12

12

“தமிழ்மக்களின் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பான கோரிக்கையை நாட்டின் தலைவர் என்ற வகைக்கு அப்பால் ஒரு தந்தை என்ற வகையில் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்” – ஜனாதிபதிக்கு பா.உ .சிறீதரன் கடிதம் !

“தமிழ் மக்களின் உரிமைகளில் ஒன்றான மாவீரர் நாளினை நினைவு கூறுவதற்கான அனுமதி வழங்கும் கோரிக்கையை பிள்ளைகளினுடைய தந்தையாகவும், கௌதம புத்தர் அவர்களின் நல் இயல்புப்போதனைகள் ஊடாக வந்த ஒரு பௌத்தனாகவும் இவ்விடயத்தினை அணுகுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்”  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழுவடிவம் வருமாறு,

2020.11.04
மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்,
ஜனாதிபதி செயலகம்,
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு,
கொழும்பு.01

அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துதல்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே!

கடந்த நான்கு வருடங்களாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பையோ, பயங்கரவாததடைச் சட்டத்தையோ மீறாத வகையில் நாம் எமது உறவுகளை நினைவு கூர்ந்த முன்னுதாரணமான முறையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். விசேடமாக 2019ம் ஆண்டு தாங்கள் இலங்கை நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் 2019 நவம்பர் 27ம் திகதி எமது உறவுகள், தமது பிள்ளைகளை நினைவு கூருவதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு கிடைத்திருந்தமை பாராட்டத்தக்கது.

இலங்கை நாட்டில் நடைபெற்ற இனரீதியான ஆயுதப்போர் முடிவடைந்து, போருக்குப் பின்னர் இந்த நாட்டின்அதிபராக தலைமையேற்றிருக்கும் தாங்கள் போருக்கான அடிப்படைக் காரணிகளை இல்லாமற்செய்து இலங்கைத்தீவின் முன்மாதிரியான தலைவராக விளங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் எமது மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புக்களையும் உங்களுக்கு இக் கடிதம் மூலம் வெளிப்படுத்துகின்றேன்.

கடந்த முப்பது ஆண்டுகால கடும் போரின் விளைவாக பொருளாதார ரீதியாகவும், வேலைவாய்ப்பு, கல்வி, கலை, கலாசார, மொழி, நில அடையாள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட, போரின் நினைவுகளும்,
வடுக்களும் கொண்ட சமூகம் என்ற வகையில் நாமும், எம் தமிழ் உறவுகளும் வலிதாங்கி நிற்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான உறவுகளின் உயிரிழப்பு, அவய இழப்பு, மாற்றுத்திறனாளிகளின் உருவாக்கம், ஆயிரக்கணக்கான விதவைகளின் தோற்றம், அன்னை, தந்தையை இழந்த நிலையில் அநாதரவாக்கப்பட்ட
சிறுவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர், இன்னும் விடுவிக்கப்படாத நிலங்கள் என அத்தனை அவலங்களையும் எம்மிடையே உருவாக்கிய கொடூரமான யுத்த முடிவிற்குப் பிற்பாடு நாட்டின் அமைதி, சமாதானம், சகவாழ்வு என்பவற்றை நிலைநாட்டுவது குறித்து தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் போல் இலங்கைத்தீவில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே சமத்துவம், சம உரிமையுடைய மன உணர்வைக் கட்டியெழுப்பும் நிலையில் நாங்களும் அதீத அக்கறை கொண்ட, இந்த நாட்டின் தேசிய இனமாக பங்களிப்புச்செய்ய விளைகிறோம்.

போருக்கான காரணிகள் எவையாக இருப்பினும் போரில் பங்குபற்றியவர்களதும், போர் நிகழ்ந்த நிலத்தினதும் விளைவுகள் அப்பகுதி மக்களைச் சார்ந்ததாகவே இருக்கிறது. இனச்சமத்துவத்தை அங்கீகரிக்கத் தவறிய முற்போக்குத்தனமற்ற அரசியல் தலைவர்களின் வழிநடத்தல்கள் இளைய சமூகத்தவர் பலரை பலியெடுத்திருந்தது. அது போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்பிலும் நிகழ்ந்தது என்பதை நாம் அறிவோம்.
இப்பொழுது மக்களின் மனக்காயங்களுக்கும் அவர்களின் ஆற்றாமைகளுக்கும் ஆறுதலளிப்பது, அமைதி தருவது, நம்பிக்கையை ஊட்டுவது, இறந்தவர்களை நினைவு கூரும் அவர்களின் அடிப்படை உரிமையொன்றே ஆகும்.

அவ்வுரிமை என்பது ஒவ்வொரு குடும்பத்தவர்களதும் சமய, சமூக, பண்பாட்டு விழுமியங்களைத் தழுவியது என்பதால் அத்தகைய பிரார்த்தனைகளையும், சடங்குகளையும் மேற்கொள்கின்ற போது அவை அதிகாரத்துவமுடைய அதிகாரிகளினால் பயங்கரவாத விடயங்களோடு ஒத்துப் பார்க்கப்படுதல்,
அல்லது போராட்டம் ஒன்றினை மீள உருவாக்கம் செய்வதற்கான செயல் முனைப்பாக காண்பிக்கப்படுதல் என்பன தவறான அர்த்தப்படுத்தல்களாகும்.

