03

03

“தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்தக்கோரி ஹர்த்தால் ” – அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு !

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக தற்போதைய அரசாங்கம் நிர்ணயித்தாலும் பெருந்தோட்டக் கம்பனிகள் அதை அதிகரிக்கத் தயாராக இல்லை என்பதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

எதிர்வரும் 5ஆம் திகதி நுவரெலியா மாவட்டம் உட்பட அனேக பிரதேசங்களில் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே அனைத்துக் கடைகளும் மூடப்படுவதுடன் டாக்ஸி, முச்சக்கரவண்டிகள் இயக்கப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஹர்த்தால் பிரசாரம் அரசாங்கத்துக்கு எதிரானது அல்ல என்றும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.

“வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி தொழில் இல்லாது இருப்போருக்கு வட்டியில்லாத கடன்” – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(02.02.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிததுள்ளதாவது,
அவர்களுக்கு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க 50,000 ரூபா வரையான வட்டியில்லா கடனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக வழங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தொழிலை இழந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு 50,000 ரூபா வரை உதவித்தொகை வழங்கப்படும். எனினும் இதனை 100,000 வரை அதிகரிக்குமாறு நான் கேட்டுக்கொண்டேன். மேலும் 50,000 ரூபாவை வட்டியில்லா கடனாக வழங்குமாறு கேட்டேன். தொடர்ந்தும் நாட்டில் இருக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இந்த உதவியை வழங்குமாறு நான் அதிகாரிகளை பணித்துள்ளேன்’ எனவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப தேவையான விமான பயணச் சீட்டை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் – யாழில் நடாத்த நீதிமன்றம் தடையுத்தரவு !

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த காவல்துறையினர் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் தாக்கல் செய்த விண்ணப்பத்துக்கே இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சட்டத்தரணி க.சுகாஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வேலன் சுவாமிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரநிதிகள் உள்ளிட்டோருக்கு இந்த தடை உத்தரவு பெறப்பட்டது.

May be an image of 2 people, people standing and outdoors

பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பங்கள் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினரால் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன

ஜெனிவா மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் நாட்டுக்கு கலங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் எடுத்துரைத்தனர்.

தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு  வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் போராட்டம் இன்று காலை பொத்துவிலில் ஆரம்பமாகி காவல்துறையினர் தடையை மீறி நடைபெற்றுவருகிறது. வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாருடைய கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஆரம்பித்தது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி போராட்டம் !

பொலிஸாருடைய கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03.02.2021) காலை காவ்துறையினரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட, கிழக்கில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்டம் சில பகுதிகளில் வீதித் தடைகள் அமைத்து, அவற்றை கடக்கும் போராட்டக்காரர்களில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டோர் உள்ளனரா? என்பது தொடர்பில் காவ்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

May be an image of 1 person, standing and road

வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் அடங்கலாக அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தி, அவற்றை கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கோட்டும் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.

போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் திடீர் வீதித் தடை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வீதித்தடையை கடப்பவர்கள் வழி மறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் – குமணன் (முல்லைத்தீவு)