“விசுவாசமாக செயற்பட்டதற்கு கட்சி தந்த பரிசினை நாம் சட்ட ரீதியாக அணுகுவோம்” என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் 10 உறுப்பினர்களை பதவி வறிதாக்கபட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வரதராஜன் பார்த்திபன் மேலும் கூறியுள்ளதாவது,
“யாழ்ப்பாணம் மாநகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றோம். அதில் இதுவரை 10 உறுப்பினர்களை தாங்கள் நீக்கிவிட்டாதாகவும் அதன் அடிப்படையில் அவர்களின் மாநகரசபை உறுப்பினர் பதவியை வறிதாக்கும்படி யாழ்.தேர்தல்கள் அலுவலக்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
முதற்கட்டமாக மாநகர முதல்வர் மணிவண்ணன் உட்பட 4 உறுப்பினர்களையும் இரண்டாம் கட்டமாக நான், தனுஜன் ஜெனன், பத்மமுரளி ஜெயசீலன், சுபாஜின் ஆகியோரை நீக்குவதாக தேர்தல்கள் திணைக்களத்திற்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பிரகாரம் தேர்தல்கள் திணைக்களம் நேற்று எமக்கு உங்கள் மாநகர சபை உறுப்பினர் பதவிகள் வறிதாக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றனர்
கடந்த பல வருடங்களாக கட்சிக்காக விசுவமாக நடந்தமைக்கு கட்சி எமக்கு தந்துள்ள இப்பரிசினை நாம் சட்ட ரீதியாக அணுகுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.
கட்சியின் செயலாளர் எமக்கு அனுப்பிய கடிதத்தில், எங்கள் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதன் அடிப்படையில் உங்களை எந்த ஒரு விசாரணையும் விளக்கமும் கோராமல் நீக்குவதாக அறிவித்திருந்தார்கள்.
எங்களை நீக்கியமைக்கு கூறிய பிரதான காரணம் கட்சிக்கு விசுவாசமின்னை, முன்னணியை அழிப்பதற்கு சதி செய்தமை, எமது அரசியல் இயக்கத்தின் கொள்கைகளை மீறியமை, எமது அரசியல் இயக்கத்திற்கு துரோகம் இழைத்தமை, குறித்த குற்றசாட்டுக்களின் அடிப்படையில் எம்மை கட்சியில் இருந்து நீக்குவது என்றால் முதலில் கட்சியில் இருந்து நீங்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களைத்தான்.
எமக்கு வழங்கிய குற்றச்சாட்டில் கட்சிக்கு விசுவாசமின்மை, கட்சிக்கு தூரோகம் இழைத்தமை, கட்சிக்குள் பிளவுகளை உருவாக்கியமை என்ற எம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வெறும் சொற்களாகவே இருக்கின்றன. அதற்கான ஆதாரங்களோ ஆவணங்களோ எதுவும் இல்லை.
ஆனால் இது தொடர்பில் நான் அனுப்பிவைத்த 47 பக்க கடித்தில், உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கட்சியினைப் பிளவுபடுத்துகின்ற கருத்துருவாக்கங்களை எப்படி விதைத்தீர்கள், அதனை எப்படி வளர்த்தீர்கள், எப்படி ஒருவரை பயன்படுத்தி விட்டு தூக்கி போட்டீர்கள், கட்சிக்குள் எவ்வாறு நயவஞ்சமாக செயற்பட்டு அழித்தீர்கள். எப்படி சிறு சிறு குழுக்களை உருவாக்கினீர்கள் என்பதனை நடந்த சம்பங்களைக் கொண்டும் அவர் நடந்து கொண்ட முறைகளையும் வைத்துக் கொண்டு ஆதாரபூர்வமாகவும் ஆவணரீதியாகவும் அதனை உறுதி செய்து கடிதம் எழுதியுள்ளேன் .
இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டு இன்று ஒரு கிழமை ஆன போதும் அதற்கான பதில் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கட்சியின் கொள்கைளினை நாம் இன்று நேசிக்கின்றோம். அதனை மக்களிடத்தில் கொண்டு செல்லுகின்றோம். ஆனால் ஒருவர் தேர்தல் அரசியலில் இருந்து விலத்தி நிற்கும் போது அவரை கெஞ்சி தேர்தல் அரசியலுக்கு கொண்டுவருவதும், அவரை கொண்டு பதவிகளை பிடித்த பின்னர் அவரை விலத்துவதும் அவருடன் கதைக்க வேண்டாம் அவருடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல. அத்துடன் அது அறமும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.