வாழும் வயதுடைய இளம் பராயப் புதல்வனை, புதல்வியை, தனது இளவயதில் கரம் பிடித்துக்கொண்ட காதல் கணவனை, இழந்து துயருறுகின்ற நெஞ்சம் எவ்வாறு இருக்கும் என்பதை நாட்டின் தலைவர் என்ற வகைக்கு
அப்பால் ஒரு தந்தை என்ற வகையில் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

காலச்சூழலில் கரைந்து போன உறவுகளினை நினைத்து கண்ணீர் வடிக்கவும், விளக்கேற்றவும் துடிக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளினுடைய தந்தையாகவும், கௌதம புத்தர் அவர்களின் நல் இயல்புப்போதனைகள் ஊடாக வந்த ஒரு பௌத்தனாகவும் இவ்விடயத்தினை அணுகுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இனி ஒரு போதும் போரொன்றை விரும்பாத எமது மக்களின் சார்பில் பயங்கரவாதம் எனப்படுகின்ற இயல்புகளுக்கு ஒத்திசையாத வகையில் எங்களின் பிள்ளைகளை அவர்கள் புதைக்கப்பட்ட நிலங்களில்
சென்று வழிபடுவதற்கு, விளக்கேற்றுவதற்கு, கண்ணீர் விட்டு அழுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை இவ் அரசு அளித்திருப்பது நிறைவைத் தருகின்றது என எமது மக்கள் நம்பும் வகையில் தங்களுடைய செயல் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

இம் முறையும், இனிவரும் காலங்களிலும் எமது மக்கள் தமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதற்கான தங்களதும், முப்படைகளதும்
காருண்யமான ஒத்துழைப்பு கடந்த நான்கு ஆண்டுகளைப் போல தொடர்ச்சியாக கிடைக்குமென்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாய் எமது மக்களின் சார்பில் இக்கடிதத்தை சமர்ப்பிக்கின்றேன்.
தாங்களும் தங்கள் அரசும் காண விளைகின்ற சமத்துவமும், சமநீதி உடைய இலங்கை நாட்டில் எங்கள் பிள்ளைகளுக்காக நாம் ஏற்றும் சுடர்களின் ஒளியும் பரவட்டும்”

இங்ஙனம்,
மக்கள் பணியிலுள்ள,
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.

“குறுகியகால கடன்களால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மோசமான கடன் நெருகடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்” – அரசாங்கத்தை எச்சரிக்கின்றார் சம்பிக்க ரணவக்க!

‘வெளிநாடுகளில் இருந்து அரசாங்கம் பெறும் குறுகியகால கடன்களால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் மோசமான கடன் நெருகடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உருவாகும்” எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (11.11.2020) இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் பெற்றுக்கொள்ளவுள்ளது. மேலும் இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் அரசாங்கம்  பெற்றுக் கொண்டுள்ளது.

மேலும், நாட்டின் சகல துறைகளும் தற்போது வீழ்ச்சி கண்டுள்ள நிலையிலும்  நாடு மீட்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கின்றது.

இதேவேளை, நாட்டில் பொய்யான தரவுகளைக் கூறி சர்வதேச முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது . நாட்டின் கடன் நெருக்கடி மோசமான நிலையில் தலைதூக்கியுள்ளதுடன் கையிருப்பு 5.8 வீதத்திற்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

மேலும், தற்போது அரசாங்கம் குறுகியகாலக் கடன்களைப் பெற்று நிலைமைகளைச் சமாளிகின்றது. எனினும், இவ்வாறான குறுகிய காலக் கடன்களினால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீண்டும் மோசமான கடன் நெருகடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமையே உருவாகும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கொரோனா எவ்வளவு கடுமையானதோ அதை விட மக்களின் பசி கடுமையானது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் ” – பாராளுமன்றத்தில்  சஜித் பிரேமதாச !

“கொரோனா எவ்வளவு கடுமையானதோ அதை விட மக்களின் பசி கடுமையானது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் ” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில்  தெரிவித்துள்ளார்.

இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் இன்று(11.12.2020) பாராளுமன்றத்தில் உறையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக  அவர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில்,

“அரிசி விலை குறைப்பதாகக் கூறினார்கள், பருப்பு, சமன் மற்றும் சீனியின் விலையை குறைப்பதாகக் கூறினார்கள். போட்டிபோட்டு வர்த்தமானி பத்திரங்களை வெளியிட்டார்கள். ஆனால், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலைப் போன்று விலை அதிகரிக்குமென்றால் குறைகின்றது. விலை குறையுமென்றால் அதிகரிக்கிறது.

பொருட்களை விலை குறைப்பு குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் போது முழு நாட்டு மக்களும் கட்டாயம் பொருட்களின் விலை அதிகரிக்கப்போகின்றது என்பதை தெரிந்துகொண்டார்கள். விசேடமாக பிரதமரிடம் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். கொரோனா என்பது கடுமையானது என எம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மக்களின் பசியும் கடுமையானது என்பதை ஞாபத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பொது மக்களின் பசியை புரிந்துகொள்ளாத அரசாங்கம் என்பதை இன்று நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.