13
13
மது மற்றும் புகையிலை பயன்படுத்துவோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவது பணத்தையும் வளங்களையும் வீணாக்குவதாகவே அமையும் என புகையிலை மற்றும் அல்கஹோல் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் மருத்துவர் சமதி ராஜபக்ஷ நேற்று(12.02.2021) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
புகை பிடிப்பவர்கள் மற்றும் மதுப் பாவனையாளர்கள் இரு வகையினரும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளனர். இவை அவர்களுக்கு வைரஸ் பாதிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றார்.
புகை பிடிப்போர் பலவீனமான சுவாச அமைப்பைக் கொண்டுள்ளனர். இந்தப் பகுதி வைரஸின் முதல் நிலையாக பாதிக்கப்படுகிறது.
எனவே அல்கஹோல் அல்லது புகையிலை பயன்படுத்தாதோருக்கு இந்தத் தடுப்பூசிகளை வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். ஏனெனில் ஊசி போட்டுக்கொண்ட பின் அவர்களை வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு குறைவாகும்.
இந்தத் தடுப்பூசியைப் பெற்ற பின் குறைந்தது 06 மாதங்களாவது மது மற்றும் புகையிலை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் புதிதாக கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கு யாழ். மாநகர முதல்வர் நிதி உதவி வழங்கியுள்ளார்.
யாழ். மாநகர முதல்வர் தனது சம்பளத்தை நேற்று முன்தினம் (11.02.2021) வழங்கியுள்ளார்.
அதன்படி, யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது சம்பளமான ரூ 35,462 ஐ யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சங்கத்திற்கு வழங்கியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் கட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அதன் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் தீவுகளை சீனாவுக்கு வழங்கினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சியை விட பெரும் மக்கள் எதிர்பலை உருவாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(13.01.2021) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே இதை கூறியிருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு போன்றவற்றை சீனா அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இந்த தீவுகள் இந்தியாவுக்கு அருகில் உள்ளன.
குறித்த தீவுகளில் ஏற்கனவே மின்சாரம் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு கையளிப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.
இதன் மூலம் சீன ஊடுறுவல் இருக்கும். இதனால் இந்தியாவுக்கு பகையை ஏற்படுத்துவதாக அமைவதுடன் வடமாகாண மக்களும் இதனை ஏற்க மாட்டார்கள்.
தமிழ் மக்களை பொறுத்தவரை இப்பொழுது தான் மீண்டு வந்துகொண்டிருக்கிறோம். அடிப்படை உரிமைகள் கூட மக்களுக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரிய நாடாளுமன்ற சபையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஜெர்மன் நாடாளுமன்றத்தில் நாசிசவாதம் தொடர்பிலோ அல்லது ஹிட்லர் தொடர்பிலோ பேச முடியாது. அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் என்பவர், இலட்சக்கணக்கான மக்களை கொலை செய்த ஒருவர். என்பதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பு.
இலங்கையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அவ்வாறு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்னவாகும். இதனால், நாடாளுமன்றத்திற்குள் விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ புகழ்ந்து பேசுவதற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
இவ்வாறு கொண்டு வரப்படும் சட்டமூலத்திற்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார்.
புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இலங்கையின் பெயர் சிறி லங்கா குடியரசு என்று மாற்றப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல்மாதம் 30ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நீதிக்கான பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கக் கோரி, கல்முனை காவல் நிலையத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
குறித்த பேரணியில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறிக் கலந்துகொண்டனர் என்ற குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத் தில் கல்முனைப்காவற்துறையினர் கடந்த
5ஆம் திகதி வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதிவான் ஐ. என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,கோவிந்தன் கருணாகரம், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர்செ.கணேசானந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத் தில் ஆஜராகுமாறு கல்முனை நீதிவான்
அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான யாழ்ப்பாணம் மாநகரில் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதியால் அதிசிறப்பு வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திர பெர்ணாந்து மற்றும் ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி ஆகிய மூவர் கொண்டமைந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த ஆணைக்குழுவில் இலங்கையின் பன்மைத்துவம் மற்றும் பாலின அடையாளத்தை பிரதிபலிக்கவேண்டியதன் கவனத்தில்கொண்டு திருமதி யோகேஸ்வரி பற்குணராசாவை நியமிப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப் போராட ராஜபக்சக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இலங்கை அரசின் தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்ச் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்பட்ட பேரணியின்போது தமிழ் மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறு கோரிக்கைகளை முன்வைப்பதற்கான நிலையை ஏற்படுத்தியமைக்கு ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ச, தமது கடந்த ஆட்சியில் ஐ.நாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் வழங்கியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால் தமிழர்கள் இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்க வேண்டிய நிலை வந்திருக்கமாட்டாது.
இந்த ஆட்சியிலும் அவரின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச, தனது ஜனாதிபதி பதவியைத் துஷ்பிரயோகப்படுத்தி வருகின்றார்.
சிவில் நிர்வாகச் செயற்பாடுகளின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை நியமித்துள்ளதுடன் மட்டுமன்றி வடக்கு, கிழக்கில் தமிழர்களைப் பழிவாங்கும் வகையிலும் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான மோசமான செயற்பாடுகளே தமிழர்களைத் கொதித்தெழ வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தேசிய மரபுரிமைகள், கலை கலாச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (12.02.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து அரசியல்வாதிகள் சிலர், இனவாதம் மற்றும் மதவாதம் ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.
அதில் எந்ததொரு உண்மையும் இல்லை. நாட்டின் தேசிய மரபுரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் தொல்பொருள் அகழ்வராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் அனைத்து இன மக்களின் மரபுரிமைகளும் அனைத்து பகுதிகளிலும் மறைந்துள்ளன. அவற்றை பாதுகாப்பதே தேசிய மரபுரிமைகள் அமைச்சின் நோக்கமாகும்.
நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு இனத்தின் மதம் மற்றும் கலை கலாச்சார மரபுரிமைகளை முடக்குவது தொல்பொருள் அகழ்வராய்ச்சியின் நோக்கமல்ல. குறுகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து தொல்பொருள் அகழ்வராய்ச்சி பணிகளை இடைநிறுத்த போவதில்லை.
வடக்கில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வராய்ச்சி பணிக்கு எதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்கள். அனைத்து சவால்களையும் சட்டத்தின் ஊடாகவும் எம்மால் வெற்றிக் கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.