உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில்  இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது ” – எம்.ஏ.சுமந்திரனிடம் பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் உறுதி !

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில்  இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது ” இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஆகியோருடன் இன்று(23.12.2020) நேரில் நடத்திய சந்திப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று காலை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனை, கொழும்பிலுள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன். இரண்டு மணி நேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது எனவும், எதிர்வரும் ஜனவரி மாதமே அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் மற்றும் ஆதரவுத்தளம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், இலங்கை அரசு பொறுப்புக்கூறலிருந்து தப்பிப்பிழைக்க முடியாத வகையிலும் அமையவேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே பரிந்துரைகள் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது என்று அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை, குறித்த சந்திப்பின் பின்னர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயத்துக்குச் சென்று ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் கலந்துரையாடினேன். அவருடனும் புதிய ஜெனிவாப் பிரேரணை உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாகப்பேசினேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள குறைபாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சு நடத்துகின்றது ” – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

தங்களை புறக்கணிப்பதாகவும் அரசிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ள குறைபாடுகள் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தங்களை புறக்கணிப்பதாகவும் அரசிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் மேலும் குறிப்பிட்ட அமைச்சர்,

இது அரசியல் சார்ந்த விடயமாகும். இது தொடர்பில் அரசாங்கம் தேவையான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.அவ்வாறு பிரச்சினையிருந்தால் அரசியல் ரீதியில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அரசின் மீது வெறுப்படைந்துள்ள சுதந்திரக்கட்சியினரை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கியமக்கள் சக்தியினர் அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கேகாலை ஆயுர்வேத மருத்துவரின் கொரோனாவுக்கான மருந்துக்கு மருந்தியல் பிரிவு அனுமதி !

கேகாலை மருத்துவர் தம்மிகபண்டார உருவாக்கியுள்ள ஆயுர்வேதமருந்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் மருந்தியல் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

கேகாலை மருத்துவரின் மருந்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி – Thinakkural
உணவு என்ற பிரிவின் கீழ் ஆயுர்வேத மருந்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக அதனை விநியோகிப்பதை தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட மருந்து குறித்து சுகாதார திணைக்களத்தின் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த மக்களின் துன்பத்தைத் தணிக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன்” – பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் கடிதம் !

“வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று (22.12.2020) பிரமதர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

வன்னி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அண்மையில் ஏற்பட்ட புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட கடும் காற்று மழை காரணமாக கட்டிட இடிபாடுகள், மீன் பிடி படகுகள், இயந்திரங்கள், வலைகள், கடல் உபகரணங்கள், விவசாயம், சொத்துக்கள், உடைமைகள், குடியிருப்புகள் சேதமடைந்தும், காணாமலும் போயுள்ளன. பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிய விவசாயிகளினால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது அவர்கள் எவ்வாறு இந்த சூழ் நிலையிலிருந்து மீள முடியும்?. எனவே இந்த மக்களின் அவல நிலையைப் பார்க்கவும், இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு அவர்களின் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தவும் உதவுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை விரைவில் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த மக்களின் துன்பத்தைத் தணிக்க நீங்கள் முயற்சிப்பீர்கள் என்று நம்புகிறேன் ” என குறித்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விக்கினேஸ்வரன் உள்ளிட்டோர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் புலம்பித்திரிவதை நிறுத்த வேண்டும்” – அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

“விக்கினேஸ்வரன் உள்ளிட்டோர் அதிகாரப் பகிர்வு வேண்டும் என நாட்டினுள்ளும் நாட்டுக்கு வெளியேயும் புலம்பித்திரிவதை நிறுத்த வேண்டும்” என அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர என வலியுறுத்தியுள்ளார் .

‘மாகாண சபை முறைமை தேவையற்றது எனக் கூறிவரும் அமைச்சர் சரத் வீரசேகர, அதனூடாகத் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வையும் கொடுத்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’ எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை. இதை மீறி 9 மாகாணங்களில் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின் ஜனாதிபதியின் கொள்கை பொய்யாகிவிடும். எனவே, மாகாண சபை முறைமை தேவையில்லை.

மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கின்றேன். அதாவது இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டபோது அதை நான் கடுமையாக எதிர்த்தேன்.

அன்றிலிருந்து இன்று வரை அதற்கு எதிராகவே கருத்து வெளியிட்டு வருகின்றேன். இதை உணராமல் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் எனப் புலம்பித் திரிகின்றனர். இந்தப் புலம்பலை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்” – என்றார்.

“தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ச அரசு பெறப்போவதில்லை” – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

“தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ச அரசு பெறப்போவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போரை நிறைவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் பல வாக்குறுதிகளை ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதிகளை மஹிந்த அரசு நிறைவேற்றாத காரணத்தாலேயே இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அதன் உறுப்பு நாடுகள் தீர்மானங்களை அடுத்தடுத்து நிறைவேற்றின. எனினும், அந்தத் தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போதைய கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசும் அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் முன்மாதிரியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. போதாக்குறைக்கு கடந்த நல்லாட்சி அரசில் மீளவும் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இந்த அரசு விலகி நாட்டுக்கான சர்வதேச நெருக்குவாரங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களையும் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அரசு எரித்து வருகின்றது. இது முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கையை உதாசீனம் செய்யும் அடிப்படை உரிமை மீறலாகும். இந்த விவகாரமும் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் எதிரொலிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் மீது கைவைத்து அவர்களைச் சீண்டுவதால் எந்தவிதமான நன்மைகளையும் ராஜபக்ச அரசு பெறப்போவதில்லை. மாறாக நாட்டுக்கு சர்வதேச அரங்கில் அவப்பெயரைத்தான் இந்த அரசு சம்பாதிக்கின்றது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும் என தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரி மீது, நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு !

கொவிட்-19 மூலம் இறந்தவர்களை தகனம் செய்வதற்கு எதிராக செயற்பட்டுவரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது, நடவடிக்கை எடுக்குமாறு சிங்கள ராவய அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இந்த முறைப்பாட்டை இன்று(22.12.2020) பொலிஸ் தலைமையகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

கொவிட் -19 பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் பொதுவான சட்டத்தைக் கடைப்பிடிப்பது இந்த நாட்டு மக்களின் கடமையாகும். இவ்வாறான நிலையில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் அரசாங்கத்தின் நடைமுறைக்கு எதிராக செயல்பட்டு வரும் நீதி அமைச்சர் அலி சப்ரி மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் தகனம் செய்யும் நடைமுறையின் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் அடிப்படை வாதத்துக்குள் தள்ளப்படலாம் என நீதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரிவாக செயற்பட்டு வருகின்ற முஸ்லிம் தேசிய ஒளிபரப்பினை தடைசெய்யக்கோரி பொதுபல சேனா அமைப்பு, ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று(21.12.2020) திங்கட்கிழமை கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கான உதவிகளை நாம் செய்வோம் ” – ஐ.நா பிரதமருக்கு உறுதி !

உலக நாடுகள் அனைத்திலும் இன்றைய திகதிக்கு மிகப்பெரிய பேசுபொருளாகியிருப்பது கொரோனாவுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பானதாகவேயுள்ளது. இந்தநிலையில் இலங்கை அரசும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே, ஐ.நா தூதுக்குழு குறித்த உறுதிப்பாட்டினை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி ஹனா சிங்கர், உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரசியா பெண்ட்சே மற்றும் யுனிசெப் அமைப்பிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் பிரதமரை இன்று சந்தித்தனர்.

ரஸ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை  ( Sputnik V ) இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து தீர்மானிப்பதற்காக அடுத்த வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“தமிழ்தேசியக்கட்சிகள் நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும் ” –  இரா.சம்பந்தன்

“தமிழ்தேசியக்கட்சிகள் நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும் ”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் கனிந்துள்ளது. இதை அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் உணரவேண்டும் . இது தொடர்பில் தமிழ்த் தேசியக்கட்சிகளுடன் நேரில் பேசி இறுதி முடிவை எடுப்போம்.

இதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நாங்கள் முரண்பட்டு நின்றால் அது தெற்கு அரசியல்வாதிகளுக்குச் சாதகமாகப் போய்விடும்.எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றத்திலும் , சர்வதேச ரீதியிலும் ஓரணியில் நின்று தமிழர்களின் உரிமைக்காக, நீதிக்காகக் குரல்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் வரைக்கும் தமிழர் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ளமையால் இம்முறை ஜெனீவா விவகாரத்தை நாம் தக்க முறையில் கையாள வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – மேலும் ஐவர் பலி !

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஐவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.அரசாங்கம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் 68, 55, 77, 83 வயதுடைய நான்கு ஆண்களும், 77 வயதுடைய ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.