![முடிவுக்கு வந்தது போர்: அசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா ; ரஷியா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து - PUTHIYA PARIMAANAM](https://puthiyaparimaanam.com/wp-content/uploads/2020/11/r-1.jpg)
![Armenia azerbaijan forces in nagorno karabakh conflict turkey russia | World News](https://www.behindwoods.com/uploads/5f75915aabf61.jpg)
“அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்கா தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சுரேஷ் க.பிரேமச்சந்திரன் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவிற்கான 46ஆவது ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோஸப் ரொபினட் பைடன் ஜனாதிபதியாகவும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹரிஷ் துணை ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஈழத் தமிழ் மக்களின் இதயபூர்வ வாழ்த்துகள்.
ஆபிரிக்க கறுப்பின வழித்தோன்றலான ஒபாமாவை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்த அமெரிக்க மக்கள், தென்னாசியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை துணை ஜனாதிபதியாக்கி ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
தேர்தலில் வென்ற அமெரிக்கத் தலைவர்களுக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பும் இலங்கையின் அரசியல் தலைவர்கள், இந்தப் புதுமைகளையும் பழகிக்கொள்ளவேண்டும். ஆனால் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று இலங்கையில் அரசியல் செய்வோர் மிக மோசமான இனவாதிகளாக உருவெடுப்பது வெட்கக்கேடானதும் வேதனைக்குரியதுமாகும்.
இலங்கை அரசாங்கத்தால் ஈழத் தமிழ் மக்கள் மேல் யுத்தம் திணிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் வகைதொகையின்றி கொன்று குவிக்கப்பட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச சாட்சியங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, சாட்சியமற்ற யுத்தம் ஒன்று நடாத்தி முடிக்கப்பட்டது.
இதனால் மனித உரிமை மீறல்களும், யுத்தக்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வகைதொகையின்றி அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு யுத்தத்தால் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பல தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா முன்னின்று உழைத்ததை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்.
ஆனால் இப்பொழுது, ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு தன்னால் உடன்படவோ அல்லது அதற்குக் கட்டுப்படவோ முடியாதென கூறி இலங்கை அந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் ஆயிரத்து ஐநூறு நாட்களைக் கடந்தும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
உலகமெல்லாம் மனித உரிமைக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமெரிக்க ஜனநாயகக் கட்சியினரும் அதன் தெரிவு செய்யப்பட்ட இன்றைய தலைவர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஷ் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மற்றும் நீதி கோரிநிற்கும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர்களது இழப்புகளுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு சர்வதேச விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு, அவர்களுக்கான நீதி மற்றும் நிவாரணம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.
யுத்தக் குற்றங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்தை சர்வதேச மன்றங்களில் பாதுகாப்போம் என இலங்கைக்கு விஜயம் செய்த சீனத் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு உறுதிமொழி அளித்திருக்கின்றார்கள். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவிதமான நீதி விசாரணைகளும் நடாத்த உலக நாடுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.
மனித உரிமைகள் குறித்து பேசினால் கூட சீன அரசாங்கம் தாங்கள் அரசுகளுடன் மாத்திரம்தான் உறவுகளைப் பேணுவதாகவும் மனித உரிமைகள் என்பது உள்நாட்டு விவகாரம் என்று தட்டிக்கழிக்கும் போக்கையே காணமுடிகின்றது. இந்த நிலையில், அமெரிக்க நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதியும் மற்றும் துணை ஜனாதிபதியும் ஈழத் தமிழ் மக்களின் அவலங்களைப் போக்கும் வகையில் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமென்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிநிற்கின்றோம்.
கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
51 வயதுடைய ஆண், கொழும்பு 10 ஐ சேர்ந்த 45 வயதுடைய ஆண், கம்பஹாவை சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும் 55 – 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 290 தொகுதிகளைக் கைப்பற்றி 46ஆவது ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஷ் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இருவரையும் வாழ்த்தி கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரான இரா.சம்பந்தன் “இலங்கையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம்.
2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க தமிழர் விவகாரத்தை அமெரிக்காவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்திருந்தது. அப்போது அமெரிக்காவில் பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சியே ஆட்சியில் இருந்தது.
இந்தநிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாகவும், கமலா ஹரிஸ் உப ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவர்கள் இருவரும் ஜனநாயகவாதிகள். அரசியல் ரீதியில் நீண்ட காலம் அனுபவம் பெற்றவர்கள். ஜோ பைடன், செனட் சபையிலும் இருந்திருக்கின்றார்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டு தடவைகள் உப ஜனாதிபதியாகவும் பதவி வகித்திருக்கின்றார்.
கமலா ஹரிஸ், இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணின் மகள். நீண்ட காலம் அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் சமத்துவம், நீதி, நியாயம், மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குப் போதிய மதிப்பு வழங்கிச் செயற்படக்கூடிய தலைவர்கள்.
இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம். இலங்கையில் சமத்துவத்தின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.
