07

07

“காலம் ஒரு செங்கோலை எம் கையில் தரும். இது மறைந்தும் மறையாத தமிழகத்தின் ஔிச் சூரியன் கலைஞரின் இலட்சிய நம்பிக்கை.” -ஸ்டாலினுக்கான வாழ்த்துச்செய்தியில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

ஈழத் தமிழ் மக்களின் நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக மக்கள் நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முதலமைச்சராக இன்று(07.05.2021)  பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

unnamed 1

‘காலம் ஒரு செங்கோலை எம் கையில் தரும். இது மறைந்தும் மறையாத தமிழகத்தின் ஔிச் சூரியன் கலைஞரின் இலட்சிய நம்பிக்கை.ஓய்ந்தறியா உங்கள் உழைப்பால் தமிழகத்தில் மறுபடியும் தி.மு.க. ஆட்சி மலர்ந்து கலைஞரின் கனவு நிறைவேறியுள்ளது.

தமிழக மக்களின் மனங்களில் மட்டுமன்றி, அவர்களின் கனவுகளை வெல்லும் ஆட்சிப் பீடத்திலும் உங்களுக்கு சிம்மாசனம் கிடைத்துள்ளது.

ஈழத் தமிழர்களின் நீதியான உரிமைப் போராட்ட காலத்தில் அரசியல் ஏதிலிகளாக தமிழகம் வந்த எமது மக்களை அன்பால் அரவணைத்து வரவேற்றவர்கள் தமிழக மக்கள்.

எமது நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மறுபடியும் மலர வேண்டும். சமன் செய்து சீர்தூக்கும் செங்கோல் ஆட்சியென அது நிலவ வேண்டும்.

எமதும், உங்களதும், தமிழக மக்களினதும் ஆழ்மன விருப்பங்களே இன்று நிறைவேறியிருக்கின்றது.முதல்முறையாக ஆட்சிப் பீடமேறும் உங்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் மு.க.ஸ்டாலின் !

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

Image

ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். மு. க ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்ய வாய்ப்பு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1390589162152087560/photo/2

 

பின்னர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவர் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், பின்னர் தலைமை செயலகம் சென்ற அவர், கொரோனா நிவாரணத் தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்குவது, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளுதல் உள்பட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்ட ரஞ்சன் ராமநாயக்க !

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதி பொது மன்னிப்புக்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்த தகவல் ரஞ்சன் ராமநாயக்கவின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதித்துறை அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை அனுபவித்து வருகிறார்.

“யாழ்.மக்களே மிகுந்த அவதானமாக செயற்படுங்கள்.” – யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை !

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில்,

“யாழ். மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்திற்குப் பின்னர் ஆயிரத்து 688 பேர் யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள் என்பதுடன் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.இதனைவிட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், யாழில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 261 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கொடிகாமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் அனைத்து நடவடிக்கைகளையும் மட்டுப்படுத்திய அளவிலும் சில விடயங்களுக்குத் தடை விதித்தும் இருக்கின்றோம்.

தற்போது, பொலிஸார் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை சில முன்னேற்ற நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

அதாவது, ஏற்கனவே கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இருந்த இரண்டு சிகிச்சை நிலையங்களுக்கு மேலதிகமாக மேலும் சில சிகிச்சை நிலையங்களைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நேற்றும் கிளிநொச்சியிலும் 230 கட்டில்களுடன் ஒரு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்துள்ளோம். அத்தோடு மருத்துவமனைகளையும் சிகிச்சை நிலையங்களாக மாற்றியமைப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவசர சிகிச்சைக்குரிய கட்டில்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளது. எனவே, அதனையும் அதிகரிப்பதற்குரிய நடவடிக்கையினை சுகாதாரப் பிரிவினர் எடுத்துள்ளார்கள்.

எனவே, மட்டுப்படுத்தப்பட் வைத்திய வசதிகள் காணப்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. புதிய வீரியம்மிக்க வைரஸ் பரவல் நாட்டில் இருக்கின்றமையினால் சுகாதார நடைமுறைகளைப் பொதுமக்கள் இறுக்கமாகப் பின்பற்றிச் செயற்பட வேண்டும்” என அரச அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ.மாநகர முதல்வர் மணிவண்ணனால் உருவாக்கப்பட்ட மாநகர காவல் படையின் பணியாளர்களை விசாரணைக்காக நான்காம்மாடிக்கு அழைப்பு !

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், கொழும்பிலுள்ள நாலாம் மாடியில் அமைந்துள்ள பயங்காரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்துக்கு எதிர்வரும் 11ஆம் திகதி காலை ஒன்பது மணிக்குச் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகரத்தை தூய்மையான நகரமாகப் பேணும் பொருட்டு, மாநகர சபை ஊழியர்கள் ஐவர் மாநகர காவலர்களாக தனியான சீருடை அணிந்து கடந்த மாதம் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். எனினும், உத்தியோகத்தர்கள் அணிந்திருந்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடைக்கு ஒத்தது என சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில், இதுதொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன் பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, குறித்த சீருடை அமைப்பு கொழும்பு மாநகர சபையின் சீருடை அமைப்பைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டது என வி.மணிவண்ணன் விளக்கமளித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சுமார் 20 இலட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்க நடவடிக்கை !

இலங்கையில் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்களைக் கொண்டிராத சுமார் 20 இலட்சம் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்குத் தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், குறித்த கணக்குகளை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கான அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் அமைச்சர் அலி சப்ரியும் தானும் இணைந்து அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு அனுமதி கிடைத்தவுடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, உரிமையாளர்கள் இல்லாத பேஸ்புக் கணக்குகள் மூலம் பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் இனவாதங்களைத் தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இளையோரைச் சீரழிக்கும் சமூக விரோதச் செயற்பாடுகளைத் தூண்டுவதற்கும் இதுபோன்ற பேஸ்புக் கணக்குகள் வழிவகுப்பதாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூகக் கட்டமைப்பையும் வழிநடத்தும் வகையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

“எதிர்காலத்தில் நாடு மூடப்படலாம்.” – சுதர்ஷனி பெர்னாண்டோ

தேவைப்பட்டால், எதிர்காலத்தில் நாடு மூடப்படலாம் என தொற்று நோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்றவாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் மூடும் அதிகாரம் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.