தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்தி பார்க்குமாறு இலங்கை அரசிடம் பிரணாப் முகர்ஜி கோரிக்கை இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பான வலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகள் நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தியிருக்கிறார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய முகர்ஜி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது இந்தியாவுக்கு எந்த அனுதாபமும் இல்லை என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடுகடத்துமாறு வருடாந்தம் இலங்கை அரசாங்கத்தை புதுடில்லி கேட்டுக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்தியும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் முகர்ஜி மேலும் கூறியதாவது;
“பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகள் மீது இந்தியாவுக்கு எந்தவிதமான அனுதாபமும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் தமிழ்க் குடிமக்கள் பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்தியா கேட்டிருக்கிறது. தமிழ்க் குடிமக்களையும் விடுதலைப் புலிகளையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.
அண்மையில் நான் கொழும்புக்கு விஜயம் செய்த பின்னர் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த இலங்கை அரசாங்கம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வலயங்களுக்கு வருமாறு தமிழ்க் குடிமக்களைக் கேட்டுக் கொண்டது. உணவையும் பாதுகாப்பையும் அந்த மக்களுக்கு வழங்குவதற்காகவே இலங்கை அரசாங்கம் அத்தகைய ஏற்பாடொன்றைச் செய்தது. பாதுகாப்பான வலயங்களை நோக்கி தாக்குதல்களை நடத்த வேண்டாம். மனிதாபிமான உதவிகள் குடிமக்களைச் சென்றடைய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பதவிக் காலத்தில் 1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்’.