27

27

யாழில் இன்று ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா – நிலை இன்னும் தீவிரமடைய வாய்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று  சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர்  என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

143 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியில் உள்ள மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று உள்ளமை இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். ” – நாடாளுமன்றில் சிறீதரன் !

“இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள். ” என  வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை(25.03.2021) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் வடக்கு, கிழக்கில் வாழ் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைகளுக்கான, அவர்கள் மீது புரியப்பட்ட போர் குற்றங்களுக்கு எதிரான, அவர்களுக்கு நீதிக்கு புறம்பாக நடைபெற்ற கொலைகளுக்கு எதிராக, சொத்தழிவுகளுக்கு எதிராக ஒரு நீதி வேண்டுமென்ற அடிப்படையில்தான் கடந்த 12 ஆண்டுகளாக ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியா நடுநிலை வகித்திருந்தாலும் இலங்கையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்ற செய்தியை தெளிவாக எடுத்துரைத்துள்ளதுடன், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அவர் உரையாற்றிய பல இடங்களில் இந்த நாட்டில் ஒரு தமிழினம் இருப்பதாக,அவர்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக கூறியதுமில்லை. ஏற்றுக்கொண்டதுமில்லை. அவரின் கிராம மட்ட சந்திப்புக்கள் கூட இதுவரை வடக்கிலோ கிழக்கிலோ நடந்ததுமில்லை. அமைச்சர்கள் இனவாதத்தை கக்குகின்றார்கள். இந்த நாடு இனவாதத்தில் அழியப்போகின்றது. சர்வதேசத்தின் பிடிக்குள் இந்த நாட்டைக் கொண்டு செல்ல நீங்கள் தயாராகி விட்டீர்கள் என்றார்.

மியன்மாரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து தொடரும் மக்கள் போராட்டம் – இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 90க்கும் மேற்பட்டோர் பலி !

மியன்மாரில் போராட்டங்களில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் இது இன்று ஒரேநாளில் 90 இற்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மியன்மாரில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்ட கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து தற்போதுவரை கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.

இந்த கோர ஒடுக்குமுறை அந்நாட்டில் ஆயுதப்படை தினமான இன்று நிகழ்ந்துள்ளது. இதேவேளை, இராணுவ எதிர்ப்பாளர்கள் தலையிலும் பின்புறத்திலும் சுடப்படுவார்கள் என மாநில தொலைக்காட்சி நேற்று தெரிவித்திருந்தது. எனினும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பெருந்திரளான மக்கள் யாங்கோன், மாண்டலே மற்றும் பிற நகரங்களில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், மியன்மாரில் வெளியாகும், நவ் செய்தி போர்டல் வெளியிட்டுள்ள செய்திப்படி, நாடு முழுவதும் இன்று மட்டும் இதுவரை 91 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நூற்றுக் கணக்கானோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உயிர்த்தஞாயிறு தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது” – அனுரகுமார திசநாயக்க

“உயிர்த்தஞாயிறு தாக்குதல் தீவிரவாத தாக்குதல் போன்று தோன்றினாலும் அது அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது” என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு முக்கிய சூத்திரதாரியை நோக்கத்தை தாக்குதலின் பின்னால் இருந்தவர்களை அடையாளப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள அவர் அறிக்கை தாக்குதலை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை மாத்திரம் முன்வைத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சில பாதுகாப்பு தலைவர்கள் தாக்குதலின் பின்னணியில் மறைகரமொன்றின் சதி உள்ளது என தெரிவித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பாரதூரமான நிலைமை இதனை விசாரணை செய்யவேண்டும் சதிமுயற்சி உள்ளதா என்பதை பகிரங்கப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை தவிர்க்க முடியாமல் போனமைக்கான காரணங்களை சரிசெய்ய முடியும் ஆனால் சதித்திட்டம் குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டில் மீண்டும் அவ்வறானதொரு தாக்குதல் இடம்பெறும் ஆபத்துள்ளது எனவும் ஜேவிபியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு சதிதிட்டம் குறித்து ஆராய தவறிவிட்டது என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் ஆணைக்குழு அதனை அலட்சியம் செய்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

சுயஸ்கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்ட பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் – உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை !

உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக அறியப்படுவது எகிப்து நாட்டில் உள்ள சுயஸ் கால்வாய். உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, சுயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன் சிக்கிக் கொண்டுள்ளது.
குறித்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
சூயஸ் கால்வாயில் சிக்கிய தைவான் கப்பலை மீட்க அமெரிக்க கடற்படை உதவி | Dinamalar
1869-ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, குறுக்கே சிக்கிக் கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
400 மீட்டர் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா்.
இந்நிலையில், சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மணிக்கு ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து நாட்டின் சுயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதிப்புயலால் சிக்கி நின்ற சரக்குக் கப்பலை மீட்க முடியாமல் கப்பல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அதனைத் தொடர்ந்து வந்த 150 கப்பல்கள் காத்து நிற்கின்றன.

“தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்” – கஜேந்திரகுமார் ஜேர்மனி அரசுக்கு கடிதம் !

ஜேர்மனியில் தஞ்சம்கோரித் தங்கியிருந்த தமிழ் மக்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (North Rhine-Westphalia) பகுதியில் 30இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த சில நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள், பெரனில் உள்ள நாடுகடத்தல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வரும் மார்ச் 30ஆம் திகதி அவர்கள், டுசெல்டோர்ஃப் (Düsseldorf Airport) விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கூட்டு விமானத்தில் நாடு கடத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மார்ச் 30 ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம்.
ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜேர்மனி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய ஒருவாரகாலத்திற்குள் அந்த அரசாங்கத்திடமிருந்தே புகலிடம் கோரும் புகலிடக்கோரிக்கையாளர்களை அந்த அரசாங்கத்தின் கரங்களில் ஒப்படைப்பதற்கு ஜேர்மனி முயல்வது முற்றிலும் எதிர்மாறான செய்தியை தெரிவிப்பதாக அமையும்.
இதன் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்களின் உயிர்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த தவறான முடிவை உடனடியாக மீள் பரிசீலனை செய்யுமாறு ஜேர்மன் அரசாங்கத்தை கைவிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

“ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர வழிகளில்  பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ‘சமூக நீதி’ தொடர்பான கலந்துரையாடலின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையற்றதொன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவ்வறிக்கையின் இணைப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

எனவே ஒரு பகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது விவாதம்கூட நடைபெறுகின்றது.

குறித்த தாக்குதலின் பின்புலம் என்ன, பிரதான சூத்திரதாரிகள் யார், திட்டமிட்டது யார் என்பன உட்பட தாக்குதல் தொடர்பாக அனைத்து விடயங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது.

இந்நிலையில் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும் அடி, முடி தொடர்பில் உரிய வகையில் ஆராயவில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கின்றது.

எனவே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அனைத்து வழிகளிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும் தாக்குதலின் உண்மையான நோக்கமும் உரிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும்.

இதன் பின்னணியில் செயற்பட்டுள்ள வெளி சக்திகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவ்வாறு செய்வதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்ககூடியதாக இருக்கும்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் மீதும் பேரினவாதிகள் பயங்கரவாத முத்திரை குத்தினர். இஸ்லாம் மதத்தையும் அவதூறுபடுத்தினர். அப்பாவி முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டனர். அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

முஸ்லிம் வியாபாரிகளின் வர்த்தகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. எனவே தாக்குதலையடுத்து பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும்.

அவர்கள் தொடர்பான களங்கம் நீக்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“வலிமை மிக்க நாடுகளின் பூகோளஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாரில்லை.” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச

“இந்துசமுத்திரத்தின் வலிமை மிக்க நாடுகளின் பூகோளஅரசியல் தேவைகளிற்காக இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுப்பதற்கு நான் தயாரில்லை” என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 அங்கு மேலும் பேசிய அவர் ,
சுதந்திரமான நாடு என்ற அடிப்படையில் அனைத்து சர்வதேச சவால்களையும் சந்திப்பதற்கு தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரiவையின் சவால்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய சர்வதேசநாடுகளிற்கு இடையிலான மோதல்களின் ஒரு பகுதியாக விளங்குவதற்கு நான் தயாரில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பை விட்டுக்கொடுக்க தயாரில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 32 பயணிகள் பலி !

எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 32 பயணிகள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து எகிப்து ரயில்வே துறை அமைச்சகம் தரப்பில், “எகிப்தின் தென் பகுதியில் உள்ள தக்தா மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதிக் கொண்டதில் 32 பயணிகள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹலா சயீத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே தடங்கள் மோசமாக இருந்த காரணத்தால் ரயில்விபத்தில் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியான குடும்பத்திற்கு எகிப்து அதிபர்
அப்தெல் ஃபத்தா அல் சிசி நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், ரயில் விபத்தில் பலியான குடும்பத்திற்குத் தனது இரங்கலையும் அவர் பதிவு செய்துள்ளார். எகிப்தில் ரயில்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான ஒன்று. எகிப்தில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் 300 பேர் பலியாகினர். 2017ஆம் ஆண்டில் மட்டும் எகிப்தில் 1,793 ரயில் விபத்துகள் நடந்துள்ளன.

“தற்போதைய அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது” – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகின்றது எனவும் தற்போதைய அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையில் கடந்த அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து இலங்கை பல விளைவுகளை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்காது என்றும் நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காகவே இந்த அரசாங்கம் எப்போதும் செயற்படும் என்றும் கூறினார்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம் 22 நாடுகள் வாக்களித்தது.

மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமக்கு ஆதரவு வழங்கியதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.