16

16

அமெரிக்காவின் 95 சதவீதம் கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசி !

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.  இந்நிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மார்டனா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்திருந்தது.  அதே நேரத்தில் ரஷ்யா தன்னுடைய நாட்டு தடுப்பூசி 92சதவீதம் வெற்றியளித்துள்ளதாக புடின் அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“பதவியேற்று ஓராண்டு பூர்த்திக்காக நிகழ்வுகள் எதுவும் செய்து வீண் செலவுகளை செய்ய வேண்டாம்” – ஜனாதிபதி வேண்டுகோள் !

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தி நெருங்கும் நிலையில், அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டினார். இதனையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி அனுராதபுரத்தில் கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாளை மறுதினம் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டு ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த நிலையிலேயே அவர் விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் எவ்வித நிகழ்வுகளையும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வீண் செலவுகளை செய்ய வேண்டாம் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

“ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” – எஸ்.எம். மரிக்கார்

“ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று இலங்கையில் மறக்கமுடியாத ஒரு தினமாகும் .ஜனாதிபதி பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் நாட்டு மக்கள் கடுமையான வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதேவேளை மைத்திரி- ரணில் அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில், கடந்த வருடம் இதே போன்றதொரு தினத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிபீடமேறினார்.

இவர் பதவியேற்று ஒருவருடம் கடந்துள்ள நிலையில், நாடே இன்று பாதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு செயற்பாடும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லை. மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியை பதவியில் அமர்த்திய தரப்புக்குக் கூட, பாற்சோறு சாப்பிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த குறுகிய காலத்தில் 64 வீத மக்களின் வாழ்வாதாரம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருக்கும் மக்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்கவில்லை.

குறைந்தது அவர்கள் பெற்றுள்ள வங்கிக் கடன், வாகனக் கடனை பிற்போடக்கூட அரசாங்கம் முயற்சிக்கவில்லை. இவ்வாறு அனைத்து வழிகளிலும் அரசாங்கம் மக்களை கஸ்டத்துக்கே உட்படுத்தி வருகிறது.

2000 பில்லியனுக்கும் அதிகமான கடனை இந்த ஒரு வருடத்தில் மட்டும், அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது. இதேநிலைமை தொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டாகும்போது, நாடுபாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும்”  எனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

“இஸ்லாமியர்களின் மனதை நோகடித்து அவர்களை கோபத்துக்குள்ளாக்காதீர்கள். அது எமக்குப்பாவம் ” – பகவந்தலாவ ராகுல ஹிமி

“சடலங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம். இஸ்லாமியர்களின் மனதை நோகடித்து அவர்களை கோபத்துக்குள்ளாக்காதீர்கள். அது எமக்குப்பாவம் ” என பகவந்தலாவ ராகுல ஹிமி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இஸ்லாமியர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது உடலை என்ன செய்ய வேண்டும் என அம்மதத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. என்ன கொடுமை மனிதன், மனிதனால் பழிவாங்கப்படுகிறான். இப்போது நாட்டில் புதிய கதையொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடலை எரிப்பதா? அடக்கம் செய்வதா? என்று. இறந்தவர்களின் உடலை எரிப்பது பாவமென்று இஸ்லாமிய தர்மம் கூறியுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

அங்கு சடலங்கள் எரிக்கப்படவில்லை. சுகாதாரத்துறை என்ன கூறுகிறதோ அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இலங்கை நாட்டில் மாத்திரம் தகனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் தலைவர்களே இவ்விவகாரம் தொடர்பில் சரியான ஒரு பதிலை இந்நாட்டு மக்களுக்கு வழங்குங்கள். என்ன நடைமுறை என இலங்கை அரசாங்கம் சரியான சட்டமொன்றினை நடைமுறைப்படுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மக்களின் மனதை ஆறுதல்படுத்தும் வகையில் வார்த்தையொன்றினைக் கூறவேண்டும்.

மண்ணில், புதைத்தால் விஷக்கிருமிகள், வைரஸ் வெளியில் பரவும் என்கிறார்கள். வைரஸ் தொற்றாளர்கள் மருந்துவமனையில் இருக்கும்போது கழிப்பறை செல்வதில்லையா? மலசலம் கழிப்பதில்லையா? இதன் மூலம் விஷக்கிருமிகள் வைரஸ் பரவமாட்டதா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் தமது வீடுகளில் கழிப்பறை செல்லவில்லையா? பக்கத்தில் வேறு வீடுகள் இல்லையா? அந்த வைரஸ் பக்கத்து வீடுகளுக்கு செல்லாதா? ஏன் இத்தனை முட்டாள்களாக கதை கூறுகிறார்கள். இதுவா நாட்டின் சட்டம். மக்கள் மனதை நோகடிக்காதீர்கள். கொவிட் -19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது” – லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொதுவெளியில் எவராவது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராகப் காவல்துறையினரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது.

