21

21

முக கவசம் அணியாது செல்பி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம்  !

தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டின் ஜனாதிபதியே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

“இந்த நாடு சிங்களவர்களுடையது, அவர்கள் தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சரத் வீரசேகர உள்ளார் ” – சி.வி.விக்னேஸ்வரன்

“இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சரத் வீரசேகர உள்ளார் ” என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாக இன்று (21.12.2020), சி.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

குறித்த கேள்விக்கு பதில் வழங்கும்போதே க.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சொல்லும் போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடந்தவுள்ளதாக கூறுகின்றார்கள். ஆகவே அரசாங்கம் அவ்வாறும் கூறுகின்றது இவ்வாறும் கூறுகின்றது . சரத் வீரசேகர கூறுவது தமிழ் மக்களுக்கென்று எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுக்கக் கூடாது. இந்த நாடு சிங்களவர்களுடையது, நாங்கள்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளார்.

அவருடைய கருத்து பிழையானது என்பதனை நான் பல தடவைகள் எடுத்துக்கூறி வந்திருக்கின்றேன். உதாரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் எந்த காலத்திலும் பெரும்பான்மையாக இருக்கவில்லை. சரத் வீரசேகர பிழையான கருத்துக்களை பிழையான அடிப்படையில் வெளியிட்டு வருகின்றார். அவர் அவ்வாறு செய்வதால் நாட்டு மக்களிடையே  நல்லுறவும்  ஒற்றுமையும் ஏற்படாது என்பதனை அவர் மனதிலே வைத்திருக்க வேண்டும்.

எனவே அவருடைய கருத்தை வட.கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த முஸ்லீம் ஒருவரின் சடலத்தை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்க காலி நீதிமன்றம் உத்தரவு !

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த காலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடைய சடலத்தை தகனம் செய்யாமல் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றில் வைக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உறவினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட காலி மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி, குறித்த சடலத்தை தகனம் செய்யாமல் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வரும் வரையில் கராபிட்டிய வைத்தியாசலையில் உள்ள அதி குளிரூட்டப்பட்ட அறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

காலி, தேதுகொட பகுதியை சேர்ந்த 84 வயதுடைய முஸ்லிம் நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.

குறித்த நபரின் சடலத்தை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் தகனம் செய்யுமாறு கராபிட்டிய வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் சந்திரசேன லொகுகே உத்தரவிட்டிருந்ததுடன், உயிரிழந்த நபரை தகனம் செய்வதாயின் சடலத்தை பொறுப்பேற்க முடியாது என அவருடைய மகன் தெரிவித்திருந்தார்.

“உயர் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீயிற்கு மின்சார கசிவு காரணமில்லை” – குற்றப்புலனாய்வுத்திணைக்களம் 

கடந்த 15 ஆம் திகதி கொழும்பு – புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீயிற்கு மின்சார கசிவு காரணம் இல்லை என தெரியவந்துள்ளது.

தீ தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் மின்சார சபையினால் இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தீ தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்தின் பணியாளர்கள் மற்றும் மேலும் சிலரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்தது முல்லை மீனவர் போராட்டம் !

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

IMG 6575 1

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கடந்த 5 நாட்களாக இந்த போராட்டம் இடம்பெற்று வந்தது.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி இந்த போராட்டம் முன்னெடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

“சுமந்திரனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாளாக்க முடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும் ” –  சி. வி விக்னேஸ்வரன்

சுமந்திரனால் எல்லாக் காலத்திலும் எல்லோரையும் முட்டாள் ஆக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காகத் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான  எம்.ஏ.சுமந்திரன் வரைவு ஒன்றின் உள்ளடக்கம் பற்றி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். இந்நிலையில் இருவருமே சுமந்திரனின் வரைவு அரசுக்கான கால அவகாசம் வழங்குதாக கூறி அதனை நிராகரிப்பதாக கூறியிருந்தனர்.

இதற்கு “விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் பொய்யான, விஷமத்தனமான பிரசாரம் செய்கின்றனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் இது பற்றி கூறும்போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

திரு.சுமந்திரன் அவர்கள் சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியரை முட்டாளாக்கப் பார்ப்பது குருத்துரோகம் ஆகும்.

நானும் கஜேந்திரகுமாரும் பொய் சொன்னதாகக் கூறியுள்ளார். அவர் கூறுவது சரியா? அல்லது கஜேந்திரகுமாரும் நானும் கூறுவது சரியா? என்பதை அவரால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கடித வரைவை மொழி பெயர்த்தால் தெரிந்துவிடும். அவர் அனுமதி அளித்தால் குறித்த கடிதத்தை மொழி பெயர்த்துக் கொடுக்க முடியும்.அதில் தமது சிபார்சுகள் என்று கூறி முதலில் அவர் அங்கு கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்லது மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒருகூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே.

அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இதில் எந்த மயக்கமும் இல்லை.

அவர் தமது சிபார்சுகளின் பின்னர் அதாவது சிபார்சுகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்களினால் முன்னர் செய்த காரியங்களை அவர் குறிப்பிடுகின்றார். அதில் சிரியா பற்றியும் மியன்மார் பற்றியும் குறிப்பிடுகின்றார். ஆனால் அந்த நாடுகள் சம்பந்தமாகச் செய்தது போல் இலங்கை சம்பந்தமாகவும் பொறிமுறைகளை இயற்றுங்கள் என்று எங்குமே அவர் கூறவில்லை. இதைத்தான் அளாப்பிறது என்று கிராமங்களில் கூறுவார்கள் சுமந்திரன் அளாப்புகின்றார்!

ஆனால் எம்மிடம் இருந்து பதில் வர முன்னரே குறித்த கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கும் ஏனையோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றேன். எம்மிடம் எமது கருத்துக்களைக் கோரிவிட்டு அதற்கு முன்னர் குறித்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தால் அது வருத்தத்திற்குரியது. ஆனால் இப்பொழுதும் அனைவரின் சம்மதத்துடன் புதியதொரு வரைவை அனுப்பலாம். அத்துடன் மைய நாடுகளுடனும் பேசவேண்டியிருக்கின்றது.
அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்கள்.

பொதுவாக இரண்டு விடயங்களைப் பலர் அடையாளம் கண்டுள்ளார்கள். ஒன்று ஐ.சீ.சி என்னும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையைப் பாரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அல்லது இலங்கைக்கென நியமிக்கப்படும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் முன் இலங்கையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனைச் சம்பந்தப்பட்ட ஒரு அங்கத்துவ நாட்டின் ஊடாகச் செய்ய வேண்டும். அடுத்தது சர்வதேச சுதந்திர விசாரணைப் பொறிமுறையொன்றை நிறுவி அதைக் கொண்டு இலங்கையில் நடந்த மிக ஆபத்தான சர்வதேசக் குற்றங்களையும் சர்வதேசச் சட்ட மீறல்களையும் பற்றிய சாட்சியங்களைச் சேகரித்து அவற்றை ஒன்றுபடுத்தி, பாதுகாத்து அவற்றை ஆய்வு செய்யவும் அவை தொடர்பாக உரிய கோவைகளைத் தயாரித்து சர்வதேசச் சட்ட முறைமைக்கேற்றவாறு நியமிக்கப்படும் நீதிமன்றங்களில் அல்லது தீர்ப்பாயங்களில் நடைபெறும் குற்றவியல் நடவடிக்கைகளில் அக் கோவைகளை சமர்ப்பித்து நீதியும் சுதந்திரமானதுமான விசாரணைகளை விரைவாக நடத்த அனுசரணை வழங்கும் விதத்தில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் சமாந்திரமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையைக் கொண்டு போவது பற்றியும் பரிசலிக்கப்பட வேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையூடாக விசேட ஆய்வாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்பு போன்றவற்றைக் கண்காணிக்கவும் ஆராயவும் இவ்வாறான ஆய்வாளர் ஒருவரை நியமிக்கக் கோரலாம்.

அதுமட்டுமல்ல. ஒரு சுயாதீனமான விசாரணைப் பொறிமுறையொன்றையும் தாபித்து பொறுப்புக் கூறலையும் போர்க்குற்ற செயல்பாடுகளை ஆராயுமாறும் கோரலாம். இவை பற்றி எல்லாம் ஆராய வெளிநாட்டு சர்வதேசச் சட்ட வல்லுநர்களுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன். மைய நாடுகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளது.தமிழ் தரப்பார் யாவரும் சேர்ந்து ஒரு கோரிக்கை விடுத்தால் நாம் அதன்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஜெனிவாவில் இருக்கும் பிரித்தானியத் தூதுவர் கூறியுள்ளார். ஆகவே நாங்கள் மேலும் கால அவகாசம் கொடுக்காது, இலங்கைக்கு எதிராக செய்ய வேண்டியவற்றை மைய நாடுகள் துணை கொண்டு செய்ய வேண்டும். அதற்கு சகல தமிழ்த் தரப்பாரும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும். எமது ஒற்றுமையே இந்த தருணத்தில் எமக்குப் பலமாகும் என தெரிவித்துள்ளார்.

“ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் நாம் நேரில் பேச்சு நடத்துவோம்” – மாவை சேனாதிராஜா

யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு நடத்துவோம். அத்துடன் எதிர்வரும் 23ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னரே யாழ். மாநகர சபையில் மேயருக்கு யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் தீர்மானிப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் எமக்குச் சில சபைகளின் வரவு – செலவுத்திட்டங்கள் நிறைவேறுவதற்கு ஆதரவு வழங்கின. அந்த அடிப்படையில் யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றிலும் அந்தக் கட்சியினரின் ஆதரவைக் கோரி இருந்தோம். ஆனால், அவர்கள் அந்தச் சபைகளில் எங்களைத் தோற்கடித்தனர்.

எதிர்வரும் 23ஆம், 24ஆம் திகதிகளில் குறித்த சபைகளின் உறுப்பினர்கள், எமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இரண்டு சபைகளிலும் மேயர் மற்றும் தவிசாளர் பதவிக்கு யாரைப் பிரேரிப்பது என்பது தொடர்பில் ஆராயப்படும்.

அத்துடன் இரண்டு சபைகளிலும் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈ.பி.டி.பியுடனும் மீண்டும் பேச்சு நடத்துவோம். அந்தப் பேச்சு நேரில் நடைபெறும் என்றார்.