20

20

மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சியின் அடக்குமுறை – இராணுவத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி !

மியன்மாரில் அரசுக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த 1-ந் திகதி ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
இதில் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆங்சான் சூகி உள்ளிட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் மியான்மார் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் நேபிடா, யாங்கூன் மற்றும் மண்டலே நகரங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொது இடங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு இராணுவம் விதித்துள்ள தடையை மீறி இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.‌ போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் அடக்குமுறையை கையாண்டு வந்தாலும் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், மண்டலே நகரில் உள்ள கப்பல் தளத்தில் உள்ள ஏராளமான தொழிலாளர்கள் பணிகளை புறக்கணித்து இன்று ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பணிக்கு திரும்பும்படி அதிகாரிகள் கூறினர். ஆனால், தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடும் நடத்தினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

“இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவவாதிகளுக்கு உண்டு” – மறவன்புலவு சச்சிதானந்தம் உறுதி !

“இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்க முடியும். அதில் எந்தப் பிரச்சினையுமில்லை. இலங்கையின் மரபுரிமைகள், கலாசாரங்கள், விழுமியங்கள், தத்துவ விசாரங்களை பாதுகாக்க கூடிய அரசியல் முன்னெடுப்புக்கள் எதுவானாலும் அதற்கு எனது ஆதரவை வழங்குவேன்” என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,

தற்போதுள்ள தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பது போல, அந்த கட்சியை இலங்கையில் ஆரம்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் பௌத்த மதத்தை இலங்கைக்குள் அனுமதிக்க முடியுமாக இருந்தால் இதனையும் அனுமதிக்க முடியும் என்று கூற வேண்டும். ஏனெனில் பௌத்தமும் இந்தியாவில் இருந்து வந்ததே எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் கூறுகையில்,

இலங்கைப் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவ வாதிகளுக்கு உண்டு. நான் இதை உறுதி செய்கிறேன்.

இந்தியாவிலுள்ள கட்சிகளின் பெயரை இலங்கையில் பெயராக்கிக் கட்சி தொடங்குவது புதிய செய்தியல்ல. இந்தியாவின் விடுதலை இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸின் வெற்றிகரமான செயலைப் பார்த்துக் கொழும்பில் சிங்களவரும் தமிழரும் இணைந்து உருவாக்கியது இலங்கைத் தேசிய காங்கிரஸ்.

ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் மகாத்மா காந்தியடிகளை வரவேற்ற அமைப்பு யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ். பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை புறக்கணிக்குமாறு அரசியல் நடத்தியதும் அதே காங்கிரஸ். ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வந்து மலையகத் தமிழருக்காக அமைப்பு உருவாக்கியபோது அதே காங்கிரஸ் பெயரை வைத்தார். பெயர் இலங்கை இந்திய காங்கிரஸ் ஜி.ஜி பொன்னம்பலம் அதே காங்கிரஸ் பெயரை வைத்து தமிழர்களுக்காகக் கட்சி தொடங்கினார். பெயர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்.

ம.பொ.சிவஞானம் தமிழகத்தில் அமைத்த தமிழரசுக் கழகத்தின் பெயரிலேயே தமிழரசுக் கட்சியை உருவாக்கியதாக அக்காலத்திலேயே எஸ்.ஜே.வி செல்வநாயகம் மீது குற்றம் சாட்டினர். திராவிட முன்னேற்றக் கழகத்தை இலங்கையில் அமைத்தவர் கொழும்பில் வாழ்ந்த மணவைத்தம்பி. எம். ஜி. ராமச்சந்திரன் தமிழகத்தில் அண்ணா தி.மு.க அமைப்பைத் தொடங்கிய உடனேயே யாழ்ப்பாணத்தில் இலங்கை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்தவர் கொட்டடியில் வணிகரான நண்பர். மதிமுகராசா.

