May

May

“முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல்  அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.” – இம்ரான் மஹ்ரூப்

“முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமல்  அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.” என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (22.05.2021)கருத்து வெளியிடும்போதே அவர் இவவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று காணப்பப்படும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே. அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை இருபதாம் திருத்தம் மற்றும் துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகிறது. இருபதாம் திருத்த சட்டமூலத்தில் தலைவர் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர். அதன்பின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இனி அவர்கள் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் துறைமுக நகர சட்டமூலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ராஜபக்சக்களின் காட்டுப்பாட்டில்லையே உள்ளனர் என்பது புலனாகிறது. அதுவும் இந்த சட்டமூல விவாதத்தில் இதற்கு எதிராக பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இவர்கள் வாக்காளிக்காமல் தடுத்துள்ளனர். காரணம் இவர்களால் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்காளிக்க முடியாது.

எனவே எதிராக வாக்களிக்க இருந்த தலைவரையும் வாக்காளிக்காமல் தடுத்து இவர்கள் மக்களிடமும் ராஜாபக்சக்களிடமும் தப்ப முயற்சிக்கின்றனர். அடுத்த பக்கம் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட – அக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமது தலைவரை சிறையில் அடைத்த அரசை எதிர்த்து வாக்களிக்க முடியவில்லை. ஆகவே இவர்கள் அனைவரும் தற்போது ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவர்களால் அரசை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது.”  எனத் தெரிவித்தார்

“நாட்டின் ஒரு பகுதியினருக்கு மட்டுமே கிடைக்கும் சுத்தமான குடிநீரை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம்.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரைப் பெறுவதற்கான வசதியை 2025ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குருநாகல், கேகாலை மற்றம் காலி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் மூன்று திட்டங்களை இணையவழியில் திறந்து வைக்கும் நிகழ்வின்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர் வழங்கல் திட்டம், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ நீர் வழங்கல் திட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் ஹபுகல நீர் வழங்கல் திட்டம் ஆகியன பொதுமக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன.

குருநாகல், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் 7 பிரதேச செயலாளர் பிரிவுகளின் 377 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் நன்மையடைகின்றனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தூய்மையான குடிநீர் இல்லாததால் வட மேல் மாகாண மக்கள் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், குறித்த பிரச்சினை ஏனைய பகுதிகளுக்கும் பரவி வருகின்றது எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இணையவழி கல்வியால் மாணவர்களுக்கு அதிக மன அழுத்தம் – கல்வி அமைச்சு !

தற்போது நடைமுறையிலுள்ள இணையவழி (ஒன்லைன்) கல்வி முறையின் மூலம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மன அழுத்தத்தங்களுக்குள்ளாகிய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மாணவர்களால் தாங்கிக் கொள்ள முடியாதவாறு, ஓய்வு நேரம் வழங்காமல் நாள் முழுதும் வகுப்புக்களை நடத்தல் மற்றும் சிலவேளைகளில் காலை முதல் நள்ளிரவு வரை வகுப்புகளை நடத்துவது போன்ற சம்பவங்கள் முக்கியமாக குறிப்பிடப்படுகின்றன.

மாணவர்கள் இணையவழி (ஒன்லைன்) மூலமான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பாடசாலை சீருடைகளை அணிய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதாகவும், ஆசிரியைகள் சாரி அல்லது ஒசரி போன்ற உடைகளை அணிந்து பாடங்களை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தேவையற்ற மன அழுத்தங்களுக்கு உள்ளாகாதவாறு மிகவும் பொருத்தமான ஆடைகளை அணிந்து, உரிய நேரத்திற்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட அறிவுறுத்துமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்

சீனாவின் நிதியுதவியுடன் உருவான சட்டமா அதிபர் அலுவலகத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு !

சட்டமா அதிபர் அலுவலகத்தில் சீன அரசின் நிதியுதவியுடன் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள மின் நூலகத்தின் பெயர்ப்பலகையில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியான தமிழ் மொழியை சீன அதிகாரிகள் புறக்கணித்தமைக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இலங்கையின் சட்டத்தைப் பாதுகாக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைமை சட்ட அலுவலகத்திலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டால் தமிழ் மொழிக்கு இலங்கையில் உள்ள அங்கீகாரம் என்னவென்றே கேள்வி எழுகின்றது என அந்தக் கண்டனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், உடனடியாக நீதி அமைச்சர் அலி சப்ரியைத் தொடர்பு கொண்டு, இதற்கான உடனடி நடவடிக்கையை எடுத்து தமிழ் மொழி புறக்கணிப்பை நிவர்த்தி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடனடியாக இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் பெயர்ப்பலகையில் தமிழ்மொழியை இணைக்காது விட்டிருந்த தனியார் நிறுவனமொன்றை கண்டித்து இலங்கையின் மொழிக்கொள்கைக்கு முக்கியம் கொடுக்குமாறு சீனத்தூதரகம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பை ஐ.நாவில் ஆவணப்படுத்துங்கள்.”- மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் – கையெழுத்திட மறுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் !

“கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. எனவே, நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என்று வேண்டுகோள் விடுத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

Screenshot 20210520 210200 Drive

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12ஆம் திகதி விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டது. இராணுவம்  மற்றும் காவற்துறை பாதுகாப்பில் இருந்த இந்தத் தூபி உடைக்கப்பட்டதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர்.

அத்தோடு நிறுத்தி விடாது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த  வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப்பட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்.

இந்தக் கடிதம் ஐ.நாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மூலமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு  ஆவணப்படுத்தக் கோரிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில்,  “2009 மே 18இல் முடிவடைந்த கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. இது ஒரு வெட்கக் கேடான மனித குலத்துக்கு எதிரான செயற்பாடு.

உலகில் உள்ள எவ்வகையான வலிமை பொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும் நினைவுகளையும் அழிக்க முடியாது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கின்றோம்.

நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், த. சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், இராசமாணிக்கம் சாணக்கியன், தவராசா கலையரசன், வி.இராதாகிருஷ்ணன், எம்.வேலு குமார் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இரா. சம்பந்தன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காமையால் அவர்களின் கையொப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் கடிதத்துடன் உடன்பாடு இல்லாத காரணத்தால் இதில் கையொப்பமிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

“தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத, அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலை இலங்கை விடயத்தில் ஏற்பட்டுள்ளது.” – ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் அடமா டியங்க்

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது. தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து இலங்கை விலகிச் செல்லுமாக இருந்தால் அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்று இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நா.வின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) தெரிவித்திருக்கிறார்.

புலம்பெயர் அமைப்பொன்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தலின் 12 ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற அஞ்சலி நிகழ்வையடுத்து இலங்கையில் குற்றங்களுக்கான பெறுப்புக்கூறல் மற்றும் நீதி பரிகார நடவடிக்கைகளின் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களை மதிப்பீடு செய்தல் எனும் தொனிப்பொருளில் ஆற்றிய முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவருடைய உரையில் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு,

“முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூர்ந்தும் அதில் உயிர்தப்பியோரின் வலிகளுக்கு மரியாதை செலுத்தியும் நினைவுரையை வழங்குகின்றேன்.

இலங்கை விடயத்தில் பரிகார நீதி நடவடிக்கைகள் சர்வதேச குற்றங்களுக்கு உட்பட்டதாகவோ அன்றி தேசங்களுக்கு உட்பட்டவையாகவோ எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்திச் செய்யப்படுகின்ற போதுதான் அது உண்மையான பொறுப்புக்கூறலாக அமைய முடியும்.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு மானிடப் பேரவலத்தின் நினைவுகளாக நம்மிடையே உள்ளது. நினைவுகளை மறுத்துவிட்டு ஒருபோதும் உண்மையைப் பரிசோதித்துவிட முடியாது. கடந்த காலத்து நினைவுகளை மீட்டுவது நிகழ்காலத்தின் மீது நம்பிக்கையைக் கொண்டுவர உதவுவதாக இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இதுபோன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாத, அதில் முழுமையான ஈடுபாடு காட்டாத அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாக்குவதை நாங்கள் கண்டுள்ளோம். அவ்வாறு ஓர் அரசு செயற்பட்டு தன்னுடைய பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லுமாக இருந்தால், அதற்கான பொறுப்பு சர்வதேச அமைப்புகள் மீதே சுமத்தப்படுகிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.

ஆனால், எந்த மண்ணில் கொடுமைகள் நிகழ்ந்தனவோ அந்த நாட்டின் அரசு என்ற வகையில் இலங்கையைத் தள்ளிவைத்து விட்டுப் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுத்துச் சென்றுவிடவும் முடியாது என்பதிலும் கரிசனை கொள்ளவேண்டியுள்ளது. கொரோனா வைரஸ் நிலைமைகளுக்குப் பின்னர் அதனையொரு காரணமாகப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வழங்கும் செயற்பாடுகளில் இருந்து இலங்கை அரசு மேலும் பின்வாங்குகின்ற சூழல் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது.

தற்போதைய ஆட்சியில் இலங்கை ஒரு பாரதூரமான நிலைமைக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதை விளக்கி அதன் நடவடிக்கைகளை “முரண்பாடுகளுக்கான விதைகளைத் தூவுதல்” என்று தலைப்பிட்டு கடிதம் ஒன்றை முன்னாள் ஐ.நா.செயலாளர்களுடன் இணைந்து வெளியிட்டிருக்கின்றேன். இலங்கையில் வரவிருக்கும் பேராபத்தை அங்குள்ள தற்போதைய நிலைமைகள் முன்கூட்டியே உணர்த்துகின்றன. ஜனநாயகத்துக்கான இடைவெளி சுருங்கி வருகின்றது என்ற எச்சரிக்கையை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்ததேன்” என்றார்.

“வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் நிலை ஏற்படும்.” – சமீர பெரேரா எச்சரிக்கை !

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை படை ஆயுதப் போரில் ஈடுபட்டதுபோல வெகுவிரைவில் போர்ட் சிட்டி நிலத்தை மீட்பதற்காக சீனாவுக்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் நிலைமை ஏற்படலாம் என தென்னிலங்கையைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளரும், சிவில் அமைப்பைச் சேர்ந்தவருமான சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை நினைவுகூரும் வகையில் கொழும்பு மருதானையிலுள் சி.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட செயலமர்வில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

சர்வதேசத்தை நாம் எதிர்த்துக் கொள்ளக்கூடாது. கடந்த காலங்களாக சிவில் அமைப்புக்களை டொலர்களுக்கு அடிபணிகின்றவர்கள் என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சர்வதேச சூழ்ச்சிகள் என்றும் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கூட தெரிவித்திருந்தார். ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் குறித்து உள்நாட்டு விசாரணையில் திருப்தி இல்லாவிடத்து சர்வதேசத்தை நாடப்போவதாக அவரே அறிவித்திருக்கின்றார்.

இன்று போர்ச் சூழல் இல்லை. இருப்பினும் தீவிரவாத செயலினால் நூற்றுக்கணக்கானவர்கள் ஈஸ்டர் தாக்குதலில் பலியாகியிருக்கின்றனர். பௌத்த தர்மத்திற்கு முதலிடம் வழங்குகின்ற நாடாகிய இலங்கை இன்று இந்த தாக்குதல் பற்றிய முழுமையான உண்மையான விசாரணையை நடத்தியாக வேண்டும். 2019ஆம் ஆண்டு என்பது சாத்தானை நோக்கிய இலங்கையின் பயணமாகவே கருதப்படுகின்றது. ஜனநாயகத்திற்கெதிரான கொடுங்கோல் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈஸ்டர் தாக்குதல் குறித்து சர்வதேசத்தின் சூழ்ச்சியொன்று இருக்கின்றது என்பது சட்டமா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றதென்றால் எமக்கும் அதன் மீது சந்தேகம் காணப்படுகின்றது. கடந்த 02 தினங்களுக்கு முன்னதாக முதலாவது, இரண்டாவது, மூன்றாவதும் எனது தாய்நாடே பிரதானம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஆனால் எதிர்காலத்தில் போர்ட் சிட்டியை சீனாவிடத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போரில்  ஈடுபட்டது போல மீண்டும் யுத்தத்தில் ஈடுபடவேண்டிய அபாயம் ஏற்படும் என்றார்.

இலங்கையில் தீவிரமாக பரவும் கொரோனா – ஒரே நாளில் 3500க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் – 44 பேர் பலி !

நாட்டில் நேற்று இதுவரை மூவாயிரத்து 538 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58ஆயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 828 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 360 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 89ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 31ஆயிரத்து 875 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 14 இலட்சத்து 25 ஆயிரத்து 556 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 16ஆயிரத்து 134பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, இலங்கையில் 1,132 பேர் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை.” – மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க

அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவது தாபன சட்டக் கோவையின் பிரகாரம் குற்றம் என இலங்கை சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, ”ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல்” எனும் தலைப்பில் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

அனைத்து மாகாண சுகாதார செயலாளர்கள், சுகாதார அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள், அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிரதேச சுகாதார பனிப்பாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சிப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார நிறுவங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கும் நிலை ஏர்படுவதாகவும், அதனை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இனி மேல் அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிடும் சுகாதாரத் துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாபன விதிக் கோவையின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

“கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது.”- பிரதமர் மோடி கவலை !

கொரோனா இரண்டாவது அலை தொடர்பாக இந்தியப்பிரதமர் பிரதமர் மோடி இன்று வாரணாசியில் மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
கொரோனா தொற்றின் 2-வது அலையில் நாம் பல்முனைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அலையில் தொற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த கொரோனா தொற்றின் 2-வது அலை நம்மிடமிருந்து நிறைய பேரைப் பறித்துவிட்டது என கண்கலங்கிய படி கூறினார். கொரோனாவால் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கொரோனாவிற்கு எதிரான நமது தற்போதைய போரில், கருப்புப் பூஞ்சை என்ற நெருக்கடியும் சேர்ந்துள்ளது. அதனை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
இது நாம் பதட்டமில்லாமல் இருக்கும் தருணமல்ல. நாம் மிக நீண்ட அச்சுறுத்தலை சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணிகள் நமது கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.