15

15

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை தாக்கும் Black Fungus – மகாராஷ்டிர மாநிலத்தில் 52 பேர் பலி !

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black Fungus தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளினால் ஏற்படும் Mucor mycosis எனப்படும் Black Fungus தொற்று, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த தொற்றினால், கண், மூக்கு மற்றும் மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது.

Deadly 'black fungus' infection found in COVID-19 patients in India

தொற்று அதிகமாகும்போது நோயாளிகள் கண் பார்வையையே இழக்கும் அபாயம் உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் Black fungus தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாரஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black fungus தொற்றால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிளாக் Black fungus தொற்றால் உயிரிழந்தோரின் பட்டியலை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.

“சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸி அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குரையிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகளின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு சவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஈரான் – சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவை கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல்முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத்து தெரிவித்துள்ளார்.

“வீட்டுக்குள்ளேயும் முகக்கவசங்கள் அணியுங்கள்.” – பொதுச்சுகாதார பரிசோதகர் அறிவுறுத்தல் !

அரசு மற்றும் சுகாதார பிரிவினர் நூற்றுக்கு 90 வீதமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போதிலும் மக்களின் நடத்தை காரணமாகவே கொவிட் தொற்று பரவியாதாக பொது சுகாதார பரிசோதகர் கீர்த்தி லால் துடுவகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் வேலைக்கு செல்லும் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (15) இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் நிகழ்வை அடுத்து மக்களுடன் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காசா முனையில் தொடரும் பதற்றம் – தாக்குதல் நடத்த தரைப்படையையும் இறக்கிய இஸ்ரேல் – அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய நகர்வு !

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இதற்கிடையே, ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை அமெரிக்க எடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கிடையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க சமாதான துாதுவர் ஒருவர் இஸ்ரேலின் ரெல் அவிவ் பகுதியைச் சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க துாதுவர் ஹடி ஆம்ர் இருதரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் குறித்த பதற்றம் நிலவும் பகுதியில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

“முகக்கவசம் அணியாதவர்களைத் தேடிச்சென்று தூக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்வதை நிறுத்தவும்.” – பொலிஸாருக்கு அறிவுறுத்தல் !

முகக்கவசம் அணியாதவர்களைத் தேடிச்சென்று தூக்கி வாகனத்தில் ஏற்றிச் செல்வதை நிறுத்திக் கொள்ளும்படி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன விசேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டு பொலிஸாருக்கு இந்தக் கட்டளையை நேற்று பிறப்பித்திருக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு நபர்களை பொலிஸார் தூக்கிச் செல்கையில் நபருக்கு தொற்று இருந்தால் பொலிஸார் இடையே தொற்று பரவும் அபாயம் இருப்பதை பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

கைது செய்யப்படுகின்ற நபர்கள் ஒரே ஜீப் வண்டியில் ஏற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதிலும் கொரோனா பரவல் அச்சம் ஏற்படும் என்றும் சுற்று நிருபத்தில் கூறப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

“தரம் 11 வகுப்பு கற்கைக்கான காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது.” – கல்வி அமைச்சர்

புதிய மறுசீரமைப்பின் ஊடாக எட்டு மாதங்களுக்குப் முன்னர் பாடசாலை கல்வியை முடித்துக் கொண்ட பிள்ளைகளுக்கு உயர்தர கற்கை நெறிகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக கலந்தாலோசிக்கப்படுகின்றது. பல்வேறு நாடுகளில் 21 வயதை அடையும் போது, பிள்ளைகள் பட்டப்படிப்பை முடித்துக் கொள்கின்றார்கள். இலங்கை மாணவர்களுக்கும் இவ்வாறான வசதிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

பத்தாம், 11ஆம் வகுப்பிற்காக இதுவரை இருந்த காலவரையறை ஒன்றரை வருடமாக குறைக்கப்படவுள்ளது. இறுதி இரண்டு வருடங்களுக்குள் இதன் பலன்களை மாணவர்களுக்கு வழங்குவது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் தமிழ் மக்களைப் பழிவாங்கும் விதத்தில் செயற்படுகின்றது.” – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு !

“ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் தமிழ் மக்களைப் பழிவாங்கும் விதத்தில் செயற்படுகின்றது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி இடித்தழிப்புத் தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கும் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி அடித்துடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இராணுவத்தினரும் காவல்துறையினரும் கூறியுள்ளனர். அப்படியாயின் நினைவுத் தூபியை அடித்துடைத்தது யார்? பாதுகாப்புப் படையினரின் கண்களுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் யார் வந்தது நினைவுத் தூபியை அடித்துடைத்தார்கள்? பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரிடம் மேற்படி கேள்வியை நான் கேட்க விரும்புகின்றேன்.

போரில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாகவே நினைவுத் தூபி நிறுவப்பட்டிருந்தது. கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் மக்கள் அங்கு சென்று நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த எந்தவித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், இந்த அரசு நினைவேந்தல் நிகழ்வை நடத்தத் தடை விதித்தது மட்டுமன்றி முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபியையும் அடித்துடைக்க வழியமைத்துக் கொடுத்துள்ளது.

நினைவுத் தூபியை அடித்துடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராஜபக்ச அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் தமிழ் மக்களைப் பழிவாங்கும் விதத்தில் செயற்படுகின்றது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்.நீதிமன்றம் !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தலை தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்

“காவல்துறையினர் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்கு இன்னொரு விதமாகவும் செயற்படுகின்றனர்.” – துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு !

“முல்லைத்தீவு காவல்துறையினர் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்கு இன்னொரு விதமாகவும் செயற்படுகின்றனர்.” என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் சுகாதார நடைமுறைகளை மீறி சிங்களவர்கள் பௌத்த விழா எடுக்கும்போது வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த முல்லைத்தீவு காவல்துறையினருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின்மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா?  கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதுள்ள கொரோனாத்தொற்று அசாதாரண நிலையினைக் காரணங்காட்டி, முல்லைத்தீவு காவல்துறையினர் முள்ளிவாய்கால்நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றினூடாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களுக்கு எதிராகத் தடைக்கட்டளைகளைப் பெற்றுள்ளனர்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட தடைக்கட்டளையினை 15.05.2021 இன்று முல்லைத்தீவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கையளித்திருந்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி15.05.2021 இன்று காலை 10.30மணியளவில் எனது இல்லத்திற்கு வருகைதந்து, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட நீதிமன்றக் கட்டளையினை என்னிடம் தந்துள்ளார். குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலோ, அல்லது முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலோ எந்தவித கூட்டங்களோ அல்லது நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவோ கூடாதென, அந்தத் தடைக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை வழக்கு இலக்கம் 418/ 21 என்னும் இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், கொரோனாக் காலத்தில் இவ்வாறான கூட்டங்கள் அல்லது நினைவேந்தல்கள் செய்வது பிழையானது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் நீதவான் நீதpமன்றம் வழங்கியுள்ள கட்டளையை நாம் ஏற்கின்றோம். அதனை நாம் மதிக்கின்றோம்.

இதேவேளை இதே முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட குருந்தூர்மலையில், கடந்த 15.05.2021 அன்று சிங்கள பௌத்த துறவிகள், தொல்லியல்துறையினர், இராணுவத்தினர் என பலரும் ஒன்றுகூடி, அங்கு பாரிய அளவில் பௌத்த விழா ஒன்றினை சுகாதார நடைமுறைகளை மீறி முன்னெடுத்திருந்தனர்.இதனைக் கண்டுங்காணாதவர்களாக முல்லைத்தீவு காவல்துறையினர் இருந்தனர்.

ஆனால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ளும்போது, அவர்கள் இந்த நாட்டில் தாம் அக்கறை உடையவர்கள் என காண்பிக்கும் வகையில் இவ்வாறான நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்களைச் செய்கின்றனர்.

எனவே இந்த நினைவேந்தல் விடையத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யும்போது, முல்லைத்தீவுப் காவல்துறையினரிற்கு இருந்த நாட்டின்மீதான அக்கறை, குருந்தூர்மலையில் சுகாதார நடவடிக்கைளை மீறி சிங்கள பௌத்த விழாக்கள் இடம்பெறும்போது அந்தக்கறை ஏன் இல்லாமல்போனது.

முல்லைத்தீவு காவல்துறையினர் சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்கு இன்னொரு விதமாகவும் செயற்படுகின்றனர் என்பதையே இது உணர்த்துகின்றது என்றார்.