எனவே, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், அவ்வமைப்புக்குப் பரப்புரை செய்யும் நோக்கிலும் பொதுவெளியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமானால் – சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மாவீரர்களை நினைவுகூர்வதற்கான உரிமை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் கூட்டமைப்பின் இன்னுமொரு  பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரன் மாவீரர் தினத்தை நடாத்த அனுமதி வழங்குமாறு  கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதியோப்பியாவில் ஓடும் பேருந்தில் துப்பாக்கிதாரி தாக்குதல் – 34 பேர் பலி !

எத்தியோப்பியாவில் டைக்ரே மாகாணத்தில் உள்ள கிளர்ச்சி படையினருக்கும், அரசுப்படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நீடித்து வருகிறது.  இந்த மோதலில் டைக்ரே மாகாண படையினர் பலர் உயிரிழந்து வருகின்றனர். அதேவேளை எத்திய அரசுப்படையினரும் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால், உள்நாட்டு சண்டையின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் பனிஷாங்குல் – குமுஸ் மாகாணத்தில் மிடகேல் பகுதியில் நேற்று இரவு ஒரு பேருந்தில் 35-க்கும் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.  அப்போது, அந்த பஸ்சை இடைமறிந்த ஒரு நபர் தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பேருந்தில் இருந்த பயணிகளை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். ஆனாலும், இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபர் யார்? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால் டைக்ரே மாகாணத்தை சேர்ந்த யாரேனும் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(15.11.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியமைத்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர். இதுவரையில் அதில் எதனையாவது செய்துள்ளார்களா?

நல்லாட்சி அரசுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பன கொள்கை அடிப்படையில் காணப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவோம் என்று கூறினர். ஆனால், பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய இலங்கையிலுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராகக்கூட இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைவர்கள் ஆளும் தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றமையே இதற்குக் காரணமாகும். ஆளும் தரப்புக்கும் இந்தச் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளது என்று கூறுவதற்கு நாம் பின்வாங்கமாட்டோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் எம் மீது சுமத்தப்பட்ட மற்றைய குற்றச்சாட்டாகும். இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகள் அனைத்துமே ஒரு பகுதியில் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. அதாவது வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மாறுபட்ட கோணத்தில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை, 2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவரைக் கைதுசெய்திருக்க வில்லை. அவர் இந்தியாவுக்குத்  தப்பிச் சென்றிருந்தார். அவருக்கு உதவி வழங்கிய நபர்கள் யார்? இதேவேளை, இவருடன் தொடர்பைப் பேணிய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்பிலும் கூறப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளலாம்தானே.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருடன் இலங்கையில் சிலர் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வாறான 45 நபர்கள் தொடர்பிலும் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியிருந்தது. எனினும், அது தொடர்பில நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்ன? இந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும்” என்றார்.

கொரோனா மூன்றாம் அலையினைத் தொடர்ந்து கொரோனா பரவலில் இலங்கைக்கு 100ஆவது இடம் !

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 171 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை பதினொராயிரத்து 495 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 734 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இன்று ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 58ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலையினைத் தொடர்ந்து ஏற்பட்ட வைரஸ் பரவலினால் உலகள அளவில் 134ஆவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 100 ஆவது இடத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாலியில் பிரான்ஸ் படையின் தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொலை !

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அல்கொய்தா, ஐ.எஸ் மற்றும் அதன் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், அந்நாட்டில் 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. உள்நாட்டு ராணுவம் மட்டுமல்லாமல் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் மாலியில் தங்கள் ராணுவ தளங்களை அமைத்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
2015-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். 416 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மீதான தாக்குதலை பிரான்ஸ் அதிகப்படுத்தியது. குறிப்பாக மாலி நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இந்நிலையில், போப்டி நகரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நைகி என்ற பகுதியில் பிரான்ஸ் அதிரடி படையினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த தேடுதல் வேட்டையின் போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், வாகனங்களை கைப்பற்றி அழித்ததாக பிரான்ஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜோபைடன் வெற்றியை ஏற்றுக்கொண்டார் ட்ரம்ப் – டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு !

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளுடன் வெற்றி பெற்றார். ஆனால் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் 232 தேர்தல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்தபோதும் தனது தோல்வியை ஏற்க ஜனாதிபதி டிரம்ப் மறுத்து வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தேர்தல் மோசடியானது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஃப்க்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தின் டுவிட்டரை மேற்கொள் காட்டி அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“அவர் (ஜோ பைடன்) வெற்றிபெற்றுள்ளார். ஏனென்றால் இந்த தேர்தல் மோசடியானது. வாக்கு எண்ணிக்கையில் வாக்கு கண்காணிப்பாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இடதுசாரி சித்தாந்தம் கொண்ட டொமினியன் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் வாக்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நன்மதிப்பற்ற அந்நிறுவனத்தின் மோசமான உபகரணங்களால் டெக்சாசில் கூட தகுதிபெற முடியாது (நான் அதிகவாக்குகளில் வெற்றிபெற்ற இடம்). மேலும், போலி, அமைதியான ஊடகங்கள் மற்றும் இன்னும் சிலவற்றால் பைடன் வெற்றிபெற்றுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.