09

09

“பொதுபலசேனா அமைப்பை தடை செய்ய முடியாது” – அரசாங்கம்

பொதுபல சேனா அமைப்பை  தடை செய்வதற்கு ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு பரிந்துரைத்த போதிலும் அதனை நிராகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(08.03.2021) நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிட்டபோது,

“ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்துவது சிரமமாகும். விசேடமாக பொதுபல சேனா அமைப்பு குறித்த பரிந்துரையை அமுல்படுத்துவதானது கடினமாகும். அரசாங்கத்தின் விருப்பமும் அதுகுறித்து இல்லை.

அந்த அமைப்பை தடை செய்வதால் நன்மை ஏற்படும் என்றல்ல. ஆகவே அரசாங்கம் அவ்வமைப்பை தடை செய்யாது. ஆனால் கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும்.

இனவாத சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க வேண்டும். மத்ரஸா நிலையங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கல்வி அமைச்சு அனுமதிக்கின்றது“ என்றார்.

பத்தாவது நாளாகவும் தொடரும் பல்கலைகழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் !

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த. வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தென் பகுதியிலிருந்து வந்த அரசியல் கைதிகளுக்காக திரட்சியாக போராடும் கிறிஸ்தவ பாதிரியாரான சக்திவேல் பாதர் மற்றும் அவரோடு இணைந்து சிங்கள பாதிரிமார் மற்றும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் இணைந்து தமது பகிரங்க ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பாதிரியார் சக்திவேல்,

தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறையில் உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை போன்ற காரணத்தினால் சர்வதேச நீதி கோரி நிற்கின்றார்கள். இது நியாயமான கோரிக்கை. இதற்கு வலு சேர்க்க வேண்டியது தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கடமையும் பொறுப்பும் ஆகும்.

எனவே இந்த போராட்டத்தை பலமிக்க போராட்டமாக மாற்றி, சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த அழுத்தம் கொடுக்க தொடர்ச்சியாக போராட அனைவரும் முன்வர வேண்டும் என சக்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, இதில் பங்கேற்ற சிங்கள சிவில் சமூக பிரதிநிதிகளும் தமது கருத்துகளை பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஞ்சன்ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை! 

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

ரஞ்ஜன் ராமநாயக்க மீதான தண்டனையை குறையுங்கள் அல்லது பொதுமன்னிப்பை வழங்குங்கள் என கோரிக்கையை முன்வைத்து ஜனாதிபதியிடம் தாம் தனிப்பட்ட முறையில் இக்கோரிக்கையை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் சம்பளத்தை நிறுத்தும்படியான தீர்மானத்தை நேற்று நாடாளுமன்ற விவகார செயலகம் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கின்றது” – இராாணுவதளபதி 

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கின்றது” என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
படைவீரர் ஒருவரின் திருமணநிகழ்வில் கலந்துகொண்டவேளை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
எங்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் என்ற அடிப்படையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையால் சில விடயங்களை செய்ய முடியும் சில விடயங்களை செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா மனிதாபிமான நடவடிக்கைகளின் போது நாங்கள் எவ்வளவு செய்துள்ளோம் என்பது எங்களிற்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டிருந்தவேளை நாங்கள் நாங்கள் மிகவும் பொறுமையுடன் செயற்பட்டோம் அதன் காரணமாகவே எங்களால் உயிரிழப்புகளை தவிர்க்கமுடிந்தது என அவர் தெரிவித்துள்ளார்

16வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது! 

16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் பாடசாலை அதிபரை ஓபநாயக்க பொலிஸார் இன்று (09.03.2021) கைது செய்தனர்.

கடந்த 3 ஆம் திகதி பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலைக்குள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக மாணவியின் தந்தை நேற்று (ஓக. 08) காலை முறைப்பாடு அளித்ததாக ஓபநாயக்க பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர் மருத்துவ பரிசோதனைக்காக பாலங்கொட ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவி பல நாட்களாக அதிர்ச்சியால் அவதிப்படுவதைக் கவனித்த பெற்றோர் அவரைப் பற்றி விசாரித்தனர்.

அவர் தெரிவித்த தகவல்களின்படி, இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் பொலிஸ் மற்றும் வலய கல்வி அலுவலகத்தில்முறைப்பாடு அளித்துள்ளனர்.

சந்தேகநபரான அதிபர் இன்று பலாங்கொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியின் மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஓபநாயக்க பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

“இந்த நாட்டை வளர்த்தெடுக்க வேண்டுமானால், ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன்

“இந்த நாட்டை வளர்த்தெடுக்க வேண்டுமானால், ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(08.03.2021) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது இலங்கைக்கு மட்டுமே எதிரானது என்பதுபோலத்தான் இங்கே சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், மறுக்கப்படும் மனித உரிமைகளுக்காகவே அந்த அமைப்பு குரல் கொடுக்கிறது. மனித உரிமை என்பது தமிழர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து இன மக்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.

தற்போதைய பிரதமர் தான், முதன் முதலான ஜெனிவாவை இலங்கையர்களுக்கு அன்று அறிமுகப்படுத்தினார்.

2009 இல் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மட்டுமல்ல, வெலிக்கடை சிறைச்சாலைத் தாக்குதல், ரத்துபஸ்வௌ தாக்குதல், அண்மையில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல், ஜனாசாக்களை தகனம் செய்வது என அனைத்தும் மனித உரிமை மீறல்களாகவே கருதப்படுகிறது.

இலங்கையில் உள்ள இளைஞர்களிடம் கேட்டால், அவர்கள் கனடா, அவுஸ்ரேலியாவுக்கு செல்லத்தான் ஆசைப்படுவார்கள். அந்த நாடுகளில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதால் தான் அனைவரும் அந்நாடுகளை விரும்புகிறார்கள்.

மனித உரிமை மீறல்களை மேற்கொண்டு முழுமையான அபிவிருத்திப் பணிகளை செய்ய முடியாது. அபிவிருத்தியும் மனித உரிமையும் ஒன்றுக்கொன்று பிணைந்தது என்பதை முதலில் இவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

மனித உரிமைகளை இலங்கையை மதிக்காவிட்டால், எதிர்க்காலத்தில் ஜி.எஸ்.பி. பிளஸ் உள்ளிட்ட சலுகைகளும் இல்லாதுபோகும் அபாயம் உள்ளது.

மே மாதம் அளவில் டொலர் ஒன்றின் வேலை 200 ரூபாயாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

நாடும் நாளுக்கு நாள் கடன் சுமையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் 21 நாடுகள் குரல் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அதில் ஒன்றுகூட மேற்கத்தேய நாடுகள் இல்லை. மேற்கத்தேய நாடுகளின் ஒத்துழைப்பு இன்றி எம்மால் நிச்சயமாக பொருளாதார வளர்ச்சியைக் காண முடியாது.

இந்த நாட்டை வளர்த்தெடுக்க வேண்டுமானால், ஜனாதிபதி முதலில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இன்று நாட்டில் எல்லா இடங்களிலும், ஏதோ ஒரு விடயத்திற்காக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

மனித உரிமையை அரசியலாக மாற்றியமையின் விளைவுகளையே நாம் இன்று சந்தித்து வருகிறோம். இந்த நிலைமை இவ்வாறே தொடர்ந்தால் மியன்மாரில் நிலைமைக்குக் கூட நாடு தள்ளப்படலாம்.

இவ்வாறு நடைபெற்றுவிடக்கூடாது என்பதுதான் எமது விருப்பமாகும். இலங்கையானது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்ககூடிய நாடாக மாறவேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.