தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து மூன்று முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்களை எடுத்துள்ளன. இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தச் சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை கவனத்திற்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி செயற்படுவதற்காக நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
இந்நிலையில், குறித்த பத்துக் கட்சிகள் சார்பாக நடவடிக்கைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு, தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்பாட்டு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது.
இந்தக் குழுவை இணைத்துச் செயற்படுத்துவதற்கான இணைப்பாளர்களாக சி.வி.கே.சிவஞானம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் செயற்படவுள்ளார்கள்.
அத்துடன், ஜெனீவா விடயம் தொடர்பாகவும் ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளோம். ஏற்கனவே, தமிழ் தேசியக் கட்சி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அறிக்கையொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும், இணை அனுசரணை நாடுகளான பிரித்தானியா, கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுடனும் ஏனைய உறுப்பு நாடுகளுடனும் கலந்துரையாடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு ஏழு பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளோம்.
சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ளோர், கூட்டாக பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடன் குறுகிய நாட்களுக்குள் உரையாடவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் வரக்கூடிய நெடுந்தீவு, அனலை தீவு, நயினாதீவு, போன்ற தீவுகளில் ஒரு மாற்று எரிசக்தியை உருவாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் சீனக் கம்பனியுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளதுடன் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவ்வாறான ஒரு விடயம் நடக்குமாக இருந்தால், வடக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வடக்குப் பகுதியில் சீனக் கம்பனியைக் கொண்டுவருவது பலத்த பாதிப்புக்களை உருவாக்கும்.
எனவே, அவ்வாறான சீனக் கம்பனிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு பத்து தமிழ் கட்சிகளும் இணைந்து வலியுறுத்துகின்றன” என தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.