26

26

“ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் சில தமிழ் கட்சிகள் செயற்பட்டன” – எம்.ஏ.சுமந்திரன்

“ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் சில தமிழ் கட்சிகள் செயற்பட்டன” என  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு. ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. கடந்த 23ஆம் திகதி இறுதி தீர்மானங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. இந்த கூட்டத்தொடரில் முதலாவது தீர்மானமாக இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் 2009ஆம் ஆண்டு ஒரு தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் வாக்குகெடுப்புடன் மூன்று தீர்மானங்களும் அதனை தொடர்ந்து 2015, 2017, 2019ஆம் ஆண்டுகளில் இலங்கையின் இணை அனுசரணையுடன் இணைந்து வாக்கெடுப்பு இல்லாமல் மூன்று தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

இறுதியாக நிறைவேற்றப்பட்ட 40/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரைக்கும் இலங்கையில் நிலவுகின்ற விடயங்கள் குறித்து மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரலுவலகம் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது. அந்த அறிக்கை டிசம்பர் மாதமே ஒரு வரைபாக இலங்கைக்கு காண்பிக்கப்பட்டதாக நாங்கள் தற்போது அறிந்தோம். அது ஜனவரி நடுப்பகுதியில் பகிரங்கமாக வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கை கடந்த அறிக்கைகளை விட மிகவும் காட்டமாக இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்ற பொறுப்புக்கூறல் நடவடிக்கை தொடர்பான விடயங்களிலோ நல்லிணக்கம் ஏற்படுத்துவதாகக் கூறி வழங்கிய வாக்குறுதிகளையோ நிறைவேற்றாமல் பின்னடித்ததை அந்த அறிக்கையில் மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுமட்டுமன்றி உள்நாட்டுக்குள்ளேயே பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் சரியாக வராது என்பதையும் அவர் தீர்மானமாகக் கூறியிருக்கின்றார்.

அந்த அறிக்கையில், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள், மனிதாபிமான சட்டத்திற்க எதிரான குற்றங்கள் போன்ற சர்வதேச குற்றங்களை விசாரணைசெய்து தண்டனை வழங்குகின்ற நீதிமன்ற பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும், அதுவொரு முழுமையான பொறிமுறையாக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அது கொண்டுசெல்லும் வகையில் இருக்கவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் கூறியிருக்கின்றார்.

இந்த அறிக்கையினையடுத்து குறித்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தினை பிரித்தானியா தலைமையிலான ஆறு இணை அனுசரணை நாடுகள் முன்வைத்தன. அது முன்வைக்கப்படுவதற்கு முன்பாக தமிழ் தேசியக் கட்சிகள் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள மூன்று கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றினை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியிருந்தோம்.

அதில் பொறுப்புக்கூறல் என்ற பகுதியை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும். இலங்கை உறுதியளித்த பல விடயங்களை நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவும் புதிய ஆட்சி பதவியேற்றதன் பின்னர் அந்தத் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று அறிவித்திருந்த நிலையில் பொறுப்புக்கூறல் என்ற வியடம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியே செல்லவேண்டும், அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக செயலாளர் நாயகத்திடமும் பொதுச்சபையிலும் கொண்டுவரப்பட வேண்டும். ஏனென்றால் அது பாதுகாப்புச் சபை மூலமாக மட்டும்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படலாம்.

இதனுடன் இணைந்து சாட்சியங்களைச் சேகரிப்பது, பாதுகாப்பது போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அண்மையில் சிரியாவிலும் மியன்மாரிலும் இவ்வாறான பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பின்பற்றி அப்படியான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட பிரேரரணையில் அந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுப் பொறிமுறை, பொறுப்புக்கூறல் தொடர்பாக செய்யப்படமாட்டாது. இலங்கைக்கு அது தொடர்பான கரிசனையில்லையென அந்தத் தீர்மானம் சொல்லுகின்றது.

