28

28

“ சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ” – ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் !

“சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ” என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த பத்து ஆண்டுகளாக நீதியை எதிர்பார்த்து போராடிக்கொண்டிருக்கின்றோம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பாதிக்கப்பட்ட தரப்பான நாம் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்ட பொறிமுறைகளின் ஊடாக நீதியான விசாரணை நடைபெறும் என்று பெரு நம்பிக்கை கொண்டிருந்தோம்.

உள்நாட்டில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் உள்ளிட்ட முன்னேற்றகரமான விடயங்கள் நடைமுறைச்சாத்தியமாகும் என்று எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 30.1 பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அதில் முன்மொழியப்பட்ட விடயங்களை இலங்கை அரசாங்கம் தனது ‘இறைமையை’ காரணம் காட்டி நிராகரித்து விட்டது. இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்கள் எதிர்பார்த்த பொறுப்புக்கூறும் செயன்முறை தேக்க நிலையிலேயே உள்ளது.

வடக்கு கிழக்கினை பூர்வீக தாயகமாக கொண்ட தமிழினம் சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்டது. அத்துடன் தமிழினம் தனித்துவ கலாசார, பண்பாடுகளையும், இறைமையையும் கொண்டதாகும். அத்தகைய மூத்த பூர்வீக இறைமையைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது. “ சிங்கள இனத்தின் பூர்வீகத்தினை விடவும் நெடிய வரலாற்றைக் கொண்ட தமிழினம் இன்றும் தேற்றுவாரற்று, நீதியற்று கையறுநிலையில் இருக்கிறது ”

2010இல் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்கு இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதி, இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30.1, 34.1, 40.1 தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தற்போது ஆட்சியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முழுமையாக நிராகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் புதிய அரசியல் சாசன உருவாக்கம் மற்றும் இதர சில பொருளாதார விடயங்களை மையப்படுத்தி உள்ளகத்தில் தமிழர்கள் உட்பட சிறுபான்மை தேசிய இனங்களை அடிமைப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் ஏககாலத்தில் சர்வதேசத்திற்கு அவை குறித்து வேறொரு பிம்பத்தை காண்பிப்பதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்பதை தாங்கள் அறியாதவர் அல்லர்.

இந்நிலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபையினால் மட்டுமே முடியும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களினதும் ஏகோபித்த நம்பிக்கை ஆகும். அதனடிப்படையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் பொறுப்புக்கூறலை மறுதலித்து வரும் இலங்கை அரசாங்கம் தொடர்பில் புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிஸ் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சரா ஹல்டன் ஆகியோர் திடமாக தெரிவித்துள்ளனர்.

அந்தக் கூற்றுக்கள் எமக்கு நம்பிக்கை அளிக்கும் அதேசமயம் தாங்கள் இலங்கையின் சமகால நிலைமைகளையும் இனவழிப்பின் நேரடிச் சாட்சியங்களையும் நேரடியாக கண்டிருப்பவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று விநயமாக கேட்டுக் கொள்கின்றேன். அதுமட்டுமன்றி, கடந்த ஐ.நா.தீர்மானங்களின்போது பாதிக்கப்பட்ட தரப்பாக இருக்கும் தமிழினம் என்பது தெளிவாக குறிப்பிடப்படாத நிலைமையொன்று காணப்படுகின்றது. அவ்விதமான மயக்க நிலைமைகளைத் தவிர்க்கும் வகையில் புதிதாக அமையும் பிரேரணை காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கும் எனது மக்களுக்கும் அதீதமாக உள்ளது.

அந்த விடயம் குறித்து தாங்கள் கரிசனை செலுத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் சாத்தியமான நீதிப் பொறிமுறை ஒன்றினூடாக ஐக்கிய நாடுகள் சபையும், அதன் உறுப்பு நாடுகளும் அதியுச்ச அழுத்தத்தை இலங்கைக்கு கொடுப்பதன் மூலம் மட்டுமே நீதி, நியாயம் உள்ளிட்டவை நிலைநாட்டப்படும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

எனது மக்கள் சார்ந்து நான் இத்தால் தங்களிடத்தில் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பாக மிகக்கூடிய கரிசனையை செலுத்துவீர்கள் என்ற பெரும் நம்பிக்கையுடன் இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” – இரா.சாணக்கியன் உறுதி !

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் தாம் தளர்வடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன். பேரினவாத அரசாங்கம் நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகத்திற்குரியதாகும்.

எனவே தமிழ் மக்களின் போராட்டங்களை சர்வதேச பார்வைக்கு கொண்டுவருவது தலையாய கடமையாகும். பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே நீதிகிடைப்பது சாத்தியமாகும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் கவனயீர்ப்பு நடைபயணம் !

