உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் !

இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக நேற்றைய தினம் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது இவை மீள சீர்ப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று இடம்பெற்ற இந்த இணையவழி முடக்கம் குறித்து விமானப்படையின் இணையப் பாதுகாப்பு பிரிவு, இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு தகவல் வழங்கியதாக விமானப்படை பேச்சாளர் துசான் விஜேதிலக தெரிவித்தார்.

 “ஏன் அதிகார பரவலாக்கல் வேண்டும்  என்று கேட்கின்ற எங்களுடைய தமிழ் இனத்தை பிரித்து பயங்கரவாதிகள் என்று பார்க்கின்றீர்கள்.” – நாடாளுமன்றில் அடைக்கலநாதன் கேள்வி !

“ஏன் அதிகார பரவலாக்கல் வேண்டும்  என்று கேட்கின்ற எங்களுடைய தமிழ் இனத்தை பிரித்து பயங்கரவாதிகள் என்று பார்க்கின்றீர்கள்.” என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுத்ததை போல அன்று தமிழர்களுக்கு அதிகார பகிர்வினை வழங்க எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அன்று அஹிம்சை ரீதியாக போராடியவர்களையும் ஆயுத ரீதியாக போராடியவர்களையும் அடக்கி ஒடுக்கி பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் என அரசாங்கம் முத்திரை குத்தியது.

இன்று சிங்கள மக்கள் கூட இதை எதிர்க்கின்றனர், நாங்களும் எதிர்க்கின்றோம், காரணம் இந்த நாட்டிலே அதிகார பரவல் என்பது சூனியமாக இருக்கின்றது. நாங்கள் கேட்பது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே. கடலை நிரப்பி கட்டிடங்களை கட்டி தனி ஒரு நாட்டைகொடுக்கின்ற அதிகாரங்கள் அனைத்தும் எமது இலங்கை நாட்டில் சம்பந்தம் இல்லாத வகையில் இந்த ஆணைக்குழுவுக்கு குவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையிலே, நீதிமன்றம் தன்னுடைய தலையீட்டால் சில விடயங்களை இந்த நாட்டுக்குள் இருக்கின்ற அதிகாரத்தோடு செயற்படுத்துகின்ற ஒரு வரையறையை கொண்டு வந்ததை இங்கு காணக் கூடியதாக இருக்கின்றது. நீதிமன்றம் தலையிட இல்லை என்றால் இலங்கை நாட்டுக்குள் இன்னுமொரு நாடு சகல அதிகாரங்களோடும் செயற்பட கூடிய வகையிலே இந்த அரசாங்கம் ஆணைக்குழு ஊடக முழு அதிகாரமும் செலுத்துகின்ற வகையில் தான் துறைமுக அதிகார சபை உருவாக்கப்பட்டிருந்தது என்பதுதான் உண்மை.

அகிம்சை போராடத்தில் சமஸ்டியை வேண்டி எங்களுடைய பெரியவர்கள் போராடினார்கள், அகிம்சை வழியிலே போராடி எங்களது பெரியவர்கள் நையப்புடைக்கப்பட்டு இந்த நாடாளுமன்றத்தில் இரத்தங்கள் சொட்ட சொட்ட தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கின்ற போது அந்த அகிம்சை கூட மறுக்கப்பட்டது. ஆயுத போராட்டத்தின் ஊடக எங்களது இனத்தின் விடுதலையை பெற வேண்டும் என்று சொல்லுகின்ற போது பயங்கரவாதிகள் பிரிவினைவாதிகள் என்றெல்லாம் எங்களை எங்களுடைய மக்களை பிரித்தாளுகின்ற அல்லது அவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லுகின்ற சொற்பதத்தோடு இந்த அரசு அல்லது வந்து வந்து போன அரசுகளும் அந்த சொற் பதத்தோடுத்தன் எங்களது மக்களை பார்த்தர்கள்.

இன்று எமது தேசத்தில் இருக்கின்ற நிலைமைகளை பார்க்கின்ற போது எமது பூர்வீகம் சிதைக்கப்படுகின்ற ஒரு நிகழ்வு அங்கு நடைபெறுகின்றது. திட்டமிட்டு நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. வன இலாகா திட்டத்தின் ஊடாக மகாவலியூடாக நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. புதை பொருள் என்னும் போர்வையில் எமது பிரதேச காணிகளில் புத்த கோயில்களை கட்ட முனைகின்றனர். பயங்கரவாத தடை சட்டம் என்ற ரீதியில் பல பேரை கைது செய்கின்ற நிகழ்வுகள் இன்று இடம்பெற்று கொண்டு இருக்கின்றது.

