“அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.” என முன்னாள் நீதியரசர் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
2009ம் ஆண்டின் ஒரு பரிதாபகரமான தினத்தையே நாங்கள் இன்று நினைவு கூருகின்றோம். வடகிழக்குத் தமிழர்கள் பலவிதமான நெருக்கடிகளை இன்றும் சந்தித்த வண்ணமே இருக்கின்றனர். கொவிட் 19 நெருக்கடியை ஒருபுறத்திலும் அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான அடக்குமுறைகளை மறுபுறத்திலும் எதிர்கொண்டவர்களாக நாம் இன்றுள்ளோம்.
என்னைப் பொறுத்த வரையில் இன்னும் ஓரிரு நாட்களில் குற்றவியல் குற்றச் சாட்டுகள் சிலவற்றிற்கு நான் பதில் கூற வேண்டியுள்ளது. நான் கூறியவை உண்மையாக இருந்தாலும் அவை குற்றச்சாட்டுக்களாக என் மீது சுமத்தப்பட்டுள்ளன. நான் கீழ்க் கண்டவாறு பேசிவை தேசிய ரீதியாகவும் இன ரீதியாகவும் வன்முறையை எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளன என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளேன் – அவையாவன –
- இலங்கையின் பூர்வீகக் குடிகள் பேசிய மொழி தமிழ் மொழியே என்பது
- மகாவம்சம் ஒரு சரித்திர வலுக்கொண்ட ஆவணம் அல்ல என்பது
- இலங்கை அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான தமிழ் மக்களுக்கு எதிரான
நடவடிக்கைகளே விடுதலைப் புலிகளை ஆயுதம் ஏந்த வைத்தன என்பது
- போரின் முடிவின் போது முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர் என்பது
- வடக்கில் சிவில் நடவடிக்கைகளை இராணுவத்தினரே பாரமேற்றிருக்கின்றனர் என்றும் வடக்கானது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றது என்பதும்
ஆகவே இன்று நாம் இங்கு வடக்கிலும் கிழக்கிலும் அடக்கு முறைகளுக்கும் அரசின் குற்றஞ்சாட்டத்தகு நடவடிக்கைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றோம். இவற்றின் நடுவே தான் நாம் முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் உயிர் நீத்த எமது உறவுகளை நினைவு கூருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்களே இலங்கையின் வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையினர். ஆனால் நாம் இதுகாலமும் பேணிவந்த தனித்துவத்திற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. வேறு பலவற்றிற்கும் மத்தியில் எமது பாரம்பரிய காணிகளைக் கையேற்று உள்ளார்கள். பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த மதத்தை இராணுவ துணை கொண்டு திணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் வெளியில் இருந்து சிங்களக் குடியேற்றவாசிகள் வருவிக்கப்பட்டு அரச குடியேற்றங்களில் நிலை நிறுத்தி வரப்படுகின்றனர். குடிப்பரம்பல் நிலை மாற்றப்பட்டு வருகின்றது. நினைவுத் தூபிகள் அழிக்கப்பட்டு
வருகின்றன.
இவ்வாறான அரசாங்க இன அழிப்பு நடவடிக்கைகளில் இருந்து மக்களைக் காப்பாற்றவே அன்று எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். ஆனால் பூகோள அரசியலில் முற்றிலுந் திளைத்திருந்த வல்லரசு நாடுகள் முள்ளிவாய்க்காலில் எமது இளைஞர்களையும் அப்பாவி மக்களையும் 2009ல் கொன்று குவிக்க இடமளித்தார்கள். தமது உறவுகளை இழந்த எம் மக்களுக்கு இன்று வரையில் நீதி பெற்றுத்தரப்படவில்லை. ஆனால் எமது மக்களுக்கு கொடூரமான ஆற்றொணாத் துன்பங்களை ஏற்படுத்தியவர்களுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்கும் அரசாங்க உயர் பதவிகளும், இராஜதந்திரப் பதவிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன. 12 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த எம் மக்களின் நினைவுத்தூபிகளை அடித்து நொறுக்கும் மிலேச்சத்தனமான காரியங்களை நாம் இன்று பார்க்கின்றோம். சர்வதேச சமூகத்தால் அதுபற்றி ஒன்றுமே செய்ய முடியவில்லை.
