
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரவுண் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளின் பிரச்சினையை பாகிஸ்தான் கையாளவேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். “இது மனித இருப்புக்கான யுத்தம். நாம் தோற்றால் அது உலகின் தோல்வி. தோல்வி இதில் தெரிவு அல்ல’ என்று வோல் ஸ்ரீட் கேர்னலுக்கு கோல்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தானின் பலம் வாய்ந்த இராணுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றால் அவரின் நிலைப்பாடு பலவீனப்படுத்தப்பட்டுவிடுமென்று மேற்குலக இராஜதந்திரிகள் அச்சப்படுகின்றனர். ஏனெனில், பாகிஸ்தான் இராணுவமும் ஐ.எஸ்.ஐ. யும் லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்று “லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.
ஏனெனில், ஐ.எஸ்.ஐ. யின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தத் தாக்குதல் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென்று தனது ஊகத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு இந்தியப் புலனாய்வுத் துறையின் பின்னணி இருந்திருக்கக்கூடும் எனவும் மும்பைத் தாக்குதலுக்கு பதிலடியாக இதனைச் செய்திருக்கலாமென்றும் அவர் கூறியிருந்தார். “இது இந்திய உளவுத்துறையின் வேலையென்பது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது’ என்று ஓய்வுபெற்ற ஜெனரல் ஹமீட் குல் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக போதியளவு ஆதாரமில்லையாயினும் இந்த மாதிரியான விடயங்கள் சாதாரண பாகிஸ்தானியர் இலகுவாக நம்பக்கூடிய விடயங்களாகிவிடுமென கூறப்படுகிறது. பல தரப்பினரும் செறிந்து வாழும் லாகூரில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறித்து பாகிஸ்தானியர் குழப்பம் அடைந்துள்ளனர்.
அத்துடன் விளையாட்டானது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதொன்றாகும். பாகிஸ்தானியரால் இதனை செய்திருக்க முடியாதென்று சாஷியா சர்தாரி (வயது 28) என்ற குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள தீவிரமாக சிந்தித்து கருத்து கூறுபவர்கள் “இந்தியாவின் சதி’ என்று கூறப்படும் கதைகளை நிராகரித்துள்ளதுடன், பாகிஸ்தானின் புகழை நாசமாக்கியுள்ள தீவிரவாதிகள் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அரசு மறுத்துவிடும் நிலைமைக்குச் சென்றால் அது மோசமான விடயமாகும். பாகிஸ்தானை அழித்துவிடும் நிகழ்ச்சித்திட்டத்துடன் நாம் வைத்திருக்கும் குழுக்கள் தொடர்பாக எவ்வளவு காலத்துக்கு நாம் மறுக்கப்போகின்றோம் என்று “டெய்லி டைம்ஸ்’ பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.
இது இவ்வாறிருக்க, லாகூரில் கடாபி விளையாட்டரங்கின் வெளிப்புறத்தின் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதல் லஸ்கர்இதொய்பா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒத்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். மும்பையில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இக்குழுவே சூத்திரதாரியென குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் , இதில் “வெளிநாட்டுக் கரம்’ இருப்பதாக பலர் சூசகமாக கூறுகின்றனர். மும்பைத்தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக முழுமையான போதிய ஆதாரங்கள் இல்லாமல் சாதாரண பாகிஸ்தானியர் மத்தியில் ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் பொலிஸின் குற்றவிசாரணை திணைக்களம் கடந்த ஜனவரியில் எச்சரிக்கை விடுப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்திய உளவுத்துறை முகவரமைப்பானது கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடுமென்றும் எச்சரிப்பதாக பிழையான அறிக்கையொன்றை விடுத்திருந்தது.
22 ஜனவரி 2009 திகதியிடப்பட்ட அறிக்கையில் , இந்தியாவின் ரோவானது இலங்கை கிரிக்கெட் குழுவினரை இலக்கு வைக்குமாறு தனது முகவர்களுக்கு பணித்துள்ளதாகவும் விசேடமாக அவர்கள் ஹோட்டலுக்கும் விளையாட்டரங்கிற்கும் பயணம் செய்கையில் இலக்குவைக்க பணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் குற்றப்புலனாய்வு திணைக்கள மேலதிக பொலிஸ்மா அதிபர் மலிக் முகமட் இக்பால் கையெழுத்திடப்படவிருந்ததாக தென்படுகின்றது. இதேவேளை அந்த அறிக்கை தொடர்பாக “த ரைம்ஸ்’ இக்பாலுடன் தொடர்பு கொண்ட போது அவர் உறுதிப்படுத்துவதையோ அல்லது மறுப்பதையோ நிராகரித்துவிட்டார். “கசிந்துவிட்டதொன்று’ புலனாய்வு விடயங்கள் தொடர்பாக நான் கருத்து கூறமுடியாது’ என்று அவர் தெரிவித்துவிட்டார்.