23

23

இலங்கை கடற்படை கப்பல் மோதி இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழப்பு எதிரொலி – யாழில் இடம்பெற இருந்த இந்திய குடியரசுத் தினக் கொண்டாட்டம் இரத்து !

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தினக் கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டது என அறியவருகின்றது.

இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற சம்பவத்தில் தகர்ந்தது. இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த நால்வரும் உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் தற்போது வரையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உள்ளன. இதனால் ஏற்பட்ட சர்ச்சையும் பதற்றமும் தமிழகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.

இந்தநிலையில், இதற்கான எதிர்ப்பைத் தெரிவிக்கும் நோக்கிலும், இந்த மீனவர்களின் இறப்பின் துயரில் பங்கெடுக்கும் வகையிலும் எதிர்வரும் 26ஆம் திகதி இந்தியாவின் குடியரசுத் தினக் கொண்டாட்ட நிகழ்வு இரத்துச் செய்யப்படுவதாக அறியவருகின்றது.

இந்தக் கொண்டாட்டம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இங்கும் மிகவும் கோலாகலமாக இடம்பெறுவது வழமை.

இந்த ஆண்டு கொரோனா காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டபோதும் அரசியல் சூழல் காரணமாக குடியரசுத் தினக் கோலாகலம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இராஜதந்திர நிகழ்வுகள், நெருக்கடிகள் காரணமாக இலங்கை – இந்திய அரசியலிலும் உறவிலும் பெரும் பரபரப்பு நிவுவதும் குறிப்பிடத்தக்கது.

‘புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை எதிர்க்கின்றோம்” – எம்.கே.சிவாஜிலிங்கம்

‘புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை எதிர்க்கின்றோம்” என எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை அரசுடைய தொடர் நடவடிக்கையாக காணி நிலம் அபகரிப்பு அதே போர்வையிலே இது ஒரு சிங்கள பௌத்த நாடாக காட்டுவதற்குரிய முயற்சிகள், தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.

இதற்கு நிச்சயமாக எங்களுடைய தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரை, திருகோணமலை மாவட்டத்தில் கண்ணியா வெந்நீர் ஊற்று பிரச்சினை அதே போன்று திருகோணமலையில் எல்லைக் கிராமமாகிய தென்னை மரவாடியில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிரச்சினைகள் அதே போன்று வவுனியா, மன்னார் மாவட்டத்திலே பல பிரச்சினைகள் இருக்கின்றன.

நாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை. மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை எதிர்க்கின்றோம்.

எங்களுக்கு இன மத வெறி இல்லை. நீங்கள் சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் எங்களை ஆக்கிரமிக்க முயற்சிப்பதால்தான் நாங்களும் எதிர்க்கின்றோம். தென்னிலங்கையிலே அவர்களுக்கு ஆட்சி சரிவு ஒரு வருடத்தில் வந்துவிட்டது.

பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாண நிலாவரையில் நேற்றையதினம் வந்து தோண்ட ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள் அவர்களுக்கு அங்கு என்ன வேலை. தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான் தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.

அங்கே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். எனக்கு தகவல் அங்கிருது வந்ததும் உடனடியாக அங்கு சென்றபொழுது வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஸ் நின்றார், ஊடகவியலாளர்கள் நின்றார்கள் . அத்தோடு ஒரு சில பொதுமக்கள் நின்றார்கள். அவருக்கு சிங்கள மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு.

அத்தோடு கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுகள் செய்ய இருக்கின்றோம் என்றார்கள். கிடங்கு ரீ வடிவில் ஆளமாக வெட்டப்பட்டிருந்தது உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது. அதுக்குள் எதையாவது கொண்டுவந்து புதைத்தார்களோ தெரியவில்லை. இன்னும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேறு ஏதோ வெளிவரலாம் இதே போன்று தொன்னிலங்கையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா !

கொரோனா வைரஸ் காரணமாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

துரித அன்டிஜென் சோதனையின் போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்தே அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

எனினும் பிசிஆர் சோதனை முடிவுகள் நேற்றிரவு வரை வெளியாகவில்லை என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

ஜெமினி – தேனீ – கருத்துச் சுதந்திரம்: கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு சுதந்திர வேட்கைகொண்ட மனிதன்

சரத்து 19: ஒவ்வொருவரும் சுயாதீனமான கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதனை வெளிப்படுத்தவும் உரிமையுடையவர்கள். இந்த உரிமை என்பது இடையூறற்று கருத்துக்களைக் கொண்டிருக்கவும் தகவல்களையும் கொள்கைகளையும் தேடவும் எந்த ஊடகத்தினூடாகவும் எல்லைகளைக் கடந்தும் அதனை வெளிப்படுத்தவுமான உரிமையயை உள்ளடக்குகின்றது. – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பிரகடனத்தின் 19வது சரத்து.

Article 19: Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

இந்தக் கருத்துச் சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்காகப் போராடிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஊடகங்களில் ‘தேனீ’ இணையத்தளத்தின் பாத்திரம் மிகமுக்கியமானது. அதற்குப் பின்நின்ற ஜெமினியின் – கங்காதரனின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழர்களை உலகெங்கும் புலம்பெயர நிர்ப்பந்தித்த போது, யுத்தத்தின் ஆரம்ப காலகட்டங்களில் வடக்கு கிழக்கை விட்டு, ஆரம்ப நாட்களில் புலம்பெயர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகப் போக்கினால் பாதிக்கப்பட்ட மாற்று இயக்கத்தைச் சார்ந்தவர்களே. இலங்கையில் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தை, தாங்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் கட்டியெழுப்ப முற்பட்டனர்.