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று (28.12.2020) மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகள் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் கையளித்து விட்டு நடைபாதை ஆரம்பமானது.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை! நீதிமன்ற  கட்டளையால் இடையில் நிறுத்தம். - Madawala News Number 1 Tamil website from  Srilanka

கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டளைசேனை, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்களிடம் மகஜர்கள் கையளிக்க ஆயத்தங்கள் இருந்தும் கல்முனை நகரமண்டபத்துடன் இந்நடை பவனி நீதிமன்ற உத்தரவின் பேரில் கல்முனை காவல்துறையினரால் நிறுத்தப்பட்டது. அவ்விடத்திற்கு வருகை தந்த சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் காவல்துறையினருடன் கலந்துரையாடி தனது வாகனத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு அவர்களை அழைத்து சென்றார்.

ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டி மகஜரை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எல்.எம். றிக்காசிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர்.

“இரா.சம்பந்தன் – ஒரு நாட்டை ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவராவார் ” – வீ. ஆனந்தசங்கரி நகைப்பு !

“ஒரு நாட்டை ஆளும் அரசால் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை உடையவராவார் ” என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தன்னுடைய ஊடக அறிக்கையில் நகைப்பாக தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று (28.12.2020) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகிவிட்டது. ஆரம்பத்தில் சமஷ்டி என்ற வார்த்தையை சிங்களத் தலைமைகள் தான் பேச ஆரம்பித்தனர். அது ஒரு காலம். பின் அவர்களே தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தார்கள். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வரும் வரை சமஷ்டி நோக்கித்தான் அனைவரும் செயற்பட்டோம். அதன் பின்னர் இன்று வரை நடக்கும் சம்பவங்களை சம்பந்தன் மறந்துவிட்டாரா?

2015ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு நல்லாட்சியை மக்கள் உருவாக்கி, ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. இதற்கும் தாங்கள் தான் காரணம் என சம்பந்தன் தம்பட்டம் அடித்தார். அந்த நல்லாட்சி முழுவதும் இரா. சம்பந்தன் எதிர் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாட்டை ஆளும் அரசு வருடா வருடம் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த உலகின் ஒரேயொரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக் கொடுத்தவர். “

அன்றைய அரசின் ஜனாதிபதியாக இருந்த கௌரவ மைத்திரிபால சிறிசேன, பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான சகாவாக இருந்து எதிர்கட்சி தலைவர் என்ற கதிரையை அலங்கரித்தவர். அப்போது இந்த சமஷ்டியைப்பற்றி பேசாது அந்த தீர்வை பெற்றுத்தர எந்த முயற்சியும் எடுக்காமல் தனது எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி பறிபோய்விடும் என்ற பயத்தில் வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு, இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவி அவர் கண்களை மறைத்துவிட்டது.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சமஷ்டி கொள்கையை வலியுறுத்தி அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவும், ஒற்றையாட்சியை வலியுறுத்தி கௌரவ மகிந்த ராஜபக்சவும் களத்தில் இறங்கி போட்டியிட்டார்கள். 49 வாக்குகளை ரணில் விக்கிரமசிங்க பெற்றார். அந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் சம்பந்தன் குழுவினர் பிரச்சாரம் செய்ததால் தமிழ் மக்கள் வாக்களிக்காமலே சிங்கள மக்கள் சமஷ்டிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் மக்களை அந்த நேரத்தில் வாக்களிக்க அனுமத்தித்திருந்தால் ரணில் விக்கிரமசிங்க மூன்றில் இரண்டு வீத பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பார். அந்த வராலாற்றுத் துரோகத்தை தமிழ் மக்களுக்கு செய்த சம்பந்தன் இன்று சமஷ்டி பற்றி பேசுகின்றார். இது பற்றி பேச அவருக்கு என்ன அருகதை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சம்பந்தனின் கபட நாடகம் எப்போதும் புரிவதில்லை. அதனால் தான் அவரும் அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

தமிழ் மக்களுக்கு அவர் ஏதாவது நன்மை செய்ய விரும்பினால், நல்லெண்ணத்துடன் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி உருவாக்கும் அணியினருக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய முறையிலான ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். கூடவே இருந்து குழிபறித்து விடுதலைப் புலிகளை அழித்ததிற்கும், முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவை தடுத்து நிறுத்தும் சந்தர்ப்பம் இருந்தும், வேடிக்கை பார்த்ததற்காகவும்  பிராயச்சித்தமாக இதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பதவி சுகத்தில் மூழ்கி இதுவரை அனுபவித்த சலுகைகள் போதும் இனியாவது தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுவார் என்று எண்ணுகின்றேன். அதுமட்டுமல்லாமல் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைப் பேரவை மாநாட்டிற்கு வருடாவருடம் காவடி எடுக்கும் சம்பந்தன் தலைமை இந்த வருடம் எதைக் கொண்டு செல்லப்போகின்றார்கள்? என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.