04

04

“129 இலங்கையரை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது ” – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் என்றும் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய 129பேரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 87 பேருக்கு இன்டர்போல் நீல அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

40 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்காகவும் 24 பேர் ஏனைய குற்றங்களுக்காகவும் தேடப்படுவதாகவும் இவ்வாறான குற்றவாளிகளைக் கொண்டுவர இன்டர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

“புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் – இன்னும் வேகமாக பரவும் அபாயம்” – இங்கிலாந்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு  இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாட்டிலும் பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இதற்கிடையே 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரசின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவியது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே பரவிய வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலும் கொரோனா வைரஸ் உருமாறி பரவியது.

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் உருமாறிய கொரோனாவால் ஐரோப்பா உள்பட சில நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மரபணு மாற்றம் அடைந்து மேலும் வலுவடைந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் அதிதீவிரமாக பரவும் தன்மையுடன் கூடிய மரபணு மாற்றம் அடைந்து தெற்கு இங்கிலாந்து பகுதி ஒன்றில் கண்டறியப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர். இதுவரை இந்த வைரஸ் குறைவானவர்களுக்கே பரவி உள்ளது என்றும் வரும் நாட்களில் தான் எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பது தெரியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, ‘மீண்டும் உருமாறியுள்ள புதிய வகை கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பலன் தருமா? என்பது சந்தேகம். இந்த புதிய வகை கொரோனாவை தடுக்க மற்றொரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்’ என்றனர்.

“நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும்” – கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போதே  கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என தெரிவித்துள்ள அவர் நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் கடந்த காலத்தில் தலைவர்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையை மறைத்தது போல இதனையும் மறைக்கவேண்டாம் என கோரியுள்ளார்.

“எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக அரசுக்கு சொல்கின்றோம்” – எம்.ஏ.சுமந்திரன்

“எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக அரசுக்கு சொல்கின்றோம்” என ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும் தான் முகம் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பேரான்மை ஆட்சி, எங்களை அடக்குகின்ற ஆட்சி, எங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்கின்ற முறையை எதிர்த்து பல விடயங்களை முன்வைத்துள்ளோம். அனைத்து இடங்களிலும் எங்களோடு மக்கள் இணைந்து போராடுகின்றார்கள்.

முஸ்லிம்களின் பிரச்சனையாகவுள்ள ஜனாசா எரிப்பு விவகாரத்தினையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகள், எங்களது அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி செய்யப்பட வேண்டும். எங்களது நிலங்கள் அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும். வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்.

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம் என்று சொல்லிச் சொல்லி இழுத்தடிப்பு செய்கின்றார்கள். அது கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும்தான் முகம் கொடுக்க முடியும்.

இதுவரைக்கும் எங்களை தனித் தனியாக கையாண்டார்கள். எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக சொல்கின்றோம். அதனை தொடர்ந்து நீடிக்க வைக்க வேண்டும். ஒருவொருக்கு ஒருவர் உதவியாக தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் சிறுபான்மை இனத்தவர்களல்ல. நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள்.

நாங்களும் ஒரு மக்கள் எங்களுக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. எங்களுக்கு ஒரு மொழி இருக்கின்றது. அடையாளம், சமயம் இருக்கின்றது. இவற்றை பாதுகாக்கும் சம பிரஜைகளாக நாட்டில் வாழ்வதற்கான உரிமையை கேட்டு நாங்கள் இந்த நடை பவணியை நடாத்துகின்றோம். அனைவரும் சேர்ந்து எங்களோடு வரவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார் சுமந்திரன்.

“தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்” – அங்கஜன் இராமநாதன்

“வலி. வடக்கில் தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வலி வடக்கில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் திஸ்ஸ விகாரை தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வலி வடக்கு தவிசாளர், தமது மீள்குடியேற்ற பகுதியில் உள்ள அரச காணியில் விகாரை கட்டுவதற்காக தம்மிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் தற்போது சபைக்கே தெரியாமல் தனியார் காணிகளில் விகாரை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த அங்கஜன் இராமநாதன், தனியார் காணிகளில் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டுவது தொடர்பில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் உள்ள நிலையில் சபை அதனை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

“வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம்” – சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் பிரதமர் மகிந்தராஜபக்ஷ

“வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம்” என பிரதமர் மகிந்தராஜபக்ஷ  வழங்கியுள்ள சுதந்திரதின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
அனைத்து இலங்கையர்களும் 73 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.
காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பும் போராட்டமும் உலக வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை. அரசியல், மத மற்றும் கலாசார ரீதியாக மூலோபாய போராட்டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற நீண்ட வரலாற்றை இலங்கை தேசம் கொண்டுள்ளது.