இலங்கையில் உள்ள புத்த மரபுகள், சங்கங்கள் யாவும் இந்தியாவை அடியொற்றி அமைந்தன. முதலில் புத்தர் வந்தார். பின்னர் அசோகன் வந்தார். இலங்கை வரலாறு ஒருவகையில் இந்தியப் பண்பாட்டு ஊடுருவலின் வரலாறே.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் என்னை கைவிட்டு விட்டு செல்லுமோ தெரியாது” – அமைச்சர் விமல் வீரவன்ச

“அரசாங்கத்தை விட்டு விட்டு நான் ஒரு போதும் செல்ல மாட்டேன். எனினும் அரசாங்கம் என்னை கைவிட்டு விட்டு செல்லுமோ தெரியாது” என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தில் உங்களுக்கு தொடர்ந்து இருக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினர்.அதற்கு பதிலளித்த போதே அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவரும் குழப்பத்திற்குள்ளாகி அவசரமான ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. தற்போதைய அரசாங்கம் ஆரோக்கியமாக முன்னோக்கி பயணிக்கும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

நீங்கள் தொடர்ந்தும் பொறுமை காப்பீர்களா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஏன் நான் பொறுமை காக்கக் கூடாதா? என்ற பதிலையே அமைச்சர் வழங்கினார்.

பின்வரிசை எம்.பி க்கள் உங்களை தாக்குகிறார்கள்?

நான் அவர்களை ஏச மாட்டேன், ஏனென்றால் அவர்களை யாரோ செயற்படுத்துகிறார்கள். அவ்வாறு செயற்படுபவரே அந்த எம்.பிக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றார்கள்.

தேசிய வளங்களை விற்பதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலா அவ்வாறு நடந்து கொள்கின்றனர்?

பெரும்பாலும் அதுதான். நான் அரசியலில் காலடி எடுத்து வைத்த தினத்திலிருந்தே அதை செய்கின்றேன் என்று அமைச்சர் பதிலளித்தார்.

ஆசிரியர் தண்டித்ததால் நஞ்சு விதையுண்ட மாணவிகள் – ஒருவர் மரணம் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் அவர்கள் கல்வி கற்று வரும் பாடசாலை ஆசிரியர் ஒருவர் தண்டித்ததால் இரு மாணவிகள் நஞ்சு விதையினை உண்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒரு மாணவி உயிரிழந்த சம்பவம் நேற்று  இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தரம்-10 இல் சங்கங்கேணி தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்று வந்த சசிக்குமார் திப்திகா(15) டஸ்கரன்-திலோதிகா(15) மற்றும் ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களாக பாடசாலைக்கு செல்லாதமையினால் அவர்களின் இருவரின் வீட்டுக்கு சென்ற ஆசிரியர் அவர்களை பாடசாலைக்கு வரவில்லை என திட்டியதனால் அவர்கள் இருவரும் அவர்களின் வீட்டிலிருந்து அயலில் உள்ள ஆற்றுப்பக்கம் உள்ள நஞ்சு மரத்தில் உள்ள நஞ்சுக்காய்களை உண்டு விட்டு வீட்டுக்கு சென்று; வாந்தி எடுத்ததனைக் கண்ட வீட்டார் பின்னர் வாழைச்சேனை வாத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சசிக்குமார் திப்திகா(15 என்பவர் மரணமடைந்துள்ளதான விசாரணைகள் மூலம் அறிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் அவர்கள் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளளார்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

“தமிழர்களுடைய தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்” – பிள்ளையான் குற்றச்சாட்டு !

“இலங்கைக்குள் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஸ்டப்படுவார்கள்.” என மட்டக்களப்பு கள்ளியங்காட்டில் அமைந்துள்ள உணவு களஞ்சியசாலை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தவினால் இன்று (20.02.2021) திறந்து வைக்கப்பட்டபோது அங்கு உரையாற்றிய மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பயன்படுத்தமுடியாமல் சேதமடைந்திருந்த கள்ளியங்காடு உணவு களஞ்சியசாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைய சுமார் 70 மில்லியன் ரூபா செலவில் புணருத்தாபனம் செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வரத்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இக்களஞ்சியசாலையை வைபவரீதியகத் திறந்து வைத்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எமது மக்களுடைய எதிர்பார்ப்பை தேவைகளை அறியாத மாற்று அரசியல் செய்கின்ற சக்திகள் மீண்டும் இந்த மாவட்டத்திலும் இந்த நாட்டிலும் குழப்பங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள், உங்களுக்குத் தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் என்ன நடந்தது அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுக்கு முன்னரிருந்த அமைச்சர் இந்த நாட்டிலே என்ன செய்தார். சதோச எங்கெல்லாம் திறக்கப்பட்டது, எங்கே மூடப்பட்டது, சதோச களஞ்சியங்களுக்குள் கூட போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன இப்படிப்பட்ட சம்பவங்களையெல்லாம் நாங்கள் பார்த்தோம், இவையெல்லாம் வரலாற்றில் மிக மோசமான சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இப்படியான சூழலிலே அந்த அரசாங்கத்தை பாதுகாத்தவர்கள் இப்பொழுது ஜெனிவாவைப்பற்றி போசுகின்றனர். ஜெனிவாவிலே போய் என்ன நடக்கப்போகின்றது என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் இலங்கைக்குள்ளே அரசாங்கமும் நாங்களும் மக்களும் பேசி தீர்மானிக்கவேண்டிய விடயங்களை இன்னமும் பிரச்சாரத்திற்காக அல்லது வெள்ளைக்காரர்கள் வந்து தீர்த்துவைப்பார்கள் என நாங்கள் சொல்லுவோமாக இருந்தால் மீண்டும் இந்த மக்கள் கஸ்டப்படுவார்கள்.

துன்பத்தோடும் வலியோடும் தங்களுடைய வாழ்விடங்களில் வாழ்ந்து தற்போது நிம்மதியாக வாழவேண்டுமென்று என்னுகின்ற மக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்குத்தான் அரசியலே தவிர, அந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் உசுப்பேற்றிவிட்டு வாக்குகளை எடுத்துவிட்டு பாராளுமன்றம் செல்வது எங்களுடைய நோக்கம் அல்ல, எமது மக்களுடைய வலிகளையும் வேதனையையும் சுமந்த ஒரு அரசியல் பிரமுகராக பிரதிநிதியாக எமது மண்ணை கட்டியெழுப்புவதற்கான நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்.

அந்த முயற்சியையும் அரசாங்கத்தின் கொள்கையையும் இந்த மண்ணிலே கொண்டு வந்து சேர்த்து நம்பிக்கையூட்டி மக்களையும் மண்னையும் வாழ வைப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், உணவு ஆணையாளர் திணைக்கள பிரதம கணக்காளர் கலாநிதி. ஈ.எம்.என்.ஆர். பண்டார, மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பலரும் பிரசன்னமாயிருந்நதனர்.

“ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள குழுவை ஏற்க முடியாது” – பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு !

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு குறித்த துறைசார் கண்காணிப்பு குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவை தம்மால் ஏற்க முடியாது என  பேராயர் கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவாட்டிய தேவாலயத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே பேராயர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சமல் ராஜபக்ஸ தலைமையிலான குறித்த குழுவை ஜனாதிபதி நேற்றைய தினம் நியமித்திருந்தார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித்த அபேகுணவர்தன ஆகியோர் அந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு அறிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அந்த குழுவிற்கு பணிப்புரையும் விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அந்த அறிக்கையின் பிரதிகளை தமக்கு வழங்குமாறு பேராயரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த புதிய குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே கட்டுவாட்டிய பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு –  கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் !

வடக்கு –  கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் தீச்சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தினை அவர்கள் ஊடகங்களிற்கு வழங்கியிருந்தனர். மேலும் போராட்டம் தொடர்பான அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களாகிய நாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டுப் போராடத் தொடங்கிய போராட்டம் இன்று ஐந்தாவது வருடத்தை எட்டுகின்றது. 1462 நாட்காளாக தொடர்ந்து போராடும் நாங்கள் எங்களுடன் சேர்ந்து போராடத் தொடங்கிய 83 தாய் தந்தையினரின் இறப்பையும் தாங்கிய வண்ணம் தொடர்கின்றது.