நாட்டின் ஒருசாராரை அடித்துத் துன்புறுத்திப் பதவியில் இருக்கும் அரசாங்கம் பல்வேறு அநியாய நடவடிக்கைகளை எடுக்கும் போது சர்வதேச சமூகத்தால் எதுவுமே செய்ய முடியாதிருப்பது மனவருத்தத்தை அளிக்கின்றது. 2013ல் அப்போதைய பிரித்தானிய கன்சர்வேடிவ் பிரதம மந்திரி மதிப்பிற்குரிய டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அப்போது அவர் முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றிற்கு நீதியையும் பொறுப்புக் கூறலையும் பெற்றுத்தரப் போவதாகக் கூறினார். ஆனால் இன்று வரையில் எதுவும் நடந்தது போன்று தென்படவில்லை. தற்போது கூட பிரித்தானியாவில் கன்சர்வேடிவினரே ஆட்சியில் உள்ளார்கள்.
இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட போது சிங்களத் தலைவர்கள் கட்டாயமாக சிறுபான்மையினரை மனிதாபிமானத்துடன் நடத்தப் போவதாக பிரித்தானியர்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் சுதந்திரம் அடைந்ததுமே மலையகத்தில் வாழ்ந்து வந்த பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாக்களிக்கும் உரிமையை இழந்தார்கள். அதன் பின்னர் காலத்திற்குக் காலம் தமிழ்ப் பேசும் மக்களின் பாதுகாப்புக்கும் நல்வாழ்வுக்கும் இடையூறு செய்யும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் சிறுபான்மையினர் பாதுகாப்புடனும் நியாயமான முறையிலும் வாழ உகந்த நடவடிக்கைகளை சுதந்திரம் வழங்கிய போது பிரித்தானியா எடுக்கத் தவறியது. பெரும்பான்மையினரின் மேலாதிக்கம் ஏற்படா வண்ணம் ஒரு சமஸ்டி அரசியல் யாப்பை அன்று உருவாக்கிக் கையளிக்காதது இன்றும் இலங்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே அன்று செய்யத் தவறியதை இன்று சரிசெய்ய பிரித்தானிய கன்சர்வேடிவ்
அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று கருதுகின்றேன். இவ்வாறான
நடவடிக்கைகளினால் நீதியையும் நல்வாழ்வையும் நிலைநாட்டலாம் என்றும்
கருதுகின்றேன். மதிப்பிற்குரிய பிரதமர் க்ளெமன்ட் அட்லி காலத்தில் நடந்த
தவறிற்கு பிரித்தானியா இன்று பிராயச்சித்தம் செய்யலாம் என்பதே எம் மக்கள்
சார்பாக நான் முன்வைக்கும் பணிவான சமர்ப்பணம். அதே நேரம் இலங்கைக்கு எதிராக பிரேரணைகளை ஐக்கிய நாடுகள் தாபனத்தில் கொண்டு வந்த ஜனநாயகக் கட்சி தற்போது மீண்டும் அமெரிக்காவில் பதவிக்கு வந்திருப்பது மகிழ்வை ஊட்டுகின்றது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் பிரித்தானியாவுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில்
2009ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு நீதியைப்
பெற்றுத்தர முன்வர வேண்டும். எனவே தான் ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல்
நீதிமன்றுக்கு முன் கொண்டு செல்ல வேண்டியது ஜனநாயகத்தை விரும்பும்
அவ்விரு நாடுகளுக்கும் ஜனநாயகம் காக்கும் மற்றைய நாடுகளுக்கும்
முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு கடமையாக அமைகின்றது.
போர்க்காலத்தில் குற்றங்கள் பல புரிந்த படையினர் போர் முடிந்து கடந்த 12 வருட காலமாக தொடர்ந்து வடக்குக் கிழக்கில் நிலைபெற்றிருப்பதின் அவசியத்தை படைகள் பற்றிய சட்ட நிபுணர்களின் சர்வதேச அமைப்பொன்று ஆராய வேண்டிய தருணம் தற்போது உதித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு தற்போதில்லை என்று அரசாங்கம் பகிரங்கமாகக் கூறியுள்ளது. வடகிழக்கில் அரசியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் இதுகாலமும் நிகழவில்லை என்றும் அரசாங்கம் கூறியுள்ளது. அப்படியானால் படையினர் தொடர்ந்து வடகிழக்கில் நிலைபெறக் காரணமென்ன? பாதுகாப்பே காரணம் என்று வெறுமனே கூறி விட முடியாது.
