29

29

“தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தனித்து செயற்படுகின்றனர்” – ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா

“தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் தனித்து செயற்படுகின்றனர்” என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஜனாஸா தகனம் செய்வது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கூறியதாவது,

“முஸ்லிம்களின் ஜனாஸா அம்மக்களின் எதிர்ப்புக்களின் மத்தியில் தகனம் செய்யப்பட்டு வருகின்றது. இது விடயத்தில் உயர்நீதிமன்றம் ஊடாக உரிமைகளை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் ஓர் அங்கமாகவே 20 நாட்களேயான சிசுவின் ஜனாஸா பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ளேன்.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து நின்று தங்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காகவே செயல்பட்டு வருகின்றனர்.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் தங்களது சமூகத்தின் பிரச்சினைகளை பேசுகின்றனர். அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களது பிரதேசங்களது அபிவிருத்திகளும் இடம்பெற்று வருகின்றன. எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சமூகம் சார்ந்த விடயங்களில் அரசியல் வித்தியாசம் இன்றி கலந்தாலோசித்து ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20ஆவது அரசியல் அமைப்பு வாக்கெடுப்பின்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களின் உறுப்பினர்கள் தன்னிச்சையாக செயற்பட்டு அரசாங்கத்திற்கு வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அவர்களது உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒரணியாக ஜனாஸா விடயத்தை முன்வைத்தாவது அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்க முடியும்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னிச்சையாகச் சென்று அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளை பேசிவிட்டு 20 ஆவது அரசியல் திருத்தத்திற்கு வாக்களித்ததுள்ளனா்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத் தரப்பில் இருந்தாலோ அல்லது எதிர்த்தரப்பில் இருந்தாலோ முஸ்லிம்களின் உரிமைகள் என்று வரும்போது ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றார்.

“ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால்,  ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றது” – ஏற்றுக்கொண்டார் மைத்திரிபால சிறிசேன

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி செயற்படவில்லை.என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால்,  தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஆம். அப்படியான பிரச்சினை இருக்கின்றது. அவர் கூறிய கருத்தில் பிழை இல்லை. எமக்கான கவனிப்பில் குறை உள்ளது.  ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை.  உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன – என்றார்.

“தொழிலாளர் சம்பளமாக 1,000 ரூபா கொடுப்பனவு கிடைக்காது விடின் போராட்டம் வெடிக்கும்” – வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சம்பளம் வழங்கும்போது 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டிருக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி மாதத்திற்கான சம்பளத்தில், நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா கணக்கிடப்படாவிடின் பாரிய தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா கட்டுப்படுத்திய நூறு நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம் !

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்திவரும் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 10ஆவது இடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் கொவிட-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள், பரிசோதனை சதவிகிதங்களை அடிப்படையாக கொண்டு அவுஸ்ரேலியாவின்  Australian think tank the Lowy Institute நிறுவனம் நடத்திய ஆராய்வுகளின் பிரகாரமே இலங்கைக்கு 10ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்திவரும் நாடுகளில் நியூசிலாந்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

100 நாடுகளை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டுள்ள இந்த பகுப்பாய்வில் வியட்நாம், தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த விடயத்தில் ஆஸ்திரேலியா 08ஆவது இடத்திலும் இலங்கை 10ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. அதிகமான தொற்றாளர்கள் கண்டறிப்படும் அமெரிக்கா 94ஆவது இடத்தில் உள்ளது. இந்தோனேசியாவும் இந்தியாவும் முறையே 85 மற்றும் 86ஆவது இடங்களில் உள்ளன.

இந்தப் பட்டியலில் Australian think tank the Lowy Institute நிறுவனம் சீனாவை தரப்படுத்தவில்லை. சீனாவின் உண்மையான தரவுகளை பெற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல் நிலைமையால் இவ்வாறு தரப்படுத்தப்படவில்லை.

பெரிய நாடுகளை விட சிறிய நாடுகள் கொவிட்-19 வைரஸை மிகவும் திறம்பட கையாண்டுள்ளதாக Australian think tank the Lowy Institute நிறுவனம் கூறியுள்ளது.

“இலங்கையில் நீதி நிலைநாட்டப்படுவதற்குரிய அனைத்துலக உந்துதல் பொறிமுறை” – பிரித்தானியா கவனமாக பரிசீலிக்கப்போவதாக அறிவிப்பு !

இலங்கையில் நீதி நிலைநாட்டப்படுவதற்குரிய அனைத்துலக உந்துதல் பொறிமுறைக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயத்தை கவனமாக பரிசீலிக்கப்போவதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை தொடர்பான விடயங்களை முன்னகர்த்துவது தொடர்பான விடயங்களை பிரித்தானியா பரிசீலிக்கும் என ஐ.நா மனித உரிமை பேரவையின் நிரந்தர பிரதிநிதி யுலியன் பிறைத்வைற் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் மனித உரிமை பேரவை கூடும்போது பிரித்தானியா ஒரு வலுவான தீர்மானத்தை இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்க வேண்டும் என நேற்று சர்வதேச மன்னிப்புசபை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.