“அரசியல் அனுபவம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இராணுவ அதிகாரிகளை கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
அரச நிர்வாகம் தொடர்பில் அனுபவமற்றவர் அரச தலைவரானார் முறையற்ற அரச நிர்வாகமே செயற்படுத்தப்படும் என ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அரசியல் அனுபவம் கிடையாது. எனவே அவர் தற்போது இராணுவ அதிகாரிகளை கொண்டு சிவில் நிர்வாகத்தை முன்னெடுக்க முயற்சிக்கிறார். அவரது செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் நிறைவு பெற்றுள்ளன. இதுவரையிலான ஆட்சி நிர்வாகத்தை நாட்டு மக்கள் குறிப்பாக அவருக்கு ஆதரவு வழங்கிய 69 இலட்சம் மக்களே அவரை புறக்கணித்துள்ளனர்.
இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இயற்கைக்கு எதிரான செயற்பாடுகள் அரசாங்கத்திற்கு பாரிய விளைவை ஏற்படுத்தும்.
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் விவகாரத்தில் ராஜபக்ஷகளுக்கு மத்தியில் பாரிய போட்டித்தன்மை காணப்படுகிறது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார். பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிக்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் தகைமை பஷில் ராஜபக்ஷவிற்கு கிடையாது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. அரச அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதி வசம் காணப்படும் போதுசர்வாதிகார ஆட்சி முறைமை முன்னெடுக்கப்படும்.
இலங்கையில் தற்போது சர்வாதிகார ஆட்சிக்கான தன்மை காணப்படுகிறது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்கியுள்ளது. ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது.
மாகாண சபை முறைமையும் இலங்கைக்கு பொருத்தமற்றது. இந்தியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதால் எவ்வித பயனும் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் பெறாது என்றும் அவர் கூறினார்.