உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

புதுவருடத்துக்கு பின்பு 2000தை அண்மிக்கும் வகையிலாக தொற்றாளர்கள் தினசரி அடயாளம் – இந்தியாவை விட ஆபத்தான நிலையில் இலங்கை !

“இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம்.”  என பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900 த்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இறுதிச்சடங்கில் பதற்றம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியாக ஆன்டிஜன் பரிசோதனை  செய்த போது கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறுதிச் சடங்கில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு !

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் நேற்று(5.05.2021) மெய்நிகர் வழியாக நடைபெற்றது.

இதன்போதே, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியாவின் திபிலிசியில் முதலில் நடத்தத் திட்டமிடப்பட்ட வருடாந்த கூட்டம் தற்போதைய கொரோனா தொற்றுநோயால் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டுக் கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தாது.” – அமைச்சர் நாமல் ராஜபக்ச

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தாது.” என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொரோனாத் தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ளார் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று(05.05.2021) உரையாற்றும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு  கூறினார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள கொள்கலன் உடற்பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா நிதியைக் கொரோனாத் தடுப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியே இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு – சந்தேக நபர்களான ஈ.பி.டி.பி. யை சேர்ந்த நெப்போலியன் உள்ளிட்ட 06 பேர் விடுவிப்பு !

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியிலுள்ள நிமலராஜனின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப் படுகொலை செய்தனர். அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரையின் மீது சரிந்து விழுந்தே உயிரிழந்தார்.

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர்,  அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசி விட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் படுகொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், நிமலராஜன் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சட்டமா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளார்.  அத்துடன், வழக்கின் சந்தேகநபர்களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் காவற்துறை திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஷ் உள்ளிட்டவர்களே நிமலராஜன் படுகொலை வழக்கில் சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

அதேவேளை, கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை – நாரந்தனைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அது தொடர்பான வழக்கு விசாரணையில் நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

குற்றவாளிகளாக காணப்பட்ட நெப்போலியன் மற்றும் மதன் என அழைக்கப்படும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள்.” – சரத் பொன்சேகா

“மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் கூடிய போது சரத் பொன்சேகா மீது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக “கடந்த 2010 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா தமிழ்ப் பிரதேசங்களை வெற்றிகொண்டதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட சர்வதேச சமூகத்திற்கும், அவருக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய ஒப்பந்தமே காரணம் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அங்கு பேசிய அவர், யாழ் – மிருசுவில் படுகொலை வழக்கில் விடுலையாக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவின் விடுதலையை எதிர்க்கின்ற பொன்சேகா, ஏன் 12,500 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுகையில் எதிர்ப்பு வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்போது சரத்வீரசேகரவின் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றிய பொன்சேகா,

தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மனித உரிமைகளை பாதுகாத்து யுத்தம் புரிந்தமையால்தான் தமிழ் மக்கள் இராணுவத்தளபதியான எனக்கு வாக்களித்தார்கள். அது தொடர்பில் நாங்கள் பெருமைப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இராணுவத்தினர் மீது எவ்வித கோபமும் இருக்கவில்லை என்றார்.

“சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது.” – நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சாடல் !

“ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான செயற்பாடானது சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு அராஜக அரசியலை அரசாங்கம் செய்து வருகின்றது என்பதையே காட்டுகின்றது.”  என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் காரியாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கின்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வந்து செல்வதற்கும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கும் முழுமையான உரிமை இருக்கின்றது. ரிஷாட் பதியுதீன் அண்மையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். அவரை ஒரு குற்றவாளியாக இதுவரை இனம் காணப்படவில்லை. எனவே பொது மக்களின் வாக்கு பலத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் இங்கு நடைபெறுகின்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை.

இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்த நிலையில், அவரை நாடாளுமன்றம் அழைத்து வர வேண்டுமாக இருந்தால் சபாநாயகரின் கையெழுத்திடப்பட்ட ஆவணம் தேவை என குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் நேற்று முன்தினம் மாலை ரிஷாட் பதியுதீனுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை என இன்னுமொரு காரணம் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை நேற்று நாடாளுன்றத்தில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது வேண்டுகோளின் பேரில் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அது விசாரணைக்கு இடையூறாக அமையும் எனவும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவை முன்னுக்கு பின் முரணான கருத்தாகவே இருக்கின்றது. இந்த விடயமானது எந்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என எனக்கு தெரியவில்லை.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு சட்டத்தை தனது கையில் எடுத்து செயற்பட முடியுமா? அது எந்த சட்டத்திற்கு உட்பட்டது என்பது புரியவில்லை. இந்த விடயத்தின் மூலம் தெளிவாக தெரிகின்ற விடயம் என்னவென்றால் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம் திட்டமிடுகின்றது. இது ஜனநாயக நாடா? அல்லது இராணுவ ஆட்சி நடைபெறுகின்ற நாடா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே இதன் மூலம் இந்த நாட்டிற்கு இந்த அரசாங்கம் என்ன சொல்ல வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றவர்களின் குரல் வளையை நசுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோவையும் கைது செய்வதற்கு திட்டமிட்டு வருகின்றது. இவையெல்லாம் அராஜக அரசியலின் வெளிப்பாடாகும்.

