09

09

நியூயோர்க் , புளோரிடாவை அடுத்து மேரிலாண்டிலும் துப்பாக்கிச்சூடு – அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்தநிலையில் மேரிலாண்டில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேரிலாண்டில் உள்ள புறநகர் பகுதியான கால்டிமோரில் வசிக்கும் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியுடன் சாலைக்கு வந்து சரமாரியாக சுட்டார்.

இதில் 2 ஆண், ஒரு பெண் உயிரிழந்தனர். மற்றொருவர் காயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்திய வால்பரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தெரிகிறது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறும் போது, ‘அந்த வாலிபர் நீண்ட நாட்களாக சித்த பிரம்மை பிடித்தவர் போல் இருப்பார். அடிக்கடி அண்டை வீட்டாரிடம் ஆக்ரோசமாக நடந்து கொள்வார்’ என்று தெரிவித்தார்.

நியூயோர்க்கில் உள்ள புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு சிலரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் பொது மக்கள் அலறியடுத்து ஓடினர். பின்னர் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

இதேபோல் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டனர்.

இதனால் பொது மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இந்த துப்பாக்கிசூட்டில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

“யாழ்ப்பாணத்தின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்னும் அமைப்பு” – அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் யாழ்.மாநகர முதல்வர் !

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்று சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றை பாதுகாத்து அதை மீள்நிர்மானம் செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் என்னும் அமைப்பு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மரபுரிமைச்சின்னங்களை பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பினை நிறுவுவதற்கு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மேற்கொண்ட முயற்சியினால் 11 நபர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட குறித்த அமைப்பு இன்று நிறுவப்பட்டுள்ளது . மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் தலைவராக வரலாற்று துறை பேராசிரியர் பரமு.புஸ்பரட்ணம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

81a7b736 6bef 4663 b32d df104ff90ad1

அத்துடன் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தின் உப தலைவர்களாக வைத்தியகலாநிதி பேராசிரியார் ரவிராஜ் மற்றும் நடராஜா சுகிதராஜ்யும் செயலாளராக மருத்துவ பீட் பதிவாளர் ராஜேந்திரம் ரமேஸ், துணைச் செயலாளராக பாசுப்பிரமணியம் கபிலன் பொருளாளராக பேராசிரியர் செல்வரட்ணம் சந்திரசேகரம் இணைப்பாளராக சிவகாந்தன் தனுஜன் பதிப்பசிரியராக வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மையத்தின் உறுப்பினர்களாக விஸ்வலிங்கம் மணிவண்ணன், விஸ்வபாலசிங்கம் மணிமாறன், பூவானசுந்தரம் ஆரூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பொது மக்களின் பங்களிப்புடன் இவ் அமைப்பு வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அனைத்திலும் உள்ள வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கணவன் உயிரை மாய்த்ததை அறிந்து அதே முறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி – யாழில் சம்பவம் !

தவறான முடிவெடுத்து கணவன் உயிரை மாய்த்ததை அறிந்த மனைவியும் அதேவழியில் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

இந்தச் சம்பவம், யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைத் தொழிலகப் பட்டறையில் நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, திருநெல்வேலியைச் சேர்ந்த பரமலிங்கம் பகீரதன் (வயது 34) மற்றும் அவரது மனைவி ரஜிதா (வயது 33) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

கணவன், நகை வேலைக்குப் பயன்படுத்தும் இரசாயனத்தை நேற்று மாலை உட்கொண்ட நிலையில், அவர் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட போதும் அவரது உயிர் பிரிந்தது.
இதனையறிந்த மனைவி அதே இரசாயனத்தை உட்கொண்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பெருங்கடலில் விழுந்தது உலகையே அச்சத்துக்குள்ளாக்கிய 21 டொன் எடை கொண்ட சீனாவின் லோங் மார்ச் – 5பி ரொக்கெட் !

சீனா விண்வெளிக்கு அனுப்பிய விண்கலத்தின் பாகம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமை உறுதிசெய்துள்ளது.

சீனா விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி லோங் மார்ச் – 5பி ரொக்கெட் மூலம் கட்டுமான விண்கலத்தை அனுப்பியது.

அந்த விண்கலத்தை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தி ரொக்கெட், மீண்டும் பூமிக்கு திரும்பியது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டை ரொக்கெட் இழந்தது.

Gallery

எனவே எந்த நேரமும் அந்த ரொக்கெட் பாகம் பூமியில் விழும் சூழல் ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் வளிமண்டலத்திற்குள் நுழைந்து பூமியை நோக்கி வேகமாக வரத் தொடங்கியது.

21 டொன் எடை கொண்ட ரொக்கெட்டின் பெரும்பாலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றும், எஞ்சிய பாகம் கடலில் விழும் என்றும் சீனா கூறியிருந்தது.

