இலங்கை இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களுக்கு ஐக்கிய நாட்டு மனித உரிமை ஆணைக்குழு நம்பகத்தன்மை வாய்ந்த ஒரு தீர்வை முன்வைக்குமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இன்று (திங்கட்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை தீவினுள் தமிழ் பேசும் மக்கள் பரந்துபட்டளவில் வாழ்ந்தாலும் வடகிழக்கிலேயே பெரும்பான்மையாக தமிழர்கள் வரலாற்று அடிச்சுவடுகளுடனும், ஒரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்துடனும் வாழ்ந்து வருவது வரலாறாகும்.
மாறிமாறி ஆட்சி புரிகின்ற சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளுகின்ற விரோதமான செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை. கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விரோதமான செயற்பாடுகள் ஊடாக ஓரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்தை இல்லாமலாக்குகின்ற செயல் திட்டமே.
இனவாத அரசால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கும், அபிவிருத்தி தொடர்பான புறக்கணிப்புக்களுக்கும், மனித உரிமை மீறல்கள்,உயிருக்கு உத்தர வாதமில்லாத சம்பவங்கள் அனைத்திற்கும் இலங்கை அரசு எந்தத் பதில்களும் கூறாத நிலையில் தமிழர்களாகிய நாங்கள் கடந்த காலச் சம்பவங்களுக்கும், எதிர் காலத்தில் ஒரு சம்பவமும் நிகழாமல் இருப்பதற்கும்,
குறிப்பாக, அதிகாரப்பங்கீடு மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை, காணாமல் போனோர் விடயம், கைதிகளின்விடுதலை, பௌத்த மயமாக்கல், அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், காணி சுவீகரிப்பு போன்ற மனித சமூகம் ஏற்றுக் கொள்ளாத செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சமாதானமாக வாழ்வதற்கும்,
சர்வதேசத்தை நாட வைத்தது இலங்கை இனவாத அரசே. சர்வதேசம் தமிழ் மக்களுக்கான ஒரு நல்ல தீர்வை எட்டுவதற்கு ஜெனிவாவின் கூட்டத்தொடர் ஒரு நியாயமான முடிவுகளை எடுக்கும் என்னும் நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு செயற்படுவது மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும், அயல் நாடான இந்தியாவையும், இலங்கையிலுள்ள தமிழர்களையும் வெறுத்துக் கொண்டு எந்தளவிற்கு நியாயமான ஆட்சியைப் கொண்டு செல்ல முடியுமென உலகத்தில் வாழ்கின்ற ஓட்டுமொத்த தமிழர்களும் கேள்வி கேட்குமளவிற்கு அரசை சந்தேகிக்கின்றனர்.
அருகிலுள்ள இந்தியாவையும் வெறுத்து இராஜதந்திரமான செயற்பாடுகளையும் வெறுக்குமளளவிற்கு நடந்து கொள்கின்றன.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நியாயமின்றி வாழமுடியாது என்னும் முடிவிற்கே வந்துள்ளனர்.
சமூகம் விழிப்படைந்து உள்நாடுகளிலும், வெளி நாடுகளிலும் நடாத்தப்படுகின்ற வெகுஜன ரீதியான போராட்டங்களுக்கு ஒவ்வொரு தமிழனும் உடந்தையாகவே இருக்க வேண்டும், இருப்பார்கள்.
உயிரைக் கூட விடுதலைக்காக துச்சமாக மதித்த எமது சமூகம் ஒரு படி இறங்கி அகிம்சை ரீதியான ஒரு வெகுஜன போராட்டத்தை தமிழ் மக்களின் எழுச்சியுடன் அணி திரள்வது அனைவரினதும் ஆரோக்கியமானதே. இதில் நாங்கள் பார்வையாளர்களாக இருந்து விடாமல் பங்காளர்களாக மாற வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது