19

19

மெக்ஸிகோவில் போலி கொரோனா தடுப்பூசி தயாரித்த 06 பேர் கைது !

கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இந்த நாட்டில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் பெருந்தொற்று தாக்கி இருக்கிறது. 1 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.

அந்த நாட்டில், நியூவோ லியோன் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக போலி தடுப்பூசி தயாரிப்பதாக தெரிய வந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததின்பேரில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. போலி தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து அந்த அமைச்சகம் கூறுகையில், “நியூவோ லியோன் மாகாணத்தில் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளிலும், மையங்களிலும் மட்டும்தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என தெரிவித்தது.

“பிரதமர் மகிந்த ராஜபக்சவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிக்கவில்லை” – ரவூப் ஹக்கீம்

பிரதமர் மகிந்த ராஜபக்சவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிக்கவில்லை எனவும்  கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த பிரதமரின் சமீபத்தைய அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் அவரை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது எனவும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஜனசாக்கள் எரிப்பு தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,

அரசாங்கத்திற்குள் காணப்படும் சிறிய குழுவினர் பிரதமரை அவமதிப்பது அவரது அறிக்கைகளை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தங்களின் நடவடிக்கைள் மூலம் பிரதமரை அவமரியாதை செய்கின்றனர் இந்த மோதல் அரசாங்கம் உரிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்பதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பாரதிய ஜனதா கட்சியின் இலங்கைப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம்” – அமைச்சர் சரத் வீரசேகர

“பாரதிய ஜனதா கட்சியின் இலங்கைப் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உருவாகலாம்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ,

இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் ஷா கூறினார் என வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் என எதுவும் இல்லை.

நிகழ்வொன்றில் அவர் உணவு உட்கொண்டவேளையில் அருகில் இருந்தவர் களுக்குக் கூறினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் எனது தனிப்பட்ட நிலைப்பாட்டை என்னால் கூற முடியும்.

பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. அதற்கான அரசியல் அமைப்பு ரீதியிலான அனுமதியும் இல்லை. தேர்தல்கள் திணைக்களமும் அதற்கு அனுமதிக்க வாய்ப்புகள் இல்லை. எனவே, இது ஒரு கதையாக வேண்டுமானால் கூறலாம்.

ஆனால் அவர்களால் மறைமுக அரசியலில் ஈடுபட முடியும். அதற்கு அனுமதி இலங்கையில் உள்ளது. எவ்வாறெனின், இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியினூடாக இலங்கையில் அவர்களின் கொள்கையைப் பரப்பி
அவர்களின் இலங்கைப் பிரதிநிதிகளாக இங்கு ஒரு கட்சி இயங்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்றொரு கட்சியை அவர்களின் பிரதிநிதிகளாக வைத்துக்கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை அவர்கள் இன்று வரை இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளாக இலங்கையில் செயற்பட்டு வருகின்றனர்.அவர்களுக்காக முழு நிதியும் மேற்கு நாடுகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் மூலமாகவும்,புலிகளை ஆதரிக்கும் அமைப்புகள் மூலமாகவும் கிடைத்து வருகின்றன.

தேசியக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கட்சியை உருவாக்கினாலும் வாக்களிக்க வேண்டிய கடமை மக்களிடம் உள்ளது. மக்கள் ஆதரிக்க வேண்டுமே ”என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட இருவருக்கு மீண்டும் கொரோனாத்தொற்று !

இலங்கையில் தடுப்பூசி பெற்ற இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் மீண்டும் தொற்றுக்கு இலக்காகிய இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை  தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.

குறித்த இருவரும் கேகாலை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசியை பெற்றகையுடன் தொற்று ஏற்படாது என்று உறுதியேற்கக்கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், தொடர்ந்தும் சுகாதார பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

“பளைப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளைச் சீன நிறுவனத்துக்கு வழங்கவே காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் யாழிலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு !

பளைப் பகுதியில் நூற்றுக் கணக்கான ஏக்கர் காணிகளைச் சீன நிறுவனம் ஒன்றுக்கும், சிங்கள வர்த்தகர்களுக்கும் வழங்கும் நடவடிக்கையை கோத்தபாய அரசு மேற்கொள்கிறது. இதற்காகவே, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-
பளைப் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமாக 3,000 ஏக்கர் காணியுள்ளது. அந்தப் பகுதியில் சீன நிறுவனத்துக்கும், சிங்கள முதலாளிகளுக்கும் அரசு காணி வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த செய்தி எமக்கு கிடைத்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகளைப் பறிமுதல் செய்து சீனக்காரருக்கு கொடுக்க, சிங்களவர்களுக்கு கொடுக்க முன்னாயத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது.
பளையில், புதுக்காட்டுச் சந்திக்கு அண்மையில் தேசிய காணி அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான 287 ஏக்கர் தென்னந்தோட்டங்கள் உள்ளன.

அதை சிங்கள முதலாளிகளுக்குக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளது. அந்தக் காணிகளை யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர்கள் கேட்டும், அவர்களுக்கு வழங்காமல் சிங்கள முதலாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

அரசியல் பிரச்சினையில்லை, அபிவிருத்தி நடந்தால் போதும் என அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. அபிவிருத்தியென்ற பெயரில் தமிழர்களின் காணிகளைப் பிடுங்கி சிங்களவர்களுக்கு கொடுக்கும் நடவடிக்கையைத்தான் இந்த அரசாங்கம்
மேற்கொள்கின்றது.

