கிடையாது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலேயே நான் இவ்விடத்தில் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
தயவுசெய்து எங்களை பழிவாங்க வேண்டும் என்று நினைத்து எங்களை கீழ்த்தரமாக பேசுகின்ற நடவடிக்கைகளை இந்த நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க வேண்டாம். இந்த நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் மிக பின்னடைவு ஏற்பட்டு கொண்டிருக்கின்ற பொழுது இவ்வாறான ஆணைக் குழுக்களை நியமித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இருக்கின்ற காரணத்தினால் பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு பங்காளி கட்சி என்ற ரீதியில் நாங்கள் இந்த வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க இருக்கின்றோம்.
என்னுடைய மாவட்டத்திலும் பல தேவைகள் பல பொருளாதார பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால் நாட்டினுடைய ஒட்டுமொத்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியா விட்டால் எங்களாலும் எதுவும் செய்ய இயலாத நிலை உருவாகும். குறிப்பாக எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் உலகத்தில் உள்ள கொரோனா பிரச்சினைகளை முன் வைத்து எங்களை தோற்கடிக்க முடியும் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்கம் என்ற வகையிலே உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக நிச்சயமாக அதை நாங்கள் நிறைவேற்ற போகின்றோம். இன்று எதிர்க்கட்சியினர் ஏப்ரல் குண்டு தாக்குதல் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளை மையப்படுத்தி கைதுகள் இடம்பெறுகின்ற பொழுது ஏதோ ஒரு அரசியல் பழிவாங்கல் பிரச்சினையாக அதை முன்வைத்து அரசாங்கத்துக்கு சேறு பூசுகின்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு வந்தவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை எனக்குத்தான் முதலில் பிரயோசனப்படுத்தினார்கள். அதை இன்று மறந்துவிட்டு இன்று அதை பார்த்து கைதட்டி சிரித்தவர்கள் அல்லது அவர்களுக்கு கஷ்டம் வராமல் எதிரிகளுக்கு கஷ்டம் வருகின்ற பொழுது பங்கரவாத தடை சட்டத்தை வைத்து எங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று கூச்சல் இடுவதைப் பார்த்து நான் வேதனை அடைகின்றேன்.
என்னையும் சுமார் 65 நாட்கள் புலனாய்வுத்துறையினர் அடைத்து வைத்திருந்தார்கள் படுக்க பாய் இல்லை எனது தாய் தந்தையரை கூட வீட்டில் அடைத்து வைத்திருந்தார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு இன்று பயங்கரவாத தடை சட்டம் தொடர்பாக பேசுவது ஒரு வேடிக்கையான விடயமாக தான் இருக்கின்றது.
குறிப்பாக தமிழ் தேசியவாதிகள் நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் நான்கு வருடங்களில் என்ன செய்தீர்கள். பங்கரவாத தடை சட்டத்தை மாற்றுவதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிரிகளை அழிப்பதற்கு எடுத்த நடவடிக்கையே தவிர மக்களை கட்டியெழுப்புவதற்கு எதுவும் எடுக்கவில்லை. தமிழ் தேசியம் பேசுவதை நீங்கள் பேசிக் கொண்டே தான் இருக்கின்றீர்கள். இந்த அறுபது வருடகாலமாக அதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.