உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

“கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது” என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம-மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியின் 10ஆவது வருட நிறைவு விழா நிகழ்வில் காணொளி ஊடாக கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலவச கல்வி சேவையினை மேம்படுத்த அரசாங்கம்  உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தையும் தரமுயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என குறிப்பிட்ட பிரதமர் தற்போது கல்வித் துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மாணவர்களை பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அனுப்பி வைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

“முல்லைத்தீவு – குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்” – நாடாளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் !

“முல்லைத்தீவு – குருந்தூர் மலையைப் பெளத்தமயமாக்க தொல்லியல் திணைக்களம் எடுக்கும் முயற்சி உடனடியாகக் கைவிடப்பட வேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(19.01.2021)  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எமது தாயகத்தில் மிக மோசமான ஆக்கிரமிப்புகள் இடம்பெறுகின்றன. இதனால் தமிழ் மக்கள் மிகவும் கொதித்துப்போயுள்ளதுடன் அவர்களின் நிம்மதியும் கெட்டுப்போயுள்ளது. இந்த நிலைமையில் எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அவசரமாகக் காணப்பட வேண்டும்.

குருந்தூர் மலையில் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு இராணுவத்தின் 51ஆம் படையணியின் கொடிகள் பறக்கவிடப்பட்டன எனவும், அதன் பின்னர் அங்கு தொல்லியல் ஆய்வுகள் இடம்பெறுகின்றன எனவும் கூறப்பட்ட நிலையில் தற்போது அங்கு ஒரு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலம் தமிழர்களுக்கானதே. இங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இங்கு தமிழர்கள் வழிபாடுகளில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை என்ற நீதிமன்றக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு தற்போது பெளத்த ஆக்கிரமிப்பு இடம்பெற்று வருகின்றது.

எவ்வாறாயினும் எல்லை மீள் நிர்ணயம் செய்து இந்தப் பகுதியை பெளத்த மயமாக்க எடுக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும்” என தெரிவித்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கும் பணி ஆரம்பம் !

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் இன்று பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி கடந்த 8 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்டுத்திருந்தனர்.

பின்னர் சில மாணவர்களால் போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியதால் கடந்த 11 ஆம் திகதி, தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்கால் நினைவுத் தூபி, அனைவருடைய பங்களிப்புடனும் மீண்டு அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய இன்றையதினம் தூபி அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நாம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” – மாவை சேனாதிராஜா

“அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் நாம் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்”  என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னர் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்துள்ளார்.

புதிய ஆணைக்குழுவை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கருத்து வெளியிடும் போதே தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எமக்கு கருத்துகளை கூறமுடியாது. அது அவர்களது தீர்மானமாகும். அதற்கு நாம் பதிலளிக்க வேண்டியதும் இல்லை. தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் பிரகாரம் ஜெனிவா அமர்வில் எமது செயற்பாடுகள் இடம்பெறும்” என்றும் அவர் கூறினார்.

“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” -ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது” என ஜே.வி.யின் டில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அச்சம் காரணமாக இந்தியா கோரியதை வழங்க தீர்மானித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் பங்குகளை விற்பதன் மூலம் இலங்கைக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் 49 வீத பங்குகளை இந்தியாவிற்கு வழங்க தீர்மானித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்ட பின்னர் தனக்கு ஏதாவது தரவேண்டுமென இந்தியா வேண்டுகோள் விடுத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தனக்கு ஏதாவது வேண்டுமென கோரியது அரசாங்கம் இந்தியாவின் வேண்டுகோளிற்கு அடிபணிந்து கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” – ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு இந்திய பிரதமர் மோடி பதில் !

“நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம்” என இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கை ஜனாதிபதிக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் டுவிட்டர் செய்திக்கு அளித்துள்ள பதில் செய்தியில் இந்திய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமைக்காகவும் நட்புறவு அயல்நாடுகள் குறித்த தாராள மனப்பான்மைக்காகவும் இலங்கை ஜனாதிபதி இந்திய ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு தனது டுவிட்டர் செய்தியில் பதிலளித்துள்ள இந்திய பிரதமர்

“நன்றி கோத்தபாய ராஜபக்ச அவர்களே நோய்பரவலிற்கு எதிராக கூட்டாக போராடும் அதேவேளை நாங்கள் தொடர்ந்தும் அயல்நாடுகளிற்கு முன்னுரிமை என்ற எங்கள் கொள்கைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய அரசாங்கம் அயல்நாடுகளிற்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிற்கும் மில்லியன் டோஸ்களிற்கு அதிகமான கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றது” என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” – ரோகித போகொல்லாஹம

“நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள்” என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னதாக ஒருங்கிணைந்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
நான்கு தமிழ் கட்சி கூட்டணி சிவில் சமூகத்தவர்களின் ஆதரவுடன் இலங்கை தொடர்பான சர்வதேச பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இதனை உரிய முறையில் எதிர்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத மரபு சார்ந்த இராணுவ வழிமுறைகள் மூலம் ஈழத்தை பெறுவதற்கான தங்களின் முயற்சியில் தோல்வியடைந்தவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிப்பதில் இன்னமும் நம்பிக்கொண்டுள்ளவர்கள் சர்வதேச தலையீட்டை கோருகின்றனர் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலையீடுகள் குறித்து தீவிரமாக உள்ளவர்களை பொறுப்புக்கூறும் விடயத்தை பயன்படுத்தி அரசியல் செய்யவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை 2009 இல் யுத்தத்தை வெற்றிகரமாக முடிவிற்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் படி தமிழ்தேசிய கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் கட்டாயப்படுத்தியமையை அந்த கட்சி மறந்துவிட்டது எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளின் தலைவரின் தலையில் இராணுவம் துப்பாக்கி ரவையை செலுத்தும்வரை விடுதலைப்புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை பயன்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானம் கொண்டுவரப்படுவது நிச்சயம் என்பதால் இலங்கை மேலும் தாமதிக்காமல் நிலைமை குறித்து ஆராய்வது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் நேஸ்பி பிரபு தெரிவித்துள்ள விடயங்களையும விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விடயங்களையும் இலங்கை தனக்கு சார்பாக வாதிடுவதற்காக பயன்படுத்தவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் கட்சிகளின் கருத்துக்களை சாதாரணமாக கருதக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி போர்முனையில் யுத்தத்தை நடத்துவதற்கு பிரிட்டனும் பிரான்சும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் அவர்கள் இந்த விடயத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தின என யுத்தகால வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் குறித்த தனது அரசாங்கத்தின் குறித்து அவ்வேளை பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சராக காணப்பட்ட டேவிட் மில்லிபாண்டின் கருத்து என்னவென நான் உங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை என ரோகித போகொல்லஹம தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் குரலாக செயற்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு முதல்தடவையாக இரண்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர், 2013 இல் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஊடாக அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ள போதிலும் அவர் ஜெனீவா குறித்த பொது நிகழ்ச்நிரலின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடனும் இணைந்து செயற்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார். ஜெனீவா பெரும் சவாலாக காணப்படப்போகின்றது இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறலை விட மேற்குலகநாடுகளின் உண்மையான நலன்களும் நோக்கங்களும் பரந்துபட்டவை எனவும் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியை மீள இலங்கைக்கு அழைத்து வரக்கோரி கணவர் தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் !

கம்பஹாவில் வதியும் கப்பல் தள பணியாளர் ஒருவர் தனது மனைவியை ஜோர்தானிலிருந்து திருப்பி அழைக்குமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை தொலைத்தொடர்பு கோபுரம் மீதேறி போராட்டம் ஒன்றை நடத்தினார்.

இவரது மனைவி (24வயது) கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஜோர்தானில் தொழில்புரிந்து வருகிறார். தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக அவரால் நாடு திரும்ப முடியவில்லை.

இந்த அவல நிலை குறித்து அப்பெண்ணின் கணவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது மனைவியை திருப்பி அழைக்க விரும்பினால் 4 லட்சம் ரூபா பணம் தருமாறு கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நபர் தொலைத்தொடர்புக் கோபுரம் மீதேறி போராட்டம் செய்த பின் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாட உடன்பட்டார்.

“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை !

“மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும்” என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று(18.01.2021) மண்டைதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனைக் கண்டித்து பொதுமக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான முயற்சிகள் மீண்டும் இடம்பெற்றால் வடக்கு,கிழக்கில் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

போன தடவையும் பொலிஸார் பஸ்ஸுடன் தான் வந்தனர். நீங்கள் மீண்டும் திருப்பி வர முயற்சி செய்தால் நாங்கள் பகிரங்கமாகச் சொல்கின்றோம் , பிரதேச செயலகம்,  மாவட்ட செயலகம் உட்பட அனைத்தும் முடங்கும். சிவில் நிர்வாகம் முடக்கப்படும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு,கிழக்கு முழுவதும் சிவில் நிர்வாகம் முடங்கும் நிலையேற்படும் என தெரிவித்துள்ள அவர் முழுமையாக விலக்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுங்கள் என வேலணை பிரதேச செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த பைலை என்னால் முடியாது என திருப்பி அனுப்புங்கள் எனவும் சிவாஜிலிங்கம் வேலணை பிரதேச செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” – கஜேந்திரன்

“மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்ற நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கைகள் மேற்கொள்கிறது” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்தார்.

இன்று(18.01.2021) மண்டதீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவேளை அதனை கண்டித்து பொதுமக்களும் தமிழ்அரசியல்வாதிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகங்களிடம் பேசும் போதே கஜேந்திரன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

29 குடும்பங்களை சேர்ந்த மக்களும் தங்களின் சொந்த நிலங்களை இழக்க தயாரில்லை. மீண்டும் மீண்டும் மக்களை குழப்பும் விதத்தில் காணி திணைக்களம் நடந்துகொள்கின்றது. பிரதேச செயலாளர் இந்த பிரதேசத்தின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் அவர்களிற்கு இதனை தெரிவிக்கவேண்டும்.

மீண்டும் மீண்டும் நிலங்களை அளப்பதற்கு அனுப்புகின்றனர் ஆற்றில் ஒடும் நீர் நித்திரையா முழிப்பா என பார்ப்பதற்கு கொள்ளி வைத்து பார்ப்பது போல காணித்திணைக்களம் செயற்படுகின்றது, இது மக்களை குழப்புகின்ற முயற்சி மக்களிற்கு இதில் விருப்பமில்லை என காணித்திணைக்களத்திற்கும் அரசாங்க அதிபருக்கும் பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும்.

மக்களை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவில்லை,காணிகளை பறிப்பதற்கு மாத்திரம் தான் அலுவல்கள் இடம்பெறுகின்றன. காணித்திணைக்களத்திடம் இந்த நோக்கத்தை கைவிடுமாறு பிரதேச செயலாளர் தெரிவிக்கவேண்டும். வாழ்க்கையில் கடற்படையினருக்கு காணி கொடுப்பதற்கு ஒருபோதும் மக்கள் இணங்கமாட்டார்கள் இந்த மக்களும் தங்கள் காணிகளை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை என அவர் தெரிவித்தார்.