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று நம் தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளது. நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக தாய்நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நாம் நுழைந்துள்ளோம்.

ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும் போது வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும்.

வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம். எத்தனை சவால்கள் வந்தாலும், நாங்கள் ஒருபோதும் நம் தாய்நாட்டை காட்டிக் கொடுத்ததில்லை.

கொவிட் -19 தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். இந்நெருக்கடியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எதிரிப் படைகளைத் தோற்கடிப்பதற்கு போன்றே, கொவிட் -19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக நாங்கள் எழுந்து நிற்போம்.

எங்கள் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் இன்று அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகின்றேன்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் 2 பொலிகண்டி மக்கள் பேரணிக்கு வலுச்சேர்தத முஸ்லீம்கள் !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை அடைந்துள்ளது.

2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடா இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகர எல்லைக்குள் நுழைந்த போது பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்துள்ளது.

எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும்., வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐ.நா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக் கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கள நாட்டையே நான் கட்டியெழுப்பவுள்ளேன் என கூறிய  ஜனாதிபதியின் ஒளிவு மறைவில்லா தன்மையை பாராட்டுகிறேன்”  – மனோகணேசன்

“சிங்கள நாட்டையே நான் கட்டியெழுப்பவுள்ளேன் என கூறிய  ஜனாதிபதியின் ஒளிவு மறைவில்லா தன்மையை பாராட்டுகிறேன்”  என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை” என ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ  சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வுவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மனோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி கோதாவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது. தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனையில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் என தெரிய வருகிறது.

நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை ராஜ்யத்தை கட்டை எழுப்ப முயல்கிறோம். ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தன கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார்.

உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியை பாராட்டுகிறேன். அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால், அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?

உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார், அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைதான் தெளிவாக கூறுகிறார்.

(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான். (02) நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை. (03) பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன். (04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு.” என்பனவே அவையாகும்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தான் கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார். இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார்” எனவும் மனோகணேசனட தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

“தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம்” – சஜித் பிரேமதாச

“தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிர்த்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுபட்டு இன்றுடன் 73 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில்  , இலங்கையின் சுதந்திர தினத்துக்காக சஜித்பிரேமதாஸ வழங்கிய வாழ்த்துச்செய்தியலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறும் போது ,

ஒட்டுமொத்தமாக நாட்டின் வெற்றிகள், பின்னடைவுகள் மற்றும் தோல்விகள் கடந்த 73 ஆண்டுகளில் எங்களுக்கு அனுபவத்தை அளித்துள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டின் இறையாண்மை வெளிப்புற குறுக்கீட்டால் பாதிக்கப் படுவதைத் தடுக்கவும் உள்ளூர் வளங்களைப் பாதுகாக்கவும், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, மத, ஊடகங்கள் போன்றவை பாதுகாப்பது நமது கடமை.

எமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இனம், மதம், கட்சி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே தாயின் பிள்ளைகளாக பணியாற்றிய வரலாறும் மிகவும் உணர்வுப்பூர்வமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இறையாண்மை கொண்ட நாட்டில் ஒரு கொடியின் நிழலில் வாழ வேண்டும் என்ற தூய்மையான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மக்கள் 2ம் நாள் போராட்டம் – மட்டக்களப்பை அடைந்தது !

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்திறற்கு சென்று அங்கிருந்துதிருகோணமலை வீதி ஊடாக ஏறாவூருக்கு சென்றடைந்துள்ளது.

வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணி இன்று மட்டக்களப்பை வந்தடைந்தபோது அதில் பங்குபற்றுபவர்களுக்கு எதிராக நீதிமன்றில் எடுக்கப்பட்ட தடை உத்தவை பொலிசார் வழங்கி வைத்தனர்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரகுமார், சிறீதரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியேந்திரன், ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதியான அருண்தம்பிமுத்து காணாமல் போன உறுவுகள் உட்பட பல் கலந்துகொண்டனர்.