துண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டபாய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பாக பதிலளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
குறைந்த பட்சம் கடந்த ஏழு தசாப்தங்களாக இலங்கை அரசாங்கத்துடன் பேசி ஏமாற்றமடைந்த வரலாறு எங்களுக்கு இருக்கிறது. கடைசியாக 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்துடன் அலரி மாளிகையில் சந்தித்தோம். அப்போதும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.
குறித்த நான்கு சிறுமிகளில் ஒருவர் ஜெயவனிதாவின் மகள்.ஜனாதிபதி அந்தபிள்ளைகளை காட்டினால், எங்களுடன் பேசுவதற்கான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுவோம் . அவரது மகளைக் காண்பிப்பதன் மூலம் ஜனாதிபதி எங்களுக்கு உண்மையான முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் லீலாவதி அம்மாவின் அறிக்கைகள் ஆட்சி மாற்றத்தின் தேவையை உருவாக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது தமிழர்களுக்கு ஒரு தீர்வு அல்ல. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் குழந்தைகளிற்கு இராணுவம் பொறுப்பல்ல என்று அவர் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் அவரது இப்படியான கருத்துக்கள் வருத்தமளிக்கின்றது. எமது குழந்தைகளை இராணுவம் அழைத்து சென்றதுதான் உண்மை. எனவே எமது பிள்ளைகளை அழைத்துச்சென்ற இராணுவம் விசாரிக்கப்பட வேண்டும்.
இலங்கையுடன் புதிய அரசியலமைப்பு பற்றி பேச வேண்டாம் என்று தமிழ் அரசியல்வாதியிடம் கேட்க விரும்புகிறோம். கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் இங்கு வந்து தமிழர்களை ஒடுக்கு முறையிலிருந்து பாதுகாக்ககூடிய அரசியலமைப்பு எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். என்றனர்.