அரசாங்கத்தின் திட்டம் என்னவென்றால் எங்களுடைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இல்லாது செய்ததைப் போல ரிஷாட் பதியுதீனுடைய நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இல்லாது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை அனைவராலும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

எனவே அரசாங்கம் தெளிவாக ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். எந்த காரணம் கொண்டும் எதிர்கட்சிகளின் குரல் வளையை நெருக்கியோ அல்லது எங்களை அச்சுறுத்தியோ எங்களுடைய செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போத கருத்து தெரிவித்துள்ளார்.

“இரா.சாணக்கியன் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்த கை்ககூலி.” – எச்.எம். ஹரிஸ்

“இரா.சாணக்கியன் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானின் கட்சியில் இருந்தவர்.” என ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம் ஹரிஸ் குற்றஞ்சாட்டினார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சாணக்கியன் முஸ்லிம் விரோத போக்கை கையில் எடுத்துள்ளார். அம்பாறையில் தமிழ் மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர். அந்த அம்பாறை மாவட்டத்தை பிரிக்குமாறோ அல்லது ஒரு தமிழ் அரச அதிபரை நியமிக்குமாறோ கேட்கக்கூட முடியாதவர்தான் இந்த சாணக்கியன். ஆனால் அவர் எம்மை அரசின் கைக்கூலி என்கின்றார். இவர் தான் புலிகளைக் காட்டிக்கொடுத்து, தமிழ் மக்களின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானின் கட்சியில் இருந்தவர். தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கியதாக குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருந்தவர். இவர்தான் தமிழ் மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் காட்டிக்கொடுத்தவர்.

மேலும், 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக நாம் கை தூக்கியதாக கூறுகிறார். அப்படி கை தூக்கியதன் மூலமே உங்களிடமிருந்து முஸ்லிம்களின் சில உரிமைகளையாவது எம்மால் பாதுகாக்க முடிந்தது. கிழக்கில் சிங்கள முதலமைச்சர் ஒருவரை நாம் கொண்டுவர முயற்சிப்பதாக சாணக்கியன் கூறுகின்றார். இது அப்பட்டமான பொய். இந்த நோன்பு நாளில் அல்லாஹ் மீது சத்தியமாக கூறுகின்றேன் நான் அப்படிப்பட்ட காட்டிக் கொடுக்கும் குடும்பத்தில் பிறக்கவில்லை. கல்முனை வடக்கு பிரதேச சபை தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கவேண்டும் என்றே நாங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்து வந்தோம். அதற்கு தீர்வொன்றை காணும் நோக்கிலே எல்லை நிர்ணய குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. 6 மாதங்களில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதனால் கல்முனை மாநகரின் வரலாறு தெரியாமல், அங்கு தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு எவ்வாறு இருந்தது என்பது தொடர்பாக தெரியாமலே சிலர் சபையில் கதைக்கின்றனர். கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்தே நாங்கள் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம். சில சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட எடுத்த தீர்மானங்கள் காரணமாக முஸ்லிம்கள் அதற்கான விளைவை இன்றும் அனுபவித்து வருகின்றனர்.” என்றார்.

தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் 06 சிறுபான்மையினர் நியமனம் !

தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில், 15 பேர்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரால் இன்று சபையில் அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவில், சிறுபான்மை கட்சிகளைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் உள்ளடங்கியுள்ளனர்.

அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மற்றும் கபிர் ஹஷிம் ஆகியோர் சிறுபான்மையின பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், பவித்ரா வன்னியாரச்சி, விமல் வீரவன்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திஸாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

“புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட 11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டும் என கூறுகிறீர்களா..?” – நாடாளுமன்றில் சரத்வீரசேகரவிடம் பொன்சேகா கேள்வி !

வெளிநாட்டு டொலர்களுக்கும் பணத்திற்கும் அடிபணிந்து இலங்கை இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயலை சரத்பொன்சேகா செய்து கொண்டிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் பொன்சேகாவை சாடியுள்ளார்.

மிருசுவில் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் விடுதலை தொடர்பில் கடந்த கூட்டத் தொடரில் சரத் பொன்சேகா கடுமையாக சாடியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய போதே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வெளிநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எமது நாட்டு இராணுவ வீரர்களை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.இப்போது அவர் டொலர்களுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இதேவேளை, 11 ஆயிரம் விடுதலை புலிகளை புனர்வாழ்வளித்து விடுவித்த சந்தர்ப்பத்தில், குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய நபர்களை விடுதலை செய்த போது எதிர்ப்பினை தெரிவிக்காத பொன்சேகா இராணுவத்தினரை காட்டிக்கொடுப்பதா..? என கேள்வி எழுப்பினார் சரத் வீரசேகர .

இந்த நிலையில், இதற்கு பதிலளித்த பொன்சேகா , சரத் வீரசேகர கூறுவதை பார்த்தால் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுவிக்கப்பட்ட 11 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்பதா? என  சரத்வீரசேகரவிடம் பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.