ஏனென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் அவ்வாறான கூற்றுக்குக் காரணங்கள்
காட்டப்பட வேண்டும்.
படையினர் தொடர்ந்து அரச காணிகள் 60000 ஏக்கர் வரையும் தனியார் காணிகள்
3000 ஏக்கர் வரையும் கையேற்றிருக்கின்றார்கள். நேரடியாகவோ மறைமுகமாகவோ
படையினர் பயிரிடுதல், மீன் பிடித்தல், வியாபாரங்களில் ஈடுபடல், வளங்களைச்
சூறையாடுதல் என்று பலவற்றில் ஈடுபட்டு வருவதைக் காணலாம்.
வெளி மாகாணங்களில் இருந்து வந்து வடகிழக்கு மாகாணங்களில் காணிகளை
அபகரிப்பவர்களுக்கு இவர்கள் துணைபுரிகின்றார்கள். பிறழ்வான வரலாற்றை
நிலைநாட்ட விரும்புவோருக்கு உற்ற துணையாக நிற்கின்றார்கள். மக்களின்,
முக்கியமாக இளைஞர்களின் வறுமையைப் பாவித்து அவர்களுக்கு மூளைச்
சலவை செய்யப் பார்க்கின்றார்கள். ஆகவே வடகிழக்கில் உள்ள எமது பாரம்பரிய பிரதேசங்களில் தொடர்ந்து 12 வருடங்களாகத் தரித்து நிற்பதற்கு பாதுகாப்பே காரணம் என்று கூறிவிட முடியாது. அவர்கள் தரித்து நிற்பதற்கான உண்மையான காரணங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். அக் காரணங்கள் சர்வதேச படையினர் சட்ட நிபுணர் குழாமால் ஆராயப்பட வேண்டும்.
கொழும்பிலும் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் படையினர் அனைவரையும்
நிலை நிறுத்த இடம் போதாமல் இருந்தால் படையினர் தொகையை ஒன்பதாகப்
பிரித்து ஒவ்வொரு மாகாணத்திலும் 1/9 தொகை படையினரை இருத்த முடியும்
என்று நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் கூறியிருந்தேன்.
அதைவிட்டு வடகிழக்கில் மட்டும் மிகக் கூடிய படையினரை நிலை நிறுத்தும்
காரணம் என்ன? தொடர்ந்து எம் மக்களைக் கட்டுப்படுத்த, ஆணைக்குட்படுத்த,
செய்திகள் சேகரிப்பதாகக் கூறி உளவறிய படையினரை அரசாங்கங்கள் இங்கு
நிலை நிறுத்தியுள்ளமை மனவருத்தத்தைத் தருகின்றது.
எமது பாரம்பரிய மாகாணங்களில் நாம் சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் மற்றவர்கள் உள்ளீடும் தலையீடும் இன்றி வாழ முடியாதா? பாதுகாப்பு ஒரு கரிசனை என்றால் சமாதானக் காலத்தில் காவல்துறையினர் அதனைச் செய்யலாமே! வடகிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் பெரும்பான்மையினரின் குறைகள் தீர வேண்டும் என்றால் சர்வதேச கண்காணிப்புடன் மக்கள் வாக்கெடுப்பு ஒன்று வடகிழக்கில் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் சமாதானத்தையும் சமரசத்தையும் உண்டுபண்ண சர்வதேச நாடுகள் எண்ணினால் வட கிழக்கில் மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதே ஒரேயொரு ஜனநாயக மார்க்கமாகும்.
இவ்வாறான மக்கள் தீர்ப்பை வடகிழக்கில் சாத்தியமாக்க அமெரிக்கா, பிரித்தானியா மட்டுமன்றி கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜனநாயகத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் மதிக்கும் நாடுகள் அனைத்தும் அதற்காகப் பாடுபட வேண்டும். சர்வதேச கண்காணிப்புடன் நடத்தப்படும் மக்கள் தீர்ப்பு செயற்பாடானது ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் உண்டு பண்ணுவது மட்டுமல்லாமல் இப்பிராந்தியத்தில் மனித உரிமைகள்
நிலைநாட்டப்படவும் உதவிபுரியும்.
உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இன்றைய தினம் தடைகளைப் பொருட்படுத்தாது நாம் யாவரும் 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதியையும், பொறுப்புக் கூறலையும் பெற்றுத்தர ஒருமித்து செயற்படுவோமாக என்ற சபதமொன்றை இன்று எடுப்போமாக! என்றும் குறிப்பிட்டார்.