ஆனால் இப்பொழுது பேசப்படுகின்ற பொருளாக இருக்கின்ற இந்த துறைமுக விவகாரம் சகல அதிகாரங்களையும் ஒரு நாட்டிலே இன்னொரு நாடு என்று சொல்லுகின்ற வகையிலே எல்லா அதிகாரங்காளையும் கொண்டிருக்கின்றபோது ஏன் அதிகார பரவலாக்கல் வேண்டும்  என்று கேட்கின்ற எங்களுடைய தமிழ் இனத்தை பிரித்து பயங்கரவாதிகள் என்று பார்க்கின்றீர்கள்.

இந்த சூழலிலே இன்னொரு நாட்டிற்கு வெளிநாட்டில் உள்ளவர்களும் உள்நாட்டில் உள்ளவர்களும் குழுவாக இணைந்து அந்த அதிகாரத்தை கையாளுகின்ற மாகாண சபை அதிகாரங்கள் இந்த அரசாங்கம் மாகாணசபையை இல்லாதொழிக்கின்ற திட்டங்களுக்கு பல குரல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஒன்று பொலிஸ் மற்றது நில அதிகாரம் அனைத்து மாகாண சபைகளுக்கும் அந்த அதிகாரங்களை ஒரு பரவலாக்கல் மூலமாக அதிகாரங்களை கொடுப்பதற்கு அரசு மறுக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள், அதைப்போலவே, வெளிநாட்டவர்களின் ஈழம் ஒன்று தோன்றுவதற்கும் நாங்கள் எதிரானவர்கள்.” – சம்பிக்க ரணவக்க

“நாங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள், அதைப்போலவே, வெளிநாட்டவர்களின் ஈழம் ஒன்று தோன்றுவதற்கும் நாங்கள் எதிரானவர்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

யுத்த வெற்றிக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் நிகழ்வு நேற்றைய தினம் பொரளையில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எமது நாடு துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்ற இக்காலகட்டத்தில், வெளிநாட்டவர்களுக்கு இந்நாட்டில் ஈழ அரசு உருவாவதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளது. “கொவிட் 19 அச்சுறுத்தலினால் நாடு முடக்கப்படவேண்டிய சூழலில், நாட்டின் இறையாண்மையை காட்டிக்கொடுத்து, நாட்டின் ஒற்றுமைக்கு துரோகம் இழைத்துவிட்டு வெளிநாட்டு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான சட்டத்தை இயற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் அடுத்த மூன்று நாட்களும் செயற்படவுள்ளது.

தனித்தனியாக சட்டம் இயற்றிக்கொண்டு, தனியான வரியை வசூலித்துக்கொண்டு, தமிழீழ அரசை உருவாக்குவதற்கான வழிவகைகளை அரசாங்கம் செய்து வருகிறது. “நாங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்கள், அதைப்போலவே, வெளிநாட்டவர்களின் ஈழம் ஒன்று தோன்றுவதற்கும் நாங்கள் எதிரானவர்கள். நமது நாடு எதிர்காலத்தில் போருக்கான மத்திய நிலையமாக மாற்றமாகலாம். உலக சக்திகளிடம் அகப்பட்டு பாரிய அழிவை சந்திக்க நேரிடலாம்.

உலக வல்லரசுகளின் பிரச்சினைகளுக்கு இலங்கை தலையிடும் வகையிலும், வெளிநாட்டு விமான செயற்பாடுகளுக்கு, வெளிநாட்டு கடற்படை விவகாரங்களுக்கு, வெளிநாட்டு பணம் இலங்கையில் வைப்பிலிடச் செய்யவும், வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான காலனித்துவமாக துறைமுக நகரை நாட்டில் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் அதிக கொரோனா தொற்றாளர்கள் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 150,000 தாண்டியது !

நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 3000 ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 150,771 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 122,367 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,389 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1015 ஆக காணப்படுகின்றது.

அதே நேரம் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் , வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

“13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.” – நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச !

நாட்டில் சிறுபான்மையின மக்கள், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தால், எமது நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிய செய்ய முடியாது போய்விடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

ஆகவே அந்தத் தரப்பினரின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டும் என்றும் விசேடமாக ஒரு மித்த நாட்டுக்குள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை இதேபோன்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

சிறுபான்மையினருக்கும் ஏனைய மதத்தினருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் எனவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண வேண்டும் என்றும் கூறினார்.

இதன் ஊடாகவே நாம் பெற்றுக் கொண்ட சமாதானத்திற்கு முழுமையாக அர்த்தம் கிடைக்கும் என்றும் இதுவே நாம் பெற்றுக் கொண்ட வெற்றியும் நிலைத்து நிற்கும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இரா.சம்பந்தன் , பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாதங்களுக்கு விடுமுறை !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கான 3 மாத கால விடுமுறையை நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்தது.

எதிர்கட்சிகளின் அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்வைத்த கோரிக்கைக்கு இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதன்படி மே 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 3 மாதங்களுக்கு இருவரும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாதிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சுகயீனமுற்றிருப்பதால் இந்த விடுமுறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

“வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளீர்கள்.” – நாடாளுமன்றில் க.வி.விக்கினேஸ்வரன் !

“நாம் கேட்டு வரும் சமஷ்டியை தர மறுக்கும் அரசாங்கம் எங்கோ இருக்கும் சீனாவின் கடனாளியாக மாறியுள்ளது .”என முன்னாள் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றுகையில்…

நாங்கள் தொடர்ந்து அரசாங்கங்களிடம் கேட்டு வருவது ஒரே நாட்டினுள் கூட்டு சமஷ்டி முறையில் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும் என்பதே. அதைச் செய்ய விரும்பாமல் எங்கோ இருக்கும் சீனாவின் கடனாளியாக மாறியுள்ளது அரசாங்கம். அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுக்கின்றார்கள். நாங்கள் கேட்பதெல்லாவற்றையும் மறுத்து விடுகின்றார்கள்.

அண்மையில் ஒரு நாடு ஒரு சட்டம் எனப்பட்டது. அதற்கென்ன நடந்து? முழு நாட்டின் சட்டம் சீனச் சட்டம் என்று தான் அவ்வாறு கூறியிருக்கின்றார்களா? வீணாகத் தமிழர்களுடன் பகைத்து இன்று உலகமெல்லாம் கடன் வாங்கும் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளீர்கள். மணலாற்றில் சிங்களப் பெயர் முதன்மை பெறுகின்றது. துறைமுக நகரத்தில் சீன மொழி முதலிடம் பெற்றுள்ளது. சில இடங்களில் சீன மொழி மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.

இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றி விடலாம் என்று எண்ணங் கொண்டிருந்த அரசாங்கத்தின் கடிவாளத்தை உச்ச நீதிமன்றம் கெட்டியாகப் பிடித்து வைத்துள்ளது. பல சரத்துக்கள் அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக உள்ளன என்று கூறியுள்ளது. இலங்கைக்குள் ஒரு சீன நகரத்தை உருவாக்க முனைகின்றது அரசாங்கம் என்பதே
அதற்கெதிரான குற்றம். பொறுப்பற்ற கடன் வாங்கலும் தமது மனித உரிமை மீறல்களினால் உலக அரங்கில் இலங்கை தனிமைப்பட்டிருப்பதாலும் சீனாவின் அடியில் போய் விழவேண்டி வந்துள்ளது. இந்த வரைபை வர்த்தமானியில் பிரசுரித்த
அதே நாளிலேயே மேலும் ஒரு சீனக் கடன் இந்த அரசாங்கம் பெற்றுள்ளது என்பதை நாம் மறக்கக் கூடாது.

இந்த நாடு எங்களுக்கும் உரியது. எமது இனம் தனித்துவமான ஒரு இனம் என்பதை வலியுறுத்திக் கொண்டே எமது நாட்டை விற்கவோ ஈடு வைக்கவோ அனுமதி அளிக்க முடியாது. இந்த வரைபு துறைமுக நகர ஆணைக்குழுவிற்கு நாட்டிற்கிருக்கும் சட்டவாக்க உரிமைகளையும் நீதித் துறையின் ஏகோபித்த உரிமைகளையும் தாரை வார்த்துக் கொடுத்துள்ளது. மாற்றங்கள் செய்யாவிட்டால் எமது நாட்டினுள் இன்னொரு நாடு பரிணமித்து விடும். ஆகவே உச்ச நீதிமன்றம் கூறிய திருத்தங்களை உள்ளடக்கி ஒரு புதிய வரைபை எமக்கு நல்குங்கள். அதைப் படிக்க போதிய அவகாசம் தாருங்கள். அவசரப்பட்டு
நாளை வாக்கெடுப்பை நடத்தாதீர்கள்.” என்றார்.

“மக்களின் உயிரை விட சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய தேவையாகவுள்ளது.” – சுஜித் சஞ்சய பெரேரா குற்றச்சாட்டு !

“நாட்டில் தற்போது காணப்படுகின்ற அபாய நிலையைக் கருத்திற் கொள்ளாமல் துறைமுக நகர பொருளாதார சட்ட மூலத்தை நிறைவேற்றி , சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய தேவையாகவுள்ளது.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

தற்போது பி.சி.ஆர். பரிசோதனைகள் குறைவாகவே முன்னெடுக்கப்படுகின்றன. பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டால் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நாட்டில் தற்போது காணப்படுகின்ற உண்மையான கொவிட் நிலைவரங்களை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

கொவிட் நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற 17 பில்லியன் நன்கொடை பிரயோசனமற்ற வகையில் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியிலும் அரசாங்கத்தின் சுரண்டல் இடம்பெற்றுள்ளதா.? என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதில் மாத்திரமின்றி வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரல் , தனிமைப்படுத்தல் என்பவற்றிலும் அரசாங்கத்தின் சுரண்டல் இடம்பெற்றுள்ளது.

கொவிட் தொற்று தீவிரமடைய ஆரம்பித்த போதே நாட்டை முடக்குமாறு நாம் வலியுறுத்தினோம். எனினும் பொருளாதாரத்தை காரணம் காட்டி அரசாங்கம் அதனை புறக்கணித்தது. தற்போது நாம் கூறியதையே செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் 3 நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்குவதால் கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது.

மக்களின் உயிரை விட துறைமுக நகர பொருளாதார சட்ட மூலத்தை நிறைவேற்றி , சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய தேவையாகவுள்ளது என்றார்.

“இனவாதத்தை நான் அல்ல நீங்கள் தான் தூண்டுகின்றீர்கள்.” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறினால் நான் இனவாதியா ..? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு மாகாணத்தில் 1000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 500 மாதிரிகளின் பெறுபேறுகள் வெளியிடப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் 2200 கொரோனா நோயாளிகள் உள்ளனர்கள். 52 பேர் உயிரிழந்துள்ளார்கள். மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒட்சிசன் வழங்குவதற்கான வசதிகள் இல்லை. நோயாளர் காவு வண்டிக்காக 194 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஏன் நீங்கள் வேற்றுமை காட்டுகின்றீர்கள்? என கேள்வியெழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர், இன்று அரசாங்கத்தினால் கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நிதி வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுள்ளோம். பரிசோதனைக் கூடங்களை அதிகரிக்கவும், 24 மணித்தியாலங்கள் வரை சேவையில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம்.

கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் நாங்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றோம்.’ எனக் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கிய சாணக்கியன், ‘பிரதமர் கூறிய வார்த்தையை கூட நீங்கள் கேட்கவில்லை. Cath lab என்று கூறியவுடன் என்னை இனவாதி என்றார். பிரதமருக்கு வழங்கிய அறிக்கையினை கூட நீங்கள் நிறைவேற்றவில்லை. இனவாதத்தை நான் அல்ல நீங்கள் தான் தூண்டுகின்றீர்கள்.’ எனக் குறிப்பிட்டார்.

“நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதியுங்கள்.” – நாடாளுமன்றில் ரிஷாட் பதியுதீன் !

நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் எனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் இன்று நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அங்கு அவர் பேசிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தான் கைது செய்யப்பட்டு 22 நாட்களுக்கு மேல் சென்றுள்ளபோதும் இதுவரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலுடன் எவ்வித சம்பந்தமும் இல்லாத தன்னை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து இவ்வாறு பழிவாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.