உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்காமல் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் !

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை  சந்திக்காமல் சென்றது போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஏன் அவ்வாறு செயற்பட்டார் என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்திருந்தார். சந்திப்பினை முடித்து திரும்பும் வழியில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோரால் கோஷங்கள் எழுப்பப்பட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமலேயே சென்றிருந்தார்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

“என்னுடைய பிறந்ததநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்” – சிறையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க கடிதம் !

“என்னுடைய பிறந்ததநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்” என சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது 58 ஆவது பிறந்த தினமான நேற்று சிறைச்சாலையில் இருந்தவாறு ஊடகங்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் இருந்து எழுதுகிறேன்.
மார்ச் 11 என்பது விசேட நாள் ஆகும். இன்று (நேற்று) எனக்கு 58 வயது பூர்த்தியாகிறது.

நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட வாழ்க்கையின் முதலாவது பிறந்த நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. கடந்த வருடமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறைக்குத் தள்ளினர். எனினும், பிறந்த நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டேன்.

‘தற்போது நான் சிறையில் இருந்தாலும் என்னை தலைப்பிட்டு வெளியில் பல கதைகள் பேசப்படுகின்றன. எனது விடுதலைக்காக பலர் வெளியில்
இருந்து செயல்படுகின்றனர். அவ்வாறு செயற்படுபவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகிறேன். நான் சில நாட்கள் உள்ளே இருக்க வேண்டி இருக்கும். ஆகவே
பெரிய எதிர்பார்ப்பு எதனையும் வைத்துக்கொள்ள வேண்டாம்’
நான் யாரும் இல்லாத ஒருவன். நான் 60 வயதில் ஓய்வு
பெறப்போவதில்லை. 1963 இல் பிறந்த பலரை விட நான் பலசாலி.
ஆகவே, உயிர் இருக்கும் வரை நான் மக்கள் சேவகனாகச் செயற்படுவேன்’.

‘என்னால் தொடர்ச்சியாக கடிதம் எழுத முடியாது. வெளியில் வந்தாலும் கையசைக்க விடுகிறார்கள் இல்லை. முடியுமானபோது பின்னர் எழுதுகிறேன். இன்று கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கைக்கு ஆசியநாடுகள் ஆதரவளிக்கும்” – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கைக்கு ஆசியநாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேவேளை இலங்கை குறித்து எதிர்மறையாக எதனையும் தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தீர்மானம் முன்வைக்கப்படும் வரை நாங்கள் காத்திருக்கவேண்டும் தீர்மானம் முன்வைக்கப்பட்ட பின்னரே நாடுகளின் நிலைப்பாடு தெரியவரும் என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தீர்மானத்தின் உள்ளடக்கமே நாடுகளின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளா

இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூரம் – யாழில் சம்பவம் !

கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில் நேற்று (11.03.2021) மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுப்பர்மடத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூவர் இணைந்து இரும்புக் கம்பியினால் மிக மூற்க்கமாக தாக்கியதில், இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை வீதியால் இழுத்துச் சென்று, குறித்த சந்தேகநபர்கள் வீசியுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் தாக்கப்பட்ட இளைஞன், கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“தமிழர்களின் தன் நிர்ணய உரிமையையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து உறுதி செய்ய ஐ.நாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.” – ஐ.நா கூட்டத்தொடரில் சி.சிறிதரன்

“தமிழர்களின் தன் நிர்ணய உரிமையையும், எதிர்பார்ப்புகளையும் அறிந்து உறுதி செய்ய ஐ.நாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 22ம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடர் மார்ச் 23ம் திகதி வரை நடைபெறுகிறது. இம்முறையும் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டுத் தளங்களில் தமிழர் இயக்கத்துடன் இணைந்து செயல்படும் ஐ.நாவின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் (ECOSOC) ஊடாக இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள்  கொரோனா தொற்று காரணமாக இணையவழி ஊடாக கூட்டத்தொடரில் இணைந்து கொண்டு கலந்து கொண்டு தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெனீவாவில் நடைபெறும் 46வது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நேற்றையதினம் இணைய வாயிலாக பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார். உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்ட போது,

“அரசாங்கத்தினால் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர் என ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் உயர் ஆணையாளரும் 10 சிறப்பு பொறிமுறை அதிகாரமுள்ளவர்களும் தங்களது அறிக்கையில் சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அவர்கள் தமிழர்கள் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறுவதற்கு மறந்துவிட்டனர்.

