08

08

“அமெரிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள்  கிடைத்தும் கூட பென்டகன் தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது” – மைத்திரிபால சிறீசேன

“அமெரிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள்  கிடைத்தும் கூட பென்டகன் தாக்குதலை தடுக்க முடியாமல் போய்விட்டது” என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

முழு உலகமும் அடிப்படைவாதம் , தீவிரவாதம், இஸ்லாம் தீவிரவாதம் என்பவற்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

பாரிய வளமும் தொழில்நுட்பத்தில் பலம் பொருந்திய நாடுமான அமெரிக்காவிற்கு கூட செப்டெம்பர் 11 தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது என மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பென்டகனிலுள்ள பாதுகாப்பு தலைமையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த பின்லேடனின் தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பின்லேடனின் தாக்குதல்கள் தொடர்பாகவும் அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு இரு வாரங்களுக்கு முன்னரே தகவல்கள் கிடைத்திருந்த போதும் அமெரிக்காவினால் அதனை தவிர்க்க முடியவில்லை என மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றனர்.” – அமைச்சர் சமல் ராஜபக்ச

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றனர்.” என நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.”உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றனர்.” – அமைச்சர் சமல் ராஜபக்ச

இன்று ஊடகங்களிடம் பேட்டியளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது 10ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியால் இது தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் கோரப்பட்டுள்ளது. அரசு அதற்கு தயாராகவுள்ளது. எவ்வாறிருப்பினும் பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம் அறிந்தவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறியிருக்கலாம். அவ்வாறின்றி தேவையற்ற கருத்துக்களைக் கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எவ்வாறிருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையைத் தொடர்ந்து முறையாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

2015ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக காவல்துறையினரால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்றபோதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது” – என்றார்.

இளைஞர் மீது இராணுவவீரர் தாக்குதல் – யாழில் சம்பவம்! 

யாழில் இளைஞர் ஒருவர் மீது இராணுவச் சிப்பாய் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இளைஞர் மீது இராணுவவீரர் தாக்குதல் – யாழில் சம்பவம்!

நேற்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து, இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் வயது-22 என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

“ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்” – பிரதமர் மகிந்த ராஜபக்ச

“ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்” என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மகளிர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலகில் பெண்களின் உரிமைகளுக்காக ஒரு தினம் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு தருணமும் பெண்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

ஒரு பெண் என்பவள் மகளாக, தாரமாக மற்றும் உலகின் உன்னத பதவியான தாயாகவும் அனைத்து நிலையிலும் நிறைந்திருக்கிறாள். எனவே, பெண்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக பெண்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், அவர்களைத் தைரியமானவர்களாகப் பலப்படுத்துவது தொடர்பிலும் எப்போதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கமாக, பெண்களுக்கு எதிரான வன்முறையையும், பாகுபாட்டையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அவர்களது உயர்வின் மூலமான சமூக நலனுக்கான வாய்ப்புக்களை நாம் ஒரு நாடு என்ற ரீதியில் அனுபவித்து வருகின்றோம்.

வரலாற்றில் விகாரமஹா தேவி முதல் நவீனக் காலத்தில் உலகின் முதலாவது பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்க அவர்களின் மூலம் இலங்கை பெண்ணின் வீரமும் தலைமைத்துவமும் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த செல்வாக்கிற்கு ஏற்ப இந்நாட்டுப் பெண்கள் இன்று பல்வேறு துறைகளில் தாய்நாட்டில் பல பொறுப்புகளைக் கொண்டிருப்பது பெருமைக்குரிய விடயமாகும்.

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெண்கள் பங்களிப்பு செய்வதை நாம் பாராட்டுகின்றோம்.

பல்வேறு காரணங்களுக்காக இன்று வரை சமூகத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் பலவாகும். இந்த சவால் மிகுந்த உலகில் அனைத்து பெண்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும். உங்களுக்கு வெற்றி அல்லது தோல்வி கிட்டுவதும் நன்மை அல்லது தீமை கிடைப்பதும் உங்களது சொந்த எண்ணங்கள் மற்றும் செயற்பாட்டின் அடிப் படையிலாகும்.

எனவே சவாலைத் தெரிவு செய்யுமாறு அனைத்து பெண்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். உங்களது சமூகத்தின் பங்களிப்பின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் தாய் நாட்டின் எதிர்காலம் மற்றும் அபிவிருத்தியடைந்த உலகை நோக்கி அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நினைவுபடுத்துகின்றேன்.

“ஐ.நா வில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு பலமான நாடுகள் அச்சுறுத்தல்”- ஜயனாத் கொலம்பகே

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்க, பலமான நாடுகள் ஏனைய உறுப்பு நாடுகளை அச்சுறுத்துகின்றன.”என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“பலம் வாய்ந்த நாடுகள், உறுப்பு நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் கடன்களை வழங்குவதன் ஊடாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பதை அச்சுறுத்துகின்றன.

இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள 21 நாடுகளில் ஒரு மேற்கு நாடேனும் இல்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபை மேற்குலக நாடுகளுக்குச் சார்பான அமைப்பாகும்.

இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட பிரேரணை நகல் இணை அனுசரணை நாடுகளால் இன்று அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடலுக்காக முன்வைக்கப்படவுள்ளது.

குறித்த பிரேரணையை இணை அனுசரணை நாடுகள் இருபக்க ஒத்திசைவுடன் நிறைவேற்ற எதிர்பார்த்திருந்தாலும், இலங்கை வாக்கெடுப்புக்குச் செல்லத் தீர்மானித்துள்ளது.

கொரோனா மரணங்களை அடக்கம் செய்யும் விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எமக்கு இருந்த 10 வாக்குகளை 15 வரை அதிகரிக்கச் செய்யும்.

ஐ.நாவில் இலங்கை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 அல்லது 21ஆம் திகதிகளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதற்கு ஏற்ற விதத்தில் நாம் தயார்படுத்தல்களை மேற்கொள்கின்றோம்” – என்றார்.