அதுமட்டுமன்றி முழுமையான பொறுப்புக்கூறல் சர்வதேச ரீதியில் கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு முன்பாக இந்த விடயங்கள் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினைப் பொறுத்தவரையில் அதன் அங்கம் சர்வதேச நீதிமன்றத்திற்கு எதனையும் பாரப்படுத்தமுடியாது.

அதற்கான அதிகாரம் அவர்களிடத்தில் இல்லை. அதனை பாதுகாப்பு சபை மட்டும்தான் செய்யமுடியும். அதனால் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று அவர்கள் சொல்லமுடியாது. இதன்காரணமாகத்தான் அதன் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு முழுமைபெற்ற பொறிமுறைக்கூடாக இது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்பதை அவர்கள் நேரடியாகச் சொல்லவில்லை. நாங்கள் கேட்டுக்கொண்ட விடயம் அங்கு செய்யப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து அது வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. சாட்சியங்களைச் சேகரிப்பது, பேணுவது, பரிசீலனை செய்வது என்ற மூன்றையும் மேற்கொள்வதற்கான பொறிமுறை ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், இது தமிழ் மக்கள் சார்பிலே கேட்டுக்கொண்டதற்குக் கிடைத்த வெற்றியாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக எப்போதையும்போல பலர் இதனை ஒரு தோல்வியாகச் சித்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அரசாங்கத்துடன் இணைந்து இந்தப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு என்று சிலர் செயற்பட்டனர்.

பிரேரணையில் எந்தப் பிரயோசனமும் இல்லை, இந்தத் தீர்மானம் தேவையற்றது என்றெல்லாம் சொல்லி அரசாங்கத்தின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், தற்போதும் அதில் எந்தப் பிரயோசனமும் இல்லையென்ற பிரசாரத்தினை தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றனர்.

எந்ததெந்தக் கருவியை எந்ததெந்த வகையிலே உபயோகிக்க முடியும்? உச்சளவுக்கு ஒரு கருவியை எந்தளவுக்கு உபயோகிக்க முடியும் என்று தெரிந்தவர்களுக்கு ஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்மானம் வலுவான தீர்மானம் என்று தெரியும்.

சாட்சியங்களைச் சேகரிக்கின்ற பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆகையினால், இந்தப் பிரேரணையைக் கொண்டுவந்த பிரித்தானியா உட்பட்ட நாடுகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம். 11 நாடுகள்தான் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தாலும் அதற்கு இரட்டிப்பான நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாகக் காட்டுகின்றது.

நடு நிலையாக இருந்த நாடுகளின் மனநிலையிலும் மாற்றமுள்ளது. இந்தியா நடுநிலை வகிப்பதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் தெட்டத்தெளிவாக இலங்கையின் ஆட்புல ஒற்றுமைக்குச் சமாந்தரமாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லியுள்ளார்கள்.

தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்கு அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம் என்று திட்டவட்டமாக அறிக்கையூடாகச் சொல்லப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, அரசியல் அதிகாரங்கள் பகிரப்படுவதும் 13ஆவது திருத்ததில் உள்ள விடயங்கள் அமுல்படுத்தப்படுவதும் எந்தத் தங்குதடையுமன்றி மாகாண சபைகள் இயங்குவதும் விரைவாக மாகாணசபை தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் தெளிவாக நடுநிலை வகித்த இந்தியா சொல்லியுள்ளது.

இது கால அவகாசம் வழங்கும் தீர்மானம் அல்ல. என்றைக்கும் எந்தத் தீர்மானங்களும் இலங்கைக்குக் கால அவகசாம் வழங்குவதில்லை. ஒருவருட வாய் மூலமாக அறிக்கை என்ற விடயம் இன்று ஆறு மாதங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இரண்டு வருட இறுதியில் எழுத்துமூலமான அறிக்கையென்று சொல்லப்பட்டுள்ளது. அது மனித உரிமை உயர்ஸ்தானிகருக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காலக்கெடு. அது நாட்டுக்குக் கொடுக்கின்ற காலக்கெடு அல்ல. இது தொடர்பாக சிலர் பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

உண்மையில் மிக முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய நீதி, பரிகாரம் காலம் கடந்தாலும் மெதுவாக நகர்ந்தாலும் இறுதியில் அதனை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கையினை வைத்திருக்க உதவியுள்ளது.

அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவுக்கு எண்கணிதம் தெரியும் என்று நம்பியிருந்தேன். இப்போது அது தொடர்பாக சந்தேகம் வந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் சாதாரண பிரேரணையை நிறைவேற்றுவதாக இருந்தால் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கைதான் கருத்தில்கொள்ளப்படும். வாக்களிக்காதவர்கள் தொடர்பாக கருத்தில்கொள்வதில்லை.

நாட்டின் நிலைமை தற்போது மோசமான நிலையினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஏதாவது, கட்டத்தைத் தாண்டி படுமோசமான நிலைக்கு நாடு சென்றால் ஐ.நா. பாதுகாப்புச் சபை மூலமாக சமாதானப் படையினை நிறுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும்” என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் நிறுத்திய இந்தியா !

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்திய தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

உள்ளூர் தேவை அதிகரித்ததன் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.

இந்நிலையில், இந்தியாவிடம் 1 மில்லியன் தடுப்பூசி​களை கொள்வனவு செய்வதற்கான முன்பதிவை இலங்கை செய்திருந்தது. திட்டமிட்டதன் பிரகாரம் அந்த தடுப்பூசி இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கிடைக்குமென நம்பிக்கைத் தெரிவித்த இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமான, ​இந்தியாவின் தற்காலிக இடைநிறுத்தம் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

இந்தியப்பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து பங்காளதேஷில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் !

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக இன்று பங்காளதேஷிற்கு சென்றுள்ளார். வங்காள தேசத்தின் 50வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது. இன்று காலை பிரதமர் மோடி  அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. பங்காளதேஷின்  50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து இன்று அவர் பங்காளதேஷிற்கு சென்றுள்ளார்.
இன்று காலை பங்காளதேஷ் தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார். இதனை தொடர்ந்து பங்காளதேஷின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.  காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.
போராட்டக்காரர்கள் டாக்கா வீதிகளில் பேரணி செல்ல முயன்ற போது தான் நிலமை கையை மீறி சென்றது என போலீசார் தெரிவித்துள்ளனர். இரு வேறு சங்கங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் தான் இந்த வன்முறைக்கு காரணம் என அரசை எதிர்த்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு ஆதரவான நிலை கொண்ட மாணவர்கள் தான் போராட்டத்தை வன்முறையாக  மாற்றி விட்டனர் எனவும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் இருவர் கைது !

புத்தளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்த குற்றச்சாட்டில் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு மதரசா பள்ளி ஆசிரியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அட்டனி ஜெனரலின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்னவின் வழிகாட்டுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது” – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

“இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது” உட்பட பல யோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான யோசனைகளில் உள்ளடக்கியுள்ளது.

இந்த யோசனைகளை அடங்கிய அறிக்கை இன்று சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகள் மட்டுமின்றி, அரச நிறுவனங்கள் மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் உறுப்பினர் உட்பட எவ்வித பதவிகளும் வழங்கப்படக் கூடாது என அந்த யோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைகள் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு குழுவிடம் சமர்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை குறித்து நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மை விருப்பத்திற்கு அமைய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றம் இரண்டு அவைகளை கொண்டிருக்க வேண்டும். தேர்தல் முறையை கலப்பு முறையாக மாற்ற வேண்டும். அதிகார பரவலாக்கலை உறுதிப்படுத்துதல் ஆகிய யோசனைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக் கட்சியின் குழுவினர் இந்த யோசனைகள் அடங்கிய அறிக்கை தயாரித்துள்ளனர்.