இலங்கையில் உள்ள வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இன அழிப்புசெய்யப்பட்டு 12 ஆண்டுகள் முடிந்து இன்னும் காலநீடிப்பு தர இந்தப் பேரவை விரும்புகிறது.

தமிழர்கள் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இராணுவ அடக்குமுறைக்கு கீழ் தங்களது பண்பாட்டு, சமூக, பொருளாதார, அரசியல், குடிமை உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.

கீழ்காணும் பரிந்துரைகளை வைத்து இலங்கைமீது தீர்மானம் கொண்டுவரும் முக்கிய குழுவும் மனித உரிமை உறுப்பினர்களும் உறுதியான தீர்மானத்தை கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.

1.இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். 2.சுதந்திரமான பன்னாட்டு விசாரணை பொறிமுறை நடத்தவேண்டும். 3.இலங்கைக்கான சிறப்பு ஆய்வாளரை நியமிக்கவேண்டும்.

தமிழர்களின் தன் நிர்ணய உரிமையையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அறிந்து உறுதி செய்ய ஐ.நாவின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.”எனக் குறிப்பிட்டுள்ளார்.

மணியந்தோட்டத்தில் துன்புறுத்தப்பட்ட 08 மாத குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் !

யாழ்ப்பாணம் மனியந்தோட்டத்தில் அண்மையில் தனது 08 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்திருக்கின்றன.

உள்நாட்டிலும் அதேபோல வெளிநாடுகளிலும் இருந்து இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் இல்லாத பெற்றோரே இவ்வாறு அந்தக் குழந்தையை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தவர்களே இவ்வாறு குழந்தையை தத்தெடுப்பதற்குக் கோரியிருப்பதாக தெரியவருகிறது.

“இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும்  விடயங்களை சரத் வீரசேகர போன்ற  அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள முடியாது” – ஹசன் அலி

“இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும்  விடயங்களை சரத் வீரசேகர போன்ற  அரசியல்வாதிகளின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள முடியாது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

இஸ்லாமிய பாட நூல்களில் எது அடிப்படைவாத விடயம் , எது அடிப்படைவாதமற்ற விடயம் என்பதை அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது. பல்கழைகத்தினூடாக இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்து அதனூடாக இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்க முடியும்.

அடிப்படைவாதமென்பது அனைத்து மதங்களிலும் காணப்படுகிறது. தாம் பின்பற்றும் மதத்தைப் பற்றி முறையாக புரிந்து கொள்ளாதவர்களே அடிப்படைவாதிகளாவர். மதங்களைப் பற்றி நன்கு அறிந்து அவற்றை பின்பற்றுபவர்கள் அடிப்படைவாதிகளாக இருக்க மாட்டார்கள்.

எனவே இஸ்லாம் பாட நூல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமைச்சர் சரத் வீரசேகர கூறுவதைப் போன்று அரசாங்கத்தின் தேவைக்காக அல்லது அரசியல் கட்சியொன்றின் தேவைக்காக மாற்ற முடியாது. இஸ்லாமிய கல்வியியலாளர்கள் அடங்கிய குழுவை நியமித்து இதற்கான தீர்வை காணுமாறு வலியுறுத்துகின்றோம்” என்றார்.

“சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் தேசிய வளங்களை கைப்பற்ற பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துள்ளன” – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

“சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் தேசிய வளங்களை கைப்பற்ற பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துள்ளன” என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் திஸ்ஸ விதாரண மேலும் கூறியுள்ளதாவது,

“ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்முறை இடம்பெறவுள்ள கூட்டத்தொடர் தீர்மானமிக்கதாக அமையும். ஆகவே ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் நுணுக்கமான முறையில் கையாள வேண்டும். நாடு என்ற ரீதியில் தனித்து செயற்பட முடியாது. சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகும்.

