உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“விசாரணை என்ற பெயரில் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி சர்வாதிகார ஆட்சியை மேற்கொள்கிறது அரசு.” – வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு !

“மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியை முன்னெடுக்க அரசு நடத்தும் கபட நாடகமே இந்த விசாரணை நடவடிக்கை.” என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான சபாரட்ணம் சிவயோகநாதனின் திராய்மடு மட்டக்களப்பில் உள்ள இல்லத்திற்கு நேற்று சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த இரு புலனாய்வு உத்தியோகஸ்தர்கள் அவரிடம் ஒன்றரை மணித்தியாலங்கள் கடுமையான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கின்றீர்களா? என்ற கோணத்திலும் இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றீர்களா? என்ற கோணத்திலும் சிவயோகநாதனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அவருடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது வெளிப்படையாக ஜனநாயக வெளியில் செயற்படும் ஒருவருக்கு வழமை போலவே பயங்கரவாத முத்திரை குத்துவதற்கு அரசினால் மேற்கொள்ளப்படும் முயற்சியே. மனித உரிமைகள் சிவில் சமுக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை முடக்கி தமது சர்வாதிகார அராஜக ஜனநாயக விரோத ஆட்சியை முன்னெடுக்க அரசு நடத்தும் கபட நாடகமே இந்த விசாரணை நடவடிக்கை.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி பல உயிர்களை பலியெடுத்து வரும் அவலம் நிறைந்த சூழலில் அனைவரும் தம் வாழ்வைக்குறித்து கலங்கி நிற்கும் இவ்வேளையில் அரசு தனது அராஜகத்தையும் ஒடுக்குமுறையினையும் எவ்வித மாற்றமோ மனச்சாட்சியோ இன்றி தொடர்கின்றது.

எனவே அரசின் இந்த அராஜக ஜனநாயக விரோத செயற்பாட்டை குறிப்பாக தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்வதையும் விசாரணைகள் செய்வதையும் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறான விசாரணை செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி, மனித உரிமைகள், சிவில் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளுக்கு உத்தரவாதமளிக்குமாறு அனைத்துலக மனித உரிமைகள், சிவில் செயற்பாடுகளுக்கும் நீதிக்குமான அமையங்கள், மற்றும் ஐ.நா. மன்றத்தினையும் மிக அவசரமாகவும் அவசியத்துடனும் கோரி நிற்கின்றோம்’ என வேலன் சுவாமிகள் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் !

மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி,  நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வாழசை்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு லவக்குமார் என்பவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெற்ற பொலிஸார். அதனை கையளிப்பதற்கு மூன்று முறை சென்றப்போதும்,  அவர் இல்லாதமையினால் அவருடைய மனைவியிடம் கையளித்தப்போதும் அவரும் பெறுவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால் லவக்குமார் வீட்டின் கதவில் அந்த நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் ஓட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு  நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட அவர்,  கடந்த 18 ஆம் திகதி 10 பேருடன் சென்று, நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச்சுடர் ஏற்றி கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த நிகழ்வினை முகநூலிலும் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் அறிந்த பொலிஸார் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணையை மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் அவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமைபொலிஸார் முன்னிலைப்படுத்தியப்போது, அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

“கொரோனா தொற்று தொடர்பாக மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.” – ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தல் !

“கொரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.” என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட விசேட அறிவிப்பொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டின் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தி, மக்களை பலியிட வேண்டாம்.கொரோனா தொற்றுப் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி மருந்தை செலுத்துவதற்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் இவ்வாண்டுக்குள் அதனைப் பெற்றுக்கொள்வது கடினமானது. ஆகவே கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு புதிய சிந்தனை அவசியம் என்பதுடன், புதிய திட்டங்களை வகுக்க வேண்டும்.

முதல் கட்டத்தில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டவர்களுக்கு

இரண்டாவது கட்டமாகும் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்தே வழங்கப்பட வேண்டும். கடந்த நவம்பர் மாதம் தடுப்பூசி மருந்து கொள்வனவிற்கென 200 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்திருந்தால் தற்போது தடுப்பூசி மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.

