நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயன்படுத்திய ‘இனப்படுகொலை’ என்ற சொல்லுக்கு ஆளும், எதிர்க்கட்சிகள் ‘அர்த்தம்’ கேட்டதுடன் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது எனவே அதனை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்திய போதிலும் ”இனப்படுகொலை” என்று தான் கூறிய வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் கூறியதுடன் “இனப்படுகொலை” என்பதன் அர்த்தம் என்னவென சபையில் கூறியதால் கடும் தர்க்கம் ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் நேற்று (09.02.2021) இடம்பெற்ற தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியியல் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான தமிழர் எழுர்ச்சிப் பேரணி இடம்பெற்றது எனக் கூறியபோது எழுந்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வா ‘genocide’ [இனப்படுகொலை] என்ற சொல்லை நீங்கள் இங்கு பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்துகின்றீர்கள் . இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், இன்றும் இடம்பெற்று வருவதாகவும் கஜேந்திரகுமார் கூறுகின்றார். அவர் எதனை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறுகின்றார் எனத் தெளிவில்லை என்றார்.
இதற்குப் பதிலளித்த கஜேந்திரகுமார் , “இனப்படுகொலை என்பது வெறுமனே இனத்தை அழிப்பது மட்டுமல்ல, ஒரு சமூகத்தை இலக்கு வைத்து அவர்களின் அடையாளத்தை அழிப்பதும் இனப்படுகொலைதான். 2009 ஆம் ஆண்டு வரையில் தமிழர்களின் உயிர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டதைப் போலவே இப்போதும் திட்டமிட்டு வடக்கு, கிழக்கு தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன, தொல்பொருள் திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கின்றது.
இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்கள் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதும் இனப்படுகொலை தான் என்றார்.
எனினும் மீண்டும் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஹர்ஷ டி சில்வா , நீங்கள்தான் அப்படிக் கூறுகின்றீர்கள். ஆனால் எமக்கு தெரிந்தவரையில் இனப்படுகொலை என்பது அதிகளவான மக்களை கொன்று குவிப்பதாகும் என்றார்.
ஹர்ஷ டி சில்வா ஆதரவாக ஆளும் தரப்பில் இருந்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இனப்படுகொலை என்பது எமக்குத் தெரிந்த வரையில் திட்டமிட்ட கொலையாகும். அதிகளவான மக்களை அல்லது ஓர் இனக்குழுவை அழிப்பது இனப்படுகொலை என அர்த்தப்படும். ஆனால் நீங்கள் கூறும் காரணிகளுக்கு இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறு .எனவே அதனை திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.
இதற்கு கஜேந்திரகுமார். பதிலளிக்கையில், இனப்படுகொலைக்கான வரைவிலக்கணம் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. எந்த விதத்திலும் இதற்கான வரைவிலக்கணத்தை முன்வைக்க முடியும். ரோமானிய பிரகடனத்தின் ஐந்தாம் உறுப்புரையை வாசியுங்கள் என்றார்.
அப்போது மீண்டும் எழுந்த ஹர்ஷ டி சில்வா இனப்படுகொலை என்ற வார்த்தையை நீங்கள் சரளமான விடயங்களுக்குப் பயன்படுத்த முடியாது என்றார்.
நான் ஒரு தகுதியான சட்டத்தரணி, எனக்கு எவ்வாறு வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பது தெரியும். இனப்படுகொலை நடந்தது. அதற்கான நியாயத்தைக் கேட்கிறோம். இதற்கான சாட்சியில் நானும் ஒருவன், அதேபோல் இன்றும் எமது அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனையே நான் அவ்வாறு கூறுகின்றேன் என்றார் கஜேந்திரகுமார்.
மீண்டும் எழுந்த இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால், நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. நீங்கள் கூறும் காரணிகளுக்கு பொருத்தமான வார்த்தை இதுவல்ல என்றார்.
நான் சட்ட முறைமைக்கு அமையவே பேசுகிறேன். நீங்கள் ரோமானிய பிரகடனத்தைப் பாருங்கள். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறும் குற்றச்சாட்டை ஏன் உங்களால் விசாரிக்க முடியாதுள்ளது. முதலில் அதனைச் செய்யுங்கள் என்றார் கஜேந்திரகுமார்.
நீங்கள் இனப்படுகொலை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம்.அது பாரதூரமான வார்த்தை என ஹர்ஷ டி சில்வா மீண்டும் கூறினார்.
இனப்படுகொலை என்ற வார்த்தையை நான் மிகவும் பொறுப்புடன் இந்த இடத்தில பயன்படுத்துகிறேன். உங்களிடம் நான் கேட்பது ஒன்றுதான், எதிர்க்கட்சித் தலைவரும் ஆளும் கட்சித் தலைவரும் வாருங்கள் பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்துவோம். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதா? இல்லையா? என விவாதிக்கலாம். அதற்கு ஏன் அஞ்சுகிறீர்கள் என கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பினார்.
இன்றைய விவாதத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத காரணிகளைப் பேச வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் நிவாட் கப்ரால் வலியுறுத்தினார்.
நீங்கள் எனது உரையைத் தடுக்க வேண்டாம் என்றார் கஜேந்திரகுமார்.
இதன்போது சபையை வழிநடத்திய அஜித் ராஜபக்ஷ எம்.பி, நீங்கள் விடயத்திற்கு பொருத்தமாகப் பேசுங்கள் அப்போது இந்தக் குழப்பங்கள் எதுவும் எழாது. நீங்கள் பொருத்தமில்லாத விடயங்களைப் பேசுவதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே உங்களுக்காக அதிக நேரத்தை வழங்க முடியாது என்றார்.
இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அரச தரப்பு எம்.பி.யான சாந்த பண்டார, கஜேந்திரகுமார் எம்.பி.யின் ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தைப் பிரயோகம் பொருத்தமானதல்ல, இலங்கையில் அவ்வாறான ஓர் இனப்படுகொலை இடம்பெறவில்லை, இனியும் இடம்பெறாது. எனவே அவரது வார்த்தையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக சபையை வழிநடத்திய அஜித் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
ஆனால் சாந்த பண்டாரவின் கூற்றை எதிர்த்த ஹர்ஷ டி சில்வா எம்.பி., பாராளுமன்றத்தில் உரையாற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தாம் பேசும் வார்த்தைகள் என்ன என்பதை தெரிந்து பேச வேண்டும். ஒருவர் பேசியதை நீக்க வேண்டுமென இன்னொருவர் கூற முடியாது. ஆனால் இவ்வாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா? தவறா? என்பதை வார்த்தைகளை பயன்படுத்தும் உறுப்பினர் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே அடுத்த தடவை நீங்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்றார்.
இதன் பின்னர் பேசிய அரச தரப்பினர் பலர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் கடுமையாக விமர்சித்தனர்.