இதேவேளை ஜெனிவா விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எதிர்பார்ப்பில் சற்று தலம்பல் நிலை காணப்படுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாட்டை இந்தியா இலங்கைக்கு எதிராக பயன்படுத்த கூடாது.

இந்தியா தற்போது அமெரிக்காவின் கொள்கையினை ஈர்த்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஒருபுறம் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடு மறுபுறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது. இந்த மூன்று நாடுகளும் இலங்கையினை ஜெனிவா விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாக்க கூடாது. சீனா இலங்கைக்கு எதிராக தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்ற உறுதிப்பாட்டை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்பவில்லை.

பலம் கொண்ட இந்த மூன்று நாடுகளும் இலங்கையின் தேசிய வளங்களை கைப்பற்ற ஆரம்ப காலத்தில் இருந்து பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்துள்ளன” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசியல் நலன் கருதி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் அரசு செயற்படக்கூடாது” – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

“அரசியல் நலன் கருதி உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் அரசு செயற்படக்கூடாது” என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

குறைபாடுகள் நிறைந்திருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்து அரசு காலத்தை இழுத்தடிக்குமானால் நாம் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன். ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு நிதியுதவி வழங்கியவர்கள், தாக்குதலுக்கு நேரடியாக – மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் போன்றோர் தொடர்பில் விரிவான விசாரணைகளை அரசு நடத்த வேண்டும்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்துக்கொண்டும்  அதை ஆராய இன்னொரு ஆணைக்குழுவை நியமித்தும் காலத்தை வீணடிக்கும் செயலில் அரசு ஈடுபடக்கூடாது.

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளைத் தண்டிப்போம் எனவும், நீதியைப் பெற்றுத் தருவோம் எனவும் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியே புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. எனவே, குற்றவாளிகளைத் தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதும் அரசின் பிரதான கடமையாகும்” – என்றார்.

கோட்டாபாயவுக்கு பின்னர் பொதுஜன பெரமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவர் தான் – பகிரங்கப்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி !

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவே களமிறங்குவார் என பொதுஜன முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிராகவே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சூழ்ச்சி செய்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் வித்தாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சஹான் பிரதீப் வித்தாரண,

கோவிட் நெருக்கடியை எமது நாடு வேறு நாடுகளை விட சிறப்பாக கையாண்டதன் பின்னணியில் மீண்டும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதில்லை என நினைத்தாலும் மக்கள் இறுதியாக அவரை கைவிடமாட்டார்கள். மீண்டும் போட்டியிடச் செய்யும் வகையிலான கோரிக்கைகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஒரு வருடத்திற்குள் கொரோனா தொற்றுடன் மோதி, ஊழல் மோசடி, போதைப்பொருளை அழித்து இளைஞர்களை வழிநடத்தியவர் ஜனாதிபதியே. சிலர் இதனை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியை களங்கப்படுத்தி அழிக்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நனவாகாது. அப்படியொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு மக்கள் வழங்கமாட்டார்கள். சில கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள்.

சில வருடங்கள் சென்று அரசாங்கத்தின் உறுதியைப் பேணாமல் பிரிந்து சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றார்கள். எமது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு பொதுஜன முன்னணிக்குள் தலைவர் ஒருவர் வருவார் என்கிற அச்சம் சிலருக்கு உள்ளது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடுத்தகட்டமாக பஸில் ராஜபக்ஷவே தெரிவுக்கு இருக்கின்றார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர். அவர் போட்டியிடுவதை எதிர்ப்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். அதனால்தான் சேறுபூசுகின்றார்கள். பொதுஜன முன்னணியையும், பஸில் ராஜபக்ஷவையும் வீழ்த்த எவருக்கும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.