அரசாங்கத்தினால் இந்தியப் பிரஜைகள் நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் நிலையில், இந்திய வகை மரபணு மாற்றமடைந்த வைரஸ் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி !

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தம்மை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதுடன் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார்.” – சந்திரிகா பண்டாரநாயக்க

“துறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். எனவும் கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.” எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றங்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.

இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அவர் மொட்டு கட்சியிடம் அடகு வைத்துள்ளார். கட்சி கொள்கை மற்றும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்” – என்றார்.

இந்தியாவில் பரவும் கருப்பு பூஞ்சை நோய் இலங்கையிலும் – அச்சம் வழங்கப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி டொக்டர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோய் அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இந்த நோய், கொவிட் வைரஸ் தொற்றுடன் எவ்வாறு இணைந்தது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோய் அம்பாறை பகுதிக்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

“தமிழ் மக்களுக்கு தனிநாட்டை வழங்குவதுதான் தேசப்பற்றாளர்களுடைய பிரச்சினை. வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்க ஆதரவளிப்பார்கள்.” – ராஜித சேனாரத்ன

“தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. ” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (22.05.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

தமிழ் ஈழத்திற்கும் நாடு பிளவடைவதற்கும் எதிரானவர்கள் என்று பாரியளவில் கூச்சலிட்டவர்கள் தான் இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றல்லவா கூறினார்கள்? இன்று ஒரே நாடு ஒரே சட்டம் எங்கிருக்கிறது ? இந்த வலயத்திற்கு ஒரு நீதியும் எமது வலயத்திற்கு ஒரு நீதியுமே காணப்படுகிறது.

இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சமஷ்டி அதிகாரத்தை விட அதிகமானதாகும். இந்த வலயம் தனி இராச்சியமொன்றாகும். இது தனி ஈழமாகும். இதனை தனி ஈழமாகக் குறிப்பிடுவதற்கு தற்போது குறைவாகவுள்ள ஒரே காரணி அந்நாட்டு பொலிஸார் இந்த வலயத்தில் இல்லாதது மாத்திரமேயாகும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாடு பிளவடையும் என்று கூறினார்கள். 13 இற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெட்கமின்றி துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கூட , ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரம் பகிரப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த அனைவரும் போலியான தேசப்பற்றாளர்கள். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மாத்திரமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. நாம் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன திரட்டியதைப் போன்று மக்கள் படையை இதற்கு எதிராக நாமும் திரட்டுவோம். அத்துடன் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமில்லை மாறாக கொழும்பு துறைமுகநகர சட்டமூலமே அரசாங்கத்திற்கு முக்கியமான விடயம்.

பல நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் 14 நாள் முடக்கலை கோரியுள்ளன.எனினும் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதிலேயே கவனம் உள்ளது. மக்கள் தடுப்பூசியின் நன்மைகளை அனுபவிக்கவேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ள அவர் மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து நீண்ட நாள் முடக்கலை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சட்டமா அதிபர் திணைக்களத்தில் தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது.” – அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகைக்குப் பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் சீன அரசின் நிதி உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தை கடந்த 19ஆம் திகதி  இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜெங் கோங் திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் விபரங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிராகப் பலத்த கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையிலேயே, குறித்த பெயர்ப்பலகையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணைப்பு அதிகாரி கூறியுள்ளார்.

“பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.” – சரத் பொன்சேகா

“பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன.”  என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

யுத்தத்தால் மாத்திரம் ஒரு நாட்டின் பூமியை ஆக்கிரமிக்க முடியாது, இன்றைய சூழ்நிலையில் நிலம் மாத்திரம் அல்ல, இறையாண்மை, சுயாதீனத் தன்மைக்கும் பாதிப்புகள் ஏற்படும் பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பொருளாதார ரீதியில் நாட்டினை வீழ்த்தி, கடன்களில் நெருக்கி அதன் மூலமாக நாட்டினை முழுமையாக ஆக்கிரமிக்கும் நகர்வுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த காலங்களிலும் இந்த சூழ்ச்சி திட்டங்கள் பல்வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளன. இன்று எமக்கும் அவ்வாறான நிலையொன்று ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.

கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் ஆரம்பத்தில் அரசாங்கம் முன்வைத்த சட்டமூலத்தில் பல விடயங்களில் எம்மால் இணக்கம் தெரிவிக்க முடியாத நிலை இருந்தது. நீதிமன்றத்தை நாடி காரணிகளை கூறினோம். இவற்றில் 25 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் திருத்தங்கள் செய்தாலும் எம்மால் அங்கீகரிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது.

அதற்கு காரணம் என்னவெனில் பிரதானமாக மாற்றங்களை செய்ய வேண்டும் என நாம் வலியுறுத்திய காரணிகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக பொருளாதார ஆணைக்குழுவின் நியமன விடயங்களில் ஜனாதிபதியின் தனித் தீர்மானங்களுக்கு அமைய நாட்டுக்கு பொருந்தாத தீர்மானங்கள் எடுக்கப்படலாம். எனவே இதனை பாராளுமன்ற அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் நாம் துறைமுக நகர் திட்டத்தை நிராகரிக்கின்றோம் என அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறான திட்டங்களை நாம் சரியாக கையாண்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மையளிக்கும். ஆனால் துறைமுக நகரை இலங்கை எவ்வாறு கையாள்கின்றது என்பதில் முரண்பாடுகள் உள்ளன.

99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு நிலத்தை குத்தகைக்கு கொடுப்பதில் இலங்கை பெற்றுக்கொள்ளப்போகும் நன்மைகள் என்ன? நாமும் அதிகளவில் நிதி செலவழித்துள்ளோம். அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம், வீதி புனரமைப்பு போன்றவை இலங்கை அரசாங்கத்தினால் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

எனவே எமக்கும் இதில் அதிகளவு பங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறோம். அதேபோல் துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இந்த சூழ்நிலையில் கொண்டுவந்து நிறைவேற்றும் நேரம் அல்ல. நாடாக சகலரும் பாதிக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் சீனாவை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

உலக நாடுகளும் இப்போது எம்மை பார்த்துக்கொண்டுள்ள நிலையில் நாம் எடுக்கும் தீர்மானங்கள் அவசர அவசரமாக இருக்கக்கூடாது என்றே கருதுகிறோம். சீனாவுக்கு ஏற்ற விதத்திலேயே இன்றுவரை துறைமுக நகர் திட்டம் கையாளப்படுகின்றது. இந்த நிலப்பரப்பில் கட்டியெழுப்படும் பொருளாதாரம் எமது நாட்டினை மிஞ்சிய ஒன்றாக அமையும். அது நேரடியாக இலங்கையை பாதிக்கும் என அவர் கூறினார்.

“தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.” – மனோகணேசன் காட்டம் !

“தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.” ன தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

துறைமுக நகர், சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளது. இது பலரிடையேயும் அதிருப்தியான மனோநிலையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அந்த வகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் சீனத் தூதுவரை இதற்கு முன்னர் சந்தித்து விளக்கியிருந்த போதிலும் அதனால் எந்தவொரு பயனும் ஏற்படவில்லை. தமிழைத் தவிர்த்து, இலங்கையின் மொழிச் சட்டத்தை சீனர் மீறுகிறார்கள் எனவும் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மாத்திரமுள்ள பெயர் பலகைகளும் உள்ளன எனவும் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இந்நிலை தொடருமானால் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் தமிழை எவ்வாறு புறக்கணிப்பது என்பது தொடர்பில் இலங்கை அரசிடமே சீனர்கள் கற்றுக்கொண்டுள்ளனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

சீனா முன்னெடுக்கும் திட்டங்களைத் தவிர உள்நாட்டிலேயே தமிழ் மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளை இலங்கை  அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.