அரசாங்கம், இராணுவம் அனைவரும் கூட்டாக இதனைச்செய்கிறார்கள்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கண்டுகொள்ளாமலிருப்பது வருத்தமானது.

காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரத்துக்கு மாற்ற முயல்வதும் இதற்குத்தான்.

இந்த மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். வடக்குக்கான பிராந்திய அலுவலகம் வடமத்திய மாகாணத்துக்கு மாற்றுவதை ஏற்க முடியாது.

பளையில் சீனா அல்லது வேறு நிறுவனங்களுக்கு காணி கொடுப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் காணி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு காணி வழங்காமல் சீனா,சிங்களவர்களுக்கு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இனிவரும் நாட்களில் பெரும் போராட்டங்களுக்கு தமிழ் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டிய சூழலுக்கு அரசு தள்ளுகிறது என்றார்.

“நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்” – ரவூப் ஹக்கீம்

“நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(18.02.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“அரசியல் பழிவாங்கலுக்காக முன்னணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் மிக மோசமான நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தப்படுத்தியே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படும் என நம்புகின்றோம்.

அத்துடன், நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்

“மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டனர்” – சுவிஸ்தூதுவரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது என இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் பேர்கலரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளை இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் பேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள சுவிசர்லாந்து தூதுவர் வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்(18) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் கடற்றொழில் அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளரும் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாள 27 வருடங்களுக்கு பின்னரே வடக்கு கிழக்கிற்கான மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. இந்த இடைவெளியால் மாகாணசபைக்கான அதிகார ஏற்பாடுகள் சில மத்தியப்படுத்தப்பட நேரிட்டுள்ளது.

ஆனாலும் இதை மாற்றியமைக்க தமிழ் மக்களுக்கு சிறந்த சந்ரப்பம் 2013 ஆம் ஆண்டு நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் கிடைத்தது. மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து மாகாணசபையை கைப்பற்றியிருந்தனர். ஆனால் எதையும் செய்யாது காலத்தை வீணடித்து விட்டு இன்று கதையளந்து வருகின்றனர்.

குறிப்பாக அன்று சுவிஸ் அரசு கூட மாகாணசபை நியதிச் சட்டங்களை ஆகச் சொல்லி நிதியுதவியும் வழங்கியிருந்தது. நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்தபோதிலும் அதை முன்னெடுக்க சொல்லி பல தடவகைள் வலியுறுத்தியிருந்தேன். ஆனாலும் நீதியரசர் விக்கினேஸ்வரன் அதில் எந்தவித அக்கறை எடுக்கவில்லை. 13 இல் இருக்கும் இவ்வாறான பலவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் இன்று நாம் நீதியரசர் விட்ட அந்த குறைகளையும் சேர்த்தே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எது எவ்வாறானாலும் இலங்கை நாட்டில் அனைவரும் பேதங்களற்றவகையில் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழவேண்டும் என்பதையே நாம் அக்கறை கொள்ளவேண்டும். நட்டில் மக்கள் அனைவரும் சமாதானமாக ஐக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இறுதியாக கிடைத்த பொன்னான வாய்ப்பை வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களை நீதியரசர் விக்னேஸ்வரன் இழக்கச் செய்துவிட்டார்.

ஆனால் 13 ஆவது திருத்த சட்டமே சிறந்து என்றும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

அன்று தும்புத்தடியால் கூட தொடமாட்டோம் என்றவர்கள் இன்று அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறத்தொடங்கியுள்ளதுடன் அதை காப்பாற்றுமாறு எங்களிடமே கூறுகின்றனர்.

அந்தவகையில் ஒரு சில தினங்களில் இது தொடர்பான அரசியலமைப்பு குழுவை எமது கட்சி சந்திக்கவுள்ளது. அதில் இது தொடர்பில் நாம் வலியுறுத்தவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுச்சிப்பேரணியில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்ட இளைஞர் விடுதலை !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார்.

இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே நேற்று நண்பகல் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இளைஞனின் உறவினர்கள் பருத்தித்துறை காவல் நிலையம் முன்பாகக் காத்திருக்கின்றனர். இளைஞனின் தாயார், மகனின் விடுதலையைக் கோரி காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கதறி அழுதார்.

பருத்தித்துறையில் பேரணி இடம்பெற்ற வேளை இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது.

“சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கைத்தமிழர்களை திருப்பி அனுப்பும் எண்ணம் நமக்கில்லை” – தமிழ்தேசிய கூட்டமைப்பினரிடம் சுவீஸ் தூதுவர் !

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாண தனியார் விடுதியில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலின்போது,

ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தமிழர்களுக்கு எதிரா மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பிலே உலக நாடுகளின் நிலைப்பாடுகள் முக்கியமாக 47 நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பிலே மிகமுக்கியமாக கலந்துரையாடப்பட்டது.

இவற்றைவிட தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நிலப்பரிப்புக்கள் வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள் மற்றும் அரசாங்கத்தினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டும் அல்லாது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பாகவும் இதுவரை தமது சொந்த இடங்களுக்கு செல்லாத மக்களது விடயங்கள் தொடர்பாகவும், அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் இருக்கின்ற நிலமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள எமது தமிழ் மக்களை உடனே திருப்பி அனுப்ப கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதத்தினை நாங்கள் சுவீஸ் தூதுவரிடம் கையளித்து இருந்தோம் அதனை அவர் ஏற்றுக்கொண்டதுன் எமது மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் கையாளவில்லை என்றும் தப்போதும் அவ்வாறான எண்ணம் நமக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.