இப்போராட்டமானது எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அல்லது எமது இறப்பு வரை தொடரும். ஸ்ரீலங்கா அரசின் கபடத்தனத்தைப் புரிந்துகொள்ளாத சர்வதேசம் எமது எதிர்ப்பையும் மீறி பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசங்களை நீடித்து சிறிலங்கா அரசிற்குத் துணைபோனது.

ஸ்ரீலங்காவானது பொறுப்புக்கூறலுக்கான இணை அனுசரணையிலிருந்து தன்னிச்சையாக விலகியதுடன் “நாம் உள்ளகப் பொறிமுறையை மேற்கொள்வோம் உள்நாட்டுப் பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்வோம்” என்று அறிவித்தவுடன் தான், சர்வதேசம் இலங்கையின் கபடத்தனத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றது.

எமதருமை உறவுகளான இளம்பிஞ்சுப் பாலகர்களும் மகன்களும், மகள்களும் கணவன்மார்களும், மதகுருக்களும், இளைஞர் யுவதிகளும் இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் அரசபடைகளினாலும் வெள்ளை வான்களினாலும் பாதுகாப்பு அரண் பகுதிகளிலும், கடலிலும், வீடுகளிற்கு நேரடியாக வந்தும் கைதுசெய்து கொண்டுபோனது மட்டுமல்லாது யுத்த இறுதி நாட்களில் விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களையும், சரணடைந்தவர்களையும் இது நாள் வரை காணவில்லை.

அவர்கள் நிலைகளை அறியாது வீதிகளில் அலைத்தழிக்கப்பட்டோம். 29 இற்கு மேற்பட்ட, பெற்றோருடன் சரணடைந்த, கைக்குழந்தைகள் மற்றும் சிறார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களையும், இவர்களின் பெற்றோரையும் மற்றும் உறவுகளையும் தேடிப் போராடிவரும் நாங்கள், நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறோம்.

இந்தச் சிறுவர்கள் செய்த குற்றம் தான் என்ன? தமிழனாகப் பிறந்ததா? இந்தப் பிள்ளைகளில் அக்கறை காட்ட எவரும் இல்லையா? சிறுவர்களின் நலனைப் பாதுகாக்கவென உருவாக்கப்பட்ட Save the children, Children fund, UNICEF என்பவற்றிற்கும் இவை தெரியாதா? இதுவரை இந்தச் சிறுவர்கள் பற்றி எவராவது அக்கறை கொண்டார்களா?

உலகிலே மனிதம் மரணித்து விட்டதா? யுத்தம் முடிவடைந்த பின் கையிலே ஒப்படைக்கப்பட்டவர்கள் போரிலே கொல்லப்பட்டு விட்டார்கள் என்று நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை அனைவரும் போரில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

யுத்தம் முடிவடைந்த பிற்பாடு கையளிக்கப்பட்டவர்களும் சரணடைந்தவர்களும் எப்படி யுத்தத்தில் கொல்லப்படுவார்கள்? உயிர் வாழும் சாட்சியங்களாக நாம் இருக்கும் போது, சிறிலங்கா அரசானது தொடர்ச்சியாக பொய் உரைப்பதின் காரணம் என்ன? தொடர்ச்சியாக எமது உறவுகளை எம்மிடமிருந்து பிரித்து வைப்பதற்காகவா? ஐ.நாமனித உரிமை ஆணையாளரால் பாராட்டப்பட்ட OMP சாதித்தது என்ன? கலந்தாலோசனைச் செயலணியின் பரிந்துரைகள் எவற்றையுமே உள்வாங்காமல் தன்னிச்சையாக ஸ்தாபிக்கப்பட்ட OMP யிற்கு செயல்திறன் அறவே இல்லை.

எமது எட்டு மாவட்டத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழு 17.10.2019 அன்று OMP ஆணையாளரிடம் வலுவான சாட்சிகள், ஆதாரங்கள் உள்ள ஐந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைக் கையளித்திருந்தது. அதில் ஒன்றுக்காவது மூன்று மாதத்திற்குள் தீர்வைக் கண்டு தந்தால் நாம் OMP ஐ ஏற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தோம்.