புத்தூர் பகுதியில் மீள ஆரம்பிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் – மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தம் !

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராட்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியதையடுத்து மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன்” – சஜித் பிரேமதாஸ

“வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நானே வெற்றி பெற்றேன்“ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி தீர்மானத்துக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகின்றார். நடுநிலை வகித்த நாடுகளின் வாக்குகளையும் இணைத்து கணக்குச் சூத்திரம் தயாரித்துள்ளார்.

அப்படியானால் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. எனக்கு 55 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. 27 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச் சூத்திரத்தின் பிரகாரம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கே வெற்றி என தெரிவித்துள்ளார்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும்.” – மாவை சேனாதிராஜா

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏமாற்றத்தை தந்தாலும் சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றிய நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும் இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தமது பங்களிப்பை வழங்குவார்கள் என்று நாம் நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டிருந்த இலங்கை அரசு தொடர்பான அறிக்கை மிகவும் காத்திரமானதாக இருந்தது. ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எமக்கு ஏமாற்றம் தந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புக்கள் பல ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி சர்வதேசத்தின் பார்வையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் எமக்குப் பயன்படக்கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமன்றி தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட நாடுகளும் நடுநிலைமை வகித்த நாடுகளும் குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கூடிய பங்களிப்பைச் செய்வார்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம்.

நவநீதம்பிள்ளை அம்மமையார் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவிருந்தபோது அன்று ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச அவரை நாட்டுக்குள் வரவிடமாட்டேன் என்று இறுமாப்புடன் கூறியிருந்தார். பின்னர் அவரை வர அனுமதித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதும் அம்மையாரை நாம் சந்தித்தோம்” என தெரிவித்துள்ளார்

“ஐ.நா. மனித உரிமைகள் சபை எந்தவித அடிப்படையும் இன்றி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை நிராகரிக்கின்றோம்” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

“ஐ.நா. மனித உரிமைகள் சபை எந்தவித அடிப்படையும் இன்றி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை நிராகரிக்கின்றோம்” என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசு பொறுப்புக்கூறல் விடயத்தை உள்ளூர் பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கும். தனி ஈழ நாட்டை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் தற்போது அதனை வேறு ஒரு விதத்தில் முயற்சிக்கின்றனர்.

முப்பது வருட கால போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாடு பிளவுபடுவதை இராணுவத்தினர் தடுத்து மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபை எந்தவித அடிப்படையும் இன்றி இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியை நிராகரிக்கின்றோம்.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்து மக்களின் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கு சமகால அரசு செயற்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாகப் பிரித்து பார்க்க முடியும். விடுதலைப்புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற மோதலில் அந்த அமைப்பு தோல்வியடைந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உயிரிழப்புக்கள் குறித்து விசாரணை செய்வதில் உள்ள முரண்பாடுகள் மற்றும் கடந்த அரசை தோல்வியடையச் செய்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தால் முடிந்துள்ளமை விசேட அம்சமாகும்.

நாடொன்றில் உலக விடயங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கருத்துத் தெரிவிக்க முடியாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சியினர் முன்வைத்த விடயங்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்குப் பின்புலமாக அமைந்தது. இவர்கள் ஒன்றிணைந்த வகையில் செயற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

நாட்டின் சுகாதார நிலைமையைப் பாதுகாப்பதற்காக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அறியாமல் அது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நாடுகள் மத்தியில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் அது தொடர்பாக அறியாமல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அரச காலத்தில் மாகாண சபை முறைமையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது திருத்தம் தொடர்பில் வாக்களிப்பை நடத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு இடையில் இருந்து வந்த கருத்து முரண்பாடுகள் காரணமாக நாடு மேலும் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றம் வரையில் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைச் சரி செய்வதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்குத் தெளிவான மக்கள் ஆணை கிடைத்தது என தெரிவித்துள்ளார்.