உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் வேகமடையும் கொரோனா வைரஸ் பரவல் – நோயாளர் எண்ணிக்கை இன்று சடுதியான அதிகரிப்பு !

இலங்கையில் மேலும் 293 பேருக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகிய 291 பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 2 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,706 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  4,646 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 27  கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,043ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 445பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன்  கொரோனா தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இவர்களுள் 03 பேர் இன்று மட்டுமே மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாட்டில் இன்றுவரை 460455 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் அமெரிக்காவின் தலையீட்டை கண்டித்து சீன தூதரகம் அறிக்கை வெளியீடு !

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மைக் பொம்பியோ இன்று (27.10.2020) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்தநிலையில் அவரின் இலங்கை விஜயம் குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

முக்கிய கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் அந்த அறிக்கையில் சீனா தனது அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க கொள்கை மட்ட பிரதி உதவிச்செயலர் டீன் தொம்ஸன் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் நேரடியாகவே தலையீடு செய்திருப்பதுடன், இலங்கை அதன் வெளியுறவுக்கொள்கைகள் குறித்து அவசியமானதும் கடினமானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இது இராஜதந்திர நடைமுறைகளை முற்றிலும் மீறும் வகையிலான செயற்பாடாகும். மறுநாள் அதற்கான பிரதிபலிப்பை வெளிப்படுத்திய சீன வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், அமெரிக்க உயரதிகாரியின் கருத்து அவர்களின் ‘பனிப்போருக்கான’ மனநிலையையும்  பிற நாடுகளின்  விவகாரங்களில் தன்னிச்சையாகத் தலையீடு செய்யும் அதன் போக்கையும் சிறிய நாடுகள் எந்த பக்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்பதை வற்புறுத்திக்கூறும் தன்மையையும்  வெளிப்படுத்துகின்றது என்று கடுந்தொனியில் தெரிவித்தார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுமார் 2000 வருடகாலமாக நட்புடன் கூடிய வரலாறொன்று காணப்படுகின்றது. எம்மிரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கையாளக்கூடிய தெளிவு எமக்கு இருக்கும் அதேவேளை அதில் மூன்றாம் தரப்பொன்று கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 1950 ஆம் ஆண்டளவில் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திரத் தொடர்புகள் விரிவாக்கப்படுவதற்கு முன்னதாகவே நாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தை முன்னெடுத்து வந்தோம்.

இலங்கையின் உண்மையான நட்புறவு நாடு என்ற அடிப்படையில் அது ஏனைய நாடுகளுடன் மிகவும் ஆரோக்கியமான தொடர்புகளைப் பேணிவருவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எனினும் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான தொடர்புகளில் தலையீடு செய்வதற்கும் அதுகுறித்து இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கும் அமெரிக்க இராஜாங்க செயலரின் விஜயத்தைப் பயன்படுத்திக்கொள்வதை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். அத்தோடு அமெரிக்கா ‘அவசியமானதும் கடினமானதுமான தீர்மானங்களை’ எடுப்பதுடன், ஏனைய நாடுகளின் உள்ளக மற்றும் வெளியுறவு விவகாரங்களின் தன்னிச்சையான தலையீடுகளை மேற்கொள்ளும் அருவருக்கத்தக்க பழக்கத்தை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

அத்தோடு உண்மையான நண்பனொருவன் தன்னை மற்றையவரின் நிலையிலிருத்திப் பார்ப்பது அவசியமாகும் என்ற ஆலோசனையை அமெரிக்காவிற்கு வழங்க விரும்புகிறோம்.  கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தொடர்ந்து இலங்கை மிகப்பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் வேறு சவால்களை எதிர்கொள்வதற்கான சக்தி அதனிடம் இல்லை. அமெரிக்காவில் சுமார் 8.8 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் அதனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 230 ஆயிரமாக இருக்கும் நிலையில், அந்நாடு இலங்கைக்கு விரிவானதொரு பிரதிநிதிகள் குழுவை அனுப்புகின்றது.

இது உண்மையிலேயே அந்நாட்டின் மீதான உங்களின் மதிப்பை உண்மையில் வெளிப்படுத்துகின்றதா? இது உண்மையில் இலங்கை மக்கள் மீதான அக்கறையின் விளைவா? என்ற கேள்விகளை மக்கள் தொடர்ச்சியாக எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. எனினும் அது கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் மற்றும் பொருளாதார மீளெழுச்சி ஆகியவற்றுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதை முன்னிறுத்திச் சென்றிருந்தது.

அத்தோடு இலங்கைக்கு தேவையற்ற தொந்தரவை வழங்கக்கூடாது என்பதற்காக அந்நாட்டுக்குள்ளான விஜயங்களைப் பெருமளவிற்கு மட்டுப்படுத்தியிருந்ததோடு, தொற்று நோய்த்தடுப்புப் பிரிவின் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றியது. எனவே இதுகுறித்தும் சிறிய நாடுகளுடனான தொடர்புகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அமெரிக்காவிற்கு ஆலோசனை வழங்க நாம் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

“நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய வகையிலான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படமாட்டாது” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல !

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் தொடர்பாக எதிக்கட்சியினர் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ஜே.வி.பி கட்சியினரும் ஐக்கியமக்கள் சக்தி கட்சியினரும் அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை செய்து கொள்ளவுள்ளதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் “நாட்டின் இறைமையை பாதிக்கக்கூடிய வகையிலான வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படமாட்டாது” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதியாக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் கருத்து தெரிவித்த அவர் ,  இலங்கையிடமிருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்து கொள்ளும் நாடாக அமெரிக்கா தொடர்ந்தும் திகழ்கின்றது. இதனால் நாட்டுக்கு நன்மை அளிக்கக்கூடிய உடன்படிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், நாட்டின் இறைமையை பாதிக்கும் எவ்வித உடன்படிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகிறது”- ஜே.வி.பியின் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு !

நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாகவும் அதன்காரணமாகவே உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கொழும்பில் போராட்டம் நடத்தியதாகவும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் வெளி கட்சியின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தின் தலைவராக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பாம்பியோ இருக்கும் நிலையில் அவரது வருகை எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வழி வகுக்கும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில் நாட்டினதும் நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து அரசாங்கம் விவாதங்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க மக்கள் விடுதலை முன்னணி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” – இரா.சாணக்கியன்

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக வாக்களிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஜனநாயக விரோதமான செயல், இந்த நாட்டை பின்கொண்டுசெல்லும் செயல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக வாக்களித்திருந்தோம். இதன்போது, இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். அது தொடர்பாக பல கருத்துகளை பலரும் கூறிவருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள், தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நான் கருதுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வியாழேந்திரன் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர், அதனால் அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். ஆனால் பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஒரு தனிக்கட்சியாகும் அவர்கள் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்தார்களா? என்ற கேள்வி எங்கள் மனதில் இருக்கின்றது.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினையை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்று, அதனை நிறுத்தச்சொல்வதை விட 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தருவதாகயிருந்தால் இந்த பிரச்சினையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும்.

மேலும், கல்முனை- வடக்கு பிரதேச தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம் அல்லது அரசியல் கைதிகள் 62பேர் இன்னும் உள்ளனர் அவர்களை விடுதலைசெய்தால் ஆதரிப்போம் என்றிருக்கலாம், தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரியிருக்க முடியும் இவ்வாறு பல நிபந்தனை முன்வைத்து வாக்களித்திருக்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம்பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும். அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்ததாக தெரியாது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை வெளியில் விடுவதற்கான ஒப்பந்தமோ? அல்லது அக்கட்சியின் தலைவர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தங்களை செய்தார்களா?மக்களுடைய நலனைக்கொண்டா? அல்லது தங்களது நலனைக்கொண்டா? ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் பதவி ஆசை காரணமாக மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறிய அரசு நாட்டை அடிபாதாளத்திற்குள் தள்ளிவிட்டது” – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதன் மூலம் நாட்டை அடிபாதாளத்திற்குள்  தள்ளியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிக்கை ஒன்றை வெளியிட்டு இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாடு இக்கட்டான நிலையில் உள்ளதாகவும், இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டமைக்கான காரணத்தை அரசாங்கம் இதுவரை தெரிவிக்க தவறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடு கடும் பின்னடைவை சந்தித்துள்ள தற்போதைய சூழலில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்வதை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது என நாராஹேன்பிட்டிய அபேராமய விஹாராதிபதி முரித்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

´சுகாதார அதிகாரிகள் தற்போதைய நிலைமை குறித்து ஏற்கனவே சிந்தித்து செயற்படவில்லை. அதனால் தற்போது கொவிட் 19 பரவல் நாட்டில் வியாபித்துள்ளது. அதற்கான பொறுப்பை ஏற்பார் இல்லை. அரச வைத்திய பரிசோதனை நிலையத்தின் செயற்பாடு பூச்சியமாக காணப்படுகின்றது. அந்த நிலையத்தை தனியாருக்கு வழங்குவதில் பிரச்சினையுள்ளது என்றார்.

கொரோனாத் தொற்றால் இலங்கையில் மேலும் இருவர் பலி !

கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி,இலங்கையின் கொரோனா மரணம் 19 ஆக அதிகரித்துள்ளது.

ஐடிஏச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது மற்றும் 75 வயதுடைய நபர்களே சற்றுமுன் உயிரிழந்துள்ளனர்.

இதே நேரம் இன்று மட்டுமே கொரோனாத்தொற்றால் மூவர் மரணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சியை கண்டித்து ஜே.வி.பி போராட்டம் !

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோவின் வருகையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இன்று (27.10.2020) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோ இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையில் தலையிட அமெரிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உள்ளிட்ட ஜே.வி.பி.யின் முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளனர். மேலும் இந்த விடயம் தொடர்பாக கடிதமொன்றையும் மக்கள் விடுதலை முன்னணியினர் அமெரிக்க தூதரகத்தில் கையளித்துள்ளனர்.