21 மாதங்கள் கடந்தும் கூட அவர்களால் ஒப்புக்கொண்டபடி நிரூபிக்க முடியவில்லை என்றால் OMP ஐ செயல்திறன் அற்றது என நிராகரிப்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? OMP சிங்கள அரசின் ஒரு கண்துடைப்பு ஆணைக்குழுவாகவே இயங்குகின்றது. ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட பெரும்பான்மையாக சிங்கள ஆணையாளர்களை கொண்ட OMP ஒருபோதும் எமது பிரச்சனைக்கு தீர்வாக அமையாது என்பதை நிரூபித்துள்ளது.

அத்துடன் எமது பிரச்சனைக்கான தீர்வு உள்ளூர் பொறிமுறைகளில் இல்லை என்பதையும் தொடர்ச்சியாக நிறுவி வருகின்றது. ஐ.நா ஆணையாளர் தனது அறிக்கையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) பாரப்படுத்துவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நாம் வரவேற்பதுடன், இணைத்தலைமை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, மொண்டினிகிக்றோ, வட மாசடோனிய ஆகிய நாடுகளிடம், நீங்கள் சமர்ப்பிக்கும் வரைவில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றதிற்கான (ICC) பரிந்துரையை உட்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பாக வேண்டி நிற்கின்றோம்.

கடந்த பெப்ரவரி 3ம் திகதி தொடங்கி 7ம் திகதி முடிவுற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டம் ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்துவதை வலியுறுத்தியவர்களே.

எனவே இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எமக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசமும் ஐ.நாவும் விரைந்து செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். எமது உறவுகளைத் தேடும் போராட்டம் கூட அடக்கு முறைக்குள் உள்ளாக்கப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கின்றோம். கொவிட்-19 காரணம் காட்டி எம்மை ஒன்றுகூட விடாது தடுக்கின்றனர்.

மீறினால் தனிமைப்படுத்தல் என்று அச்சுறுத்துகின்றனர். நினைவுகூரல், தன்னெழுச்சிப் போராட்டங்களுக்குக் கலந்துகொள்ள தடைவிதித்து நீதிமன்ற உத்தரவைப் பெற்று வழங்குகின்றனர். அதற்கு மேலாக காரணம் எதுவுமின்றி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு பணிக்கின்றர்கள்.

இதனாலே எமக்கு மன உளைச்சல் அதிகரிக்கின்றது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்தப் போராட்டத்தைப் பயங்காட்டி நிறுத்த வேண்டும் என்ற நோக்கமே. தொடர்ச்சியாக இராணுவமயப்படும் தற்போதைய ஸ்ரீலங்கா ஆட்சி அதிகாரம், சிவில் நிர்வாகங்களை இனவழிப்பிலும், போர்குற்றங்களிலும் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கொண்டு நிரப்பி வருகின்றது.

இதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியலுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுப்பத்துடன் ஜனநாயக வெளிகளை ஒடுக்கி வருகின்றது. உதாரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் கடற்படை அட்மிரல் பொது ஊடகங்களில் தமிழர் விரோத இனவாதத்தை கக்குவதுடன், ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடும் தமிழர்களை மட்டும் நோக்கி நேரடியாகவே அச்சுறுத்தல் விடுகின்றார்.

ஆகவே இவரால் வழிநடத்தப்படும் ஸ்ரீலங்கா பொலிசாரும், மற்றய அரச படைகளும் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாக கரிசனை செலுத்த வேண்டும். எனவே நாம் சர்வதேச சமூகத்திடமும் ஐ.நாவிடமும் கோருவதாவது, எமது உறவுகளுக்கான நீதி விரைவாகக் கிடைக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும். உறவுகளைத் தேடும் எமக்கு அரச புலனாய்வினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட்டு எமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு !

பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு (வயது 44) மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து முறையீட்டு நீதிமன்றத்தில் நவால்னி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நவால்னியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.