அதன்படி, ரொக்கெட்டின் எஞ்சிய பாகம் இன்று மாலைதிவு அருகே இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( international space station ) இல் ஆய்வுகளை நடத்த அமெரிக்கா சீனாவை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் சீனா தாம் ஒரு விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் காட்டுத்தீயாய் பரவும் கொரோனா – முதன்முறையாக ஒரே நாளில் சுமார் 2,500 க்கும் அதிகமான தொற்றாளர்கள் !

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 672 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில், 13 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தைக் கடந்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 906ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 365 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து நான்காயிரத்து 463 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 786 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 20ஆயிரத்து 657 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை ஒன்பது இலட்சத்து 31 ஆயிரத்து 396 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை ஒரு இலட்சத்து 97 ஆயிரத்து 140 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை ஏமாற்றிவிட்டது.” – வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் குற்றச்சாட்டு !

“தவிசாளர் பதவி ஒன்றிற்காகவே ஏமாற்று வேலையை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசியத்திற்காக எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்த போகிறார்கள்.” என வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ் ஒன்றியத்தின் நிர்வாக செயலாளர் சி. ஜனார்த்தனன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

2018ம் ஆண்டு இடம்பெற்ற பிரதேசசபை தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு மாத்திரம் மலையக மக்கள் சார்பாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஒன்றியத்தின் சார்பில் தனித்து சுயேட்சையாக நாங்கள் போட்டியிட்டிருந்தோம்.

DSC02865 1

இதன் மூலம் எமது மக்கள் இரண்டு பிரதிநிதிகளை வழங்கியிருந்தனர். அவ்வாசனங்களின் ஆதரவின் மூலமே தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஊன்றுகோலாக இருந்தது. இது தொடர்பில் நாம் கூட்டமைப்புடன் ஒப்பந்தத்தினையும் மேற்கொண்டிருந்தோம்.

ஏனெனில் நாங்களும் தமிழ் இனம் தமிழ் தேசியம் என்ற ரீதியில் எமது இளைஞர்களும் தேசியத்திற்காக போராடியிருக்கிறார்கள், பல போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்கள். அந்த வகையிலே தமிழ் தெற்கு பிரதேசசபையினை பேரினவாத கட்சிகள் ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கிலே நாங்கள் இந்த ஆதரவினை தமிழ் தேசிய கூட்டமைக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியிருந்தேம்.

இந்த ஒப்பந்தத்தமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவகட்சிகளான தமிழரசுகட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக்கழகம் ஆகியவற்றின் சார்பிலே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசசபையின் தவிசாளர் பதவியானது, முதல் மூன்று வருடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இறுதி ஒரு வருடம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் ஒன்றியத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று இவ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை ரெலோ சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் சார்பாக சந்திரகுலசிங்கம், தமிழரசுகட்சி சார்பாக வைத்தியகலநிதி ப.சத்தியலிங்கமும் மற்றும் எமது அமைப்பு சார்பாக அமைப்பின் தலைவர் எம்.பி.நடராஜாவும் கையொப்பமிட்டுள்ளர்.

ஆனால் தற்பொழுது மூன்று வருடம் முடிவடைந்த பின்பும் இவ் ஒப்பந்தத்தை மீறி நான்காவது வருடமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்குள்ளாகவே தவிசாளரை நியமித்துள்ளனர். இதன் மூலமாக இவர்கள் எங்களை ஏமாற்றியுள்ளனர். இவ்வாறு ஒரு பிரதேசசபை தவிசாளர் பதவி ஒன்றிற்காகவே இவ்வாறு ஏமாற்று வேலையை செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத்திற்காக இவர்கள் எவ்வாறு அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்த போகிறார்கள்.

அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்பட வேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் உள்ளது. இன்று வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்கள குடியேற்றம் தமிழர் காணி அபகரிப்பு, நிரந்தரமாக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள் என்பன பேரினவாத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆகவே அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்படாமல் சிதறிக்கப்படுவதனால்தான் மாற்று இனத்தவர்கள் இங்கு கால் ஊன்றுகின்றனர்.எனவே இனிவரும் காலங்களிலாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு அனைத்து தமிழ் சமூகங்களையும் ஒன்றிணைத்து செயற்படுவதற்கு முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

“கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” – உறவினர்கள் வேண்டுகோள் !

“ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கடந்த வாரம்  தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜ பக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் பிந்திய பெறுபேறுகளுக்கு அப்பால் இது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும் இதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது காலத்தின் தேவையாகும். எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் குறிப்பிடுகையில்……

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 40 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் 27 பேரும் நாட்டில் உள்ள மேலும் பல்வேறு சிறைகளில் 12 பேரும் என மொத்தம் 79 தமிழ் அரசியல் கைதிகள் சிறைத்தடுப்பில் உள்ளார்கள். அவர்கள்  மத்தியில் வயோதிபர்கள், போரினால் அவயங்கள் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்களாக கைது செய்யப்பட்டவர்கள் என பல வகையினரும் அடங்குவர்.

