07

07

கொரோனா தடுப்பு மருந்துகளை எமது முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது” – ஈரான் குற்றச்சாட்டு !

கொரோனா தடுப்பு மருந்தைப் பெற நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு அமெரிக்கா தடையாக உள்ளது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஈரான் மத்திய வங்கி கூறும்போது, “உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொரோனா தடுப்பு மருந்துகளைப் பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எழும் பணப் பரிமாற்றப் பிரச்சினைகளால் தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 நாடுகளில் பரிசோதிக்கப்படும் சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி !

கடந்த வருடம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பித்து பாரிய இடரினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் கொரோனா வைரஸை சீனா வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டதாக கூறியிருந்தது.

இந்நிலையில் உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.  தடுப்பூசி தயாரித்து சந்தையிடுவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

மருந்து என்ற விடயத்துக்கப்பால் நாடுகள் தம்முடைய பலத்தை பரிசீலிக்கும் களமாக கொரோனா மருந்து கண்டுபிடிப்பு மாறியுள்ளது.

இந்த போட்டிக்களத்தில் சீனா உத்வேகமாக களமிறங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது அங்கு 4 நிறுவனங்கள் சார்பில் 5 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு, அவை ரஷியா, எகிப்து, மெக்சிகோ உள்பட 12-க்கு மேற்பட்ட நாடுகளில் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை விரைவில் வெளியிட நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாகாண அரசாங்கங்கள் தடுப்பூசிகளுக்காக ஆர்டர்களை குவித்து வருகின்றன.

இருப்பினும் சுகாதார அதிகாரிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்றோ, நாட்டின் 140 கோடி மக்களை எவ்வாறு சென்று அடையப்போகிறார்கள் என்றோ கூறப்படவில்லை. இதற்கிடையே ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை உருவாக்கியவர்கள் சோதனைகளை விரைவுபடுத்துகின்றனர் என்று கூறினார்.

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம் !

இந்திய மத்திய அரசினுடைய  வேளாண் சட்டங்களை மீளப்பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “பஞ்சாப் விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம்” என்று கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில் லண்டன் போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் 30-க்கு மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கோவிட் -19 விதிகளை மீறியதற்காக பலரை போலீசார் கைது செய்ததாக  பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லண்டனில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்… - HRTamil Sri Lankan  Tamil News Website எச்.ஆர்.தமிழ்
மேலும் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த இந்திய வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர்கள்   இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டோமினிக் ராப் வசம் விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து கடிதம் எழுதினர்.
முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதற்கு இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் இருநாடுகளின் உறவும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடும் குளிரிலும் 12 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இந்திய  விவசாயிகளுக்கு ஆதரவாக லண்டனில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!

வடக்கின் சீரற்ற கால நிலையால் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு !

வடக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் 27 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 91 ஆயிரத்து 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மாகாணத்தில் 98 வீடுகள் முழுமையாகவும், 3,414 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அந்தவகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இதுவரையில் 23 ஆயிரத்து 304 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 358 குடும்பங்களைச் சேர்ந்த 1,340 பேர் 21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வடக்கில் சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் மாவட்டமே அதிக பாதிப்புக்களைச் சந்தித்துள்ளது. மாவட்டத்தில் கடுமையான காற்று மற்றும் வெள்ளத்தால் 93 வீடுகள் முழுமையாகவும், 2,969 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

2008ஆம் ஆண்டு நிஷா புயலால் ஏற்பட்ட தாக்கத்தின் பின்னர் தற்போது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

28 ஆயிரத்தை கடந்த இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை !

இலங்கையில் கொரோனா வைரஸினுடைய பரவல் குறையாது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 203 ஆக உயர்ந்துள்ளது.

