தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்சி மாற்றத்தினை தொடர்ந்து தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூகி உள்ளிட்ட பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தின் இந்நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், போராட்டத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில் மியான்மாரின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூகி, 6 இலட்சம் அமெரிக்க டொலர்கள் மற்றும் 11 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாகப் பெற்றதாக மியன்மார் இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
யங்கூனின் முன்னாள் முதல்வர் ப்யோ மெயின் தெய்ன் கூறியதாக மியான்மார் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சா மின் துன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும், இது குறித்து ஊழலுக்கு எதிரான ஆணையம் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது இராணுவத்தினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் மியன்மாரின் ஜனாதிபதி வின் மின்ட் மற்றும் பல்வேறு அமைச்சரவை அமைச்சர்கள் மீது, ஜெனரல் சா மின் துன் ஊழல் குற்றங்களை சுமத்தியுள்ளார். ஆனால், இதுவரை சூசி சட்ட விரோதமாக பணம் மற்றும் தங்கத்தைப் பெற்றதற்கு எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. அத்துடன், இந்தக் குற்றச்சாட்டை தேசிய ஜனநாயக லீக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆய் மா மா மயோ மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அப்பாவி இளைஞர்கள் பொதுவெளியில் கொல்லப்படும் போது, அரசியல்வாதிகள் மீது அவதூறு கூறுவது மற்றும் கட்சியை நசுக்கும் முயற்சிகளை மேற்கொள்வது சகஜமானது,’ என கூறினார்.