25 முதற்கொண்டு 10 வருட காலமாக தொடர் சிறைத்தடுப்பை அனுபவித்துக்கொண்டிருக்கும் எம் பிள்ளைகள் நிச்சயமற்றதொரு வாழ்க்கைச்சூழலை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் இருந்த பல அரசியல் கைதிகள் நோய் நொடிகாளாலும் சிறைக் கலவரங்களாலும் சிறைக்குள்ளேயே செத்து மடிந்து போயுள்ளனர்.
எம் பிள்ளைகள் இன்று வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த 20 க்கும் மேற்பட்ட பெற்றோர் கடைசிவரை தங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தை கூட பார்க்க முடியாமல் இறுதி மூச்சை திறக்க நேரிட்டுள்ளது. போதுமான மருத்துவ வசதிகளோ ஊட்டச்சத்துள்ள போசனமோ இன்றி வரையறுக்கப்பட்ட குறுகியதொரு இடப்பரப்புக்குள் அரசியல் கைதிகளாக அவர்கள் இத்தனை ஆண்டுகளாக நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்களே என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

நெடுங்காலமாக குடும்ப உறவுகளிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டு 90 வீதமானவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள். தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய்,சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, மூட்டு வியாதிகள் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் எமது பிள்ளைகளுக்கு சீரான மருத்துவ பரிசோதனைகளோ தகுந்த மருத்துவ பராமரிப்போ இன்றி துன்பப்படுகிறார்கள். தவிர அவ்வப்போது தொற்று நோய்களும் அவர்களை ஆட்கொண்டு வருத்த வருகிறது. தொலைவெல்லை புலன்களற்ற சுற்று மதில் சுவர்களுக்குள்ளும் சிறைஅறைகளுக்குள்ளும் தசாப்பத காலமாக தடுத்தடைக்கப்பட்டுள்ள எம் பிள்ளைகளுக்கு கட்புலனும் செவிப்புலனும் வெகுவாக குன்றி வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் கொரோனா பரவலின் முதலாவது சுற்று அனைவரையும் தொற்றி துன்புறுத்தி விட்டது. அதன் பாதிப்பிலிருந்து மொத்தமாக மீள்வதற்குள் நாட்டில் மீண்டும் பாரிய அளவிலான கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. சிறைக்குள் பொருத்தமான தொற்று நீக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தடுப்பு ஊசிகளும் ஏற்றப்படவில்லை.

சிறைகளில் ஏற்பட்ட இட நெருக்கடியை குறைக்கும் முகமாக அரசாங்கத்தால் இரு வேறு தடவைகளில் ஆயிரக்கணக்கான கைதிகள் விசேட ஏற்பாட்டுக்களின் ஊடாக விடுவிக்கப்பட்டனர். எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் அதில் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. எனவே இத் தருணத்திலாவது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ பொது நோக்கொன்றின் நிமித்தம் சுய வாழ்வை அடமானம் வைத்து நாளாந்தம் சிறைகளுக்குள் சிதைந்து கொண்டிருக்கும் எமது பிள்ளைகளின் விடுதலைக்காக அனைத்து தமிழ் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம் ஒரு பொதுப்பொறிமுறையை முன்வைத்து மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வினயமுடன் வேண்டுகோள் விடுக்கிறோம். என குறிப்பிட்டார்கள்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய பொலிஸார் !

பண்டாரவளை பொலிஸ் தலைமை அதிகாரி சந்தன ஜயதிலகவின் தலைமையில் சுகாதார நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கான விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாத 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிலரை பொலிஸார் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவமும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

“ஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வாரம் முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்.” – தனியார் பஸ் உரிமையாளர்கள்

தனியார் பஸ் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர்களுக்கு ஒரு வாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அடுத்த வாரம் முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

கொவிட் அச்சறுத்தலுக்கு மத்தியிலும் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ் சாரதிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தும், அரசாங்கம் தவறி இருப்பது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தடுப்பூசி தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் வழங்கவேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு பதிவுத்தபால் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தோம். அதன் பிரதி ஒன்றை போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவுக்கும் பெற்றுக்கொடுத்திருந்தோம். ஆனால் எமது கோரிக்கைக்கு சுகாதார பணிப்பாளரிடமிருந்தோ அல்லது அமைச்சர் காமினி லொக்குகேயிடமிருந்தோ இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

அதனால் இந்த வாரத்தில் எமது தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் பஸ்கள் கஷ்டத்துடனேனும் போக்குரவத்து சேவையில் ஈடுபடும். இவ்வாறு போக்குவரத்து சேவையில் தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே ஈடுபடுகி்ன்றனர். இவ்வாறு போக்குவரத்து சேவையில் ஈடுபவர்களுக்கு இந்த வாரத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி ஏற்றுவதற்கு தவறும் பட்சத்தில் பஸ் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ளவேண்டி ஏற்படும். அதனால் அரசாங்கம் ஒருவாரத்துக்குள் கொவிட் தடுப்பூசி வழங்குவதறகு தவறினால் அடுத்த வாரத்தில் இருந்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் பொது மக்கள் போக்குவரத்து சேவையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள தீர்மானித்திருக்கின்றது என்றார்.