இதே நேரம் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோருள் மேலும் 344 பேர் குணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 7 ஆயிரத்து 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 461 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 140 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையின் இரண்டாவது கொரோனா கொத்தணிக்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம்” – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே

மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா கொத்தணி உருவாகுவதற்கு உக்ரேன் நாட்டவர்களே காரணம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (07.12.2020) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் பாராளுமன்றில் மேலும் தெரிவிக்கையில் ,

“மினுவங்கொட கொத்தணி உருவான பிரன்டிக்ஸ் நிறுவன தொழிலாளர்களுக்கு இந்தநோய் பரவிய விதம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுகின்றது. வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர்களிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதன் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கும் போது சீதுவ ரமாதா ஹோட்டலில் தங்கியிருந்த உக்ரேன் நாட்டு விமான பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அந்த ஹோட்டலின் பணியாளர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது அங்குள்ள பலருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கும் மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விதத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய மினுவங்கொட பிரின்டிக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு மேற்குறிப்பி;ட்ட விதத்தின் ஊடாக வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என யூகிக்க முடியும்.

பேராசிரியர் நீலிக்க பலவெக்கே வைரஸ் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வின் போது இப்போது நாட்டில் பரவி வரும் வைரஸானது இதற்கு முன்னர் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் வகையை சேர்ந்தவையல்லவென தெரிவித்தார்.

இப்போது பரவும் வைரஸானது ஐரோப்பிய நாடுகளில் பரவும் வைரஸூக்கு இணையானது என அவர் தெரிவித்தத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட விடயத்துக்கு இது சாட்சியாக அமைகின்றது” என கூறினார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும்” – இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர நம்பிக்கை !

“அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும்” என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (06.12.2020) நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும்

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மின்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருப்பதாக கவலை வெியிட்ட இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்திய இராஜாங்க அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.

குறித்த துறைமுகம் சுமார் 4 பில்லியன் செலவில் அமைக்கப்படவள்ள நிலையில், இந்த துறைமுகமானது நூற்றுக்கான பலநாள் கலங்களும் சிறு மீன்பிடிப் படகுகளும் பயன்படுத்த கூடிய நவீன உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் மூழ்கிப்போன முல்லைத்தீவின் கிராமங்கள் !

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையினால் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டதோடு யாழ்ப்பாணம் கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக கனமழை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகபட்ச மாக 402 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பாதிவாகியதோடு சுமார் 700க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல பகுதிகளில் கனமழை பொழிந்துள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் ,பனிக்கன்குளம், திருமுறிகண்டி , இந்துபுரம் பகுதிகளில கன மழை பொழிந்துள்ளது.

இதனால் மாங்குளம் துணுக்காய் வீதியில் ஒரு பகுதியல் உள்ள வீடுகளும்  பனிக்கன்குளம்  கிராமத்தில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும்  பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை திருமுறிகண்டி இந்துபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த நான்கு கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை சூழ வெள்ளம் காணப்படுகின்ற  நிலையில் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் .இந் நிலையில் இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் மிகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளம் சென்று வீடுகளில் தங்க முடியாத நிலையில் இருந்த சுமார் பத்து குடும்பங்கள் வரையில் இந்துபுரம் பொது நோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கிராமத்தில் இவ்வாறு குடும்பங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இரவு 9 மணி அளவில் குறித்த பகுதிக்கு சென்ற இந்துபுரம் கிராம இளைஞர்கள் மற்றும் குறித்த பகுதி  புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் செல்லையா பிறேமகாந் உள்ளிட்டவர்கள் சென்று மக்களை குறித்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந் நிலையில் குறித்த பொதுநோக்கு மண்டபத்துக்கு ஒட்டுசுட்டான் பிரதேச  செயலாளர் த.அகிலன்  மற்றும் மாங்குளம் காவல் நிலைய அதிகாரிகள் வருகை தந்து மக்களது நிலைமைகளை நேரில் பார்வையிட்டு சென்றனர்.
சுமார் பத்து குடும்பங்கள் வரையில் பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளதோடு இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி கிராமங்களில் பல வீடுகளை வெள்ளம்  சூழ்ந்துள்ள நிலையில் பலர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.இவ்வாறு பலர் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டு இருக்கின்ற நிலைமையில்  இன்னும் பலர் பாதிக்கப்பட்டு வதற்கு  வாய்ப்புகள் காணப்படுகின்றது.