ஆனாலும் மிகக் கூறுகிய காலத்தினுள்ளேயே கட்டமைப்பு ரீதியாக மிகப்பெரும் பலத்துடன் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம், புலம்பெயர் தேசங்களிலும் கோலோச்ச ஆரம்பித்தது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் வன்முறையானது; அரசியல் படுகொலைவரை சென்றது. பாரிஸ், பேர்ளின், லண்டன், ரொறொன்ரோ, சிட்னி என வன்முறைகள் தொடர்ந்து சில படுகொலைகளும் நிகழ்ந்தது.

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பெரும் பொருளாதார, அரசியல், பலம்பொருந்திய கட்டமைப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் அராஜகத்திற்கு எதிராக தனியன்களாக; தங்களுடைய நாளாந்த குடும்பச் சுமைகளுடன், ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்திற்காக ஒரிரு ஆண்டுகள் அல்ல கால்நூற்றாண்டாக போராடி வருவது என்பது சாதாரணமானதல்ல.

1990க்களின் பிற்பகுதியில் இணையத் தொழில்நுட்பம் வீச்சுப்பெறத்தொடங்கியது. இலங்கைத் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத் தளத்திலும் இது அதிர்வை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி ஊடாக தங்கள் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடியவர்கள்; அதற்கான கூட்டு உழைப்பை பெறுவதிலும், அதற்கான அதீத செலவீனங்களை தாங்க முடியாத நிலையிலும் தத்தளித்தனர். தங்களுடைய உழைப்பை வழங்குகின்ற அதேசமயம், தங்களுடைய வருமானத்தையும் செலவிட்டே இந்த கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைப் போராட்டத்தை நடத்தினர். இணையத்தின் வருகை இந்தச் செலவீனங்களை மிகமிக குறைத்துக்கொண்டது. வாசகர் பரப்பை நாட்டின் எல்லைகளைக் கடந்தும் விரித்துச் சென்றது.

தங்களுடைய உழைப்பினை மட்டும் வைத்துக்கொண்டு கருத்துச் சுதந்திரத்திற்காகப் போராட முடியும் என்ற ஒரு நிலையயை இணையத்தொழில்நுட்பம் வழங்கியது. உலெகெங்கும் பரந்திருந்த மாற்றுக் கருத்தாளர்களை இணைக்கின்ற தளமாக ‘தேனீ’ யயை ஜெமினி என எல்லோராலும் அறியப்பட்ட கங்காதரன் உருவாக்கினார்.

தேனீ, தேசம்நெற் (தேசம், லண்டன் உதயன், லண்டன் குரல்), ரிபிசி வானொலி என விரல்விட்டு எண்ணக் கூடிய ஊடகங்களே 1990க்களின் பிற்பகுதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரங்களுக்கு சவாலாக செயற்பட்டு வந்தன. இணையத் தளங்கள் 2000ம் ஆண்டிற்குப் பின் வீச்சுப்பெற்று வந்தது. வன்னி யுத்தத்தின் போது தாயகத்தின் உண்மை நிலவரங்கள் மூடிமறைக்கப்பட்டு மக்கள் ஒரு மய உலகிற்குள் தள்ளப்பட்டிருந்த போது பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தது இந்த ஊடகங்கள் மட்டுமே.

இந்தப் பின்னணியிலேயே ஜெமினி – கங்காதரனின் வரலாற்றுப் பாத்திரத்தை என்னால் மதிப்பிட முடிகின்றது. ஒரு தனிமனிதனின் உழைப்பு ஒரு சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்வதில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி இருக்கும் என்பதற்கு தேனீ இணையமும் ஜெமினியின் உழைப்பும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் அது மிகையல்ல.

ஜெமினி – கெங்காதரனை ஸ்ருட்காட் ஜேர்மனியில் ஒரு சில கூட்டங்களில் சந்தித்து பேசியதைத் தவிர எனக்கு அவருடன் அவ்வளவு உறவு இருந்ததில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடுகளுடனும் எனக்கு அவ்வளவு உடன்பாடும் இருந்ததில்லை. ஆனால் அவருக்கு சமூகத்தின் மீது இருந்த நேசமும் அதற்காக அவர் செய்த தன்னலமற்ற அர்ப்பணிப்பும் எனக்கு ஜெமினி மீது எப்போதும் ஒரு மரியாதையயை ஏற்படுத்தியது. இரவோடு இரவாக அரசியல் ஞானம்பெற்ற ‘கீ போர்ட் மார்க்ஸிட்டுக்கள்’ மத்தியில் தான் நம்பிய அரசியல் கருத்துக்களுக்கா இறுதிவரை போராடிய ஒரு தன்னலமற்ற போராளி ஜெமினி. அப்படிப்பட்ட ஒரு போராளியயை இக்கொடிய நோய் கொண்டு போனது கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட பேரிழப்பே.

“I disapprove of what you say, but I will defend to the death your right to say it”. Voltaire
“உன்னுடைய கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை, ஆனால் அதனைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமைக்காக எனது உயிரைக்கொடுத்தும் போராடுவேன்”. வோல்ரயர்

த ஜெயபாலன்
ஆசிரியர் தேசம் – தேசம்நெற்.