“20ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“20ஆவது திருத்தத்தில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை” என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தம் தொடர்பாக நீதி அமைச்சர் மேலும் குறிப்பிடும் போது ,

அரசாங்கத்திற்கு வலுவானதொரு நிர்வாகத்தை முன்னெடுக்க 20ஆவது திருத்தம் வழியமைத்துள்ளது. இதனால் அரச இயந்திரத்தை சிறப்பாக இயங்க வைக்க முடியும். தேர்தல்கள், பொது சேவை, மனித உரிமைகள் மற்றும் ஊழல் விசாரணைக்கு பொறுப்பான சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் ஜனாதிபதிக்கு நியமிக்கவும் பதவி நீக்கம் செய்யவும் முடியும்.பொதுத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்

இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சட்டத்தின் பல பிரிவுகள் ஜனாதிபதி அதிகாரத்தை பலப்படுத்தும். உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டமையால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என தெரிவித்தார்.

அரசியலமைப்பை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆளும் கட்சிக்கு இல்லை என்றாலும், வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.

“அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை வருகை நாட்டுக்கு பேராபத்தானது ” – எச்சரிக்கின்றது தேசிய புத்திஜீவிகள் அமைப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (27.10.2020) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில்,  அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயம் நாட்டுக்குப் பேராபத்தானது என தேசிய புத்திஜீவிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

எதிர்காலத்தில் யாருடன் முன்னோக்கிச்செல்லவேண்டும் என்பதை இலங்கை தீர்மானிக்க வேண்டும் என்று அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை எதிர்காலம் தொடர்பாக பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ விடுக்கவுள்ள வேண்டுகோளை இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் நிராகரிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி ‘நியூஸ் இன் ஏசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச்செய்தியில் மேலும் குறிப்பிடும் போது  “28ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை தலைவர்களிடம் முகத்திற்கு நேரே சீனாவுடனான உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளார். அமெரிக்கா முன்வைக்கின்ற சாத்தியப்பாடுகளை பரிசீலிக்குமாறும் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கின்ற ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக் பொம்பியோ இலங்கை தலைவர்களை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இலங்கையின் தீர்மானங்களும் கொள்கைகளும் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலும், சட்டம் மற்றும் அரசமைப்பு நாட்டின் நலன்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என மைக் பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர்.

அதேவேளை, உலகிலும் பிராந்திய அளவிலும் இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவை பேணும் எனவும் அவர்கள் மைக் பொம்பியோவிடம் தெரிவிக்கவுள்ளனர். இலங்கையை எப்படி ஆட்சிசெய்யவேண்டும் என்பதை வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்க வேண்டியதில்லை என இலங்கையின் அரச தலைவர்கள் பணிவுடன் மைக் பொம்பியோவுக்குத் தெரிவிக்கவுள்ளனர் என வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனாவின் நிதியுதவியுடனான திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கையைக் கேட்டுக்கொள்ளவுள்ள மைக் பொம்பியோ இரு தரப்பு இணக்கத்துடனான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பதிலாக வேறு எந்த நாட்டையோ அல்லது ஸ்தாபனத்தையோ முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளார்.

480 மில்லியன் டொலர் எம்.சி.சி. உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் மைக் பொம்பியோ இலங்கையின் அரச தலைவர்களைக் கேட்டு கொள்ளவுள்ளார். எம்.சி.சி. உடன்படிக்கையை இலங்கை முற்றாக நிராகரிக்கவேண்டும் அல்லது மறு ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என இலங்கை ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

சோபா உடன்படிக்கை இலங்கையின் அரசமைப்புக்கும் சட்டங்களுக்கும் முரணானது என்பதால் சர்ச்சைக்குரிய சோபா உடன்படிக்கை குறித்து ஆராயப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கு எதிராகக் கூட்டணியான குவாட்டுக்குள் இலங்கையை உள்வாங்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, 30 வருட போரிலிருந்து சமீபத்திலேயே விடுதலையாகியுள்ள இலங்கை இன்னொரு சர்வதேச மோதலின் களமாக மாறுவதை விரும்பவில்லை என மைக் பொம்பியோவிடம் நாங்கள் தெரிவிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்திலும் ஏனைய பகுதிகளும் சுதந்திரமான நடமாட்டம் உறுதிசெய்யப்படுவதை இலங்கை ஏற்றுக்கொள்கின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் இலங்கைத் தலைவர்கள் தெரிவிப்பார்கள் எனவும் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் முதலீடுகளை இலங்கை ஏற்றுக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கவுள்ளது என்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரி அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் இலங்கையில்

முதலீடுவது வரவேற்கப்படுகின்றது. அமெரிக்கா சீனாவின் முதலீடுகளின் அளவுக்கு முதலீடு செய்யுமென்றால் அதனை வரவேற்போம் எனக் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது.