தென் ஆப்ரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) இருபது-20 கிரிக்கெட் தொடரின் துவக்கப் போட்டி ஏப்ரல் 18ஆம் தேதி துவங்கி மே 24ஆம் தேதி நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் துவக்கப் போட்டி கேப்டவுனிலும், இறுதிப்போட்டி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடக்கிறது. அரையிறுதிப் போட்டிகள் மே 22ஆம் தேதி பிரிடோரியாவிலும், மே 23ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க் நகரிலும் நடத்தப்பட உள்ளன.
இந்தாண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் மொத்தம் 59 போட்டிகள் நடக்கும் என்றும், இவை கேப்டவுன், ஜோஹன்னஸ்பெர்க், டர்பன், பிரிடோரியா, ஈஸ்ட் லண்டன், கிம்பெர்லி, ப்லோம்ஃப்ன்டெய்ன், போர்ட் எலிசபெத் ஆகிய நகரங்கள் நடத்தப்படும் என்றும் ஐ.பி.எல் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் டர்பனின் கிங்ஸ்மெய்ட் மைதானத்தில் 16 போட்டிகளும், பிரிடோரியாவின் செஞ்சுரியன் மைதானத்தில் 12 போட்டிகளும், ஜோஹன்ன்ஸ்பர்க்கின் வான்டெரர்ஸ் மைதானம், கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் மைதானத்தில் தலா 8 போட்டிகளும், போர்ட் எலிசபெத் நகரின் செயின்ட் ஜார்ஜ் பார்க்கில் 7 போட்டிகளும், ஈஸ்ட் லண்டனில் 4 போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.