08

08

“விமல் வீரவங்ச தன்னுடைய கீழ்த்தரமான அறிவிப்புக்கு பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” – பொதுஜனபெரமுன !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, தெரிவித்த கருத்து தொடர்பாக மன்னிப்பு கோர வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (08.02.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், பொதுஜன பெரமுன தொடர்பாக எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளும் உரிமை விமல் வீரவங்சவிற்கு இல்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுடன் அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

மேலும் கூட்டணியில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது.

நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்புக் கடமையில் இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜனாதிபதிக்கு தமிழர் பற்றி தெரியாத விடயங்களை அவருடன் இருக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லிக்கொடுக்க  வேண்டும்” – மனோ கணேசன்

“ஜனாதிபதிக்கு தமிழர் பற்றி தெரியாத விடயங்களை அவருடன் இருக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லிக்கொடுக்க  வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழும், சிங்கள, தமிழ், மொழிகளை பேசும் பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே நாம் முயல்கிறோம். அது எம் நோக்கம். ஆனால், தூரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் அரசு, இந்நாட்டில் “சிங்கள பெளத்தம் மட்டுமே” என்ற நாட்டை உருவாக்க பார்க்கிறது. அது பிழை. அது அவருக்கு புரியவில்லை.

இந்நாட்டின் வரலாற்றில் தமிழருக்கு உரிமை உண்டு. வடக்கு, கிழக்கில் பெளத்த புராதன சின்னங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம், இருக்கலாம். ஆனால், அவை தமிழ் பெளத்த புராதன சின்னங்கள். இந்நாட்டில் 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி இருந்தது. தென்னிந்தியாவிலும் அப்படிதான்.

ஆகவே பெளத்தத்துக்கு “சிங்களம்” என்ற லேபலை போட வேண்டாம். தமிழ் மக்களை அரவணைக்க பெளத்தத்தை பயன்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கூறுகிறேன்.

ஜனாதிபதிக்கு இது புரியாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு புரியாததை, அவருடன் இருக்கும், தமிழ் அரசியலர்களான டக்லஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லித்தர வேண்டும். அமைச்சர் அலி சப்ரியும் சொல்லித்தர வேண்டும்.

தெரியாவிட்டால், சொல்லித்தர வேண்டுமல்லவா? இவற்றை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜனாதிபதிக்கு எங்கள் செய்தி. இதை அவருக்கு கொண்டு போய் சொல்லுங்கள். நாம் நாட்டை உருவாக்க விளைகிறோம். அவரது அரசு நாட்டை அழிக்க விளைகிறத என அவர் மேலும் ​தெரிவித்துள்ளார்.

“நாட்டில் அடிப்படைவாத  செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது“ – அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான தரப்பினர்கள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள். அடிப்படைவாத  செயற்பாடுகள் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது“ என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாஹரகம பகுதியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டது.தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த முன்னெடுக்கப்பட்டநடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் கோணத்தில் பார்க்கப்பட்டன.

தேசிய புலனாய்வு பிரிவினர் திட்டமிட்ட வகையில் பலவீனப்படுத்தப்பட்டனர். தேசிய பாதுகாப்பினை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை வெற்றிகரமாக செயற்படுத்திக் கொண்டார்கள்.

குறுகிய நேரத்திற்குள் 8 இடங்களில் தொடர் குண்டுத்தாக்குதலை மேற்கொள்வதென்பது சாதாரண விடயமல்ல. யுத்த காலத்தில் கூட இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு எந்தளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டது என்பதற்கு ஏபரல் 21 குண்டுத்தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

சம்பவம் இடம் பெற்ற பின்னர் அச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதாக புலனாய்வு பிரிவினரது செயற்பாடல்ல எந்நிலையிலும் முன்னெச்சரிக்கையாக இருத்தல் அவசியமாகும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது.

ஏப்ரல் 21 நாளில் இடம் பெற்ற 8 தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் சட்டமாதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

30 பேருக்கு எதிராக கொலை, அடிப்படைவாத செயற்பாட்டுக்கான திட்டமிடல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  முழுமையாக கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகவே வெகுவிரைவில் முக்கிய தரப்பினர் பலர் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள்.

நாட்டில் தீவிரவாதம் இனியொருபோதும் தலைத்தூக்காது தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது  இயல்பான விடயம்.

எவருக்கு ஆட்சியதிகாரத்தை வழங்க வேண்டும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.அரசாங்கங்கள் மாற்றமடையலாம் ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை அரசியல் தேவைக்கேற்ப மாற்றமடைய கூடாது. அரசியல் கொள்கையை காட்டிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான கொள்கை உறுதியாக இருத்தல் வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“நாம் இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

“நாம் இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சியாம்பலாண்டுவ புத்தம புரான ரஜமஹா விகாரையில் நடைபெற்ற ´மிஹிந்து நிவஹன´ திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை 30 ஆண்டுகளாக அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம். அமைதி நிலைநாட்டப்பட்டது. அபிவிருத்தி தொடங்கியது.

அதன்பின்னர், நல்லாட்சியின் காலத்தில் நீங்கள் நினைவில் வைத்திருக்கும் அமைதியைக் கொண்டுவருவதில் கருவியாக இருந்த போர்வீரர்கள் மீதான ஜெனீவா தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நாட்டில் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து திட்டங்களும் தயாராக இருந்தன. இது மக்களுக்கு நில உரிமை மற்றும் இந்த நாட்டில் வாழும் உரிமையை பறிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அரசாங்கம் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் நாட்டின் சுதந்திரத்திற்காக தைரியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

எனவே, நாட்டை நேசிக்கும் துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் இந்த அரசாங்கத்தில் எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாரிய முடிவுகளை எடுத்த குழு நாங்கள்.

உங்கள் ஆதரவு மற்றும் புரிதலுடன் மட்டுமே நாங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்த முடியும். மக்கள் எங்களை நம்பி எங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்தது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்