30

30

“இறைமையை பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி உள்ளதால் பொம்பியோவை விட பலம் வாய்ந்தவர் வந்தால் கூட பயமில்லை”-அமைச்சர் விமல் வீரவங்ச !

“இறைமையை பாதுகாக்கக் கூடிய ஜனாதிபதி உள்ளதால் பொம்பியோவை விட பலம் வாய்ந்தவர் வந்தால் கூட பயமில்லை” என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (29.10.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகையை காட்டி சிலர் வீணான பீதியை பரப்ப முயன்றார்கள்.அவரை விட பலம்வாய்ந்த நபர் வந்தாலும் அது குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை.

நாட்டின் இறைமையை பாதுகாக்கக் கூடிய தலைமை நாட்டில் உள்ளதால் யார் வந்தாலும் எமக்கு பயம் கிடையாது. கடந்த காலத்தில் இவ்வாறானவர்கள் வந்து சென்ற போது எவரும் குரல் கொடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் எம்.சீ.சீ பூர்வாங்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கடந்த காலத்தை போல பொம்மை ஆட்சிய இன்று இல்லை. நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்பத்தான் பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் கொடுக்கும். நாட்டின் இறைமை குறித்து சிந்திக்கும் தலைவர் உள்ள நிலையில் எவர் வந்தாலும் நாட்டுக்கு பாதகமான ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கைச்சாத்திடமாட்டார்கள் என்றார்.

மீண்டும் நடைமுறைக்கு வருகிறது “Work from home” !

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறையை மீண்டும் செயற்படுத்துமாறு மேல் மாகாண மற்றும் ஏனைய பிரதான நகரங்களின் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசேடமாக, இந்த வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையை ஜனாதிபதி செயலாளர் பீ.பீ.ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து மே மாதம் வரையில் செயற்படுத்தப்பட்ட ´வீட்டில் இருந்தே வேலை செய்யும் காலத்தினுள் கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி அத்தியாவசிய மற்றும் வேறு சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மாற்றுத் திட்டங்களை வகுக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது மேலாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரால் நியமனம் !

பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று நேற்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற உயர் பதவிகளை நியமிப்பதற்கு குறித்த பாராளுமன்றப் பேரவை ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும்.

சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோரினால் நியமிக்கப்படும் தலா ஒருவர் என இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக ஐவர் குறித்த பாராளுமன்ற பேரவையில் அங்கம் வகிப்பார்கள். அதனடிப்படையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

19ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புப் பேரவைக்குப் பதிலாக தற்போது நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.