கொழும்பு – டாம் வீதி பொலிஸ் நிலைய அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து லாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
டாம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய, குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சுமார் 20 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட வயதை கொண்டிருக்கலாம் என அனுமானிக்கப்படும் குறித்த யுவதியின் ஆள் அடையாளங்கள் எவையும் உறுதி செய்யப்படாத நிலையில், சடலமானது கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவின் ஸ்தல மேற்பார்வையின் பின்னர் அவரது உத்தரவுக்கு அமைய சட்ட வைத்திய அதிகாரியூடாக பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.
ஐந்து லாம்பு சந்தியை ஒட்டியுள்ள ஒரு வழிப் பாதையான டாம் வீதியில், வர்த்தக நிலையம் ஒன்றினை அண்மித்ததாக, பெரிய பயணப் பை ஒன்று கைவிடப்பட்டிருந்தமையை அப்பகுதியில் உள்ளோர் அவதானித்துள்ளனர்.
புதிய பயணப் பை கைவிடப்பட்டிருந்த நிலையில் சுமார் 3 மணி நேரமாக அவ்விடத்தில் இருப்பதை அவதானித்துள்ள அப்பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவோர், குறித்த பை தொடர்பில் சந்தேகம் கொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
டாம் வீதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலில், ‘ கறுப்பு நிற பெரிய பயணப் பை ஒன்று சந்தேகத்துக்கு இடமான முறையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.’ என தெரிவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
இந் நிலையில் பொலிஸார் ஸ்தலத்துக்கு சென்று குறித்த பயணப் பொதியை சோதனை செய்த போது அதில் சடலம் ஒன்று உள்ளமை தெரியவந்திருந்தது. சடலமானது குறித்த பையில் மடிக்கப்பட்டு, போர்வை ஒன்றினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே விடயம் தொடர்பில் டாம் வீதி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதனையடுத்து ஸ்தலத்துக்கு சென்ற நீதிவான், சடலத்தை மேற்பார்வை செய்த நிலையில், சடலமாக இருந்த யுவதியின் ஆள் அடையாளத்தை உறுதிப் படுத்த விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்டார்.
அத்துடன் அவரது மரணத்துக்கான காரணம், குற்றம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அது தொடர்பிலான முழுமையான விடயங்களை வெளிப்படுத்த பிரேத பரிசோதனை மற்றும் குற்றவியல் விசாரணைக்கும் நீதிவான் உத்தரவிட்டார். இதனையடுத்தே சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.
குறித்த பயணப் பொதியை குறித்த இடத்துக்கு இழுத்து வந்து, அனைவரது கவனமும் வேறு திசைகளில் இருந்த வேளை அதனை கைவிட்டு செல்லும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.
இந் நிலையில், அந்த சி.சி.ரி.வி. காட்சிகளை மையப்படுத்தி, குறித்த பையை அங்கு கொண்டு வந்தவர் தொடர்பில் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக டாம் வீதி பொலிஸார் கூறினர்.
குறிப்பாக எங்கிருந்து குறித்த சடலம் எடுத்து வரப்பட்டது, குறித்த யுவதி கொலை செய்யப்பட்டாரா, அப்படியானால் எங்கு எப்படி அது நடந்தது, குறித்த பயணப் பையை இழுத்து வந்த நபர் யார், அவருக்கும் சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கும் இடையிலான உறவு என்ன உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடைகாண இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.
இந் நிலையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்புக்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் விஜயஸ்ரீ ஆகியோரின் மேற்பார்வையில், கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்ரசேகரவின் ஆலோசனைக்கு அமைய, டாம் வீதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழி நடத்தலில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அசேல உள்ளிட்ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சன நடமாட்டம் மிக்க டாம் வீதியில், இவ்வாறு பயணப் பையில் இருந்து சடலம் மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.