இலங்கைத் தீவில் நீண்டகாலமாக அவ்விதமானதோர் அரசியல் தீர்வு இன்னமும் ஏற்படவில்லை. அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் – உறுதியான மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசியல் தீர்வு ஏற்படுவதற்கு ஜோ பைடனும் கமலா ஹரிஷும் உதவுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். ஏனெனில் இவர்கள் உதவக்கூடிய பக்குவம் உடையவர்கள். அதில் ஆற்றல் உடையவர்கள்; அறிவுடையவர்கள்” எனவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் தமிழ் அரசியல்கைதிகள் தொடர்பான அரசின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பியிருந்தார். அது தொடர்பாக பல விமர்சனங்கள் தமிழர் அரசியல் தலைமைகளால் முன்வைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சீ.வி.விக்னேஸ்வரன் போன்றோர் சுரேன்ராகவன் தொடர்பான தங்களுடை்ய நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் “சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்” என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் சுரேன்ராகவன் கருத்து தொடர்பாக தன்னுடைய நிலப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
“முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் தற்போதைய அரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுரேன் ராகவன் தான் வந்த வேலையை பார்க்காமல் இனப்படுகொலை செய்த மொட்டு கட்சியில் இருந்து வந்து இப்பொழுது எங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
தமிழ் கட்சிகளினுடைய தலைவர்கள் எல்லோரும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.தவறாக செயற்படுகிறார்கள் என அவர் தெரிவித்திருக்கிறார். நான் ஒன்றைகேட்க விரும்புகின்றேன். நீங்கள் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த போது மக்களே உங்களுடைய குறைபாட்டை தாருங்கள் நான் அதை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னவர் நான் உட்பட பலர் கொடுத்த குறைபாடுகளை குப்பை கூடையில் போட்டாரோ? என தெரியவில்லை. இப்பொழுது அரசியல் கைதிகளை விவகாரத்தை பற்றி பரிசீலிப்பதற்கு 9 மாதங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
கௌரவ சுரேன் ராகவன் அவர்கள் விரும்பினால் வடக்கில் தேர்தலில் போட்டியிடலாம் மக்கள் ஆதரவு இருந்தால் வெல்லலாம் அல்லது உங்களுடைய பூர்வீகமான இடத்தில், கொழும்பில் போட்டியிடலாம்.அது அவருடைய விருப்பம். எனினும் வடக்கு-கிழக்கு மக்களுடைய பிரதிநிதிகள் பற்றி விமர்ச்சிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம். இல்லாவிட்டால் அவரைப் பற்றி நாங்கள் இன்னும் பல விடயங்களை சொல்லவேண்டிவரும். அவருடன்நேரடியான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
ஆகவே அவருடைய விமர்சன கருத்துக்களை இத்துடன் நிறுத்தவேண்டும். இதை நாங்கள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் ராகவனுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்” என தெரிவித்துள்ளார்.
“நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும்” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (09.11.2020) வடக்கிற்கு வருகை தந்திருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ச , வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தென்பகுதியில் இருந்து வட பகுதிக்கு வருகின்ற அமைச்சர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுகின்ற அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் கொரோனா இருந்தது. அவர்கள் எங்களைவிட மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இப்போது அவர்கள் வாழ்க்கை முன்னேறிக்கொண்டு தான் செல்கிறது. நாங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.
பொதுமக்களோ, சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கமுடியாது. அதனை சுகாதார அமைச்சுதான் தீர்மானிக்கவேண்டும். அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டுதான் அரசாங்கம் முடிவெடுக்கும்.
ஆனால், பொருளாதாரத்தை முடக்குவதுதான் எதிர்க்கட்சியினரின் நோக்கமாக இருக்கிறது. நாடு முடக்கப்பட்டாலும் அவர்கள் வெளியில் நடமாடுவார்கள். அவர்கள் கருமங்களை அவர்கள் செய்வார்கள். இதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை விரும்பவில்லை. பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகிறோம்” எனத தெரிவித்தார்.
“யதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொண்டு செயற்படவேண்டும் . நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு விசேட செயலணி கூடிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
”நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 03 உள்ளன. ஒன்று ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது, மூன்றாவது நோயை கட்டுப்படுத்தும் அதே நேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் மூன்றாவது மாற்றுவழியை தெரிவுசெய்திருக்கின்றோம்.
கொவிட் நோயாளிகளை இனம்கண்டு உரிய சிகிச்சையை வழங்கி முதற் கட்டத்திலேயே குணப்படுத்த மருத்துவர்களுக்கும் பணிக்குழாமினருக்கும் முடியுமாக உள்ளது. எனவே தீவிர சிகிச்சை சேவைகள் தேவையில்லை. நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கும் தொற்றுக்குள்ளாவதை தவிர்ந்திருப்பதற்கும் மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதற்காக பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை மருத்துவர்களின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்வது ஊடகத் துறையின் முக்கிய பொறுப்பும் கடமையுமாகும்.
ஆரம்பத்தில் கொவிட் நோய்த்தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் பின்னர் ஊடகங்களும் மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டதும் பொறுப்பை தவறவிட்டதும் தற்போதைய நிலைமைக்கு காரணமாகும். நோய்த்தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடி வைக்க முடியாது. யதார்த்தத்தை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும்.
இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும் மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது எனது பொறுப்பாகும். பி.சி.ஆர் பரிசோதனைக்காக அரசாங்கம் நாளொன்றுக்கு 60மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது. மக்கள் இந்த நிலைமையை புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும்.
கொவிட் நோய்த்தொற்று ஒரு சுகாதார பிரச்சனையாகும். அதிலிருந்து மக்களை பாதுகாத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது சுகாதார சேவையினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். உலகின் உயர்தரம் வாய்ந்த அறிவைக் கொண்டுள்ள எமது நாட்டின் வைத்தியர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் அதனை செய்ய முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கொவிட் விசேட செயலணி உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
“தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்” என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று(10.11.2020) அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் , ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிடடடுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் ஒன்று படவேண்டும். எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.
உண்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.